(-நிறைவுகாண் மருத்துவ தொழில்வாண்மையாளர் கூட்டமைவின் தேசிய மாநாடு – 2024.07.14-)
எமது நாட்டின் அனைத்துத்துறைகளும் சீரழிவிற்கு இலக்காகியுள்ளன. கல்வி, சுகாதாரம், சனநாயகம், சட்டம் போன்ற துறைகளை உள்ளிட்டதாக சாதகமான எதிர்பார்ப்பொன்றினை வைக்கக்கூடிய எந்தவொரு துறையும் கிடையாது. எமது நாடு ஒரு முறைமை என்றவகையில் சீர்குலைந்துள்ளது. உலகின் முன்னிலையில் கொச்சைப்படுத்தப்பட்ட, அபகீர்த்திக்குள்ளாகிய நாடாக மாறியுள்ளது. எமது நாடோ எமது மக்களோ இந்த அனர்த்தத்திற்கு இரையாகிவிடலாகாது. இதனை மாற்றியமைக்க வேண்டும். நாமெவரும் இந்த பேரிடரை விலகிநின்று பார்த்துக்கொண்டிருப்பது தார்மீகமானதல்ல. முதலில் நாங்கள் அரசியல் வெற்றியை பெற்றுக்கொள்ள வேண்டும். எம்மிடம் தேவை நிலவுகின்றது என்பதற்காக அரசியல் மாற்றங்கள் நிகழப்போவதில்லை. அதற்காக இரண்டு விடயங்கள் பூர்த்தியடைய வேண்டும். ஒன்றுதான் ஆட்சியாளனால் தொடர்ந்தும் தனது நிருவாகத்தை வழமைபோல் பேணிவர இயலாமல் போகின்றமையாகும். இரண்டாவது மக்களால் தொடர்ந்தும் பழையவிதத்தில் தமது வாழ்க்கையை பேணிவர இயலாமல் போகின்றமையாகும். இன்று எமது நாட்டில் புதிய அரசியல் மாற்றமொன்றுக்கான நிலைமைகள் முதிர்ச்சியடைந்துள்ளன. உருவாகியுள்ள இந்த நிலைமைகளை மிகவும் நன்றாக முகாமைசெய்து நெறிப்படுத்தி வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல முடியாவிட்டால் அந்த இடத்தில் எங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது.
இலங்கையின் மிகவும் இக்கட்டான அரசியல் முரண்பாட்டின் அருகிலேயே நாங்கள் இருக்கிறோம். அவர்கள் இந்த தேர்தலுக்காக பெருமளவிலான பணத்தை இறைக்கிறார்கள். தேர்தலுக்காக பாரிய வசதிகளைக்கொண்ட அலுவலகங்களைக் கொள்வனவு செய்துள்ளார்கள். பணத்தைப் பிரயோகித்து உலகில் தோன்றியுள்ள புதிய தொழில்நுட்பத்தின் மாற்றங்களை தேர்தலுக்காக பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள். பாரிய ஊடக தொழிற்பாடுகளைக்கொண்ட தேர்தலாக மாறுகின்றது. சனநாயக தேர்தலொன்றில் இடம்பெறக்கூடிய முரண்பாட்டுநிலைமை குறைந்தபட்ச சனநாயக எல்லையை சிதைத்தல் வரை வளர்ச்சியடைந்து வருகின்றது.
