(53 வது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்தம் – பொலநறுவை 2024.04.05 53)
நாமனைவரும் பொலநறுவையில் ஒன்றுசேர்ந்திருப்பது ஏப்ரல் வீரர்களின் 53 வது ஞாபகார்த்தத்தின் நிமித்தமாகும். அதைப்போலவே ஞாபகார்த்த ஒன்றுகூடல்கள் காலி பத்தேகமவிலும் புத்தளம் நாத்தண்டியாவிலும் நடைபெறுகின்றது. இந்த சமூகத்தை மாற்றியமைப்பதற்காக பொதுமக்களின் கைகளில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் 1971 போராட்டத்தில் உயிர்த்தியாகம்செய்த எமது அன்புக்குரிய தோழர்கனை நினைவுகூர்ந்து அவர்களின் அனுபவங்களை நாங்கள் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
அன்றும் எமது நாடு பயணித்துக்கொண்டிருந்த வங்குரோத்து நிலைமையைக் கண்டோம். இற்றைக்கு இரண்டு வருடங்களாக கரைசேர்க்க முடியாத அளவுக்கு வங்குரோத்து அடைந்துள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ள தாங்கிக்கொள்ள முடியாத இந்த பொருளாதாரத்தில் இருந்து விடுபட்டு மாற்றுவழியில் பயணிக்கவேண்டியது அவசியமாகும். அரசியல்ரீதியாகவும் நாடு வீழ்த்தப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார கொள்கைகளைத் தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியமாகும். அதைப்போலவே நாட்டைக் கட்டியெழுப்ப அவசியமான வளங்களை வேகமாக விற்று அடிமைப்பட்ட நாடாக மாற்றப்பட்டுள்ளது. 1971 இல் போராடிய எமது சகபாடிகள் சிந்தித்தது மண்டியிட்டு வாழ்வதைவிட சுதந்திரம் பெறவேண்டியது அவசியமென்பதாகும். இன்றும் பெயரளவிலான சுதந்திரமே எமக்கு இருக்கின்றது. அதனால் புதிய சதந்திரப் போராட்டமொன்று அவசியமாகி இருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷாக்களின் அரசியல் பாசறையை உள்ளிட்ட இந்த ஆட்சியாளர்களை மக்கள் முழுமையாகவே நிராகரித்துள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்கவும் பசில் ராஜபக்ஷவும் சனாதிபதி தேர்தலுக்கு முன்னராக பொதுத்தேர்தலை நடாத்துவது பற்றி பேசியதற்கான காரணம் ராஜபக்ஷாக்களுக்கு சனாதிபதி தேர்தலுக்காக முன்வைக்க வேட்பாளரொருவர் இல்லாமையாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இன்றளவில் கட்சியின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டமொன்று நிலவுகின்றது. நாங்கள் இந்நாட்டின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். டலஸ் அழகப்பெருமவுடன் விலகிய குழு பிரிந்து ஒரு பகுதி ஐ.ம.சக்தியுடன் இணைந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த ஐ.ம.சக்தியின் மற்றுமொரு குழு பிளவுபட்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையத் தயாராகி வருகின்றது. நாடு பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடைந்தது மாத்திரமன்றி இதுவரை ஆட்சிசெய்த குழுக்களுக்கு பாரதூரமான அரசியல் நெருக்கடியொன்றும் உருவாகி இருக்கின்றது. அதேவேளையில் நாங்களும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நாங்கள் மக்களை ஒழுங்கமைத்து வருகிறோம். எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் உறுதியாக திசைகாட்டியை வெற்றிபெறச்செய்விக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒரு மாறுபட்ட ஆட்சியை நிறுவவே நாங்கள் முயற்சி செய்கிறோம். அந்த ஆட்சி மூலமாக வீழ்த்தப்பட்டுள்ள நாட்டை மீட்டெடுத்து பலம்பொருந்திய உறுதியான பொருளாதாரமொன்றை உருவாக்கிட வேண்டும். அதனை அமைத்திட பிரமாண்டமான மக்கள் பங்கேற்பு அவசியமாகும். நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் பங்கேற்கச் செய்விக்கின்ற தேசிய எழுச்சியொன்று தேவை. நாட்டை புதிய மறுமலர்ச்சியை நோக்கி ஆற்றுப்படுத்த ஒட்டுமொத்த மக்களையும் அணிதிரட்டி கற்பாறையைக்கூட சாகுபடி செய்கின்ற திடசங்கற்பத்துடன் நாங்கள் செயலாற்றி வருகிறோம். நீதியான நாடு, நியாயமான சமூகம் மற்றும் அடிமைத்தனமற்ற மனிதனை உருவாக்குவதே 1971 இல் போராடிய எமது தோழர்களின் எதி்ர்பார்ப்பாக அமைந்தது. நாங்கள் கட்டியெழுப்புகின்ற பொருளாதாரத்தின் நன்மைகள் எவருக்கும் நியாயமாக பகிர்ந்துசெல்ல வேண்டும். திறந்த பொருளாதாரத்தில் பெரும்பாலான மக்கள் சுயநலம் எனப்படுகின்ற பனிக்கட்டி நீரில் அமிழ்த்தப்பட்டு கல்விப்பருவம்தொட்டே கூட்டுமனப்பான்மையைக் கைவிட்டு மனிதநேயத்தை இழந்துள்ளார்கள். பிறரின் வேதனைகளை உணர்கின்ற ஒத்துணர்வுகொண்ட கூட்டுச் சமூகமொன்றையே நாங்கள் உருவாக்கிடவேண்டும். எமது சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பும் மதிப்பும் கிடையாது. கேடுகெட்ட கருத்துக்களைக்கொண்ட மனிதர்களுடன் நாட்டை முன்நோக்கி நகர்த்த முடியாது. 