-Colombo, November 13, 2023-
இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னராக மக்கள் விடுதலை முன்னணியின் சிருஷ்டிகர்த்தா தோழர் றோஹண விஜேவீர, கட்சியின் பொதுச் செயலாளராக விளங்கிய தோழர் உபதிஸ்ஸ கமநாயக்க உள்ளிட்ட எமது கட்சியின் தலைவர்கள் எமது ஆசான்களாகிய கட்சியின் பெருந்தொகையான சகோதர சகோதரிகளை நாங்கள் “கார்த்திகை ” மாதத்தில் நினைவுகூறுகிறோம். “கார்த்திகை மாதம்” எமது நி்னைவுகளை புதுப்பிக்கின்ற, பல விடயங்களைக் கற்றுக்கொள்கின்ற மாதமாகும். 1989 இன் பின்னர் எம்மால் கார்த்திகை மாதத்தை மறக்க முடியாதுள்ளது. ” நாங்கள் நேரத்தோடு எழுந்துவிட்டோம். நாங்கள் நேரத்தோடு எழுந்துவிட்டோம் என்பதற்காக சூரியன் நேரத்தோடு உதிப்பதில்லை. எனினும் சூரியன் உதிக்கும்போது நேரத்தோடு நாங்கள் விழித்திருப்பது எமக்கு நன்மையைத் தரும்” என தோழர் றோஹண கூறியிருந்தார்.
நாம் அனைவரும் நேரத்துடன் விழித்தெழுந்தவர்களே. நாங்கள் நீண்டகாலமாக விழித்திருந்தோம். மிகவும் இருள்சூழ்ந்த இரவுகள், மிகவும் கடினமான இரவுகளைக் கழித்தோம். நேரத்தோடு விழித்திருந்த எங்களுக்கு தற்போது புதிய உலகத்திற்காக உதயமாகின்ற விடியல், புதிய சூரியக் கதிர்கள் எமது கண்களுக்கு புலப்படத் தொடங்கி உள்ளது. புதிய சமூகமொன்றை நிர்மாணிக்கின்ற வெற்றியை கைக்கெட்டிய தூரத்தில் வைத்துக்கொண்டே 34 வது கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்திற்கு வருகைதந்துள்ளீர்கள். இந்த வாய்ப்பினை தவறவிடவோ தவறிழைக்கவோ எவருக்கும் உரிமை கிடையாது. நாங்கள் செல்லவேண்டிய திசை, நோக்கங்களை மீண்டும் நினைவுமீட்க இது எமக்கு நல்லதொரு வாய்ப்பாகும்.
நாங்கள் ஏன் இன்னமும் இறந்தகாலத்திலேயே இருக்கிறோமென ஒருசிலர் எம்மிடம் கேட்கிறார்கள். நாங்கள் கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மிகவும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தில் உழைக்கின்ற மனிதர்களாவோம். எதிர்காலத்திற்காக செயலாற்றும்போது எமக்கு இறந்தகாலம் அவசியமாகின்றது. எதிர்கால வெற்றிகளுக்கு வரலாற்றின் பாடங்களே எமக்கு வழிகாட்டுகின்றன. எமது நாட்டில் நிலவுகின்ற இந்த பேரவலத்திற்கான காரணம் ஆட்சியாளர்கள் கடந்த காலத்தில் வரலாற்றினை ஒருபுறம் ஒதுக்கிவைத்தமையாகும். வரலாற்றினை ஒருபுறம் ஒதுக்கிவைப்பதையே 1978 இல் நாட்டை ஆட்சிசெய்த ஜே.ஆர். ஜயவர்தன முதலில் செய்தார். வரலாறு, நோக்கம், ஆழம், ஆன்மீகம் இல்லாத வெற்றுச் சமூகமொன்றை உருவாக்கினார். அந்த சமூகப் பேரவலத்தில் நாமனைவரும் மூழ்கி இருக்கிறோம். எமக்கு வரலாறு தேவை. வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருப்பதற்காக அல்ல, வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காக. அந்த குறைகூறுகின்ற கனவான்களால் இன்னமும் வரலாற்றிலிருந்து விடுபட இயலாதுள்ளது.