1978 அரசியலமைப்பில் சனாதிபதி பதவி ஒரு மணித்தியாலம்கூட வெற்றிடமாக அமையமாட்டாது. சனாதிபதி தேர்தல் சனாதிபதி பதவி நிறைவடைய ஒரு மாதத்திற்கு முன்னராகவும் இரண்டு மாதங்களை விஞ்சாத காலப்பகுதிக்குள்ளேயும் நடைபெற வேண்டும். ஏனைய ஒவ்வொரு தேர்தலும் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் நடாத்தப்பட வேண்டிய போதிலும் சனாதிபதி தேர்தல் பதவிக்காலம் நிறைவடைய முன்னராக நடாத்தப்பட வேண்டும். மக்களின் நிறைவேற்றுத் தத்துவம் மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற சனாதிபதியால் வகிக்கப்படல் வேண்டுமென அரசியலமைப்பில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களால் அதற்காக சனாதிபதி ஐந்து வருடகாலத்திற்காக தெரிவுசெய்யப்படுவார். அது இனிமேலும் ஐந்தா, ஆறா என பார்க்க வேண்டியதில்லை. அரசியலமைப்பின் 125 வது பிரிவில் அரசியலமைப்பின் சட்டங்கள் பற்றி பொருள்கோடல் வழங்குவதற்கான அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கே உண்டு. உயர்நீதிமன்றம் மூன்று சந்தர்ப்பங்களில் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என பொருள்விளக்கம் கொடுத்துள்ளது. 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டவிதம் தவறானதென மீண்டும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தம் 2015 இன் நடுப்பகுதியிலேயே நிறைவேற்றப்பட்டது. 09 வருடங்களுக்குப் பின்னர் 19 நிறைவேற்றப்பட்டவிதத்தின் திட்பநுட்பத்தன்மையைப் பற்றிக் கேட்கிறார்கள். 19 வது திருத்தத்தின் அதிகாரம் பல சந்தர்ப்பங்களில் பிரயோகிக்கப்பட்டது. இவை மரபுரீதியான தேர்தலில் இடம்பெறுகின்றவையல்ல. இந்த அரசியல் முரண்பாட்டில் நிலவுகின்ற தீவிரத்தன்மையே இவற்றினால் வெளிக்காட்டப்படுகின்றது. ஏன் இவ்வாறு இடம்பெறுகின்றது? தற்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பது தனித்துவமான ஒரு அரசியல் நிலைமாற்றமாகும். அந்த நிலைமாற்றத்தை தடுப்பதற்காக எதிர்த்தரப்பினர் அதிகாரம், ஊடகம், அரசியலமைப்பு, பாராளுமன்றம், சட்டங்கள் அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எங்களிடம் இருப்பது உங்களின் பலம் மாத்திரமே. மக்களை ஒருங்கிணைத்து இந்த சவாலை வெற்றி கொள்வதில்தான் எங்களின் வெற்றி தங்கியுள்ளது.
பரந்து விரிந்திருந்த நிறைவுகாண் மருத்துவ தொழில்வாண்மையாளர்களை ஒரு குழுவென்ற வகையில் ஒரே இடத்தில் தொகுத்ததன் மூலம் எம்மால் இதனை எதிர்கொள்ள முடியும் என்பது தான் சுட்டிக்காட்டப்படுகிறது. நீங்கள் பல்வேறு தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களாக இருக்கலாம். அவை அவ்வண்ணமே இருக்கட்டும். ஆனால் இந்த அரசியல் நிலைமாற்றத்திற்காக தொழிற்சங்க எல்லைகள் மாத்திரமல்ல தொழில்களின் எல்லைகளையும் விஞ்சிச் சென்ற ஒரு கூட்டமைவாக நாங்கள் மாறவேண்டும். இத்தகைய கூட்டமைவுகளின் பலமின்றி அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. கைப்பற்றுகின்ற அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான துறைகளை கட்டியெழுப்ப இந்தக்கூட்டு செயற்பாங்கு அத்தியாவசியமானதாகும்.
1917 இல் ரஷ்ய புரட்சி இடம்பெற்ற பின்னர் “பழைய ஆடைகளை கலைந்து புதிய ஆடைகளை அணிந்து கொள்வதற்கான காலம் பிறந்துள்ளது” என லெனின் கூறுகிறார். அது எங்களுக்கும் ஏற்புடையதாகும். அரசியல் கட்சி பிளவுகள், தொழிற்சங்க பிரிவினைகள் இருந்திருக்கலாம். அவை அனைத்தையும் ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும். இந்த வெற்றியை அடைவதற்காக அயராது உழைப்போம். இடையீடு செய்வோம். தோ்தல் நடைபெறுமா, இல்லையா என்ற சந்தேகத்தை வைத்துக்கொள்ள வேண்டாம். இந்த 17 ஆம் திகதி தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் கிடைக்கிறது. இந்த மாத இறுதியளவில் தோ்தல்கள் ஆணைக்குழுவினால் தோ்தல் நடைபெறுகின்ற திகதி அறிவிக்கப்படும். கட்டாயமாக தோ்தல் நடைபெறும். அடுத்ததாக நாங்கள் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். சுதந்திரம் பெற்று 76 வருடங்கள் உருண்டோடிய போதிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியாமல் போயுள்ளது. சந்தேகம், அவநம்பிக்கை, வன்மம் நிறைந்த நாடாக நாங்கள் மாறியிருக்கிறோம். இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். எமது நாட்டின் சட்டமானது சுறாக்கள் தப்பிச்செல்கின்ற நெத்தலிகள் சிக்குகின்ற சட்டமாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைமை ஒரு எண்ணக்கருவாக அன்றி அதனை நடைமுறைச் சாத்தியமானதாக அமுலாக்குகின்ற ஆட்சியொன்றை நாங்கள் நிர்மாணிக்கவேண்டும்.
