(-யாழ்ப்பாணம், செப். 5-)
இன்று (05 பிற்பகல் இடம்பெற்ற வெற்றிக்கான மக்கள் கூட்டத் தொடரின் யாழ்ப்பாணம் மாபெரும் கூட்டத்தில் கலந்துகொண்ட போது.
நாட்டில் இன்று பெருமளவான போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகளே இருக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் சாம்ராட்யம் அடியோடு துடைத்தெறியப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
போதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்படும் பணம்தான் இன்று பல அரசியல்வாதிகளின் பரப்புரைகளுக்குப் பயன்படுகின்றது. போதைப்பொருளின் பின்னணியில் அரசியல்வாதிகளே உள்ளனர். போதைப்பொருள்கள் இலங்கைக்குரியனவையா? இல்லை. அவை கொண்டுவரப்படுகின்றன. அதை அனுமதிக்கின்றனர். எனவே ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் குழுக்கள் அடியோடு துடைத்தெறியப்படும். இந்த உத்தரவாதத்தை நான் மக்களுக்கு உறுதியுடன் தருகின்றேன் – என்றார்.
ஊடகப் படுகொலைகளுக்கு முழுமையான விசாரணைகள்
உதயன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை என்பன தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உதயன் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, உதயன் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைகள் தாக்குதல்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பில் அநுரவிடம் சுடடிக்காட்டப்பட்டது. இதையடுத்தே ஊடகப் படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பில் மிக ஆழமான விசாரணைகள் நடத்தப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நீதி நிலைநாட்டப்படும் என்பதில் நான் மிக ஆழமான உறுதியுடன் உள்ளேன். இந்தக் குற்றங்கள் நிகழ்ந்து எத்தனை வருடங்கள் கடந்திருந்தாலும் நிச்சயமாக நீதியென்பது நிலைநாட்டப்பட்டே தீPரும். அனைத்து வழக்குகள் தொடர்பிலும் நான் தீர்க்கமாக விசாரிப்பேன் – என்றார்.
இதன்போது உதயன் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த அறிக்கையொன்று உதயனின் நிர்வாக இயக்குநர் சரவணபவனால் அநுரகுமாரவிடம் கையளிக்கப்பட்டது.
விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை கண்டுகொள்வேனா நான் அநுரவின் நகைச்சுவை
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா? என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.
அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், ‘அநுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெறமுடியாது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்பாடும். ஏற்கனவே நாடு சீனாவின் கடன்பொறிக்குகள் சிக்கியுள்ள நிலையில் நாட்டு மக்கள் அதனை விரும்ப மாட்டார்கள்’ என்று விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடியாகவே, விக்னேஸ்வரன் கூறுவதை தமிழர்களே பொருட்படுத்துவதில்லை. நான் ஏன் பொருட்படுத்த வேண்டும் என்று அநுர தெரிவித்துள்ளார்.
இன்றைய உலகில் எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காமல் ஒன்றும் செய்ய முடியாது. அரசாங்கங்கள் இன்னொரு அரசாங்கங்களுக்குத்தான் ஆதரவை வழங்குகின்றன. தனி நபருக்கு அல்ல. ஆதலால், இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் இந்தியாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன். சீனாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் சீனாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன் – என்றார்.
போர்க் குற்றவாளிகளை நீதிமன்றுகள் தண்டிக்கும்!
போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துவதில் நான் அப்போதும், இப்போதும்உறுதியாகவுள்ளேன். ஆனால் போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் நீதிமன்றங்களுடன் தொடர்புடைய விடயம் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுரகுமார அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில், போரின்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்கள் எவரையும் தண்டிக்கவேண்டும் என்று கோரவில்லை. எனவே, போரில் என்ன நடந்தது என்று வெளிப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த செவ்வியை மேற்கொள்காட்டி, ‘இறுதிப்போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் நிலைப்பாட்டில் நீங்கள் இல்லையா?’ என்று ஊடகவியலாளர்கள் வினவினார்கள். இதற்குப் பதிலளிக்கும்போதே, ‘இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிவதும் வெளிப்படுத்துவதும்தான் என் வேலை. தண்டனை வழங்குவது நீதிமன்ற சுயாதீனத்துடன் தொடர்புடைய விடயம். நான் போர்க்குற்றவாளிகளைக் கண்டறிவேன்.நீதிமன்றங்கள் அவஎகளைத் தண்டிக்கும்’ என்று அநுர தெரிவித்துள்ளார்.