எம்மைக் குறைகூறுகின்ற அவர்கள் இன்னமும் உயிர்வாழ்வது ஜயவர்தன நிர்மாணித்த வரலாற்றிலேயே. அவர்கள் அடிக்கடி கூறுகின்ற விடயம்தான் “88 பீதிநிலை தருணம்”. 77 இல் இருந்தே பீதிநிலை நிலவியது. அதுதான் ஐக்கிய தேசிய கட்சியின் பீதிநிலை. அதற்கு முகங்கொடுத்த இயக்கமே நாங்கள். எமது இயக்கத்தை அடக்கி, தலைவர்களை படுகொலை செய்து ஜயவர்தன ஒரு வரலாற்றினை எழுதினார். இந்த வரலாற்றினைத்தான் மகிந்த ராஜபக்ஷ ஏந்திச் செல்கிறார். அவர்கள் வரலாற்றினை தத்தமக்கு தேவையான வகையில் எழுதிக் கொள்கிறார்கள். போராட்டத்தின் பின்னர் வரலாற்றினை எழுதியவர்கள் வெற்றிபெற்றவர்களே. சமூக நீதிக்காக, விடுதலைக்காக புரிந்த போராட்டம் தோல்வியடைந்த பின்னர் அந்த போராட்டத்திற்கு சேதமேற்படுகின்றவகையில் வெற்றிபெற்றவர்கள் வரலாற்றினை எழுதினார்கள். இந்த வரலாற்றினை மாற்றியமைப்பதற்கான காலம் தற்போது பிறந்துள்ளது. இதுவரை கொண்டுவந்த தவறான வரலாற்றினை மாற்றியமைப்பதற்கும் புதிதாக எழுதுவதற்குமான பொறுப்பு உங்களிடமும் எங்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
உரோமாபுரியில் அடிமைத்தனம் நிலவியவேளையில் அந்த அடிமைமுறைக்கு எதிராகப்போராடிய ஸ்பாட்டகஸ் ஆட்சியார்களால் படுகொலை செய்யப்பட்டார். உரோம ஆட்சியாளர்களின் வரலாற்றின்படி ஸ்பாட்டகஸ் ஒரு குற்றவாளி. எனினும் பல வருடங்களுக்குப் பின்னர் இன்று ஸ்பாட்டகஸ் முழு உலகிற்குமே ஒரு வீரனாக மாறியுள்ளார். 1818 இல் தோன்றிய ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சி வெள்ளைக்கார ஏகாதிபத்தியவாதிகளால் தவிடுபொடியாக்கப்பட்டது. கிளர்ச்சியை நெறிப்படுத்திய கெப்பெட்டிபொல போன்றவர்கள் வெள்ளைக்கார ஏகாதிபதியவாதிகளுக்கணங்க ராஜதுரோகிகள், பயங்கரவாதிகளானார்கள். வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் அவ்வாறுதான் வரலாற்றினை எழுதினார்கள். அதைப்போலவே 1848 மாத்தளைக் கிளர்ச்சியை நெறிப்படுத்திய வீரபுரன்அப்பு அணியினர் படுகொலை செய்யப்பட்டார்கள். புரன்அப்புவின் அணியினரை பங்கரவாதிகளாக மாற்றி அவர்கள் வரலாற்றினை எழுதினார்கள். அதே வரலாற்றினைத்தான் ஒருசிலர் இன்றும் புரிந்து வருகிறார்கள். வரலாற்றினை மீண்டும் வாசிக்க , எழுத அவசியமான காலமொன்று தற்போது வந்துள்ளது.
