(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.04.08)
இன்றளவில் சமூகத்தில் பேசுபொருளாக அமைந்துவிட்ட முக்கியமான கொள்கையொன்று சனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. “தேசிய கல்விக் கொள்கைச் சட்டகம்” என அழைக்கப்படுகின்ற அந்த கொள்கைத்தொடர் மூலமாக இதுவரை ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டிருந்த இலவசக் கல்வி செயற்பாங்கின் முதுகெலும்பினை முறித்து பணம் ஈட்டுகின்ற ஒரு பொறியமைப்பாக மாற்றிக்கொள்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது.
இது சம்பந்தமாக ஆர்வம் காட்டுகின்ற பல்கலைக்கழகங்களிலும் அதற்கு வெளியிலும் உள்ள குழுக்களிலும் அது பற்றிய உரையாடல் இடம்பெற்று வருகின்றது. இதனை கல்வி தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற மிகவும் பிற்போக்கான இடையீடாகவே நாங்கள் காண்கிறோம். அது சம்பந்தமாக பல விடயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது.
என்னதான் சிக்கல்களுக்கு மத்தியிலும் எமது நாட்டின் இலவசக் கல்வி இற்றைவரை நிலவுகின்றது. அதைப்போலவே அது பாதுகாக்கப்படவேண்டுமென நாமனைவரும் எற்றுக்கொள்கிறோம். எமது நாட்டை இந்த அளவக்கேனும் பேணிவர இலவசக் கல்விக் கொள்கை எந்தளவுக்கு பங்களிப்புச் செய்ததெனும் புரிந்துணர்வு எம்மனைவருக்கும் உண்டு. அறிமுகஞ் செய்துள்ள தேசிய கல்விக் கொள்கைச் சட்டகம் மூலமாக நிலவுகின்ற இந்த நிலைமையை பின்நோக்கித் தள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனியார்மயமாக்கலின் திசையை நோக்கி ஆற்றுப்படுத்தப்பட்டிருப்பது பல்கலைக்கழக முறைமை மாத்திரமன்றி இந்த கொள்கைச் சட்டகத்திற்குள் பாடசாலைகளில்கூட இலவசக் கல்விக் கோட்பாடுகள் மீது தாக்குதல் நடாத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. மிகவும் எளிமையானவகையில் கல்வியின் நோக்கங்களை முன்வைத்து தூரநோக்கற்ற பிற்போக்கான விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கைச் சட்டகம் பற்றிய பொறுப்பு வகிக்கின்ற ஒருவர் கிடையாது. எமது நாட்டின் கல்வி சம்பந்தமான கொள்கைகளை அமுலாக்குகின்ற செயற்பாங்கொன்று நிலவுகின்றது. அதில் தேசிய கல்வி ஆணைக்குழு கொள்கை வகுப்பதில் முன்னணி வகிக்கின்றது. எனினும் தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு இதுபற்றித் தெரியாது. அது செயலற்றுப்போகச் செய்விக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கைச் சட்டகம் பற்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் ஓர் அறிவித்தலை விடுத்துள்ளது. உயர் கல்விக்கு இதனால் ஏற்படுகின்ற தாக்கம் பற்றி விபரமாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பிரதிபலிப்புச்செய்து கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இந்த கொள்கை வெளியீடு எங்கிருந்து வந்ததென கேள்வி எழுப்புகிறார். கல்வி அமைச்சும் அது பற்றித் தெரியாது எனக் கூறுகிறது. அது சனாதிபதி அலுவலகத்தின் முத்திரை பொறிக்கப்பட்டே வெளியிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான உத்தியோகபூர்வமான பொறுப்பினை