எமக்கு பலம்பொருந்திய அரச சேவையொன்று அவசியமாகும். அதில் ஈடுபடுகின்ற தொழில்வாண்மையாளரும், நன்மைகளைப் பெறுகின்ற பிரஜைகளும் மனநிறைவு அடைகின்ற அரசசேவையொன்றினை நாங்கள் நிலைநாட்டுவோம். அதைப்போலவே பலம்பொருந்திய வெளியுறவுக் கொள்கையொன்று எமக்கு அவசியமாகும். உலகம் தொடர்பாடலில், சந்தையில், போக்குவரத்தில் முடிச்சுப்போடப்பட்டுள்ளது. சுறுங்கிவிட்ட உலகத்தில் தனிமைப்பட்டிராமல் இடைத்தொடர்புகளை கட்டியெழுப்பி உலகத்துடன் முன்னோக்கி பயணிக்கவேண்டும். ஒரு சில நாடுகளின் கம்பெனிகள் பணத்தை கொடுத்து எங்கள் தலைவர்களை விலைக்கு வாங்கியுள்ளது. ஒரு சில கருத்திட்டங்கள், ஒரு சில அரசியல் தீர்மானங்கள் கம்பெனியின் பணத்திற்காகவேயன்றி வெளியுறவுக் கொள்கைக்கு இணங்க அமுலாக்கப்படவில்லை. எனினும் உலகத்தின் எந்தவொரு கம்பெனியாலும் எம்மை விலைக்கு வாங்க முடியாது. தேசிய ஒற்றுமை, சட்டத்தின் ஆட்சி, பலம்பொருந்திய அரச சேவை, பலம் பொருந்திய வெளியுறவுக் கொள்கை, ஊழல் – மோசடி – விரயமற்ற ஆட்சியின்றி இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
பொருளாதார நெருக்கடி எவ்வாறு வெளிப்படுகிறது? நோய்க்கு மருந்துகள் பற்றாக்குறையாக இருத்தல், கல்வியிலிருந்து நீங்குதல், தொழில்வாண்மையாளர்கள் நாட்டை விட்டுச் செல்லல் போன்ற மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மூலமாக நெருக்கடி வெளிப்படுகிறது. இந்த நெருக்கடியை தீர்க்கவேண்டுமாயின் திறைசேரிக்கு கிடைக்கின்ற ரூபாவின் அளவு அதிகரிக்கவேண்டும். 2024 இல் அரசாங்கம் 4168 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்க்கிறது. அரசாங்கத்தின் செலவு கடன் தவணை, வட்டித்தவணை, அரசாங்கத்தின் செலவுகளை உள்ளடக்கியதாக 11,277 பில்லியன் ரூபாவாகும். அப்படியானால் திறைசேரிக்கு பணத்தை பெற்றுக்கொள்வதும் அந்த பணத்தை பாதுகாத்துக்கொள்வதும் எப்படி? திறைசேரிக்கு வரவிருக்கின்ற எனினும் வேறு பாதைகளில் திசை திரும்பி செல்கின்ற பணத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது? திறைசேரிக்கு வருகின்ற பணம் விரயமாகின்றது. செல்வம் உருவாவது வெளியிலிருந்து தான். அரசாங்கம் செல்வத்தை பிறப்பிப்பது கிடையாது. வெளியில் உருவாகின்ற பணத்தை மென்மேலும் பிறப்பிக்க வேண்டும். பணத்தை பிறப்பிக்கக்கூடிய வாய்ப்புகளைப் பற்றி நாங்கள் சிந்தித்திருக்கிறோம். எம்மிடம் அதற்கு தேவையான வளங்கள் இருக்கின்றன. தொழிநுட்பமும் அவசியமான மூலதனமும் இல்லாவிட்டால் நாங்கள் வெளிநாட்டு முதலீடுகளை அழைப்பிக்க வேண்டும்.
