Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள வழிவகுக்கும்

(-Colombo, October 16, 2024-)

புகையிரத ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையில் புகையிர வீதி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துக

போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு

President Dissanayake At The progress review meeting of the Ministry of Transport

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள வழிவகுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அதேபோல் கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது பெறுகைச் செயற்பாடுகள் ஒழுங்குமுறைக்கமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், ஒரு சிலருக்கு மாத்திரம் ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு மாறாக பிரதேச மற்றும் கிராமிய மக்களுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் குறித்த வேலைத்திட்டங்களை தயாரிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) நடைபெற்ற போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

President And The Team At The progress review meeting of the Ministry of Transport

போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதோடு, மத்திய அதிவேக வீதியின் மீரிகம – கடவத்தை பகுதியை நிர்மாணிப்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்வது இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானதாகும் என்றும், அதற்கான வேலைத்திட்டங்களை ஒழுங்குமுறைக்கமைய திட்டமிடுவதால் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

President Dissanayake Discuss At The progress review meeting of the Ministry of Transport

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது சுற்றாடல் பாதிப்புகள், நிதி பாதிப்புகள், பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பவற்றை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

புகையிரத ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையில் புகையிர தண்டவாள வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க, போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ். ருவன்சந்திர உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

President Dissanayake Speaking At The progress review meeting of the Ministry of Transport