வகிக்கின்ற தேசிய கல்வி ஆணைக்குழுவோ அல்லது கல்வி அமைச்சோ அறிந்திராதவகையில் இந்த அறிக்கைகள் எவரது தேவையின் பிரகாரம் வெளியிடப்படுகின்றதெனும் பாரதூரமான பிரச்சினை நிலவுகின்றது. பாராளுமன்றம், அமைச்சரவை, வேறு பொறுப்புக்கூறவேண்டிய நிறுவனங்கள் எதுவுமே அறிந்திராதவகையில் அரசியலமைப்புச் சபையைக்கூட பொருட்படுத்தாமல் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடந்து கொள்கிறார் என்பது இதன்மூலமாக மீண்டும் உறுதியாகின்றது. குழுக்கள் மூலமாக கொள்கைகளை வகுத்து, சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ கட்டமைப்பினை முற்றாகவே ஒதுக்கிவிட்ட மக்கள் ஆணையற்ற இந்த சனாதிபதி நடந்துகொள்கிறார். அது மிகவும் பயங்கரமானது. ரணில் விக்கிரமசிங்க முழுநாடுமே நிராகரித்த அரசியல் பாசறையொன்றின் பிரதிநிதியாவார். அவருக்கு எந்தவிதமான மக்கள் ஆணையும் கிடையாது. அரசியலமைப்பினால் விதிக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட பொறுப்புகள் மாத்திரமே இருக்கின்றன. இன்னும் சில மாதங்களில் அதுவும் அற்றுப்போய்விடும். அதற்கிடையில் நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற தீர்மானங்களை மேற்கொள்ள அவருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. அவருக்கு எந்தவிதமான உரிமையும் அற்ற பிரதேசங்களில் அடாவடித்தனமாக பிரவேசித்து புரிகின்ற இந்த செயல்களுக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதை வலியுறுத்துகிறோம்.
கல்வித்துறை சம்பந்தமாக இத்தருணத்தில் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் பலவிதமாக கொள்கைச் சட்டகங்களை முன்வைத்து வருகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஒன்று, விஜேதாச ராஜபக்ஷவின் குழுவிலிருந்து புதிய முன்மொழிவுகள், அமைச்சர் புதிய முன்மொழிவு பற்றிப் பேசுகிறார். அந்த ஒன்றுமே சரியாக சமர்ப்பிக்கப்படவில்லை. விஜேதாச ராஜபக்ஷவின் குழுவில் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவம் செய்து நானும் இருந்தேன். அந்த குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் கையொப்பமிடவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன அதில் கையொப்பமிட்டார். நான் கல்விச் சீர்திருத்தங்களை எதி்ர்ப்பதாலேயே கையொப்பமிடவில்லை என அவர் கூறினார். அந்த முன்மொழிவுகளுடன் நாங்கள் உடன்படவில்லை என்பதாலேயே கையொப்பமிடவில்லை. எனினும் அவருடைய கட்சியும் அது தொடர்பில் ஏகோபித்த அபிப்பிராயத்தில் இல்லை. அவர் குழுவின் முன்மொழிவுகளில் கையொப்பமிட்டாலும் அவருடைய தலைவரே பல்கலைக்கழக விரிவுரையாளர் மத்தியில் ” பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இந்த அறி்க்கையில் கையொப்பமிட்டாலும் தலைவர் என்றவகையில் நான் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதில்லை” எனக் கூறினார். எமது கொள்கைத் தீர்மானங்கள் பற்றி பேசுவதைவிட அவருடைய கட்சியில் ஏகோபித்த கருத்து நிலவாத விடயங்கள் பற்றி வலியுறுத்துவே நல்லதென பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவிற்கு நான் முன்மொழிகிறேன்.
