Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“உழைப்பின் மூலமாக இந்த வெற்றியை பெருவெற்றியாக மாற்றிடுவோம்” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான கூட்டம் – அம்பலாந்தோட்டை – 2024.09.12-)

Anura Kumara Dissanayake Addressing The Crowd At The Victory Rally Of Ambalanthota

முன்பெல்லாம் தேர்தலொன்று வரும்போது தேர்தல் தினம் எப்போது என நாட்களை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் இந்த நாட்டின் ஆளுங் கும்பலாகும். எனினும் இத்தடவை தேர்தல்வரும்வரை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இந்நாட்டு மக்களே. 21 அல்ல, தேர்தல் நாளை நடைபெற்றாலும் நாங்கள் வெற்றிபெறுவோம். இந்த நாட்டு மக்கள் நீண்டகாலமாக இந்த தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த மரபுரீதியான அதிகாரப் பாங்கினை மாற்றியமைத்திட 21 ஆம் திகதி உதயமாகும் வரை இந்நாட்டு மக்கள் வழிமேல்விழிவைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒருசிலநாட்களில் நாங்கள் நன்றாக உழைப்போம். உழைப்பின் மூலமாக இந்த வெற்றியை பெருவெற்றியாக மாற்றிடுவோம்.

இந்த வாய்ப்பினை நாங்கள் கைநழுவ விடமாட்டோம்.

நாங்கள் ஒருசில பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. எமது நாட்டின் அரசியல் ஊழல்பேர்வழிகளான சில அரசியல் குடும்பங்களின் கைகளில் குவிந்திருந்தது. அவர்கள் சதாகாலமும் அவர்களுக்காகவே அரசியலில் ஈடுபட்டார்கள்: ஒரு பரம்பரையிலிருந்து மற்றுமொரு பரம்பரைக்கு கொண்டுசெல்கின்ற விதத்திலாகும். அரசியல் மாத்திரமன்றி நாட்டின் வளங்களையும் சில குடும்பங்களின் கைகளில் மையப்படுத்திக் கொண்டார்கள். நாட்டு மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் அவர்களின் பைகளில் நிரப்பிக்கொண்டார்கள். இந்த ஊழல்மிக்க குடும்ப ஆட்சியின் கைகளிலிருந்து மக்களின் கைகளுக்கு அதிகாரம் வருகின்ற இந்த சந்தர்ப்பத்தை நீங்களும் நாங்களும் தவறவிடக்கூடாது. இந்த வாய்ப்பினை நாங்கள் கைநழுவ விடமாட்டோம். இப்போது எமக்கு நேரெதிரான தரப்பினர் மிகவும் அச்சமடைந்துள்ளார்கள். அவர்களுக்கு வலி அதிகரித்துள்ளது. அவர்கள் கணிசமான அளவில் வெறிபிடித்தவர்களாக உள்ளார்கள். அதனால் எதிர்வரும் சில நாட்களில் அவர்களிடமிருந்து நழுவிச்செல்கின்ற அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக எப்படிப்பட்டவற்றை செய்யவேண்டுமென அவர்கள் சிந்தித்துக்கொண்டு, கலந்தாலோசித்து வருகிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் பலனில்லை.

Ambalanthota Victory Rally Crowd

இப்போது இந்நாட்டு மக்கள் இனவாதத்திற்கு எதிராக தேசிய ஒற்றுமையின் கொடியை கையிலேந்தி இருக்கிறார்கள்

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் இயக்கம் தற்போது மக்களின் கைகளிலேயே இருக்கின்றது. மக்கள் இப்போது எங்களின் அரசியல் இயக்கத்தை அவர்களின் கைகளில் எடுத்துவிட்டார்கள். குறைகூறல்கள், வெறிபிடித்த பிரதிபலிப்புகளால் இதனை திசைதிருப்ப முடியாது. எவருக்கேனும் சந்தேகம் நிலவுமாயின் நாங்கள் இந்த விடயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் எமது நாட்டின் அரசியல் மேடையில் மிகவும் அதிகமாக பேசப்பட்ட விடயம் இனம், மதம், நாட்டைப் பாதுகாத்துக் கொள்வது பற்றியாகும். மகிந்தாக்கள் கோட்டாபயாக்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இனவாத, மதவாத போராட்டக் கோஷங்களையே பாவித்தார்கள். தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை ஒருவருக்கொருவர் எதிராக வைத்து தமது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்கின்ற இனவாத போராட்டக் கோஷங்களையே அவர்கள் அதிகமாக பாவித்தார்கள். தமது அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உணவு, உடைகள் தொடக்கம் உயிர்த்தஞாயிறு தாக்குதல்வரை அவர்கள் இனவாதத்தைப் பாவித்து இனவாதத்தின் ஊடாக சென்றால் இந்த நாடு இருள்மயமான படுகுழிக்குள்ளேயே விழுமென்பதை இப்போது மக்கள் படிப்படியாக உணர்ந்து வருகிறார்கள். இப்போது இந்நாட்டு மக்கள் இனவாதத்திற்கு எதிராக தேசிய ஒற்றுமையின் கொடியை கையிலேந்தி இருக்கிறார்கள். எனினும் இன்றளவில் மீண்டும் இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றைக் களமிறக்கத் தொடங்கி உள்ளார்கள்.

