(-தேசிய மக்கள் சக்தி கலைஞர்களின் தேசிய மாநாடு – 2024.09.08 – காசல் வீதி தெப்ரொபேன் மண்டபம்-)
எங்களுடைய சமூகம் ஒருவருக்கொருவர் பாதுகாப்பற்ற நாடாக மாறியிருக்கிறது. பெண்களுக்கு சிறுமிகளுக்கு பாதுகாப்பற்று இருக்கிறது. பிறரின் வேதனையின்போது அதிர்ச்சியற்ற சமூகமாக மாறியிருக்கிறது. சிரிப்பு இல்லாத வறண்ட ஒரு சமூகம் எம்மெதிரில் இருக்கிறது. ஏனைய எல்லாத்துறைகளும் போன்றே இந்த சமூகத்தையும் குணப்படுத்துகின்ற பொறுப்பு அரசாங்கம் என்ற வகையில் எமக்கும் அதன் முனைப்பான ஒரு பங்கு உங்களுக்கும் கையளிக்கப்பட்டுள்ளதென நாங்கள் நம்புகிறோம். சமூகத்திற்கு மீண்டும் அன்பையும், நேசத்தையும், ஒத்துணர்வையும் கொண்டுவர வேண்டும். அதற்காக பல துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியது அவசியமாகும். அதன் ஒரு பகுதி கல்வித்துறையிடம் கையளிக்கப்படுவதோடு நீங்கள் ஈடுபட்டுள்ள கலைத்துறைக்கும் பாரிய செயற்பொறுப்பு இருக்கின்றது. அதனால் உங்களுடைய சுதந்திரமான சிந்தனைகளை சமூகத்திற்கு விடுவிப்பதற்கான வசதிகளை வழங்குவதை நாங்கள் எங்களுடைய பொறுப்பாக கருதுகிறோம்.
வறண்டு போன மனித சமூகமொன்றை எம்மெதிரில் இருக்கின்றது.
நீங்கள் எவ்வளவுதான் உயர் படைப்புக்களை செய்தாலும் அதனை சமூகத்திடம் கொண்டு செல்ல முடியுமா எனும் கேள்வி எழுகிறது. குடும்பத்தவர்களுடன் இறுதியாக திரைப்படமொன்றை பார்க்க, மேடை நாடகமொன்றை கண்டுகளிக்க அரங்கிற்கு எப்போது சென்றீர்கள் என ஊரில் போய் கேட்டு பாருங்கள். பெரும்பான்மையினருக்கு அப்படிப்பட்ட அனுபவமொன்று கிடையாது. புதிதாக வெளியான நாவலொன்றை வாசித்தீர்களா, புதிதாக வெளியாகிய கவிதை நூல் ஒன்றின் கவிதையை ரசித்தீர்களா எனக்கேட்டுப் பாருங்கள். அவையொன்றுமே கிடையாது. வறண்டு போன மனித சமூகமொன்றை எம்மெதிரில் இருக்கின்றது. நாடக அரங்குகள், சினிமா கொட்டகைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்ற ஒரு நாடு உருவாகி வருகின்றது. எனக்கு ஞாபகமிருக்கிறது நான் சிறு பராயத்தில் முதல் முதலில் பார்த்த திரைப்படம் தான் “சிங் சிங் நோனா.” அதனை எங்களுடைய பிரதேசத்தில் உள்ள தம்புத்தேகம ஈகள் தியேட்டரில் தான் பார்த்தேன். இப்போது அந்த சினிமா தியேட்டர் ஒரு நெற் களஞ்சியமாகும். மாத்தறை புரோட்வே சினிமா தியேட்டர் இப்போது ஒரு சுப்பர் மார்க்கட். ஒரு சில சினிமா மண்டபங்களில் ரியூஷன் வகுப்புகள் நடைபெறுகின்றன. இவை எதை எடுத்துக்காட்டுகின்றன? எமது நாடு எந்த திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை அல்லவா?