1971 இன் தோழர்களிடம் மனிதம், நன்மதிப்பு, போராட்டக்குணம், மக்கள்மீது அன்புசெலுத்துதல் நன்றாகவே இருந்தது. மக்கள்மீது அன்புசெலுத்துமாறே அவர்கள் எமக்கு போதித்தார்கள். சமூகத்தில் நிலவவேண்டியது பகைமை, கயமை, துன்பம், மோதல்கள் அல்ல: அன்பு மாத்திரமே. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தக்கூடிய சமூகத்தையே நாங்கள் நிர்மாணிக்கவேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை நாட்டைக் கட்டியெழுப்புகின்ற போராட்டக் கோஷத்திற்காக ஒன்றுசேர்க்ககூடிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். வீழ்த்திய தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்றே தோழர் அநுர வடக்கிற்குச் சென்று கூறினார். தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பி இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற போராட்டக் கோஷத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம். அதற்காக பாரிய செயற்பொறுப்பினை நாங்கள் ஆற்றவேண்டி உள்ளது.
நாங்கள் புதுவிதமாக சிந்திக்காவிட்டால் புதிய சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முடியாது. எம்மிடம் கூட்டுமனப்பான்மை இல்லாவிட்டால் கூட்டான சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முடியாது. நாங்கள் பிறரை நேசிக்காவிட்டால் அன்புநிறைந்த சமூகமொன்றை எம்மால் கட்டியெழுப்ப முடியாது. நாங்கள் அர்ப்பணிப்பு செய்யாவிட்டால் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பிட முடியாது. மானிட இனம்மீது அன்புசெலுத்த, அர்ப்பணிப்புச்செய்ய, கூட்டாக போராட்டம் நடாத்த கற்றுக்கொள்ள இருக்கின்ற ஒரே இடம் 1971 தோழர்களின் உயர்த்தியாகம் செய்கின்ற முன்மாதிரியாகும். நாங்கள் அதிலிருந்து தெம்புபெற்றவர்களாவோம். பிரமாண்டமான சமூக மாற்றத்திற்கன பொறுப்புக்கூறுதலும் பொறுப்புவகித்தலும் எம்மிடம் இருக்கின்றது. 76 வருடங்களாக குறிப்பாக 1977 இன் பின்னர் அழித்த சமூகமே எமக்கு இருக்கின்றது. எல்லாவற்றினதும் விலையை அறிந்த ஆனால் பெறுமதியை அறியாத சமூகமே கடந்த நாற்பது வருடங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. எளிமையான அரசாங்க மாற்றமல்ல சமூகத்தை ஆழமாக மாற்றவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. இதற்காக நாங்கள் அணிதிரண்டு வருவதோடு, எதிரிகள் மிகவும் பதற்றமடைந்துள்ளார்கள். அதனால் ஒரு புறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரக் கொள்கைபற்றி விவாதிக்க வருமாறு எமக்கு சவால் விடுத்துள்ளார்கள். பிரதமர் ரணிலின்கீழ் 05 வருடங்கள் அரசாங்கத்தில் இருந்து பன்னாட்டு இறையாண்மை முறிகளிலிருந்து இலங்கைக்கு மிகஅதிகமான வெளிநாட்டுக் கடன்களைப்பெற்று இந்த பொறிக்குள் எம்மை சிக்கவைத்தவர்களே எம்மை விவாதத்திற்கு அழைக்கிறார்கள். அங்குமிங்கும் தாவுகின்ற உறுதியான கொள்கைப்பிடிப்பற்ற ஆட்களுக்குப் பதிலாக சனாதிபதி தேர்தலில் முக்கியமானதாக அமைவது வேட்பாளர்களாக முன்வருகின்ற கட்சித்தலைவர்கள் காரணமாக எங்கள் கட்சித்தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவுடன் அவர்களின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களை விவாதத்திற்கு வருமாறு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். இப்பொது அவர்கள் அதற்கு முன்னர் மற்றவர்கள் செய்வது நல்லதா கூடாதா என கேட்கிறார்கள். தொலைக்காட்சி அலைவரிசைகளும் அதற்கு தயாராகி வருகின்றன. சஜித் பிரேமதாச தனியாக எதனையும் கூறினாலும் தொலைக்காட்சி விவாதங்களுக்கு வந்ததில்லை. சஜித் பிரேமதாச விவாதத்திற்கு வருவாராயின் நாங்களும் மகிழ்ச்சியடைவோம்.