ஒருதுண்டு கல்லைக்கூட கையில் எடுக்கவேண்டாமென நாங்கள் எங்கள் அங்கத்தவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்

நாங்கள் கலவரங்களை ஏற்படுத்தப் போவதாக இப்போது கூறுகிறார்கள். வெற்றிபெறப் போகின்ற தேர்தலுக்காக கலவரங்களை ஏற்படுத்தப்பபோவது யார்? எமக்கு அமைதியான ஒரு தேர்தலே அவசியம். தோற்பவர்களுக்குத் தான் கலவரங்கள் தேவை, அவர்களுக்குத்தான் மோதல்கள் தேவை, சமூகத்தில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த வேண்டியது தேவை. அதனால் தேர்தல் வரையும் தேர்தல் தினத்தன்றும் தேர்தலுக்குப் பின்னரும் உச்சஅளவில் அமைதியான சூழ்நிலைக்காக இடையீடுசெய்கின்ற இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். எனினும் அவர்கள் மீண்டும் மீண்டும் இதனைக் கூறுவதிலிருந்து இதன் பின்னணியில் ஏதொவொரு சதித்திட்டம் இருக்கின்றதோ எனும் சந்தேகம் எமக்கு எழுகின்றது. ஒருதுண்டு கல்லைக்கூட கையில் எடுக்கவேண்டாமென நாங்கள் எங்கள் அங்கத்தவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த நாட்டு மக்களின் விருப்பத்துடன் அரசாங்கமொன்றை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கின்றதென நாங்கள் பொலீஸாரிடம் தெரிவித்துக்கொள்கிறோம். அது நாட்டின் ஜனநாயகம். எமது நாட்டின் பொலீஸார், இராணுவம், விசேட அதிரடிப் படையினர் இவையனைத்துமே நாட்டின் அரசியலமைப்பினை பாதுகாப்பதற்கான கடப்பாடு கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான கடப்பாடு கொண்டிருக்கின்றன. அதனால் தோல்வியடைகின்ற தரப்பினரால் ஏதேனும் சதிவேலையை புரிவதற்கான தயார்நிலை இருக்குமாயின் ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் அதனைத் தடுக்க நாங்கள் ஆவனசெய்வோம்.

Anura Kuamra Dissanayake At The Victory Rally Of Ambalanthota

ரணில் ஐயா! இதில் வீழ்வதற்கு இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது?