“இனிமேல் உருவாகின்ற பல்கலைக்கழகங்களை மாகாண சபைகளுக்கு கையகப்படுத்த ரணில் முன்மொழிந்துள்ளார்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் கலாநிதி திலீப விதாரண-
எமது நாட்டுக்கு 1931 இல் இலவசக் கல்வி அறிமுகஞ் செய்யப்பட்ட பின்னர் சமர்ப்பித்த மிகவும் பாரதூரமான திருத்தம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான சவால்களுக்கு இலக்காகி வந்தபோதிலும் உயர் கல்விக் கொள்கையானது அடிப்படை அத்திவாரத்தில் அடிப்படை சாரத்தில் இதுவரைகாலமும் நிலவியது. 93 வருடகால இலவசக் கல்வி கொள்கைமீது விழுகின்ற பிரமாண்டமான தாக்குதலாக புதிய திருத்தங்களை அடையாளப்படுத்த முடியும். இங்கே இருப்பது இலவசக் கல்வியின் முழுமையான உட்பொருளை மாற்றியமைக்கின்ற முன்மொழிவுகளாகும். ரணில் விக்கிரமசிங்கவை முதன்மையாகக்கொண்ட நவ லிபரல் பார்வைக்கோணம் முன்மொழிகின்ற பிரதானமான நிபந்தனையாக அமைவது கல்வியிலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டுமென்பதாகும். சவால்களுக்கு இலக்காகினாலும் எண்ணக்கருரீதியாக ஆரம்பக் கல்வியில் இருந்து பல்கலைக்கழக கல்விவரை அனைத்து வலயங்களிலும் அமுலாக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிமேலும் இலவசக் கல்வி கிடையாதென்பதே இதன் மூலமாக முன்மொழியப்படுகின்றது: பணம் செலுத்தியே கற்கவேண்டுமென்பதாகும். அரசாங்கத்தினால் உயர்கல்விக்காக இதுவரை ஈடுபடுத்திய பணம் நின்றுவிடுமென்பதும் பல்கலைக்கழக கல்வி முறைமை மாணவர்களிடமிருந்து சேர்க்கப்படுகின்ற பணத்தின் அடிப்படையிலும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற கடனின் அடிப்படையிலும் பேணிவரப்பட்டு கடன் செலுத்தவும் பல்கலைக் கழகங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. உலகில் இன்றளவில் மோசமான நிலையை அடைந்துள்ள மாணவர்களுக்கு கடன்கொடுத்தலும் முன்மொழியப்பட்டுள்ளது. ஐக்கிய அமரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களால் பெறப்பட்ட இத்தகைய கடனைச் செலுத்தமுடியாமல் போனமையால் நேர்ந்துள்ள கவலைக்கிடமான நிலைமை பற்றி பாரதூரமான உரையாடல்கள் நிலவுகின்றன.
மத்திய அரசாங்கம் ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை கல்வியிலிருந்து விலகி மாகாணசபை சட்டகத்திடம் கையளிக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசாங்கத்தின்கீழ் நிலவுகின்ற தேசிய பாடசலைகள்கூட மாகாண சபைகளிடம் கையளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதன் பிரதான அர்த்தத்தை விளங்கிக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். 1987 இல் இருந்து சரிவர அமுலாக்கப்படாத பொறியமைப்பொன்றே மாகாண சபைகளில் இருக்கின்றன. அவ்வாறான இடத்திற்கு ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலைக் கல்வியை தள்ளிவிடுவதன் மூலமாக அரசாங்கம் முற்றாகவே கல்வியிலிருந்து நீங்குவதற்கான முதலாவது அடியெடுப்பு வைக்கப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாகாணசபை தேர்தல்கள்கூட நடாத்தப்படவில்லை. அவ்வாறான இடத்திற்கு ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலைக் கல்வியை ஒப்படைக்கவே தயாராகி வருகிறார்கள். இனிமேல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுமாயின் அவற்றை மாகாண சபைகளிடம் கையளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பின்னர் தேசிய பல்கலைக் கழகங்கள் உருவாக மாட்டாதென்பதே அதன் மூலமாக கூறப்படுகின்றது. அதைப்போலவே ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படுவது சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் எண்ணிக்கை மற்றும் இந்த பாடசாலைகளைப் பேணிவருகின்ற நிலைமையின் அடிப்படையிலேயே எனக் கூறப்படுகின்றது. அதன் மூலமாக இடம்பெறுவது தற்போது நிலவுகின்ற பிரபலமான, பலம்பொருந்திய பாடசலைகளுக்கு அரசாங்க நிதி ஒதுக்கப்படுதலாகும். சிறிய பாடசாலைகளுக்கு முழுமையாகவே நிதி கிடைக்காமல் போய்விடும். மறுபுறத்தில் கல்வியை வழங்குகின்ற மொழிமூலமாக ஆங்கிலம் முன்மொழியப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கு விசேட இடம் வழங்குகின்ற காரணத்தின்பேரில் இன்றளவில் ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டுள்ள சமூக நீதி முற்றாகவே இல்லாதொழிந்துவிடும்.