இந்த வரலாற்றினை 1977 இல் இருந்து தொடங்கவேண்டும். 1977 இல் ஜே.ஆர். ஜயவர்தன அதிகாரத்திற்கு வந்து நிறைவேற்று அதிகாரம்கொண்ட அரசாங்கத்தை அமைத்துக்கொண்டார். தனியொருவரின் கைகளில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டார். நியதிச்சட்டமுறையான சர்வாதிகாரத்தை உருவாக்கினார். எதிர்க்கட்சியை அடக்கியாளத் தொடங்கினார். அனைத்துச் சக்திகளையும் அடக்கத் தொடங்கினார். பொலீஸ், இராணுவத்திற்கு மேலதிகமாக தொழிற்சங்களிலிருந்தும் காடையர் குழுக்களை அமைத்தார். செய்தித்தாள்களில் அந்தக் குழுக்கள் “சண்டியர் கூட்டுத்தாபனம்” என அழைக்கப்பட்டது. மக்களை அதிகளவில் அல்லற்படுத்தினார்கள். 1980 யூலை வேலைநிறுத்தத்திற்கு முன்னர் சோமபால எனும் தொழிலாளியை படுகொலை செய்தார்கள். 80 யூலை வேலைநிறுத்தத்தின்போது ஒரு இலட்சத்தை விஞ்சிய எண்ணிக்கை கொண்டவர்கள் தொழிலில் இருந்து வெளியில் போடப்பட்டார்கள். ஒருசிலர் தற்கொலை புரிந்துகொண்டார்கள். அந்த வரலைாற்றினை எவருமே பேசுவதில்லை. 1981 மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலின்போது காடைத்தனமிக்க அமைச்சர்கள் யாழ்ப்பாணத்தின் வாக்குப்பெட்டிகளைத் திருடித் தீமூட்டினார்கள். நூலகத்திற்கு தீ மூட்டினார்கள். வடக்கின் பிரிவினையில் தாக்கமேற்படுத்திய ஒரு காரணம் அதுவாகும். ரணில் என்பவர் அக்காலத்தில் ஜே.ஆர். அரசாங்கத்திள் ஓர் அமைச்சர். வெள்ளையறிக்கைக்கு எதிராக போராடிய மாணவர்களைத் தாக்கினார். உரிமைகளைக் கோரிய மக்களைத் தாக்கினார். கல்வியைக் கத்தரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட வெள்ளையறிக்கைக்கு எதிரான போராட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி தலைமைத்துவம் அளித்தமையால் அதனை அமுலாக்க ஆட்சியாளர்களால் இயலாமல் போயிற்று. மாணவர் இயக்கம் முன்னெடுத்த போராட்டம் காரணமாக கல்வியைப் பாதுகாத்துக்கொள்ள இயலுமாயிற்று..
அத்துடன் நின்றுவிடாமல் அரசாங்கத்தை விமர்சித்த பலர்மீது தாக்குதல் நடாத்த தொடங்கினார்கள். “தார்மீக சமுதாயம்” எனும் நூலை எழுதிய பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவை வடிகானில் இட்டுத் தாக்கினார்கள். பெண்கள் பேரணியொன்று செல்கையில் விவியன் குணவர்தனவை உள்ளிட்ட பெண்கள்மீது தாக்குதல் நடாத்தினார்கள். ஒருசில வழக்குத் தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர்களின் வீடுகள்மீது குண்டர்களைக்கொண்டு கல்லெறிந்தார்கள். நீதித்துறைமீது அழுத்தம் கொடுத்தார்கள். இவ்வாறான வரலாற்றினையே ஜே,ஆர். ஜயவர்தனாக்கள் உருவாக்கினார்கள். பெண்கள் மீதான வல்லுறவுக்காக சிறைப்படுத்தப்படடிருந்த கோனவல சுனிலுக்கு சனாதிபதி மன்னிப்பு வழங்கி அத்துடன் நின்றுவிடாமல் சமாதான நீதிவான் பதவியையும் கொடுத்தார்கள். இத்தகைய வலாற்றுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? ரணில் அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சராவார். அவரும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.