நாங்கள் சினிமா கொட்டகைகளில் வரிசைகளை காண விரும்புகிறோம்.
மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட சினிமா மண்டபங்களே எஞ்சியுள்ளன. ஏனையவை மூடப்பட்டு விட்டன. இப்பொழுது கேஸ் வரிசைகள் கிடையாது, எண்ணெய் வரிசைகள் கிடையாது போன்ற கதைகளை நாங்கள் கேட்கிறோம். ஆனால் நாங்கள் சினிமா கொட்டகைகளில் வரிசைகளை காண விரும்புகிறோம். நாடக அரங்கொன்றின் முன்னால் வரிசையைக் காண விரும்புகிறோம். எனவே நாங்கள் எமது ஆட்சியின் கீழ் கலைக்கு உரிய இடம் கொடுத்து உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுப்போம். நாங்கள் தொடக்கத்திலேயே ஆச்சரியத்தை படைத்துவிடமாட்டோம். மீண்டும் மக்களை சினிமா தியேட்டர்களை நோக்கி அழைப்பிக்கின்ற, நாடக அரங்குகளை நோக்கி அழைப்பிக்கின்ற, மீண்டும் இலக்கிய நூல்களை வாசிக்கின்ற இடத்திற்கு அழைப்பிக்கின்ற எமது நாட்டு பிரஜையின் இரசனையை முன்னேற்றுவதற்காக கட்டம் கட்டமான நடவடிக்கைகளை எமது ஆட்சியின் கீழ் நாங்கள் மேற்கொள்வோம்.
மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் எமது மக்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.
எமது நாட்டின் பொருளாதாரம் இருக்கின்ற இடம் பற்றி எங்களுக்கு தெரியும். அதனால் இன்று எங்களுடைய நாட்டு மக்களில் ஒரு சிறு பகுதியினர் தான் சினிமா, இலக்கியம் போன்ற துறைகளில் இரசிக்க தூண்டப்பட்டிருக்கிறார்கள். அதற்கான இயலுமை மிகச் சிறிய குழுவினரிடமே இருக்கின்றது. மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் எமது மக்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற டெலி நாடகமொன்றை சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்புகின்ற ஏதாவதொரு கலைப்பிரிவை மாத்திரம் கண்டுகளிக்குமளவிற்கு தற்போது மக்களின் கலை இரசனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் டெலி நாடகத்திற்கு, சமூக வலைத்தளங்களின் சிறிய வீடியோ கிளிப்பொன்றுக்கு அது சுருக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதற்கு அப்பால் உயிர்ப்பூட்டலை நோக்கி இந்த மனித சமூகத்தை அழைப்பிக்க வேண்டும். வெறுமனே புத்தகமொன்றை வாசிப்பதல்ல. தனிமையாக திரைப்படமொன்றை பார்ப்பதல்ல. அந்த அனுபவத்தை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள, சமூகத்துடன் விரிவான உரையாடலில் ஈடுபட, சமூக ரீதியாக கட்டி வளர்க்கப்படுகின்ற, அனுபவங்களை ஒருவருக்கொருவர் இடையில் பகிர்ந்து கொள்கின்ற இலக்கிய ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான சமூகமொன்று இலங்கையில் உருவாக வேண்டுமென்ற நிலையான திடசங்கற்பத்துடன் நாங்கள் இருக்கிறோம்.
