தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2023.12.03
குறிப்பாக நாடு பொருளாதாரரீதியான வீழ்ச்சிக்கு இலக்காக்கப்பட்டுள்ள பின்னணியில் அடுத்த 2024 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பித்துள்ள வரவுசெலவு எமது குடும்ப வாழ்க்கைக்கு எவ்வளவு தாக்கம் ஏற்படுத்துகின்றதென்பதை நாங்கள் மீளாய்வுசெய்து வருகிறோம். எமது பிள்ளைகளின் உணவு, கல்வி, சுகாதாரம் ஆகிய பிரதானமான அத்தியாவசிய பிரிவுகளின் செலவுகள்கூட எவ்வளவுக்கு கத்தரிக்கப்பட நேர்ந்துள்ளதெனும் அழுத்தம் நன்றாக உணரப்பட்டு வருகின்றது. இரண்டாயிரத்து இருபத்திநான்கு வரவுசெலவில் ஏதேனுமொரு நிவாரணம் கிடைக்குமென முழுநாடுமே பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் சதாகாலம்போல் அந்த எதிர்பார்ப்பும் ஒரு கனவு மாத்திரமேயாகும். ஐ.எம்.எஃப். உடன் ஒன்றுசேர்ந்து தயாரித்த பொருளாதார நிகழ்ச்சிநிரலை அடுத்தவருடத்திற்கும் நன்றாகவே இணக்கஞ் செய்துள்ளார்கள். தற்போது வரையறையற்று பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் தரைமட்டமாக்கிச் செல்வதற்காக வரி அறவிடுகின்ற ஒரு வரவுசெலவுத் திட்டமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக அடுத்த வருடத்தின் மதிப்பீடுசெய்யப்பட்ட வருமானம் நான்காயிரத்து நூற்றி இருபத்தொன்பது பில்லியன் ரூபாவாக அமைவதோடு வரி வருமானம் என்றவகையில் மூவாயிரத்து எண்ணூற்று இருபத்தாறு பில்லியன் ரூபாவை ஈட்டிக்கொள்ள மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த வருமானத்தின் சதவீதமாக நூற்றுக்கு தொண்ணூற்றிமூன்று சதவீதத்தை வரியாக பெற்றுக்கொள்ள மதிப்பீடு செய்துள்ளார்கள். இதனால் வருடாந்த தனிநபர் வரிச்சுமை ஒரு இலட்சத்து எழுபத்து மூவாயிரத்து அறுநூற்றி முப்பத்தாறு ரூபாவாக அமைகின்றது. நாளொன்றில் ஒரு நபர்மீது நானூற்றி எழுபத்தைந்து ரூபாவிற்கு மேற்பட்ட வரிச் சுமை ஏற்றப்படுகின்றது.
நாளொன்றில் ஒருவருக்கு எவ்வளவுதான் வருமானம் கிடைத்தாலும் ஒரு நபர் என்றவகையில் நானூற்றி எழுபத்தைந்து ரூபா வரிச்சுமையை ஏற்க வேண்டும். இவ்விதமாக பெறப்படுகின்ற வருமானத்தை செலவிடுகையில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சிடமிருந்து பாரிய தொகை கத்தரிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, பாலூட்டுகின்ற தாய்மார்களுக்கு, பிள்ளைகளுக்கு போசாக்குக் குறைபாடு நிலவுகையில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகின்ற நிலையில் இரண்டாயிரத்து இருபத்திமூன்றுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நூற்றி ஐம்பத்திரண்டு பில்லியன் ரூபாவானது இரண்டாயிரத்தி இருபத்திநான்கில் எழுபத்தைந்து பில்லியன் ரூபா வரை கத்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டிவிடல் காரணமாக விசேட தேவைகள் நிலவுகின்ற குழுவினர் மத்தியில் சிறுவர் மற்றும் பெண்கள் மீது பாரிய அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. பிரதேச செயலாளர் அலுவலகங்களால் பேணிவரப்படுகின்ற சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு நிலையங்களிலிருந்து அவர்களை அகற்றி தத்தமது வீடுகளுக்கு கொண்டுசெல்லுமாறு நிரப்பந்திக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் பெற்றுக்கொள்கின்ற வரி வருமானத்தில் மிகவும் குறைந்த பகுதி அதற்காக கடந்த காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும் அது தற்போது வெட்டிவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவர்களின் குடும்பங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமை அதனால் மேலும் அதிகரிக்கின்றது. எனினும் இளைப்பாறிய சனாதிபதிமார்கள் மற்றும் பாரியார்களை பராமரிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை இரண்டாயிரத்து இருபத்திமூன்றில் எண்பத்திநான்கு மில்லியன் ரூபாவில் இருந்து அடுத்த வருடத்தில் நூற்றிப்பத்து மில்லியன் ரூபாவரை அதிகரித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கான பணத்தை கத்தரித்து முன்னாள் சனாதிபதிமார்களின் செலவுகள் உயர்த்தப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவுவது தொடர்ந்தும் தீத்தொழில் புரிந்து மேற்கொள்ளப்படுகின்ற பொருளாதாரமாகும். இன்று அரசாங்கத்தின் செய்தித்தாளே மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு எமது பிள்ளைகளை விற்பனைசெய்கின்ற தீத்தொழில் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜே.ஆர். ஜயவர்தனவினால் இந்த நாட்டுக்கு நவலிபரல்வாதம் அறிமுகஞ் செய்யப்பட்டதுமே இந்த தீத்தொழில் தொடங்கப்பட்டது. பேபி பாஃம் எனக்கூறி எமது பிள்ளைகளை விற்பனைசெய்த இறந்தகாலமே இன்று ரணில் விக்கிரமசிங்கவின்கீழும் அவ்விதத்திலேயே அமுலாக்கப்பட்டு வருகின்றது. மறுபுறத்தில் மதுபானசாலைகள் திறந்துவைக்கப்பட்டிருக்கின்ற காலத்தை நீடித்து தகப்பன்மார்களுக்கு குடிக்கக்கொடுக்கிறார்கள். தாய்மார்களை வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். இந்த நிலைமைக்குள் பாதுகாப்பற்றதன்மைக்கு இலக்காக்கப்பட்டுள்ள பிள்ளைகள் தொடர்பான குற்றச்செய்லகள் அதிகரித்து வருகின்றன. இன்று நிலவுவது பிள்ளைகள்கூட வெறுக்கின்ற அரசாங்கமாகும். எனவே இன்று எஞ்சியிருப்பது அரசாங்கத்தை விரட்டியடித்து பதில் தேடுவது மாத்திரமாகும். அதற்காக திசெம்பர் நான்காம் திகதி சிறுவர் மற்றும் மகளிர் செலவுத்தலைப்பு அங்கீகரிக்கப்படவுள்ள தினத்தன்று பாரிய ஆர்ப்பாட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்கான அனைத்துப் பெண்களையும் பாராளுமன்றத்திற்கு அருகில் வருமாறு அழைப்பு விடுகிறோம்.
“கெரற் கிழங்கு அரசியலை முன்னெடுத்துச் செல்கின்ற அழகான சொற்றொடர்களே வரவுசெலவில் இருக்கின்றன.“
–தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்–
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்துடன் எமது நாட்டின் பெண்களும் பிள்ளைகளும் பெருமளவிலான சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அதைப்போலவே அரச பிரிவிலும் தனியார் பிரிவிலும் தொழில்புரிகின்ற பெண்களும் பெருந்தோட்டத் துறையைச்சேர்ந்த பெண்களும் புதிதாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. கடந்த காலத்தில் ஆடைக் கைத்தொழில், ஏனைய குடிசைக் கைத்தொழில்கள் மூடப்படுகின்ற தருணத்தில் கொண்டுவரப்பட்ட வரவுசெலவினால் வீழ்ச்சியடைந்த பொருளாதரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தைப் போலவே தமது குடும்பம் பற்றி நலமான ஒரு கனவினைக்காண மக்கள் எதிர்பார்த்தார்கள். மேற்படி எந்தவொரு விடயத்தையும் கருத்திற்கொள்ளாமல் தேர்தலை இலக்காகக்கொண்ட கெரற் கிழங்கு அரசியலை முன்னடுத்துச் செல்கின்ற பண்புகள், சில அழகான சொற்றொடர்கள் இந்த வரவுசெலவில் அடங்கியுள்ளன. மக்களின் பற்றியெரிகின்ற பிரச்சினைகளுக்கு அத்தருணத்தில் வழங்கப்படவேண்டிய குறைந்தபட்ச தீர்வுகளைக்கொண்டதாக எதிர்காலத்தில் நாட்டை உயர்த்திவைப்பது எந்த இடத்திற்கு என்பதை எதிர்வுகூறக்கூடிய விடயங்கள் வரவுசெலவில் உள்ளடங்க வேண்டும். எனினும் எழுபத்தைந்து வருடங்கள் பூராவிலும் சனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் பிரமுகர்கள் வரை அவர்களின் சுகபோகத்திற்காகவும் சட்டைப்பைகளை நிரப்பிக்கொள்வதற்காகவும் கீழ்த்தரமான தேவைகளுக்காகவும் நிதியை முகாமைசெய்ததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது. எனினும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திவைக்கின்ற எந்தவிதமான இலக்குகளும் இந்த வரவுசெலவில் உள்ளடக்கப்படவில்லை.