உலகம் புதிய தொழிநுட்பத்துடனேயே முன்னோக்கி நகர்கிறது. இருபதாம் நூற்றாண்டில் அனைத்துத் துறைகளிலும் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றன. உலகத்திற்கு அவசியமான உணவு, மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்தமை இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளால் அடையப்பெற்ற வெற்றிகளின் பெறுபேறாகும். அந்த வெற்றிகளை எமது பொருளாதாரத்துடன் முடிச்சி போட்டுக்கொண்டு முன்னேறிச் செல்வதில் நாங்கள் தோள்வி கண்டோம். புதிய தொழிநுட்பத்தின் வளர்ச்சிகளை எமது பொருளாதாரத்தில் எவ்வாறு ஈடுபடுத்துவது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். நாங்கள் ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தித் தொடர்பில் அதிக கவனத்தை செலுத்தவேண்டும். தற்போது வரி விதித்து பொருளாதாரத்தை சிறைப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு நன்றாக அசைய இடமளிக்க வேண்டும். அதற்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது எங்களுடைய பொறுப்பாகும். உலகத்திற்கு அவசியமான பண்டங்களையும் சேவைகளையும் பற்றி நாங்கள் சிந்திக்கவேண்டும். மென்பொருள் துறையில் கப்பற்தொழிற்துறையில் பாரிய கேள்வி நிலவுகின்றது. அந்த சேவை உற்பத்திகளை எவ்வாறு அடைவது என்பதை கண்டறியவேண்டும். உலகின் ஐ.ரி. துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. 2030 அளவில் உலகிற்கு 19 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் அவசியமாகின்றனர். சுற்றுலா தொழிற்துறையில் மிகச்சிறந்த சாத்தியவளம் இருக்கின்றது. தொழில்வாய்ப்புக்கள் உருவாகி பொருளாதாரத்துடன் மக்களை இணைத்துக்கொள்வதால் ரூபாவின் நெருக்கடிக்கும் டொலரின் நெருக்கடிக்கும் தீர்வுகளை கண்டறிய இயலும். தொழில்கள் உருவாகாவிட்டால் பொருளாதாரம் இவ்விதமாகத்தான் இருக்கும். மக்களின் வறுமை இல்லாதொழிவது அந்த இடத்தில் தான். ஊவா மாகாண போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் பொருளாதாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். அந்த மக்களுக்கு புதிய பொருளாதார சாத்திய வளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் கிராமிய வறுமையை ஒழித்துக்கட்டமுடியும். பொருளாதார அபிவிருத்தியின் பெறுபேறு என்ற வகையில் நாங்கள் ஆரோக்கியமான ஒரு சமூகமாக மாறவேண்டும். பொருளாதார வெற்றியையடையவும் ஆரோக்கியமான ஒரு நாடாக மாற வேண்டும். பொருளாதார அபிவிருத்தியின் நன்மைகளால் ஆரோக்கியமான தேசமொன்று உருவாக்கப்பட வேண்டும்.
தொழில்வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கவேண்டுமாயின் எமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் உறுதிநிலையையும் கட்டியெழுப்ப வேண்டும். அதைபோலவே தொழிலுக்கேற்ற சம்பளத்தையும் அனுசரணையையும் வழங்கவேண்டும். உங்கள் தொழிலின் பாதுகாப்பும் அடையாளமும் பாதுகாக்கப்படுகின்ற விதத்திலான சேவைகள் பிரமாணக் குறிப்பினை நாங்கள் உருவாக்குவோம். உலகத்தில் முன்னோக்கி நகர பட்டப்பின்படிப்பு அவசியமாகும். முன்னேற்றமடைந்த நாடுகள் அதிகளவில் அக்கறை காட்டியிருப்பது பட்டப்பின்படிப்பு நிறுவனங்கள் தொடர்பிலாகும். எங்களுக்கு முழுநேர பட்டப்பின்படிப்பு நிறுவனங்கள் கிடையாது. உலகில் ஆரம்பக் கல்விக்கு பின்னரே ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன. நாங்கள் கல்வியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக தொழில்சார் துறையை மேலெழச் செய்யவேண்டுமானால், பட்டப்பின்படிப்பினை ஒழுங்கமைக்கவேண்டும். சிதறியுள்ள, பலவீன நிலைக்கு உள்ளகிய, முறையற்றதாக இருக்கின்ற எமது பொருளாதாரத்தையும் கல்வியையும், திறன்களையும், முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கியமானதாக அமைகின்ற பட்டப்பின்படிப்பு மீது கவனம் செலுத்தவேண்டியுள்ளது. எங்களிடம் நல்ல கருத்துக்களும் எண்ணக்கருக்களும் இருக்கின்றன. இந்த அயோக்கியத்தனமான, அசிங்கமான அரசியலை மாற்றியமைக்காவிட்டால் எமது நாட்டினால் இம்மியளவும் முன்னோக்கி நகரமுடியாது. அதற்கு இந்த ஜனாதிபதி தோ்தல் முக்கியமானதாக அமையும். அதற்காக நாங்கள் இடையீடு செய்வோம். மக்களுடன் உரையாடுங்கள். இந்த மாற்றத்தின் பங்காளிகளாக மாறுங்கள்.