கலாச்சார படைப்புகளை எமக்கு வெளியில் உள்ள உலகத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
எங்களுக்கு தெரியும் இனிமேலும் சினிமா, இலக்கியம், இசை தீவுகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த யுகம் தற்போது முடிவடைந்து விட்டது என்பது எங்களுக்கு தெரியும். அந்த யுகம் இற்றைக்கு பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகளுக்கே சொந்தமானதாக இருந்தது. இன்று உலகத்தையும் தொழில்நுட்பத்தையும் பரிமாற்றிக் கொண்டு ஒவ்வொருவரும் அனுபவிப்பதை போன்றே சுகாதார முன்னேற்றத்தின் அனுபவங்களை உறிஞ்சியெடுத்து ஒருவரையொருவர் கட்டி வளர்ப்பதை போன்றே உலகில் இசையும், சினிமாவும் பரிமாற்றிக் கொள்ளப்படுகிறது. நாங்கள் ஒரு சிறிய தீவுக்கு வரையறுக்கப்பட்டிருப்பது எமது துர்ப்பாக்கியமாகும். அதனால் எமது நாட்டின் இசை, திரைப்படம் மற்றும் ஏனைய கலாச்சார படைப்புகளை எமக்கு வெளியில் உள்ள உலகத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நாங்கள் இது பற்றி ஏற்கெனவே கலந்துரையாடலுக்கு இலக்காகியிருக்கிறோம். எம்மை விட பல காத தூரம் பின்னால் இருந்த தென்கொரியா அவர்களுக்கே தனித்துவமான இசையொன்றை படைப்பதில் வெற்றிக்கண்டது. நீங்கள் யூடியூப்பிற்கு சென்றால் தென்கொரியாவின் பிரீஎஸ் இசைக்குழுவின் காணொளியை தற்போது 1800 மில்லியன் கண்டுகளித்துள்ளார்கள். தென்கொரியாவின் சனத்தொகை 50 மில்லியன் ஆகும். அவர்கள் இசையை தமது நாட்டுக்கு அப்பால் கொண்டு செல்வதில் வெற்றியடைந்துள்ளார்கள். அவர்களுக்கே தனித்துவமான இசையொன்றை அமைத்துக் கொள்வதில் வெற்றிபெற்றுள்ளார்கள். நீங்கள் உலகின் எந்தவொரு வானூர்தியில் பயணித்தாலும் அந்த ஊர்தியின் தொலைக்காட்சி திரையின் மீது கொரியன் திரைப்படங்களில் சோ்க்கையொன்றை காண முடியும். எனினும் இலங்கையை பயண முடிவிடமாக கொண்டுள்ள விமானத்தில் உச்சஅளவில் 04 திரைப்படங்களே இருக்கின்றன.
எங்களிடமும் திறமையான படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும்.
பல தசாப்தங்களாக உலகில் இசையில், சினிமாவில், இலக்கியத்தில் பாரிய மாற்றங்களும் திறந்து விடல்களும் இடம்பெற்று வந்தபோதிலும் நாங்கள் அந்த திறந்து விடப்பட்ட உலகத்தை கையகப்படுத்திக் கொள்வதில் தோல்விகண்ட ஒரு நாடாவோம். அது தான் உண்மை. நாங்கள் சில நேரங்களில் வரலாற்றில் சிறைப்பட்டும் சில நேரங்களில் எமக்கே உரித்தான காரணிகளிலும் சிறைப்பட்ட தேசமாவோம். எத்தகைய தடைகளின் மத்தியிலும் இன்றைய ஈரான் எந்தளவிற்கு உலகத்தில் பிரவேசித்துள்ளது? எங்களிடமும் திறமையான படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் உலகின் பிரதான திரைப்பட விழாக்களில் பாரிய வெற்றிகளை பெற்ற திரைப்பட இயக்குனர்கள் எமக்கிருக்கிறார்கள். எனினும் எங்களால் உலக சினிமாவின் ஒரு பங்கினை கையகப்படுத்திக் கொள்ள இயலாமல் போயுள்ளது. கடந்த காலத்தில் உலகில் பல்வேறு புத்திஜீவிகள் உலகம் எத்திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது பற்றிய எதிர்வுகூறல்களை முன்வைத்தார்கள். அங்கு பாரிய பரப்பு சினிமாக்கலையின் திசையை நோக்கியும் திறந்து விடப்படுகிறது. அது அவ்வாறு இருந்தபோதிலும் அந்த புதிய உலகில் ஒரு பங்கினை கையகப்படுத்திக் கொள்வதில் நாங்கள் தோல்வி கண்டுள்ளோம்.
