Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“சட்டத்தின் முன் “அனைவரும் சமம்” எனும் கோட்பாட்டுக்கு உயிர்கொடுப்போம்.” -ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாடு – 2024.09.07 – தாஜ் சமுத்ரா ஹோட்டல்-)

Anura Kumara Dissanayake Addressing The Crowd At Lawyers Summit

மக்களின் நோக்கங்களும் ஆட்சியாளரின் நோக்கங்களும் இணையாக பயணிக்கின்ற அரசாங்கமொன்றே இப்போது எங்களுக்கு தேவை.

இந்த நாட்டில் கீர்த்திமிக்கவர்களாக இருந்த நீதிபதிகள், சட்டத்தரணிகள் பெருந்திரளாக இன்று இந்த இடத்தில் குழுமியிருப்பது மிக்க மகிழ்ச்சிதருகின்ற விடயமாகும். நாட்டின் ஏதேனும் அரசியல் நகர்வு இடம்பெற போகின்றபோது முதன்முதலில் அது சட்டத்தரணிகளாலேயே உணரப்படுகிறது. அதனால் தான் இவ்வளவு பெருந்தொகையானோர் இன்று இந்த இடத்தில் குழுமியிருக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் எமது நாட்டு மக்கள் அரசாங்கங்களை அமைத்தார்கள். தலைவர்களை நியமித்தார்கள். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது பிரஜைகள் ஒரு சாதகமான எதிர்பார்ப்பினையே கொண்டிருந்தார்கள். சிறிய ஒரு குழுவினர் தனிப்பட்ட முறையில் தமக்கு எதையாவது பெற்றுக்கொள்ள முடியுமென நினைத்திருக்கக்கூடும். எனினும் பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்வது சாதகமான ஒரு நாட்டை உருவாக்கிக் கொள்ளும் எதிர்பார்ப்புடனேயேயாகும். மக்களின் அந்த எதிர்பார்ப்புக்களை அந்த ஆளும் குழுக்கள் சிதைத்துவிட்டார்கள். மக்களின் நோக்கங்களும் ஆட்சியாளரின் நோக்கங்களும் இணையாக பயணிக்கின்ற அரசாங்கமொன்றே இப்போது எங்களுக்கு தேவை. எமது நாட்டில் மக்களின் எதிர்பார்ப்பும் ஆட்சியாளரின் எதிர்பார்ப்பும் ஒன்றுக்கொன்று முரணாக அமைகின்ற அரசாங்கங்களே சதாகாலமும் உருவாகின. இந்த இடத்தில் தான் சிக்கல் நிலவுகின்றது.

“சட்டத்தின் ஆட்சியின் முன் அனைவரும் சமமானவர்களே” எனும் கோட்பாட்டினை நாங்கள் கட்டாயமாக அமுலாக்குவோம்.

உங்களுக்கு உங்களின் விடயத்துறை சார்ந்த பாரிய அனுபவம் இருக்கின்றது. எமது நாட்டில் “அனைவரும் சட்டத்தின்முன் சமமானவர்களே” எனும் கோட்பாட்டுக்கு உயிர்கொடுக்கவேண்டியது அவசியமாகும். இன்னமும் எமது சமூகத்தில் அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இந்த கோட்பாட்டுக்கு புத்துயிரளிக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை நாங்கள் கொடுக்கிறோம். “சட்டத்தின் ஆட்சியின் முன் அனைவரும் சமமானவர்களே” எனும் கோட்பாட்டினை நாங்கள் கட்டாயமாக அமுலாக்குவோம். சட்டத்தை அமுலாக்குகின்ற நிறுவனங்களுக்கு நாங்கள் சுயாதீனத்தன்மையை வழங்குவோம். அந்த நிறுவன முறைமையை சம்பந்தப்பட்ட நோக்கங்களுக்கு அமைவாக நெறிப்படுத்த நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம். ஒருபோதும் மேற்படி நிறுவன முறைமையை நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஈடுபடுத்தமாட்டோம். எமது நாட்டில் ஜனாதிபதிமார்கள் கூட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பொருட்படுத்தாமல் விடுவார்களாயின் எமது நாட்டின் தலைவிதி எப்படிப்பட்டதாக அமையும்?

Lawyers Summit

இப்பொழுது இலஞ்சமும் ஊழலும் ஒருவருடைய கடமையாகவும் மற்றுமொருவரின் உரிமையாகவும் மாறிவிட்டது.