புள்ளிவிபரங்கள் என்றவகையில் எடுத்துக்கொண்டால் ஒற்றோபர் மாதமளவில் ஐந்துஇலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் கிடைத்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரரீதியில் தாழ்ந்த மட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். மறுபுறத்தில் மனைசார் மட்டத்தில் அல்லது சிறிய அளவிலான மட்டத்தில் மேற்கொண்டு வருகின்ற ஏதேனும் கைத்தொழில் இருப்பின் அதற்காக பாவித்த மின்கட்டணத்தைக்கூட இவ்விதமாக செலுத்தமுடியாத மட்டம் நிலவுகின்றது. எமது ஊர்களில்கூட சிறுகைத்தொழில்களில் ஈடுபட்ட பெருந்தொகையான சகோதரிகள் தொழில்களை இழந்து மேலும் பலர் தொழில்களை இழக்கின்ற அபாயமும் மின்கட்டணம் காரணமாகத் தோன்றியுள்ளது. மாத வருமானத்துடன் மின்கட்டணத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது. வியாபார நிலையங்களில் போன்றே வீடுகளிலும் இரவுவேளைகளில் குளிர்சாதனப்பெட்டிகளில் மின்சார இணைப்பை துண்டித்துவைக்க பெரும்பாலானோர் தூண்டப்பட்டமையால் பிள்ளைகளின் உணவுப்பாதுகாப்புகூட ஆபத்திற்கு இலக்காகி உள்ளது. மின்கட்டண அதிகரிப்பு மனைசார் மட்டம் தொட்டு கைத்தொழில்கள் வரை மிகவும் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. வரவுசெலவில் மக்கள் அதற்காக ஏதேனுமொரு விதத்திலான நிவாரணத்தை எதிர்பார்த்தாலும் நூற்றுக்கு பதினைந்தாக நிலவிய வற் வரி நூற்றுக்கு பதினெட்டு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மூலப்பொருட்கள் மீது தாக்கமேற்படுவதைப்போலவே முடிவுப்பொருளாக மாறும்போது பண்டங்களின் விலை அதிகரிக்கின்றமையை பாவனையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. மூலப்பொருட்கள் மீதான வரிகளின் தாக்கம் காரணமாக மேலுமொரு வருடத்திற்குள் மேலும்பல கைத்தொழில்கள் சீரழியக் காரணமாக அமையும்.