மறுபுறத்தில் மத்தியகிழக்கில் எண்ணெய் விற்பனை செய்வதைப்போல் எமது நாட்டின் வளங்களை விற்பதற்காக அங்கீகாரம் தருபவர்கள் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்து விவாதமொன்று பற்றி கூறுகிறார்கள். மத்தியகிழக்கில் எண்ணெய் விற்கிறார்களேயொழிய எண்ணெய்க் கிணறுகளை விற்பார்களா? அவர்கள் எண்ணெய்ப் படிவுகளையன்றி உற்பத்திகளையே விற்கிறார்கள். இவர்களுக்கு அது புரியவில்லை. அதோ அந்த எளிமையான விடயங்களை விளங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு நாங்கள் கூறுவது விற்றுத்தின்கின்ற கொள்கைக்குப் பதிலாக நாட்டை சீராக்குகின்ற கொள்கைக்குச் செல்லவேண்டும். மறுபுறத்தில் கூறுவதாயின் வேறு விவாதமொன்றில் ஈடுபட நாங்கள் அதனை அந்த நேரத்தில் பார்த்துக்கொள்வோம். தற்போது அவர்கள் குறிப்பாக தொலைக்காட்சி உரையாடல்களின்போது விடயரீதியாக பதிலளிக்க முடியாமல் போகின்றபோது 88 – 89 பற்றிப் பேசுகிறார்கள். 1971 உடன் தொடர்புடையதாக திரிபுபடுத்தப்பட்டுள்ள வரலாறு பற்றியும் நாங்கள் சற்று பேசவேண்டும். வரலாற்றினை எழுதுபவர்கள் வெற்றியாளர்களே. 1971 பற்றி அவர்களின் கருத்துப்படி எம்மை கிளர்ச்சிகாரர்கள் என்றே கூறுகிறார்கள். 55 வயதிற்கு மேற்பட்டவர்களை கொலைசெய்வதாக அக்காலத்தில் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். 1980 தசாப்பதத்தின் இறுதியில் அப்படித்தான். அவர்கள் பிரமாண்டமான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு வரலாற்றினை அவர்கள் எழுதினார்கள். அவர்கள் தவறாக எழுதிய வரலாற்றினை நாங்கள் வெகு விரைவில் மீண்டும் எழுதுவோமென வலியுறுத்துகிறோம். அந்த வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற தலைமுறையினர் நாங்களே. உண்மையில் 88 தொடங்கியது அதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே, அதாவது 1978 இல் இருந்தாகும். அதனை அறிந்திராதவர்களுக்கு நாங்கள் கூறிக்கொள்வது 78 – 90 வரையான பாரிய காலப்பகுதியில் ஜயவர்தன – பிரேமதாச பீதிநிலையொன்று நிலவியதென்பதையாகும். அந்த வரலாற்றினை நாங்கள் சரிவர விளங்கிக்கொள்ள வேண்டும்.