1982 இல் மக்கள் கருத்துக் கணிப்பு கொண்டுவரப்பட்டது. 1983 பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டிருப்பின் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்திற்கு வந்திருக்கும். ஜே.ஆரின் ஆறில்ஐந்து பெரும்பான்மைப்பலம் இல்லாமல் போயிருக்கும். அதனைத் தடுப்பதற்காக மேலும் ஆறு வருடங்களுக்கு நீடித்துக்கொள்வதற்காக மக்கள் கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டது. அது ஒரு கொள்ளைக்கார மக்கள் கருத்துக்கணிப்பு. எமது தலைவர் தோழர் றோஹண விஜேவீர இந்த மக்கள் கருத்துக் கணிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அனைவரையும் அடக்கியாண்டாலும் மக்கள் விடுதலை முன்னணியை அடக்க முடியாதென்பதை ஜே.ஆர். உணர்ந்தார். 1983 இல் ஜே.ஆர். உருவாக்கிய யூலை இனக் கலவரத்தைப் பாவித்து மக்கள் விடுதலை முன்னணி, நவ சமசமாஜக் கட்சி, கமியுனிஸ்ற் கட்சி என்பவற்றைத் தடைசெய்தார். சில மாதங்களுக்குப் பின்னர் கமியுனிஸ்ற் கட்சியினதும் நவ சமசமாஜக் கட்சியினதும் தடையை நீக்கினார். மக்கள் விடுதலை முன்னணியின் தடையை நீக்கவில்லை.
மக்கள் விடுதலை முன்னணி சனநாயகரீதியாக அரசியலில் ஈடுபட்ட ஓர் இயக்கமாகும். சனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோழர் றோஹண விஜேவீர ஐவரில் மூன்றாமிடத்தைப் பெற்றார். தேர்தலில் போட்டியிட முன்வந்த, பகிரங்க அரசியலுக்கு வந்த, பொதுமக்கள் ஒழுங்கமைத்த அரசியல் இயக்கமொன்றை தடைசெய்தலுக்காக நிலவிய காரணமென்ன? இன்றும் அதற்கான காரணம் கிடையாது. 1983 யூலை கலவரங்களுடன் எம்மை தொடர்புபடுத்தினாலும் எமக்கெதிராக வழக்கு கிடையாது. கட்சியைத் தடைசெய்தது மாத்திரமன்றி அதனைத் தொடர்ச்சியாக பேணிவந்தார். தோழர் றோஹண விஜேவீர கட்சித் தடையை நீக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்: சனாதிபதி செயலாளருக்கு எழுதினார்: மனித உரிமைகள் அமைப்புகளுக்கு எழுதினார். அக்காலகட்டத்தில் கட்சி செயலாளர் லயனல் போபகே கைதுசெய்யப்பட்டார். விடுதலை பெற்று வந்து சனாதிபதி செயலாளர் மெணிக்திவெலவை சந்தித்து தடையை நீக்குமாறு கோரினார். அதற்கு எவருமே செவிசாய்க்கவில்லை. ஜே.ஆர். ஆல் விலைக்கு வாங்க முடியாத, அடிமைப்படுத்த முடியாத, பயமுறுத்த முடியாத, அவர்களுக்கு அரசியல் சவாலாக அமைந்த எமது வர்க்கத்திலிருந்து உருவாகிய இந்த இயக்கத்தை அழிக்கும் நோக்கத்துடன் இருந்தார்கள். ஏன் அந்த வரலாறு எதனையும் பற்றிப் பேசுவதில்லை?