சட்டத்தின் ஆட்சியை ஆட்சியாளர்களே பொருட்படுத்தாமல் விடுவது எமது நாட்டின் பொருளாதாரமும் சமூக கட்டமைப்பும் சீரழிவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இப்போது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. நான் ஓரிரு உதாரணங்களை தருகிறேன். ஹோட்டல் ஒன்றை நிர்மானிப்பதற்காக காணியொன்றை வாங்கப்போனால் அரசாங்கத்தின் அமைச்சர் அவருடைய கையொப்பத்தினால் தான் அந்த காணி கிடைக்கின்றதெனும் கருத்தினை உருவாக்குவார். அதனால் ஒருவர் ஹோட்டல் ஒன்றை அமைப்பதானால், அதிலிருந்து இலாபமும் கிடைக்குமென்றால், அந்த இலாபம் எனது கையொப்பத்தினாலேயே கிடைப்பதனால் அந்த இலாபத்தின் ஒரு பகுதி எனக்கு சொந்தமானது என நினைக்கிறார். இப்பொழுது எமது நாட்டில் ஊழலும் மோசடியும் தொடர்ந்தும் நிலவுவது ஒரு மோசடி என்ற வகையில் அல்ல; உரிமையென்ற வகையிலாகும். என்ன ஆனாலும் அமைச்சரல்லவா எனக்கு ஒரு துண்டு காணியை கொடுத்தார் என பிரஜைகள் நினைக்கிறார்கள். அதனால் அவருக்கு ஒரு தொகை பணத்தை கொடுப்பது எனது கடமையென நினைக்கிறார்கள். இப்பொழுது ஊழலும் இலஞ்சமும் ஒருவருடைய கடமையாகவும் மற்றுமொருவரின் உரிமையாகவும் மாறிவிட்டது. இந்த அரசியல் கலாசாரத்தை நிச்சயமாக மாற்றியமைக்க வேண்டும்.

மோசடி, ஊழலை நிறுத்திவிடாமல் நாட்டை சீராக்குவது பற்றி நினைத்துப்பார்க்கக்கூட முடியாது.

மோசடியையும் ஊழலையும் நிறுத்திவிட்டால் மாத்திரம் நாட்டை சீராக்கிவிட முடியாதென ஒரு சிலர் கூறுகிறார்கள். அது எங்களுக்கும் தெரியும். ஆனால் மோசடி, ஊழலை நிறுத்திவிடாமல் நாட்டை சீராக்குவது பற்றி நினைத்துப்பார்க்கக்கூட முடியாது. தற்போது இந்த மோசடி, ஊழல்கள் காரணமாகவே எமது பெரும்பாலான துறைகள் சீர்குலைந்துள்ளன. மருந்துகளிலிருந்து திருடுவார்களாயின் சுகாதாரத்தை சீராக்க முடியுமா? மோசடி ஊழல்களை வைத்துக் கொண்டு வீதிகளை அமைக்க முடியுமா? இந்த பாராளுமன்றத்தில் அவர்கள் அமைச்சர் பதவி வகிப்பது திருடுவதற்காகவே என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஜனாதிபதி அமைச்சர் பதவியை கொடுப்பதா இல்லையா என்பதை அவருக்கு அதிகமான பணத்தொகை கிடைக்கின்றதா என்ற அடிப்படையிலேயே கருத்திற்கொள்வார். கரையோரம் பேணல் சுற்றாடல் அமைச்சிற்கே சொந்தமானது. ஒரு காலகட்டத்தில் கரையோரம் பேணல் நாட்டின் சனாதிபதியின் கையிலேயே இருந்தது. ஏனென்றால் பெறுமதிமிக்க காணிகள் கரையோரம் பேணலின் கீழேயே இருந்தன. தொலைத்தொடர்பு அமைச்சுப் பதவி இருந்தது. அதில் ரீ.ஆர்.சீ. ஐ சனாதிபதியின்கீழ் கொண்டுவந்தார். ஏன்? அங்குதான் பெருமளவிலான பணம் சுற்றோட்டத்தில் இருந்தது. நீதி அமைச்சின்கீழ் சட்டவரைஞர் திணைக்களம் இருந்தது. அதனை சனாதிபதியின்கீழ் எடுத்துக்கொண்டார். இலஞ்சம், ஊழலுக்கு வாய்ப்பு கிடைக்கத்தக்க வகையிலேயே இந்த விடயத்துறைகள் பகிர்ந்துசென்றன. இது எமது சமூகம், பொருளாதாரம் சீர்குலைய உறுதுணையாக அமைந்த பலம்பொருந்திய விடயமாகும்.