1977 தேர்தலில் 5/6 பங்கு பலத்தை எடுத்துக்கொண்டுவந்த ஜே.ஆர் ஜயவர்தன அரசியலமைப்பினை மாற்றியமைத்து புதிய அரசியலமைப்புடன் நிறைவேற்று சனாதிபதி பதவியை அறிமுகஞ் செய்தார். நிறைவேற்று சனாதிபதி பதவியால் பெண்ணை ஆணாகவும் ஆணைப் பெண்ணாகவும் மாற்றுவதைத்தவிர ஏனைய எல்லாவற்றையும் செய்யமுடியுமென அன்று அவர் கூறினார். அவர் தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் இராஜிநாமா கடிதங்களை வாங்கி சடைப்பைக்குள் போட்டுக்கொண்டார். ஜே. ஆர். தனது கட்சிக்குக்கூட சனநாயகத்தை கொடுக்கவில்லை என்பதை தற்போது பிதற்றிக்கொண்டிருக்கின்ற நண்பர்களுக்கு கூறிக்கொள்கிறேன். அதன் பின்னர் 1980 யூலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவைகள் கட்டளைகளை விதிக்கிறார். அவசரகாலச் சட்டத்தை அமுலாக்கி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்களை வெளியில் போட்டார். அத்துடன் நின்றுவிடாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை மயானத்திற்கு அனுப்புவதாக கூறினார். வேலைநிறுத்தங்கள் மற்றும் அமைதிவழி ஆர்ப்பாட்டங்களுக்கு தாக்குதல் நடாத்துவதற்காக தனிவேறான காடையர் கும்பல்களை உருவாக்கினார். உபாலி விஜேவர்தனவின் திவயின செய்தித்தாள் அந்த காடையர் கும்பலுக்கு “தக் கூட்டுத்தாபனம்” எனும் பெயரைக் குறித்தது. 1980 யூலை வேலைநிறுத்தத்தில் முன்னர் அந்த காடையயர்களை பிரயோகித்து தாக்குதல் நடாத்தி சோமபால எனும் தொழிலாளரை படுகொலை செய்தார்கள். அதைப்போலவே நாடு பூராவிலும் காடையர் அமைச்சர் குழுவொன்று இருந்தது. 1978 இன் பின்னர் நாங்கள் பகிரங்க அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் எம்மீது தாக்குதல் நடாத்தினார்கள். கெக்கிராவ மகிந்தசோம, கடுவெல போல் பெரேரா, மகியங்கனை கெப்டன் செனெவிரத்ன போன்ற காடையர் அமைச்சர்கள் பீதிநிலைமிக்க ஆட்சியை முன்னெடுத்து வந்தார்கள்.
அதன் பின்னர் 1981 மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் நடாத்தப்பட்டது. அமைச்சர்கள் காடையர்களை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குச்சென்று தெற்காசியாவின் பெறுமதிமிக்க நூல்நிலையத்திற்கு தீவைத்து தேர்தல் பீதிநிலையை உருவாக்கினார்கள். அதற்காக மூன்று காமிணிமார்கள் முன்னணியில் செயற்பட்டார்கள். காமிணீ திசாநாயக்க, காமிணி ஜயவிக்ரம பெரேரா மற்றும் காமிணீ லொக்குகே. வடக்கில் யுத்தமொன்று உருவாகவும் இந்த நிலைமை வழிகோலியது. 1982 இல் கல்வியை நாசமாக்க ரணில் இடையீடுசெய்து கொண்டுவந்த வெள்ளையறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்செய்த மாணவர்களை பொலீஸ் குதிரைகளை ஈடுபடுத்தி தாக்கினார்கள். அந்த காலத்தில் எமது தலைமையில் நிலவிய மாணவர் இயக்கத்தினால் அந்த தாக்குதலுக்கு இலக்காகி வெள்ளையறிக்கையை தோற்கடிக்க இயலுமாயிற்று. அதில் நின்றுவிடாமல் மகளிர் தினமொன்றில் பேரணியில்சென்ற சமசமாஜக் கட்சியின் விவியன் குணவர்தனவை தாக்கினார்கள். அதைப்போலவே சர்வதேச விழிப்புலனற்றோர் தினத்தில் விழிப்புலனற்றோர் நடாத்திய