(-“நாட்டைக் கட்டியெழுப்பும் நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” வெற்றிக்கான காலி பொதுக் கூட்டம் – 2024.10.27-)
இந்த தேர்தலில் மக்களுக்கு கூறுவதற்கு விடயங்கள் இல்லாதவர்கள் பழைய கதைகளையே மீண்டும் கூறத்தொடங்கி இருக்கிறார்கள். புதியவர்களுக்கு அனுபவம் கிடையாதெனவும், பழக்கப்பட்டவர்களையே அனுப்பிவைக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கூறுகின்ற பழையவர்கள் திருட்டுகளுக்கு பழக்கப்பட்ட, சட்டத்தை முற்றாகவே மதிக்காமல் செயலாற்றுபவர்கள் என்பது ஏற்கெனவே அம்பலமாகி உள்ளது. சாதாரண மனிதர் ஒருவரின் வாகன இலக்கத்தகடு விழுந்திருந்தால், வீதியில் மிகவும் விழிப்புடன் கவனமாகவே பயணிப்பார்கள். ஆனால் அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் இருந்து கள்ளத்தனமாக கொண்டுவந்து திருட்டு இலக்கத் தகடுகளுடன் வாகனங்கள் ஓட்டப்பட்டமை அம்பலமாகி உள்ளது. அதைப்போலவே கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த வாகனங்களை இனந்தெரியாதவர்கள் கொண்டுவந்து முற்றத்தில் வைத்துவிட்டுச்செல்வது இடம்பெற்று வருகின்றது. அவர்கள் இதுவரை சட்டத்துடன் தொடர்பு இல்லாதவர்களைப்போன்றே செயற்பட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் வாகனங்களை பதிவுசெய்துகொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கோ கள்ளத்தனமாக ஓட்டுவதற்கான ஆற்றல் இருக்கின்றது. அவர்கள் தற்போது மேடைகளில் கூறுகின்ற அனுபவம் அதுபோன்ற விடயங்களுக்கே இருக்கின்றது. குற்றச்செயல்களைப் புரிந்து தலைமறைவாக இருப்பதற்கான, திருடி தப்பித்துக்கொள்வதற்கான, பொதுமக்களுக்கு மேலானவர்களாக இருப்பதற்கான அனுபவம் அவர்களிடம் இருக்கின்றது. இப்படிப்பட்டவர்கள் இருந்த பாராளுமன்றத்தையே மக்கள் வெறுக்கிறார்கள். பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கிறவர்களை நன்றாக பரிசோதிக்கிறார்கள். ஆனால் கள்ளத்தனமாக கத்திகள், மிளகாய்த்தூள் கொண்டுவரமுடியும். பாராளுமன்றத்தில் கதிரைகளைத் தூக்கி அடிக்கலாம். மக்களுக்கெதிரான சட்டங்களுக்காக கைகளை உயர்த்தலாம். இவ்வாறான செயல்களுக்கே அவர்கள் பழகி இருக்கிறார்கள். சட்டத்திற்கு மேலாக இருந்துகொண்டு, பொதுப்பணத்தைக் கோடிக்கணக்கில் மோசடி செய்யவும் மக்களைவிட அதிகமான சிறப்புரிமைகளை அனுபவிக்கவும் அவர்கள் அனுபவம் பெற்றிருக்கிறார்கள். அத்தகைய பழக்கங்களைக் கொண்டுள்ளவர்களை மக்கள் அறவே வெறுத்திருக்கிறார்கள். பழக்கப்பட்டவர்களை பாராளுமன்றம் அனுப்பிவைக்குமாறு முன்னாள் சனாதிபதி இன்றும் கூறியிருக்கிறார். நல்லவர்களால் பாராளுமன்றத்தை நிரப்புமாறே நாங்கள் கூறுகிறோம்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பாக முன்வந்துள்ளவர்கள் பாராளுமன்றத்திற்கு புதியவர்களாக இருந்தபோதிலும் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல. எந்தவொரு நேரத்திலும் நாடு அனர்த்தமொன்றை சந்திக்க நேரிட்டால் அதற்காக முன்நிற்பவர்கள். மக்களின் பணத்தை திருடியதற்கு எதிராக குரலெழுப்பியவர்களே இருக்கிறார்கள். இந்த நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக அவற்றை பாதுகாத்துக் கொள்வதற்காக எந்தவொரு தருணத்திலும் முன்வந்தவர்களே இருக்கிறார்கள். இந்த நாட்டில் எங்கேயாவது ஓரிடத்தில் அநீதி ஏற்படுமானால் அதனை எதிர்த்து அரசியல் புரிந்தவர்களே இருக்கிறார்கள். அதைப்போலவே வெள்ளப்பெருக்கு