நாங்கள் மலையகத்தில் வசிக்கின்ற கவிஞர் ஒருவரைப் பற்றியோ கவிதையொன்றை பற்றியோ யாழ்ப்பாண இலக்கியவாதிகள் பற்றியோ பேசுகின்றோமா?
நான் உங்களுக்கு ஒரு சில விடயங்களை சுட்டிக்காட்டுகிறேன். இசையானது ஒரு தொழிற்துறை என்ற வகையில் உலகில் வேகமாக வியாபித்துக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் இசை சந்தை 2024 ஆம் ஆண்டில் 24.5 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது. அதைபோலவே 2022 இல் உலக சினிமா மற்றும் களியாட்டச் சந்தை 94 பில்லியன் டொலர்களை உருவாக்கியிருக்கிறது. 2031 அளவில் அது 192 பில்லியன் டொலர் வரை வளர்ச்சியடைவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 7 வீத வளர்ச்சி வேகம் அந்த துறையில் எதிர்வுகூறப்பட்டிருக்கிறது. நாங்கள் ஒரு புறத்தில் சமூக வாழ்க்கை பற்றி சிந்திப்பதை போலவே மறுபுறத்தில் பொருளாதார ரீதியாக உலகில் எதிர்வுகூறப்பட்ட இந்த துறைகளிலான பங்கினை கையகப்படுத்தி கொள்ள திட்டமிடல் வேண்டும். 2031 இல் 192 பில்லியன் டொலர் உருவாக்கப்படுகின்ற உலகில் நாங்கள் எந்த அளவினை பற்றிப்பிடிக்க திட்டமிடவேண்டும்? நாங்கள் அதில் ஒரு சிறிய துளியையேனும் கையகப்படுத்திக் கொள்ள வேண்டும். அது பற்றிய திட்டங்களை நாங்கள் முன்வைப்போம். ஒரு நேரத்தில் நாங்கள் உலக சினிமா பற்றி, உலக இலக்கியம் பற்றி, அவற்றின் வளர்ச்சி பற்றி பேசுகிறோம். எனினும் நாங்கள் மலையகத்தில் வசிக்கின்ற கவிஞர் ஒருவரைப் பற்றியோ கவிதையொன்றை பற்றியோ பேசுகின்றோமா? நாங்கள் ஹொலிவுட், பொலிவுட் சினிமா பற்றி பேசுகின்றோம். எனினும் யாழ்ப்பாணத்தின் தமிழ் இலக்கியவாதிகள் பற்றி தமிழ் நாவலாசிரியர்கள் பற்றி பேசுகின்றோமா? நாங்கள் உலகில் பெரும்பாலான கலைப்படைப்புக்கள் பற்றிய திறனாய்வில் ஈடுபட்டு வருகிறோம். எனினும் நாங்கள் தமிழ் இலக்கியம் பற்றியோ இலக்கியவாதிகள் பற்றியோ திறனாய்வில் ஈடுபட்டிருக்கிறோமா? நாங்கள் எந்தளவுக்கு குறுகிய தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் தான் வசிக்கிறோம். உலகத்திற்கல்ல குறைந்தபட்சம் மலையகத்திற்கேனும் எம்மால் திறந்த நிலையில் இருக்க முடியாதுள்ளது. எம்மால் வடக்கிற்கும் திறந்த நிலையில் இருக்க முடியாதுள்ளது. வடக்கை தெற்கிற்கு திறந்து வைக்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். அது தான் உண்மை. அதனால் நாங்கள் நினைக்கிறோம் எமது நாட்டுக்கே தனித்துவமான கலாச்சாரங்கள் இருக்கின்றன. தனித்துவமான கலை நுணுக்கங்கள் இருக்கின்றன. இவையனைத்தையும் திரட்டிய தனித்துவமான இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும்.
சிங்கள கலாச்சாரத்திற்கு தமிழ் கலாச்சாரம் எதிரானதென நினைக்கிறோம்.