நியாயமான கோரிக்கைகளை முன்வைத்த ஆர்ப்பாட்டம்மீது தாக்குதல் நடாத்தினார்கள். “தார்மீக சமுதாயம்” நூலை எழுதிய பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர அவர்களை சாக்டையில் தள்ளிவிட்டுத் தாக்கினார்கள். அதைப்போலவே ஒருசில வழக்குத் தீர்ப்புகளை வழங்கிய நீதவான்களின் வீடுகளுக்கு எதிரில்சென்று “ஊ” சத்தம் போட்டு கல்லெறிந்தார்கள். கோனவல சுனில் எனப்படுகின்ற ஐக்கிய தேசிய கட்சியைச்சேர்ந்தவரும் பெண்கள்மீது வல்லுறவு புரிந்தவருமான காடையனுக்கு சனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலைசெய்து குழு தீவுக்குமான சமாதான நீதிவான் பதவியைக் கொடுத்தார்கள். ஜே. ஆரின் காடையர்கள் கெட்டம்பே பன்சலையை சுற்றி முள்ளுக்கம்பி வேலி அடித்தார்கள். அத்துடன் நின்றுவிடாமல் 1983 பொதுத்தேர்தலை நடத்தாமல் அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக 1982 திசெம்பர் மாதத்தில் மக்கள் கருத்துக் கணிப்பினை நடாத்தி படுமோசமான ஊழல்மிக்க தேர்தலொன்றை வரலாற்றில் சேர்த்தார்கள். 1983 கறுப்பு ஜுலையை அதன் பின்னரே நிர்மாணித்தார்கள். நாங்கள் இங்கு குறிப்பிடுவது ஊர்களில் இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பற்றியல்ல. ஜயவர்தன ஆட்சியால் கறுப்பு ஜுலை உருவாக்கப்பட்டு அப்பாவித் தமிழ் மக்களை கொலைசெய்து முன்னெடுத்துவந்த அழிவு பற்றியாகும். “சிறி பத்துல’ திரைப்படத்தை இயக்கிய நிர்மாணிப்பாளராக கே. வெங்கட்டை உயிருடன் தீமூட்டிக் கொன்றார்கள். நாட்டில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான எந்தளவு சொத்துக்களை அழித்தார்கள்? அந்த கறுப்பு ஜுலையை பயன்படுத்தி மக்கள் விடுதலை முன்னணி, கமியுன்ஸ்ட் கட்சி மற்றும் நவ சமசமாஜக் கட்சியை தடை செய்தார்கள். ஏனைய இரண்டு கட்சிகளின் தடையை பின்னர் நீக்கி மக்கள் விடுதலை முன்னணியின் தடையை தொடர்ச்சியாக பேணிவந்தார்கள். நாங்கள் எந்த தவறினையும் புரிந்திருக்கவில்லை. அவர்கள் உருவாக்கிய ஜுலை கலவரத்தைப் பயன்படுத்தி சனநாயக அரசியலில் ஈடுபட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியை தடைசெய்தமை பற்றி என்ன கூறுகிறீர்கள் என 1988-1989 ஐ நோக்கி விரல்களை நீட்டுபவர்களிடம் நாங்கள் கேட்கிறோம். அது எமக்கு எதிராக நடைமுறைப்படுத்திய அரசியல் சூழ்ச்சியாகும்.
அத்துடன் நின்றுவிடாமல் எமது கட்சித் தலைவர்களின் தலைவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா வீதம் கேட்புவிலை குறித்தார்கள். றோஹண விஜேவீர, உபதிஸ்ஸ கமநாயக்க, சோமவஞ்ச அமரவீர போன்ற ஐவரை பிடித்துத் தருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா வீதம் செலுத்துவதாக பிரச்சாரம் செய்தார்கள். எமது நாட்டைச்சேர்ந்த எவருமே அந்த ஐம்பதாயிரம் ரூபாவை பெற்றுக்கொள்ளச் செல்லவில்லை. எமது கட்சியை தடைசெய்ததும் தடையை நீக்கிக்கொள்வதற்கான அரசியலிலேயே நாங்கள் ஈடுபட்டோம். தடைசெய்த ஒருவருடம் ஆகையில் நாடு பூராவிலும் “மக்கள் விடுதலை முன்னணியைத் தடைசெய்து ஒரு வருடமாகிறது. தடையை உடனடியாக நீக்கு” என