அனர்த்தம், சுனாமி போன்ற பேரிடர்களின் மத்தியில் மக்களுக்காக உச்சஅளவில் அர்ப்பணிப்புச் செய்தவர்களே இருக்கிறார்கள். எம்மைக் குறைகூறுபவர்கள் தீயசெயல்களைப் புரிவதில் கைதேர்ந்தவர்களாவர். ஆனால் எம்மவர்களோ நல்ல செயல்களைப் புரிவதில் கைதேர்ந்தவர்கள். எதிர்வரும் தேர்தலில் புதியவர்களைக்கொண்டு எனினும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களைக்கொண்டே நிரப்பவேண்டும். திசைகாட்டியை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அத்தகையவர்களே. இளைஞர்களுக்கு வெறுப்புத்தட்டிய அரசியல் சமர்க்களத்தை சுத்தஞ்செய்வதற்காக பாராளுமன்றத்தை திசைகாட்டியால் நிரப்பி சாதகமான அரசியலை உருவாக்கவேண்டும். அவர்களுக்கோ அரசியல் என்பது பணத்தை ஈட்டுவதற்கான மார்க்கமாகும். தேசிய மக்கள் சக்திக்கோ அரசியல் என்பது மக்கள் சேவையாகும். ஒரு பிஸ்னஸாக மாற்றிக்கொண்டிருக்கின்ற அரசியலை படிப்படியாக மக்கள் சேவையாக, மக்களுக்காக செயலாற்றுகின்ற அரசியலாக மாற்றியமைத்திடுவோம். அவர்கள் ஏதேனும் கருத்திட்டம் நாட்டுக்கு நல்லதா எனப் பார்ப்பதில்லை. அதனால் பரிசுத்தமான முதலீட்டாளர்கள் இந்த நாட்டுக்கு இதுவரை வரவில்லை. அரசியலை வியாபாரமாக கொண்டிருந்தவர்களே மருந்திலிருந்தும் திருடினார்கள். அரசியல் பிஸ்னல் மூலமாக தரமற்ற பசளையைக் கொண்டுவருகிறார்கள். இதனை மக்கள் சேவையாக மாற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடேற்றிவருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளைக் குறைத்து அவர்களுக்கான செலவுச்சுமையினைக் குறைக்கவேண்டும். சனாதிபதிக்கு, முன்னாள் சனாதிபதிகளுக்கு செலவிடுகின்ற செலவுச்சுமையினைக் குறைக்கவேண்டும். முன்னாள் சனாதிபதிமார்களுக்கான செலவுச்சுமையினைக் குறைக்க நாங்கள் ஏற்கெனவே ஒரு குழுவினை நியமித்திருக்கிறோம். இது ஒரு பழிவாங்கல் அல்ல. அரசியலை மக்கள் சேவையாக மாற்றியமைப்பதாகும். எமது நாட்டில் நிலவுகின்ற பழைய அரச பொறியமைப்பு காரணமாக அரசாங்க அலுவலகங்களில் பொது உதவியைப் பெற்றுக்கொள்ளவும் வேறு எந்த சேவையையும் ஈடேற்றிக்கொள்ள வரிசையில் காத்திருக்கவும் அத்துடன் தாமதங்கள் ஏற்படவும் நேரிடுகின்றது. இந்த நிலைமையை முற்றாக மாற்றியமைத்து அரசசேவையை டிஜிட்டல்மயமாக்கி வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவோம். இந்தியாவில் ஒரு கிவ்ஆர் கோட் மூலமாக வடை விற்பனை செய்யும்போது எமது மக்கள் ஐயாயிரம் ரூபாவை வாங்கவும், பத்து கிலோ அரிசியை வாங்கவும், அஸ்வெசும பெற்றுக்கொள்ளவும், காணிக்கான உறுதியை தயாரித்துக்கொள்ளவும் வரிசைகளில் அலைக்கழிய நேரிடுகின்றது. குறுகிய காலத்திற்குள் இவையனைத்தையும் முற்றாகவே மாற்றியமைத்து பிரஜைகளுக்கு நெருக்கமான, வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவோம். நாட்டை சீராக்குவது எப்படி, யார் என்பதை நாங்கள் காட்டுகிறோம். ஒருசிலர் ஊழல், மோசடி பயில் எங்கே எனக் கேட்கிறார்கள். அதற்கான விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய பொருத்தமான உத்தியோகத்தர்களை நியமித்து அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்பினை வழங்கி முறைப்படி சட்ட நடவடிக்கைகளுக்கு இடவசதியை ஏற்படுத்திக் கொடுப்போம். நாடகபாணியிலான அல்லது காட்சிப்படுத்துகின்ற எந்தவொரு வேலையும் கிடையாது. படிப்படியாக சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவோம்.