பிறரை பொருட்படுத்தாமல் விட்டு பிறருடைய அடையாளங்களை தாழ்வாக கருதி பிறருடைய அடையாளங்களை கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கின்றோமேயொழிய சில வேளைகளில் பிறரின் அடையாளம் எமக்கு எதிரானவை என நினைக்கிறோம். தமிழ்க் கவிதை சிங்களத்தின் எதிரியென நினைக்கிறோம். சிங்கள கலாச்சாரத்திற்கு தமிழ் கலாச்சாரம் எதிரானதென நினைக்கிறோம். பிறருடைய படைப்புக்களை பாராட்டுக்கின்ற கண்ணோட்டத்தில் நாங்கள் அவற்றை பார்ப்பதில்லை. பகைமை உணர்வு கொண்ட பார்வை கோணத்திலாகும். இத்தகைய சமூகமொன்றுக்கு எதிர்காலப்பயணமொன்று இருக்குமா? அதனால் பிறருடைய அடையாளங்களை மதித்து அவற்றை பொறுத்துக் கொள்ளக்கூடிய அவற்றுக்கு மதிப்பளிக்கின்ற அவற்றை ரசிக்கக்கூடிய புதிய சமூகமொன்றை உருவாக்குவதே எங்களுடைய எதிர்பார்ப்பாக அமையும்.
உங்கள் சிந்தனையின் நோக்கங்களை யதார்த்தமாக மாற்றக்கூடிய ஒரு தேசத்தை நாங்கள் உருவாக்குவோம்.
இந்த துறை பற்றி என்னைவிட சிறப்பறிஞர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் நீண்டகாலமாக இந்த துறையிலான புத்தாக்கங்கள் பற்றி போராடிய, எழுதிய, விமர்சனம்செய்த கருத்தியல்களை படைத்தவர்களாவர். அத்தகைய பெருந்தொகையானோர் இங்கே இருக்கிறார்கள். நான் இந்த துறையில் சிறப்பறிஞர் அல்ல. நான் அந்த துறையை வெளியில் இருந்து பார்ப்பவன். நீங்கள் இந்த துறைக்குள்ளே வாழ்பவர்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அத்துடன் புதிய படைப்புகளை பரீட்சித்துப் பார்த்தவர்கள். அதற்குள்ளேயே புதிய உலகம் பற்றி சிந்திப்பவர்கள். அதனால் நான் உங்களுக்கு ஓர் உத்தரவாதம் அளிக்கிறேன். உங்கள் படைப்புகளை நீங்கள் முன்வைக்கையில் ஏதேனும் தயக்கம் இருந்திருப்பின் அதனை முற்றாகவே நீக்குகின்ற சமூகமொன்றை எமது ஆட்சியின்கீழ் நாங்கள் கட்டியெழுப்புவோம். நீங்கள் இந்த சமூகத்தின் முன்னேற்றப்பாதையை எதிர்பார்த்து பலவற்றை எழுதினீர்கள்: கூறினீர்கள்: பல்வேறு படைப்புக்களை செய்தீர்கள். எனினும் இந்த முறையியலின்கீழ் அவற்றை வெற்றியீட்டச் செய்விக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்கள் உள்ளத்தை வதைத்துக்கொண்டிருந்த அந்த தேவை, நீங்கள் உங்கள் படைப்புக்களில் கண்ட புதிய உலகத்தை நிர்மாணிக்க மேற்கொள்கின்ற முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது எமது கடமையாகும். நீங்கள் மென்மேலும் எழுதுங்கள். நாவல்களை படையுங்கள். படைப்பாக்கத்தில் ஈடுபடுங்கள். நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற தரப்பினர்களாக மாறுவோம். உங்கள் சிந்தனையின் நோக்கங்களை யதார்த்தமாக மாற்றக்கூடிய ஒரு தேசத்தை நாங்கள் உருவாக்குவோம். இந்த முயற்சியை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக நாங்கள் ஒன்றுசேர்ந்து சிறகடிப்போம்.