போஸ்டர் ஒட்டினார்கள். இவ்வாறு சென்று அரசாங்கம் 1987 இல் இந்தியாவுக்கு கட்டுப்பட்டு இந்திய – இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. அதற்கெதிராக நாடு பூராவிலும் எதிர்ப்பு தோன்றியது. உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக வந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்காக நடாத்தப்பட்ட மரியாதை அணிவகுப்பில் கடற்படை சிப்பாய் ஒருவர் றயிபல் பிடியினால் அவரைத் தாக்கினார். அவர் எங்கள் கட்சியின் தோழர் ஒருவரல்ல. இந்த உடன்படிக்கைக்கு எதிராக நாடு பூராவிலும் மக்கள் இலட்சக் கணக்கில் ஊர்வலமாக பயணித்தார்கள். கொழும்பு கோட்டை அரச மரத்தடிக்கு வந்து ஊர்வலம்மீது துப்பாக்கிப் பிரயோகம்செய்து 147 அமைதிவழி மக்களை ஜே.ஆரின் அரசாங்கம் படுகொலை செய்தது. அதோ அவ்விதம் களமிறங்கிய அடக்குமுறைக்கு பதிற்செயல் புரிந்தமையே இடம்பெற்றது. எம்மைத் தடைசெய்திருந்தவேளையில் ஓர் இயக்கமென்றவகையில் பிரதிபலிப்பினைச் செய்யவேண்டியநிலை எமக்கு ஏற்பட்டது. 1998 என்பது ஒரு செயலல்ல: பதிற்செயலாகும். சனநாயகத்திற்கெதிராக மாபெரும் பீதிநிறைந்த ஆட்சிக்கு எதிராக நாங்கள் காட்டிய பதிற்செயலாகும். எமது நாட்டு மக்களை படுகொலைசெய்வதற்காக அவர்கள் உத்தியோகபூர்வமற்ற இராணுவங்களை அமைத்தார்கள். “பச்சைப் புலிகள்”, “கறுப்பு பூனைகள்”, “கிறா” ,”பிறா” போன்றவற்றை அமைத்துக்கொண்டு எமது நாட்டு இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கொலைசெய்தார்கள். பல கொலைகளை செய்து அவற்றைத் தடைசெய்திருந்த எம்மீது சுமத்தினார்கள். விஜய குமாரதுங்க படுகொலை ஐக்கிய தேசிய கட்சியால் மேற்கொள்ளப்பட்டதென்பது அது சம்பந்தமாக சனாதிபதி ஆணைக்குழுவில் வெளிப்பட்டதென்பதை சந்திரிக்கா பண்டாரநாயக்க பகிரங்கமாகவே கூறினார். அவர் பின்னர் விதவிதமான கதைகளைக் கூறினாலும் சனாதிபதி ஆணைக்குழுவில் விடயங்கள் வெளிப்பட்டிருந்தன. பிரபல பாடலாசிரியரான பிரேமகீர்த்தியின் படுகொலையை எம்மீது சுமத்தினார்கள். திரு. பிரேமகீர்த்தியின் மனைவி, பிள்ளைகள் மகிந்த ராஷபக்ஷவிடம் நேரடியாகவே கூறியிருந்த விடயம் பிரேமவை கொலைசெய்தவர் மகிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாகவே. அத்தகைய பீதிநிலை இயக்கத்தை முன்னெடுத்துவந்து 60,000 பேருக்கு கிட்டிய எமது நாட்டு மக்களை கொன்று குவித்தார்கள். அவற்றுக்குப் பிரதிபலிப்புச் செய்கையில் இடம்பெறக்கூடாத சில விடயங்கள் இடம்பெற்றன. அந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவை முதன்மையாகக்கொண்ட அமைச்சர்கள் நாடு பூராவிலும் பல்வேறு சித்திரவதைக் கூடங்களை பேணிவந்தார்கள். ஒன்றுதான் ரணிலின் பட்டலந்த. றிச்சர்ட் த சொய்சா, சட்டத்தரணி விஜேதாச லியனஆரச்சி போன்றவர்களை படுகொலை செய்யுமளவுக்கு பல பாரிய குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. வரலாற்றினை திரிபுபடுத்தி கேள்விகேட்பதற்குப் பதிலாக ஜே.ஆர். மற்றும் பிரேமதாச ஆட்சியைக் கேள்விக்குட்படுத்துமாறு எம்மிடம் கேள்விகேட்பவர்களிடம் நாங்கள் கூறுகிறோம்.