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் நியாயமான சம்பள அதிகரிப்பினை எதிர்பார்த்தாலும் அதனை வழங்காமல் ரூபா பத்தாயிரத்தை அடுத்த ஏப்பிறல் மாதம் தொடக்கம் வழங்குவதாக ஏமாற்றுத் தேர்தல் வாக்குறுதியாயொன்று கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் கோரிநின்றதோ ரூபா இருபதாயிரம் சம்பள அதிகரிப்பையாகும். அரசாங்கம் வழங்குவதாகக்கூறிய ரூபா பத்தாயிரம் சம்பள அதிகரிப்பு தொடர்பில்கூட ஒழுங்கான முறையியலொன்று முன்மொழியப்படவில்லை. தற்போது முன்மொழியப்பட்டுள்ள வற் வரியில்இருந்து மேலும் பெருமளவிலான வருமானத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்கின்ற அதேவேளையில் சமூகப் பாதுகாப்பு வரியை உள்ளிட்ட மேலும் பல விதமான வரிகளை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. மறுபுறத்தில் ஐ.எம்.எஃப். முன்மொழிவுத் திட்டம் ஊடாக ஓய்வூதியம்பெறுனர்கள்கூட வரி செலுத்துபவர்களாக மற்றுமொரு விதத்தில் மறைமுகமாக இரையாக்கப்படுகிறார்கள். ரூபா பத்தாயிரம் சம்பள அதிகரிப்பினை அரச ஊழியர்களுக்கு வழங்குவதாகக் கூறினாலும் வரி அதிகரிப்பு காரணமாக உண்மையாகவே இடம்பெறுவது சம்பளக் கத்தரிப்பாகும். வழங்குவதாகக் கூறுகின்ற ரூபா பத்தாயிரம் கொடுப்பனவு ஒரு தில்லுமுல்லு என்பது தொடர்பில் அரச ஊழியர்கள் சிறந்த புரிந்துணர்வுடனேயே இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றேழாம் ஆண்டில் இருந்தே வழங்கவேண்டிய சம்பள ஏற்றங்களில் இற்றைவரை செலுத்தப்படாத மூன்றிலிரண்டு பகுதியை வழங்குதலை இரண்டாயிரத்து இருபத்திநான்காம் ஆண்டுக்கான வரவுசெலவிலும் புஸ்வானமாக மாற்றியுள்ளார்கள். இதனால் ஏறக்குறைய இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர்களாக அமைந்த ஆசிரியர்களும் அதிபர்களும் போலியான வாக்குறுதிகளை வழங்குகின்ற ஊழல்மிக்க அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வற் வரி அதிகரிப்பு மூலமாக அடுத்த ஆண்டில் ஆயிரத்து நானூறு பில்லியன் ரூபாவை அதிகரித்துக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்தாலும் தொள்ளாயிரத்து பதினெட்டு பில்லியன் ரூபாவையே பெற்றுக்கொள்ள முடியுமென பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளார்கள். இதனால் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியளவில் வற் வரியை நூற்றுக்கு இருபத்திநான்கு வீதம்வரை அதிகரிப்பதற்கான அபாயநேர்வு நிலவுவதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். நுண் நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், விவசாயக் கடன்களை செலுத்த முடியாதுள்ள மக்கள், வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிப்புற்றுள்ள மக்கள் மற்றும் குறிப்பாக தோட்டப்புற மக்கள் பற்றி இந்த வரவுசெலவில் எந்தவிதமான குறிப்பும் கிடையாது. இந்த நிலைமையில் மீண்டும் பணவீக்கம் உயர்வடைந்து அரசாங்கம் வழங்குவதாகக் கூறுகின்ற நிவாரணங்கள்கூட புஸ்வானமாக மாற்றமடையும்.
இந்த நாட்டில் உற்பத்தியையும் அரசாங்க வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ளக்கூடிய எந்தவிதமான கருத்திட்டமும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் கிடையாது. அடுத்த வருடத்திற்குள் மாத்திரமன்றி எதிர்கால நோக்கங்களைக்கொண்ட தொலைநோக்கு எதுவுமற்ற வரவுசெலவே காணப்படுகின்றது. கொள்ளைக்கார பொருளாதாரத்தையும் ஊழில்மிக்க அரசியல் கலாசாரத்தையும் பேணிவருகின்ற இந்த முறைமைக்கு இனிமேலும் இடமளிக்கக்கூடாது. இந்த வரவுசெலவில் நூற்றுக்கு எழுபத்தொன்பது வீதமுமே சனாதிபதி மற்றும் பிரதமரின் கீழேயே நிலவுகின்றது. எஞ்சிய இருபத்தேழு அமைச்சுக்களுக்கும் ஒட்டுமொத்த வரவுசெலவில் நூற்றுக்கு இருபத்தொன்று மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. சனாதிபதி மொத்த செலவில் நூற்றுக்கு அறுபத்தாறு வீதத்தை தனக்குக்கீழ் வைத்துள்ளார். இந்த ஊழல் மிக்க அரசியல் எப்படிப்பட்டதென்பது இதன்மூலமாக தெளிவாகின்றது. தமது வாழ்க்கையின் சுகபோகத்திற்காக மக்களின் கழுத்தை நெரிக்கின்ற இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நாங்கள் பிரமாண்டமான ஆர்ப்பாட்டமொன்றை செய்வோம். தொடர்ந்தும் மக்களை ஏமாற்றவேண்டாமென அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.