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் வந்தால் பொருளாதாரம் வீழச்சியடைந்துவிடுமென அடுத்ததாக கூறுகிறார்கள். ரணில் அவர்களே இதைவிட பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைய என்ன இருக்கின்றது? உலகில் கடனை திருப்பிச் செலுத்தாத ஒரு நாடு. உலகமும் கடன் கொடுக்காத ஒரு நாடு. வைத்தியசாலைகளில் மருந்து இல்லாத ஒரு நாடு. இளைஞர்களால் ஒரு தொழிலைத் தேடிக்கொள்ள முடியாத நாடு. தொழில்தேடி நாட்டைக் கைவிட்டுச் செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ள ஒரு நாடு. கமக்காரர்களுக்கு விவசாயத்திலிருந்து முறையான வருமானம் கிடைக்காத ஒரு நாடு. கடலுக்குச் செல்லமுடியாமல் மீன்பிடிப் படகுகள் கரையில் குவிந்துள்ள ஒரு நாடு. தொழில்முயற்சியாளர் தமது கடன்களை மீளச்செலுத்த முடியாமல் இறுகிப்போயுள்ள நாடு. முச்சக்கரவண்டி வாங்கி லீசிங் தவணையைச் செலுத்த முடியாதுள்ள நாடு. மக்களுக்கு மூன்றுவேளை உண்ணக்கிடைக்காத ஒரு நாடு. போதைப்பொருள் நிரம்பி வழிகின்ற ஒரு நாடு. ரணில் ஐயா! இதில் வீழ்வதற்கு இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது? வீழ்ந்துவிட்டோம். வீழ்ந்த இந்த நாட்டை மீட்டெடுக்கவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வருகின்றது. 76 வருடங்களாக நீங்கள் இந்த நாட்டை வீழ்த்தினீர்கள். தற்போது எங்களால் செலுத்த முடியாமல் போயுள்ள சர்வதேச இறையாண்மை முறிக்கடன் 12.5 பில்லியன் டொலர்களாகும். இந்த 12.5 பில்லியன் டொலர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பெற்ற கடனாகும். இதுதான் நாட்டை வீழ்த்திய விதம். அதேநேரத்தில் ரணில் அரச நிறுவனங்களை விற்கும்போது நாங்கள் அதற்கெதிராக குரல் எழுப்பவில்லையென சஜித் கூறுகிறார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்று காசோலையை வாங்கும்போது சஜித் காசோலையை வணங்கிக்கொண்டு இருக்கிறார். நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்கள் எதிராக குரல் எழுப்பவில்லையென அப்படிப்பட்ட மகன் கூறுகிறார். இப்போது அவர் திகைப்படைந்து இருக்கிறார். எங்கள் மேடையில் கூறவேண்டிய ஒருசிலவற்றை அவர் அவருடைய மேடையில் கூறுகிறார். அவர் குழப்பியடித்துக் கொள்கிறார். என்ன கூறவேண்டுமென அவரால் நினைத்துக்கொள்ள முடியாது.

செப்டெம்பர் 21 ஆந் திகதி எமது நாட்டின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தினமாகும்

நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்று 03 – 04 மாதங்களில் செய்கின்ற வேலைகளைப் பார்த்தால் எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் அநியாயம் நாங்களும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கவில்லையே என நினைப்பார்கள். நாங்கள் அமைப்பது 06 மாதங்களில் 01 வருடத்தில் விழ்கின்ற அரசாங்கத்தையல்ல. வீழ்த்தக்கூடிய அரசாங்கத்தையல்ல. இங்கு கட்டியெழுப்பப்படுவது நாட்டு மக்களுடன் ஒருங்கிணைந்த அரசாங்கமாகும். தற்போது எங்கள் தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்து வருபவர்கள் மக்களாவர். நீங்கள் இந்த கூட்டங்களுக்கு வந்து கைதட்டி 21 ஆந் திகதி வரை கைகட்டிக்கொண்டு இருக்கப்போகிறீர்களா? இல்லை. மற்றவர்களை சந்திக்கிறார்கள். எமது செய்தி போகின்றது. எமது பக்கம் இன்னமும் திரும்பியிராதவர்களை திருப்பிக்கொள்கிறார்கள். நீங்கள் அந்த முயற்சியில் நிலைதளராமல் இருக்கிறீர்கள். அதில் சந்தேகமே கிடையாது. இவ்வளவு பெருந்தொகையான மக்கள் எங்களுடன் தன்னிச்சையாக இணைந்திருப்பது 06 மாதங்களில் கைவிட்டுச் செல்வதற்காகவா? 06 மாதங்களில் வீழ்த்திவிடுவதற்காகவா? இல்லை. இந்த நாட்டுக்கு அவசியமான அனைத்துவிதமான பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பினை ஏற்படுத்துவோம். அதனால் செப்டெம்பர் 21 ஆந் திகதி எமது நாட்டின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தினமாகும். 21 ஆந் திகதிதான் இதுவரை அவர்கள் கையிலிருந்த அதிகாரம் பொதுமக்களின் கைகளுக்கு கைமாறுகின்ற தினமாகும்.

Crowd At The Victory Rally Of Ambalnthota

நாட்டின் முன்னால் மக்களின் முன்னால் ஒரே இடத்தில் இருந்துகொண்டு வாதம் புரிவோம்.