மிகவும் கடினமான நிபந்தனைகளுக்கு மத்தியில் வன்முறைசாராமல் அரசியலில் ஈடுபட முடியுமென 1990 இன் பின்னர் நாங்கள் நிரூபித்திருக்கிறோம். கொழும்பு மாவட்டத்தின் சம்மிக்க சுதந்த, ஆர்ப்பாட்டமொன்றின்போது மாத்தளை தோழர் சிறிதாச, அம்பலாங்கொடை தோழர் நய்துவாவடு உள்ளிட்ட தோழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கட்டுவனவில் ஜுலம்பிட்டியே அமரே துப்பாக்கிப் பிரயோகம்செய்து கூட்டமொன்றில் இருந்த இருவரை படுகொலை செய்தார். நாங்கள் வன்முறையில் பிரவேசிக்கவில்லை. 88 – 89 பற்றி நாங்கள் தனியாகப் பேசுவோம். தற்போது தோல்வியால் வெறிபிடித்து எதிரிகள் பதற்றமடைந்துள்ளார்கள். அதனால் தேசிய மக்கள் சக்தியின் பயணப்பாதையை தடுத்துநிறுத்த முயற்சிசெய்துகொண்டு இருக்கிறார்கள். எமக்கொரு பொறுப்பு இருக்கின்றது. வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். நல்லவற்றை சேமித்துக்கொள்ளவும் அகற்றிக்கொள்ள வேண்டியவற்றை அகற்றிக்கொள்ளவும் இயலுமான ஒரே அரசியல் இயக்கம் மக்கள் விடுதலை இயக்கம் மாத்திரமேயாகும்.
1971 போராட்டத்தின்போது தோழர்களின் மனங்களில் நம்பிக்கையொன்று இருந்தது. இந்த உக்கிப்போன் சமூகத்திற்கப் பதிலாக சாதகமான, நியாயமான சமூகமொன்றை கட்டியெழுப்ப, சகோரத்துவமும் கூட்டுமனப்பான்மையும் நிறைந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான தேவை நிலவியது. போராடியது அதற்காகத்தான். தற்போது 53 வருடங்களுக்குப் பின்னர் எமது நாடு மாறிவிட்டது. அந்த சமூகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு பிறந்துள்ளது. ஒட்டுமொத்த மக்களுடனேயே அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நாட்டை மாற்றியமைத்திட ஒருசில தலைவர்களால் மாத்திரம் முடியாது. ஒரு தலைவரால் கட்சிக்கு தலைமைத்துவம் வழங்க முடியும். இன்று நாங்கள் பெருமளவிலான மக்களை ஒழுங்கமைத்து மிகவும் பிரமாண்டமான அரசியல் இயக்கமொன்றாக மாற்றுவதில் வெற்றியடைந்துள்ளோம். இடதுசாரி, முற்போக்கான, சனநாயகரீதியான, தேசப்பற்றுள்ள அனைத்துச் சக்திகளும் ஒன்றுசேர்ந்துள்ளன. எமது சமூகம் இறுதியில் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரேயோர் அரசியல் இயக்கம் மக்கள் விடுதலை முன்னணியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியே என சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. 1971 இன் தோழர்கள் புரிந்த அர்ப்பணிப்பும் அவர்களின் பார்வைக் கோணத்தின் மூலமாகவுமே அந்த இடத்திற்கு இந்த இயக்கத்தைக் கொண்டுவர இயலுமாயிற்று. சாதகமான சமூகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும்: கட்டியெழுப்ப இயலுமென அவர்கள் நினைத்தார்கள். அந்த சமூகம் எங்கள் முன்னிலையில் அணிதிரண்டு இருக்கின்றது. வெறிபிடித்த எதிரிகள் தொடர்ந்தும் மேலும் பலவற்றைச் செய்யலாம். இந்த பக்கத்திலிருந்து அவதூறு கற்பிக்கிறார்கள். மறுபக்கத்தில் மக்களை விலைக்கு வாங்க முயற்சிசெய்து வருகிறார்கள்.