எந்தவொரு கொள்கைச் சட்டகத்தினதும் வரைவாளர்கள் யாரென முதலில் அறிமுகஞ் செய்யப்படுவர். எனினும் இங்கு அந்த பொறுப்பினை வகிக்கின்ற குழுவொன்று குறிப்பிடப்படவில்லை. எனினும் சமூக வலைத்தளத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஓர் அறிக்கையின்படி அது தொடர்பாக 25 பேர் இடையீடு செய்துள்ளார்கள். அவர்கள் மத்தியில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனம் கிடையாது. குறிப்பாக கல்விக் கொள்கைக்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனம் தொடர்ச்சியாக இடையீடுசெய்து வருகின்றது. அதைப்போலவே அந்த 25 பேர் மத்தியில் எந்தவோர் ஆசிரியர் சங்கமோ மாணவர் சங்கமோ கிடையாது. கல்வியை ஒரு வியாபாரமாக காண்கின்ற பல்வேறு குழுமங்கள் இதில் இருக்கின்றன. அரச உத்தியோகத்தர் தவிர்ந்ததாக தனியார் பல்கலைக் கழகங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள், பாரியளவிலான கம்பெனிகள் மற்றும் நவலிபரல் பொருளாதாரத்தின் கோட்பாடு வகுப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து இந்த கொள்கைச் சட்டகத்தை வகுத்துள்ளார்கள். 1931 இல் இருந்து அமுலில் உள்ள இலவசக் கல்வியில் இருந்து பயன்பெற்றவர்களாலேயே இந்த திரிபுநிலையுற்ற கொள்கைச் சட்டகத்தைக் கொண்டுவந்திருப்பது பாரதூரமான ஒரு விடயமாக அமைகின்றது. இதுவரை காலமும் நிலவிய எந்தவோர் அரசாங்கமும் புரிந்திராத இந்தளவுக்கு பாரதூரமான தாக்குதல் எவ்வாறு இலவசக் கல்விமீது மேற்கொள்ளப்படுகின்றதென நாங்கள் கேள்வி கேட்கிறோம்.
“கல்வி தொடர்பான பொறுப்பிலிருந்து அரசாங்கத்தை விலக்குகின்ற கொள்கைச் சட்டகத்திற்கு எதிராக அணிதிரள வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் கலாநிதி அநுர கருணாதிலக-
எமது நாட்டின் கல்வி சம்பந்தமாக இலவசக் கல்விச் சட்டத்தைப் போன்றே இலங்கை அடைந்துள்ள பொருளாதார, சமூக, கலாசார, சர்வதேச சமவாயம் எனும் இரண்டு அடிப்படை விடயங்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச சமவாயம் மூலமாக அனைவருக்கும் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுதந்திரமான சமூக பிரஜை கல்வி மூலமாகவே உருவாக்கப்படுகிறான் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அதைப்போலவே அனைத்து இனங்களுக்கிடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு, சமாதானம் மற்றும் ஒற்றுமை பிரஜைகளின் கல்வி மூலமாகவே உறுதிசெய்யப்படுவதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எந்தவொரு மட்டத்திலுமான கல்வியை பெற்றுக்கொள்வதற்கான சமமான அணுகுமுறை பிரஜைகளுக்கு இருக்கவேண்டுமென்பது எற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். தமது இயலுமை மற்றும் தோற்றுவாய்களின் அடிப்படையில் அரச கல்வியை விரிவாக்குவதிலான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பது குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேசரீதியாக எற்றுக்கொள்ளப்பட்ட இந்த கோட்பாடுகள் அனைத்தையும் மறந்து வகுத்த கொள்கைச் சட்டகமொன்று சனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைச் சட்டகத்தை அமுலாக்கினால் தரமான கல்வி சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதை தவிர்க்க இயலாது. இன்றளவில் ஆரம்பக் கல்வியில் இருந்து உயர்கல்வி வரை நிலவுகின்ற வேற்றுமைகளை மென்மேலும் விரிவாக்கி உறுதிசெய்ய இந்த முன்மொழிவுகள் வழிசமைக்கின்றன.