1988 தற்செயலாக வந்ததொன்றல்ல. 83 இல் மக்கள் விடுதலை முன்னணி ஆயுதமேந்தியதா? 84, 85, 86, 87 இல் ஆயுதமேந்தியதா? இல்லை. நாங்கள் தொடர்ச்சியாக தடையை நீக்கிக்கொள்ள முயற்சிசெய்தோம். “தடையை நீக்கு” என நானும் போஸ்டர் ஒட்டியிருக்கிறேன். அவ்விதம் போஸ்டர் ஒட்டிய தோழர்களை பிடித்துக்கொண்டுபோய் கொலை செய்தார்கள். அந்த வரலாறு எழுதப்பட்டுள்ளதா? விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதா? 1987 மே தினம் தடைசெய்யப்பட்டது. மக்கள் அபயாராமவில் ஒன்றுகூடியதும் அங்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இருவர் இறந்தார்கள். அதுமாத்திரமல்ல 1987 உடன்படிக்கையை கைச்சாத்திட்டு இலங்கையை இந்தியாவிற்கு தாரைவார்த்துக் கொடுத்தார்கள். அதன்போது தேசப்பற்றுகொண்ட போராட்டமொன்று தொடங்கியது. அது சிவில் யுத்தம் வரை பயணித்தது. அந்த சிவில் யுத்தத்திற்குள்ளே தான் 88 – 89 பற்றி பேசப்படுகின்றது. 88 – 89 ஜயவர்தனாக்கள் திட்டமிட்டு நிர்மாணித்த ஒன்றாகும். அதனைத் தவிர்த்துச் செல்வதற்காக மேற்கொண்ட பிரயத்தனங்கள் தோல்வியடைந்தமையால் அதனை எதிர்கொள்ளவேண்டி நேரிட்டது. “மண்டியிட்டு வாழ்வதைப் பார்க்கிலும் சொந்தக் கால்களால் எழுந்துநின்று மடிவது மேலானது” என்ற நம்பிக்கை எமக்கு நிலவியது. இன்றும் நாங்கள் மண்டியிட்டு வாழத் தயாரில்லை.
இன்று அரசியல் மாறிவிட்டது. எமது இயக்கத்துடன் பாரிய மக்கள் இயக்கம் ஒன்றுசேர்ந்துள்ளது. இன்று உலக அரசியல் மாறியுள்ளது. வெகுசன ஊடகங்கள் விரிவடைந்துவிட்டன. மக்களை தகவல்கள் வேகமாக சென்றடைகின்றன. அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் கூட்டுமனப்பான்மை கிடையாது. பலவீனமடைந்துள்ளார்கள். சனாதிபதிக்கு அரசியலமைப்பினாலன்றி மக்களின் பலம் கிடையாது. அன்று ஆடிய ஆட்டங்களை தற்போது ஆடமுடியாது. அன்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் “பச்சைப் புலிகள்”, “பிறா” போன்ற உத்தியோகபூர்வமற்ற காடையர் கும்பல்களை உருவாக்கியது. மக்கள் விடுதலை முன்னணியை அபகீர்த்திக்கு உள்ளாக்க, தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக எக்கச்சக்கமான படுகொலைகளை செய்தார்கள். சதித்திட்டத்தின் விளைவாகவே இராணுவக் குடும்பங்களை படுகொலை செய்தார்கள். அன்று தொழில்நுடபம் இருந்திருப்பின் அவையனைத்துமே அம்பலமாகி இருக்கும். ஓர் உதாரணத்தை எடுத்துக்கொண்டால் பிரேமகீர்த்தி த அல்விஸ் அவர்களின் படுகொலை பற்றி கூறியவேளையில் அரசாங்கத்துடன் இப்போதும் இருக்கின்ற ஊடகத்துறையைச் சேர்ந்த பலம்பொருந்திய ஒருவர் இந்த படுகொலைக்கு பங்காளியாக இருந்தாரென அவரது மனைவியும் பிள்ளைகளும் உறுதிப்படுத்திக் கூறினார்கள். பகிரங்கமாகக் கூறினாலும் இற்றைவரை அதுபற்றிய விசாரணையொன்று மேற்கொள்ளப்படவில்லை.