ஆளுங் குழுக்களுக்கு மக்கள் முன்னிலையில் சதாகாலமும் இரண்டு பதிகள்தான் இருந்தன. ஒன்றில் அடக்குமுறை அல்லது அவாநிறைவினைக் கொடுப்பதாகும். இக்காலத்தில் அவர்களிடம் அதிகாரம் இல்லையென்பதால் அடக்குமுறை சிரமமானதாக அமைந்துள்ளது. அதைப்போலவே எம்மை விலைக்கு வாங்கவும் முடியாது. தற்போது சாமான்களை பகிர்ந்தளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பிள்ளைகளுக்கு உணவு பகிர்ந்தளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இற்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் சாப்பாடு கிடைக்காத பிள்ளைகள் பாடசாலைக் கூட்டங்களில் மயக்கமாகி விழுந்தார்கள். அதன்போது ஆசிரியர்களின் தயவே கிடைத்தது. அன்று அது ரணிலுக்கு புலப்படவில்லை. எமது நாட்டின் மிகப்பெரிய நெருக்கடி இந்த இலவசமாகக் கொடுத்ததே எனக்கூறிய ரணில் தற்போது பண்டிகைப் பருவத்தில் 20 கிலோ அரிசியைப் பங்கிடத் தொடங்கி உள்ளார். எங்களுக்கு ஐந்து நாட்களுக்கு உண்ணக்கொடுத்து ஐந்து வருடங்கள் நாட்டைத் தின்னக் கேட்கிறார்கள். எமக்கு கொள்கைப்பிடிப்புள்ள அரசியல் தேவையாகும். நோக்கின் பேரில் கொள்கையின் பேரில் நாட்டை மாற்றியமைப்பதற்கான அரசியல் அவசியமென முதலில் கற்பித்த குழுவினர்தான் 1971 தோழர்கள். ஐந்து கிலோ அரிசிக்காக எமது வாக்குகளை மாற்றியமைக்க மாட்டோமென நாங்கள் சமூகத்திற்கு கூறவேண்டும். எம்மெதிரில் எவ்வளவுதான் சிரமங்கள் சவால்கள் வந்தாலும் எவர் முன்னிலையிலும் மண்டியிடாத ஒரு குழுவினர் என்பதை உறுதிசெய்துள்ளார்கள். நாங்கள் அவதூறுகளால் துவண்டுவிடப் போவதில்லை. இங்கிலாந்தின் வின்சன்ற் சேர்ச்சில் கூறியுள்ளார் “ நீங்கள் பயணிக்கையில் உங்களைப் பார்த்துக் குரைக்கின்ற ஒவ்வொரு நாய்க்கும் கல்லால் அடிக்க நின்றுவிட்டால் பயணத்தை முடிக்க இயலாது” என. தோழர் லெனின் ஒருதடவை “வஸ்கா எனும் பூனை செவிசாய்க்கும், ஆனால் தொடர்ச்சியாக கடித்துக்கொண்டெ போகும்.” எனக் கூறினார். அவர்கள் என்னதான அவதூறாக பேசினாலும் தடைகளை ஏற்படுத்தினாலும் இந்த போராட்டத்தை நாங்கள் வெற்றிபெறாமல் திரும்பப் போவதில்லை என 53 வது ஏப்ரல் ஞாபகார்த்த தினத்தில் உறுதியாகக் கூறுகிறோம்.
நீங்களும் நாங்களும் நீண்டகாலமாக ஒரு கனவினை மனங்களில் அழுத்தி வைத்திருந்தோம். எமது பிள்ளைகளுக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சமூகமொன்றை உருவாக்குங்கள். ஒவ்வொருவரினதும் துன்பத்தை காண்கின்ற, ஒத்துணர்வினைக்கொண்ட, நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள் இருக்கின்ற சமூகத்தை உருவாக்குங்கள். பலம்பொருந்திய பொருளாதாரமொன்றை அமைத்து அதன் நன்மைகள் அனைவருக்கும் பகிர்ந்து செல்கின்ற சமூகமொன்றை உருவாக்குங்கள். எமது நாட்டை உலகில் பலம்பொருந்தியதாக விளங்குகின்ற ஒரு நாட்டை உருவாக்குங்கள். மிகவும் கடினமான நீண்ட பயணத்தை மேற்கொண்டோம். கவிஞர் ரத்ன ஸ்ரீ சுறியதைப்போல் ” வந்த பயணம் கடினமானது – ஒருகட்டத்தில் நாங்கள் வீழ்ந்தது உண்மைதான் – எனினும் அந்த இடத்தில் நின்றுகொண்டு – அழுதுபுலம்ப வேண்டியதில்லை – நாங்கள் போகவேண்டும்” நாங்கள் அதனை நம்பினோம். எங்கள் வெற்றி கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு வந்துவிட்டது. எமது நாட்டை உலகிலுள்ள மிகவும் அழகான நாடாக மாற்றவேண்டி உள்ளது. அதற்காக 1971 போராட்டத்தில் உயிர்த்தியாகம்செய்த தோழர்களின் அனுபவங்களை சேர்த்துக்கொள்வோம். தெம்பு, பலம், நம்பிக்கையை சேர்த்துக்கொள்வோம். நோக்கத்தின்பால் நிலைதளராமல் பயணிக்கின்ற பண்பினை சேர்த்துக்கொள்வோம். நாமனைவரும் ஒன்றாகப் பிணைந்து ஒரே குழுவாக இந்த போராட்டத்தில் வெற்றிபெறுவோம்.