இப்போது ரணில் விக்கிரமசிங்க ஏதோ கூறிக்கொண்டு நாட்டைச்சுற்றிக் கொண்டிருக்கிறார். எனக்கு சவால் விடுக்கிறார். அவர் ஏதேதோ கூறி பதிலளிக்குமாறு என்னிடம் கூறுகிறார். இது உடனடிக் கவிதை அரங்கமா? அவருக்கு பொருளாதாரம் பற்றிய முறைசார்ந்த உரையாடல் அவசியமாயின் தொலைக்காட்சி அலைவரிசையொன்றை தெரிவுசெய்வோம். நான் வருவேன். நாட்டின் முன்னால், மக்களின் முன்னால், ஒரே இடத்தில் இருந்துகொண்டு வாதம் புரிவோம். ஐ.எம்.எஃப். பிரதிநிதிகளை கூட்டிக்கொண்டு வரத்தேவையில்லை. ஐ.எம்.எஃப். தேர்தலில் போட்டியிடுகின்றதா? அவர் கூறுவது சிறுபிள்ளைத்தனமான கதைகளையே. எந்தவிதமான பொறுப்பும் கிடையாது. அவர் கூறுவது என்னவென்று அவருக்கே தெரியாது. அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் விளங்கமாட்டாது. தேர்தலொன்றில் இருக்கின்ற சிக்கலானதன்மையும் பொறுப்புடைமையும் அவருக்குத் தெரியாது. சஜித்தைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. இந்த அம்பலாந்தோட்டை மக்களுக்கு அவரை நன்றாகவே தெரியுமல்லவா? நாங்கள் செப்டெம்பர் 21 ஆந் திகதி வெற்றிபெறுவோம், அது உறுதியானது. எங்களுக்கு அம்பலாந்தோட்டையிலிருந்தும் சிறந்த பெறுபேறு தேவை. அம்பாந்தோட்டை மாவட்டம்தான் எமக்கு சதாகாலமும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த மாவட்டம். நீங்கள் எங்களுக்கு அமோக வெற்றியை பெற்றுக்கொடுப்பீர்களென்பதில் சந்தேகம் கிடையாது.

எமது நாட்டின் ஒரு பிள்ளைகூட போதைப்பொருள் தொல்லைக்கு இரையாகக்கூடாது.

நாங்கள் அதிகாரத்தை பெற்றபின்னர் இந்த நாட்டில் பயிர்செய்யக்கூடிய காணிகள் அனைத்தையும் பயிர்செய்யுமாறு நாங்கள் விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கிறோம். ஒருதுண்டு காணியையேனும் தரிசுநிலமாக இடமளிக்கவேண்டாம். பயிர்செய்வதற்கு அவசியமான எல்லா வசதிகளையும் நாங்கள் உங்களுக்கு பெற்றுக்கொடுப்போம். தற்போது பாதாளக்கோஷ்டி, போதைத்தூள் தீத்தொழில் நாட்டை ஆக்கிரமித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் நாட்டின் அரசியல்வாதிகளாவர். ஒரு தடவை கொழும்பில் உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் இருந்து 8 கிலோ போதைத்தூள் அகப்பட்டது. கேகாலையில் இருந்த முதலமைச்சரின் ஜீப் மூலமாகத்தான் அநுராதபுரத்திற்கு கஞ்சா இழுத்தார்கள். பொலீஸில் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. குற்றச்செயல்புரிபவர்கள். எமது நாட்டின் ஒரு பிள்ளைகூட போதைப்பொருள் தொல்லைக்கு இரையாகக்கூடாது. நாங்கள் அதற்கு இடமளிக்கமாட்டோம். எமது ஆட்சியன்கீழ் நாங்கள் போதைத்தூள், குற்றச்செயல்கள் அற்ற ஒரு நாட்டை உருவாக்குவோம். நாங்கள் எவருக்கும் கடப்பாடு கொண்டவர்களுமல்ல: பயந்தவர்களும் அல்ல. பொலீஸாருக்கு நாங்கள் பாதாள உலகத்தையும் போதைத்தூளையும் ஒழித்துக்கட்ட அவசியமான அதிகாரத்தைக் கொடுப்போம். நாங்கள் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டை அழிவிலிருந்து விடுவித்துக்கொள்வோம்.

எல்லாவற்றிலும் புதுதன்மை அடைகின்ற, மாறிவருகின்ற நாட்டை, அனைத்துத் துறைகளிலும் புதியவை உருவாக்கப்படுகின்ற நாட்டை, எல்லாப் பக்கத்திலும் உலகத்தாருடன் முன்நோக்கி நகர்கின்ற தேசத்தை நாங்கள் கட்டியெழுப்புவோம். அதற்காக செப்டெம்பர் 21 ஆந் திகதி திசைகாட்டியை வெற்றிபெறச் செய்விப்போம். அதற்காக உச்சமட்டத்தில் இடையீடுசெய்ய ஒன்றுசேருமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

Anura Kumara Dissanayake Addressing The Ambalanthota Victory Rally
The Victory Rally Crowd At Ambalanthota
The Victory Rally Of Ambalanthota Crowd