முதலீடுகளும் வளங்களும் என பெயரிடப்பட்டுள்ள தலைப்பின்கீழ் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியில் இருந்து வருடம் 12 வரை கல்வி பயில்கின்ற பிள்ளைகளுக்கு செலுத்துவதற்குள்ள இயலுமைக்கு தடையேற்படாதவண்ணம் செயற்படவேண்டுமெனக் குறிப்பிடப்படுகின்றது. புறப்பாடவிதானச் செயற்பாடுகளையும் உள்ளிட்டதாக பாடசாலைகளில் பணம் அறவிட இன்றளவில் நிலவுகின்ற தடைகள் அனைத்தையும் நீக்குவதாகக் குறப்பிடப்பட்டுள்ளது. அதைப்போலவே பல்கலைக் கழகங்கள் சம்பந்தமான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை ஒழித்து தனிவேறான தேசிய உயர் கல்வி ஆணைக்குழு எனும் நிறுவனமொன்றை அறிமுகஞ்செய்து அரச, அரசதுறைல்லாத, தேசிய மற்றும் மாகாண உயர் கல்வி நிறுவனங்களில் கல்விக்கான தரத்தை சான்றுரைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்குகின்ற செயற்பாங்கிலிருந்து நீங்கி கல்வியின் தரத்தை வகுப்பது மாத்திரம் தேசிய கல்வி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படுகின்றது. பணத்தை அறவிடல், மாணவர்களை சேர்த்துக்கொள்ளல், நிருவாகத்தை உள்ளிட்ட அனைத்து அலுவல்களையும் கையளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தமது பணத்தை தேடிக்கொள்ள வேண்டுமென்பதே இதன் கருத்தாகும். சிலவேளைகளில் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்வதற்கான தரநியமங்களைக் குறைத்து அதிகமாக மாணவர்களை சேர்த்துக்கொண்டு அதிகமாக பணத்தை ஈட்டிக்கொள்ளவும் இதன் மூலமாக வாய்ப்பு கிடைக்கும். மறுபுறத்தில் பணத்தை பிறப்பித்துக்கொள்வதற்காகவே ஆக்கப்பட்ட பாடநெறிகளை அறிமுகஞ்செய்யவும் கவனஞ் செலுத்தப்படும்.
இதுவரை இலவசக் கல்விச் செயற்பாங்கு ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டிருந்த முதுகெலும்பினை சிதைத்து பணம் ஈட்டுகின்ற பொறியமைப்பாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முதன்மையாகக்கொண்டு இந்த புதிய கொள்கைச் சட்டகம் முன்வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. அரசாங்கத்தினால் கல்விக்காக பணம் ஈடுபடுத்தப்படுதல், தரமான கல்வியை வழங்குதல், அனைவருக்கும் கல்வியை வழங்குவதற்கான பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகுதல் ஆகிய அனைத்து விடயங்களையும் ஒரே தடவையில் முடிவுக்கு கொண்டுவருகின்ற உத்தேச கொள்கைச் சட்டகத்திற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்.