இந்த வரலாற்றுப் பயணம்பற்றி அறிந்திராமல் ரணில் விக்கிரமசிங்காக்களின், ராஜபக்ஷாக்களின் பேஸ்புக்குகளில் எழுதுகின்ற தம்பிமார்களிடம் வரலாற்றினை சரிவரக் கற்றுக்கொள்ளுமாறு கூறுகிறேன். எங்களுக்கு மனிதர்கள் பெறுமதியானவர்கள். எமது இயக்கம் உருவாக்கப்பட்டிருப்பதும் பிரமாண்டமான சிரமங்களின் மத்தியில் செயலாற்றி வருவதும் நாங்கள் மக்களை நேசிப்பதாலேயே. நாங்கள் மக்களின் கவலைகளைத் துடைத்தெறிந்து மகிழ்ச்சியாக வைப்பதற்காக உழைக்கின்ற இயக்கமாவோம். தமது வாழ்க்கையை ஒருபுறம் வைத்துவிட்டு பொதுமக்களின் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியையும் பெறுமதியையும் வழங்குவதற்காக செயலாற்றிய இயக்கமொன்றின் வீரர்களையே நாங்கள் இன்று நினைவுகூறுகிறோம். மக்கள் விடுதலை முன்னணி 1988 – 89 காலப்பகுதியிலான சம்பவங்கள் பற்றி அவ்வாறுதான் நோக்குகின்றது. நாட்டைக் கட்டியெழுப்பவிருந்த பிரமாண்டமான இளைஞர் தலைமுறையினரை நாசமாக்கிய அரசியலைத் தோற்கடித்து நாங்கள் முன்நோக்கி நகரவேண்டும். அந்த வரலாற்றுக்குள் நாங்கள் எமது குறைபாடுகளைக் கண்டோம். ஆட்சிக் குழுக்கள், ரணில் விக்கிரமசிங்க இன்றும் அந்த வரலாறு பற்றி எதுவுமே கூறுவதில்லை. இப்போது நாங்கள் அந்த வரலாற்றிலிருந்து முன்நோக்கி நகரவேண்டும். நாடு தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலைமையிலேயே இருக்கின்றது.
முன்னர் புரிந்த ஏமாற்றுவேலையையே ஆட்சியாளர்கள் இன்று சமர்ப்பிக்கின்ற வரவுசெலவிலும் புரிந்து வருகிறார்கள். 15 இலட்சம் பேருக்கு தொழில்களை இழக்கச்செய்வித்து கைத்தொழில்களின் உற்பத்தி 27% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று இந்த நாட்டில் பொருளாதாரமொன்று கிடையாது. நாட்டில் இருந்த கைத்தொழில்களை விற்றுத் தின்பதில் ஆரம்பித்த செயற்பாடு இன்று தபால் கந்தோரை விற்பது வரை வந்துள்ளது.
மனிதநேயமுள்ள அரசியலில் ஈடுபட்டு சமூகமொன்றை மாற்றியமைக்கவே கார்த்திகை ஞாபகார்த்தத்தின் அனுபவங்களை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த சமூகத்தை மாற்றியமைக்கவல்ல பிரமாண்டமான மனித பலத்தைக்கொண்ட, திராணிகொண்ட, விடாப்பிடியாக பேராடுகின்ற அரசியல் இயக்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்பி இருக்கிறோம். வசதியீனங்களை விஞ்சியதாக நோக்கங்களின்பால் இடையறாமல் பயணிக்கின்ற அரசியல் இயக்கமொன்று இருக்குமாயின் அது மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே. நிலைமைகளுடன் புதுப்பொலிவு அடைந்த, புதியதாக மாற இயலுமென்பதை நிரூபித்த, தமது மிகச்சிறந்தவற்றை தக்கவைத்துக்கொண்டு மாறிவருகின்ற ஒரே அரசியல் இயக்கம் மக்கள் விடுதலை இயக்கமாகும். தன்னலமற்ற மனிதனை உருவாக்க முடியுமென்பதை எமது கட்சி நடைமுறையில் நிரூபித்துள்ளது. பொது நோக்கமொன்றுக்காக உழைக்கின்ற குழுவொன்று மக்கள் விடுதலை இயக்கத்தில் இருக்கின்றதென்பதை மக்கள் எற்றுக்கொண்டுள்ளார்கள். இறுதியில் உயிரையும் அர்ப்பணிக்கவல்ல, நோக்கங்களை கைவிடாத இயக்கமென்பதையும் நிரூபித்துள்ளது.