நாட்டின் எதிர்காலத்தை நிர்மாணிக்கின்ற பிள்ளைகளின் கல்விக்காக முன்னுரிமையளித்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கின்ற அரசாங்கமொன்று இலங்கையில் முதல்த்தடவையாக வேலைகளைத் தொடங்கியுள்ளது. அதைப்போலவே பெற்றோர்களை உள்ளிட்ட முதியவர்களைப் பராமரித்து நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பணியை முன்னெடுத்துச் செல்லாமல் தேசிய மக்கள் சக்தி மீளத்திரும்ப மாட்டாது. அவர்களின் சோகக் கதைகளை பிதற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் மனதை அசுவாசப்படுத்திக் கொள்வதற்கான கதைகளை தேவையான அளவில் கூறிக்கொள்ளலாம். எனினும் மக்கள் நேயமுள்ள பணிகளை பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்துகையில் தடையேற்படுத்தாத உறுதியான அரசாங்கமொன்று தேவை. அதற்காக அதிகமான எண்ணிக்கை கொண்டவர்களை நவெம்பர் 14 ஆந் திகதி பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுங்கள். என்றாலும் இந்த தடவை தேர்தல் சோர்வடைந்து விட்டதைப்போல் உணர்வதாக ஒருசிலர் கூறுகிறார்கள். இதுவரை காலமும் தேர்தலை நடாத்தியவர்கள் முன்னாள் ஆட்சியாளர்களின் சண்டியர்களே. சமுர்த்தியை வெட்டிவிடுவதாக அச்சுறுத்துதல், அலங்கரிப்புக் கொடிகளை அறுத்தல், அலுவலகங்களைத் தாக்குதல் போன்றே அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கையிலெடுத்து பலவிதமான அப்ளிகேஷன் பகிர்ந்தளித்தல், அரிசி பங்கிடுதல், தகடுகளைப் பகிர்ந்தளித்தல் போன்ற எத்தனை செயல்கள் இடம்பெற்றன? தற்போது அவையெதுவுமே கிடையாது. அதாவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் இலங்கையில் முதல்த்தடவையாக சுதந்திரமான தேர்தலுக்கு முழுமையாகவே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட தேர்தல் நல்லதில்லையா? மக்களிடம்சென்று சுதந்திரமாக கருத்துக்களை எடுத்துரைத்து அந்த மக்கள் வாக்களிக்கின்ற ஒரு தேர்தலே எமக்குத் தேவை. அத்தகைய தேர்தலை தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறோம். நாங்கள் கடமைகளைப் பொறுப்பேற்றல், அமைச்சரவையை நியமித்தல் போன்றே பொதுத்தேர்தல்வரை புதிய மாற்றங்களைக் குறுகிய காலப்பகுதிக்குள் அறிமுகஞ் செய்துள்ளோம். எமது ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டை நல்லதொரு திசையைநோக்கி நிச்சயமாக மாற்றிடுவோம். அதற்காக அனைவரும் அணிதிரள்வோம். முன்நின்று உழைப்போம் என அழைப்பு விடுக்கிறோம்.