Crowd At Lawyers Summit

அரசியல் அதிகாரத்துவத்திற்கு எவ்வளவு பணம் கிடைக்கின்றது என்ற விடயத்தின் அடிப்படையில் தான் இந்த கருத்திட்டங்கள் தாமதமாகின்றன

எமது களணிதிஸ்ஸ மின்நிலையம் உள்ளிட்ட கெரவலபிட்டிய மின்நிலைய தொகுதியை இயற்கை வாயுவுக்கு மாறியமைக்க முடியும். இதனை தற்காலிகமாக டீசலில் இயக்கத்தொடங்கினார்கள். செலவு அதிகமாகின்றது. இதனை இயற்கை வாயுவுக்கு சீராக்கி இயங்க தொடங்கியிருந்தால் செலவு மிகவும் குறைவானதாகும். தற்போது 15 வருடங்களுக்கு கிட்டிய காலமாக அதனை செயற்படுத்தாமல் காலந்தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். அது ஏன்? முதல் முதலில் ரணில் – மைத்திரி முரண்பாடு அந்த இடத்திலிருந்து தான் ஆரம்பித்தது. ரணில் எல்.என்.ஜி.ற்கான கருத்திட்டத்தை ஜப்பானிலிருந்து கொண்டு வந்தார். மைத்திரி கொரியன் கம்பெனியிலிருந்து கொண்டு வந்தார். கொரியன் கம்பெனிக்கு கொடுப்பதா ஜப்பானிய கம்பெனிக்கு கொடுப்பதா என்ற பிரச்சினையிலேயே பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சண்டை ஆரம்பித்தது. ஐந்து வருடங்களாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். கருத்திட்டம் ஸ்தம்பித்தது. அதன் பின்னர் இலங்கை மின்சார சபையும் பெற்றோலியக்கூட்டுத்தாபனமும் இதனை அமுலாக்க முயற்சி செய்தன. குழாய் தொகுதிக்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டென்டரை அழைப்பித்தது. டென்டர் திறக்கும் நாள் நெருங்குகையில் அதனை நிறுத்திவிட்டு பசில் ராஜபக்ஷ நிவ்போட்ரஸ் எனும் கம்பெனியை கொண்டு வந்தார். அதன் பின்னர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சிலிருந்து போனார். கருத்திட்டம் இன்னும் அதே இடத்தில் தான். இப்பொழுது நாங்கள் ஏறக்குறைய 15 வருடங்களாக ரூபா 70 ற்கு – 120 ற்கு மின்சார அலகொன்றை உற்பத்தி செய்கிறோம். ரூபா 30 ற்கு மின்சார அலகொன்றை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கையில் பிரஜை இந்த வலுச்சக்திக்காக செலுத்துகின்ற விலை நியாயமானதொன்றல்ல. அரசியல் அதிகாரத்துவத்திற்கு எவ்வளவு பணம் கிடைக்கின்றது என்ற விடயத்தின் அடிப்படையில் தான் இந்த கருத்திட்டங்கள் தாமதமாகின்றன.

உங்களின் தேவையும் எங்களின் தேவையும் ஒன்றேயன்றி இரண்டல்ல.

இந்த ஆட்சியாளர்கள் திட்டவட்டமான அந்த தருணத்தில் செய்ய வேண்டியவற்றை கைவிட்டார்கள். இது மக்களின் பக்கத்தில் நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தின் பக்கத்தில் மிகவும் பயங்கரமான நிலைமையாகும். நீங்கள் சட்டத்தரணிகள் சமுதாயம் என்ற வகையில் அடிக்கடி இந்த நாட்டின் சனநாயக்கத்திற்காக குரல் கொடுக்கின்ற குழுவினராவீர்கள். நான் உங்களுக்கு ஒரு விடயத்தை கூறி வைக்க வேண்டும். உங்களின் தேவையும் எங்களின் தேவையும் ஒன்றேயன்றி இரண்டல்ல. இந்த சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்த நாட்டை மீளக்கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றாக மல்லுக்கட்டுவோம். அதற்காக அனைவரையும் ஒன்றுசேருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.

Upul Kumarapperuma Addressing The Crowd At Lawyers Summit
Lawyers Summit Crowd
Upul Kumarapperuma Gifting The Policy To Anura Kumara Dissanayake At Lawyers Summit