அதைப்போலவே தேசிய மக்கள் சக்தியுடன் நாங்கள் ஒன்றுசேர்ந்து ஊழலற்ற அரசியல் இயக்கமொன்றைக் கட்டியெழுப்பி உள்ளோம். ஊழல்நிறைந்த கறுப்புப் பொருளாதாரத்திற்குள்ளே ஊழலற்ற அரசியல் இயக்கமொன்றை உருவாக்குவது, ஊழலற்ற அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குவது, ஊழலற்ற அங்கத்தவர்களை உருவாக்குவது மிகவும் சிரமமான வேலையாகும். அதோ அந்த வேலையை நாங்கள் செய்திருக்கிறோம். தேசிய மக்கள் சக்தியை விரும்புபவர்கள் அவ்வாறு விரும்புவதற்கான பிரதான காரணம் ஊழலற்ற அரசியல் இயக்கமாக அமைவதே என்பது மதிப்பாய்வுகள் மூலமாக வெளிப்பட்டுள்ளது. அது எளிமையான விடயமல்ல. ஊழலற்றவர்களாக இருப்பது கேலிக்கூத்தாக அமைந்துள்ள சமூகத்தில் அவற்றைத் தாங்கிக்கொண்டு முன்மாதிரியாகத் திகழ்வது இலகுவான ஒன்றல்ல. திருடினால் பரிகாசம் செய்யாத, நண்பரிடமிருந்து கொடையாக கிடைப்பது பரிகாசத்திற்கு இலக்காகியுள்ள சமூகமொன்றில் நாங்கள் ஊழல்நிறைந்த கலாசாரமொன்றை உருவாக்கி இருக்கிறோம். இப்போது அவர்களுக்கு எமது ஊழலற்ற தன்மை ஒரு சவாலாக மாறியுள்ளது. அவர்கள் ஊழல் பேர்வழிகள் என்பதால் ஜேவீபியும் ஊழல் நிறைந்தது எனும் சமூக கருத்தியலை உருவாக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அதற்காக படைக்கப்பட்ட ஒருசில செய்திகளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அவற்றை படைத்தவர்கள் மன்னிப்புக் கோரவேண்டியும் ஏற்பட்டது. குறிப்பாக தோழர் அநுரவை இலக்காகக்கொண்ட சேறுபூசுகின்ற இயக்கமொன்று தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒருவர்மீது ஒருவர் குறைகூறிக்கொண்டு முன்னெடுத்துவருகின்ற இந்த சேறுபூசுகின்ற இயக்கத்தினால் இரத்தத்தால் இணைந்த எமது சகோதரத்துவத்தை சிதைக்க முடியாது. எமது கட்சியில் இருந்த தவறுபுரிந்தவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்தகைய எமது நல்ல பண்புகளை பாதுகாத்துக்கொண்டு முன்நோக்கி நகர்ந்துள்ளோம். எமது வாழ்க்கையில் சேகரித்துக்கொண்ட மிகச்சிறந்தவற்றை கட்சியுடன் சேர்த்துவந்த பயணத்தில் மக்கள் விருப்பத்தின்பேரில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் இலக்கினை நாங்கள் நெருங்கியுள்ளோம்..
கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்தில் அந்த சகோதர சகோதரிகள் எமக்குப் பெற்றுத்தந்துள்ள அனுபவங்கள், மிகச்சிறந்த முன்னுதாரணங்கள் மற்றும் அவர்களின் நோக்கங்களுக்கிணங்க மிகவும் சாதகமாக சமூகத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். நீதியான சமூகம், நெறிமுறைசார்ந்த மனிதன், அடிமைத்தனமற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கத்துடன் முன்நோக்கி நகர்ந்த அவர்களை இடைநடுவில் கொன்றுபோடுகையில் எமக்கு பொறுப்புக்களை ஏற்கவேண்டி நேரிட்டது. மிகவும் குறுகிய எதி்ர்காலத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் இந்த பெருநிலத்தில் விளைகின்ற நாள் வரும். அதனை ஊழல்பேர்வழிகளால், ரணில் விக்கிரமசிங்காக்களால், மகிந்த ராஜபக்ஷாக்களால் தடுக்க முடியாது. சேர்க்கக்கூடிய, சேர்த்துக்கொள்ள வேண்டிய குழுவினரை, அனுவங்களையும் அறிவினையும் சேர்த்துக்கொண்டு மிகப்பிரமாண்டமான மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்பி, நெறிமுறைகளை பாதுகாத்துக்கொண்டு முன்நோக்கிச் செல்லவேண்டிய பொறுப்பு எம்மனைவருக்கும் இருக்கிறது. நாங்கள் மக்களின் ஆட்சியை உருவாக்க வேண்டும். அதற்காக பொருத்தமான பொதுமக்களை நிர்மாணிக்க ஒன்றுபட்டு அடக்கமாகவும், இலக்குகளைக் கொண்டதாகவும், பொய்க்கிடங்குகளில் கால் பதிக்காமல், மிகுந்த போராட்டக் குணத்துடன் இந்த பயணத்தை மேற்கொள்ள நாங்கள் பலமடையவேண்டும். இந்த யுகத்தின் பலம்பொருந்திய ஆயுதம் “கருத்துக்களால் ” போராடுவதே என தோழர் றோஹண விஜேவீர கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்காக்கள், மகிந்த ராஜபக்ஷாக்கள் ஆகியோரை கருத்துக்களால், கருத்தியல்களால் தோற்கடித்துவிட்டோம். தற்போது எஞ்சியிருப்பது அரச அதிகாரத்தில் இருந்து தோற்கடிப்பதாகும். அதற்காக கார்த்திகைவீரர் ஞாபகார்த்தத்தில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பெறுமானங்கள் இருக்கின்றன.
நாங்கள் வசிப்பது மிகுந்த அழிவுநிறைந்த படுமுமோசமான சமூகத்திலேயே ஆகும். எல்லாவற்றினதும் விலையை அறிந்த, பெறுமதியை அறியாத சமூகத்தை மாற்றியமைத்து இந்த நாட்டை நாங்கள் உயிர்வாழக்கூடிய நாடாக மாற்றுகின்ற நோக்கத்தை வெற்றியீட்டவேண்டும். முப்பத்தைந்தாவது கார்த்திகைவீரர் ஞாபகார்த்தத்தை மக்களின் ஆட்சிக்குள் நினைவுகூற முப்பத்தி நான்காவது கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்தில் திடங்கற்பம் பூணுவோம். எனது உரையை நிறைவுசெய்ய முன்னராக ரத்ன ஸ்ரீ விஜேசிங்க எழுதிய கவிதையின் ஒருபகுதியை மேற்கோள்ள காட்ட விரும்புகிறேன். 1971 போராட்டம் பற்றி எழுதிய அந்த கவிதைப்பகுதி இன்றும் பொருந்தக்கூடியதாக பாரிய பொருள்நிறைந்த கவிதையாகும்.
என் நண்பர்களே பூக்கள் மலர்ந்தால் மரத்தில்
காய்ப்பது நிச்சயமதில் சந்தேகம் கிடையாது
மனதால் தளரவிடாமல் மலர்களின் மென்மையை
வாரீர் மகரந்தச் சேர்க்கைக்கு சீக்கிரம் கூட்டமாக
இந்த கொடிய சமூகத்தை மாற்றியமைத்து மிகவும் சாதகமான சமூகமொன்றை எமது கைகளால் நிர்மாணித்திட அனைவருக்கும் ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கட்டுமாக