Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்களே வனப்புமிகு நாட்டை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துக்கொண்டு இருக்கிறார்கள்” -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா-

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.29)

இவ்வருடத்தின் செத்தெம்பர் இறுதியில் அல்லது ஒற்றோபர் தொடக்கத்தில் சனாதிபதி தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தலொன்று நெருங்கும்போது எமது நாட்டு மக்கள் இந்த கொடிய ஆட்சியை மாற்றியமைப்பதற்கான பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். பொருட்களின் விலைகள் அதிகரித்தல், மூன்றுவேளை உணவு பெற்றுக்கொள்ள முடியாமை, போசாக்கின்மை அதிகரித்தல் போன்றே அரசாங்கம் கடந்தகாலத்தில் அமுலாக்கிய வரிக்கொள்கைகள் காரணமாக சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் பாரியளவில் சீரழிந்துவிட்டன. அவையனைத்தும் காரணமாக மக்களில் பெருந்தொகையானோர் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். மருந்துகள் இன்மை, தரங்குறைந்த மருந்துப் பிரச்சினை போன்றே கல்விச் சிக்கல்கள், பிரமாண்டமான வரிச்சுமை முதலியவற்றை மாற்றியமைத்து மக்களுக்கு உயிர்வாழக்கூடிய ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனைவருமே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும்சிலர் இந்த துன்பங்கள் காரணமாக நாட்டைவிட்டுச் செல்கிறார்கள்.

மக்கள் நினைப்பதும் எளிமையான மாற்றங்களுக்காக அரசாங்கமொன்றை அமைப்பது பற்றியல்ல. கடந்த 76 வருடகாலமாக எளிமையான போராட்டக் கோஷங்களுக்காக அரசாங்கங்களை அமைத்துள்ளார்கள். ரூ. 3.50 இற்கு பாண், எட்டு இறாத்தல் கொட்டைகள், சந்திரனில் இருந்து அரிசி கொண்டுவந்து தருதல் போன்ற நிலைமைகளல்ல தற்போது இருப்பது. பொருளாதாரத்தை அடிமட்டத்திற்கே வீழ்த்தி, தாங்கமுடியாத கடன்சுமையை ஏற்றி, நாடு வங்குரோத்து அடைந்துவிட்டதென்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்கள். மறுபுறத்தில் சமூகச் சீரழிவு, சட்டத்தின் ஆட்சியின்மை, அரசாங்கமே அரசியலமைப்பினை மீறுதல் போன்ற நிலைமைகளால் மிகவும் பாரதூரமான சமூக, பொருளாதார, அரசியல், கலாசார பிரச்சினைகளே நிலவுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கண்டறிய நாட்டில் ஆழமான மாற்றமொன்று அவசியமாகும். மக்களும் ஊழல்நிறைந்த ஆட்சியை மாற்றியமைப்பதற்காக அணிதிரண்டு உள்ளார்கள். பொருளாதார அபிவிருத்தி நிலவுகின்ற, நியாயம் நிலவுகின்ற சுமூகமொன்று பற்றிய எதிர்பார்ப்பினைக் கொண்டவர்களாக மக்கள் இருக்கிறார்கள். தமக்கு கிடைக்கின்ற சிறிய அநுகூலங்களை ஒருபுறம் வைத்துவிட்டு சமூகத்தின் ஆழமான மாற்றத்திற்காக திசைகட்டியுடன் கைகோர்த்து மக்கள் முன்நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமைக்குள் தோல்வி பற்றி உணர்ந்த, அதிகாரத்தைக் கைவிடுவதுபற்றி நினைத்துப்பார்க்கக்கூட முடியாத ஊழல்மிக்க ஆட்சிக் கும்பல்கள் பலவிதமான தந்திரோபாயங்களை பிரயோகித்து பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு இந்த நிலைமையை தட்டிக்கழித்துச்செல்ல முயற்சிசெய்கிறார்கள். திரிபடைந்த தோற்றமுடைய அரசியல் நாடகங்களை உள்ளடக்கிய கூட்டணிகளை கட்டியெழுப்பி வருகிறார்கள். புதிய தோற்றத்தைக்காட்டி பழைய மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிசெய்து வருகிறார்கள். நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்களே வனப்புமிகு நாட்டை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துக்கொண்டுஇருக்கிறார்கள். நீண்டகாலமாக ஒன்றாக அரசாங்கத்தில் இருந்தவர்களும் வேலைத்திட்டங்களை முன்வைத்து, வேறு உரையாடல்களை உருவாக்கி, மக்களை தவறாக வழிநடாத்த முயற்சிசெய்து வருகிறார்கள். மக்கள் அவர்களை பார்ப்பதே கிடையாது. அதனாலேயே தேர்தலை தவிர்த்துச்செல்ல நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்தல் போன்ற கதைகளைக் கூறிவருகிறார்கள். மக்களின் பாரிய எதிர்ப்பு அரசாங்கத்திற்கு எதிராக வந்தவேளையில் நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்தல் பற்றி அவர்களுக்கு ஞாபகம் வரவில்லை. அடுத்த தேர்தலில் அவர்களுக்கு வெற்றிபெற முடியாதென்பது உறுதியானதால் அவசரஅவசரமாக நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்தல் ஞாபகத்திற்கு வருகின்றது. நாங்கள் நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்துக்கட்டுவதற்காக தொடர்ச்சியாக போராடி பலவற்றை அர்ப்பணித்தவர்கள். அவர்கள் தொடர்ச்சியாக பொய் வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்று சனாதிபதி முறையைப் பேணி வந்தவர்களாவர். நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்துக்கட்டி மக்களின் இறைமையை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் மாத்திரமே உறுதிப்படுத்த முடியும். சனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று, பொதுத்தேர்தலில் பலம்பொருந்திய அரசாங்கமொன்றை நிறுவி புதிய அரசியலமைப்பொன்றினை அறிமுகஞ்செய்து சனநாயகத்தை நிலைநாட்டி நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

சனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட முன்வருவதில் நிலவுகின்ற அச்சம் காரணமாக திடீர் பொதுத் தேர்தல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொதுத் தேர்தல் வந்தால் ஊழல்மிக்க திருட்டுக் கும்பலை அகற்றி, புதிய ஆட்சியொன்றை அமைக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள். தேர்தல் காலம் நெருங்கும்போது வழமையாக செய்வதுபோல் பொருட்களை பகிர்ந்தளிக்கத் தொடங்கியுள்ளார்கள். திருடிய பொதுப்பணம், வரிச்சுமையை ஏற்றி மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணம், அமைச்சுக்களுக்கு ஒதுக்கிய பணத்தொகைகளைப் பாவித்து தேர்தல் இயக்கங்களுக்காக பொருட்களைப் பகிர்ந்தளிக்கத் தொடங்கியுள்ளார்கள். இறையிலி உறுதிகளை வழங்குவதாகக்கூறி எமது நாட்டின் சனாதிபதி மக்களை தம்புல்லைக்கு திரட்டினார். உறுதிகளை வழங்கவேண்டியது சனாதிபதியல்ல, சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களே. நாடு பூராவிலும் இருக்கின்ற மக்களை பல்வேறு பொருட்களை வழங்குவதாக ஒர் இடத்தில் ஒன்றுசேர்த்து தேர்தல் கெம்பேன் புரிகிறார்கள். அதைப்போலவே 20 கிலோ அரிசியையும் பகிரத் தொடங்கியுள்ளார்கள். கடந்தகாலத்திலும் தீப்பெட்டியில் தொடங்கி பலபொருட்களை பகிர்ந்தார்கள். சவப்பெட்டிகளை மாத்திரமே பகிரவில்லை. இந்த வாக்குகளைப் பெற்றுக்கொண்டே ரணில் நாட்டைத் திருடினார். நாட்டைக் கடனாளியாக்கினார். மக்களால் உயிர்வாழ முடியாத நிலைக்கு வீழ்த்தினார். அந்த விளையாட்டுக்கு இனிமேலும் இடமளிக்கவேண்டாமென நாங்கள் மக்களை வலியுறுத்துகிறோம். பகிர்ந்தளிக்கின்றவற்றை வாங்கிக்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை காட்டிக்கொடுக்காதிருப்பதற்கான தீர்மானத்தை எடுக்கவேண்டியுள்ளது.

தமது ஒரே எதிராளி தேசிய மக்கள் சக்தி என்பதால் புதியதொரு சுற்றில் அவதூறாக பேசவும் தொடங்கி உள்ளார்கள். மொட்டு, ஐக்கிய தேசிய கட்சி அதிலிருந்து கழன்றுசென்ற ஐக்கிய மக்கள் சக்தி அல்லது வேறு கும்பல்களும் மேடைகளில் நூறு வார்த்தைகளைப் பேசினால் அதில் தொண்ணூறு வார்த்தைகள் “திசைகாட்டி, தேசிய மக்கள் சக்தி, அநுர திசாநாயக்க” என்பதாகும். தமது கொள்கைகளைக் கூறுவதில்லை. தேசிய மக்கள் சக்தியே இந்த அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ளதென்பது அதன் மூலமாக மேலும்மேலும் உறுதிசெய்யப்படுகின்றது. அதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். புதிய கூட்டணிகளை அமைத்தாலும், புதிய பெயர்களை சூட்டினாலும் இருக்கின்றவர்கள் பழைய மனிதர்களே. அவர்கள் புதிதாக கூறிவருவது ” இது புதிய பரீட்சித்துப் பார்த்தலுக்கான நேரமல்ல” என்பதாகும். பழையவர்களையே வைத்துக்கொள்ளுமாறே அதன்மூலமாக கூறுகிறார்கள். மகிந்த ராஜபக்ஷவை, ரணில் விக்கிரமசிங்கவை, சஜித் பிரேமதாசவை போதுமான அளவுக்கு பரீட்சித்துப் பார்த்துள்ளார்கள். அவர்கள் பெயிலானவர்கள், நாட்டை நாசமாக்கியவர்கள் என்பதை எவரும் அறிவார்கள். புதிதாக பரீட்சித்துப்பார்க்க ஒன்றுமே கிடையாது. மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியுமென நன்றாகவே தெரிந்திருந்தும் ரணில் விக்கிரமசிங்காக்கள் முன்னெடுத்துவருகின்ற தந்திரோபாயங்கள் பற்றி தோழர் நளிந்த ஜயதிஸ்ஸவும் தோழர் வசந்த சமரசிங்கவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டினார்கள். வரிச்சுமையை ஏற்றி மக்களை வதைத்து பெற்றுக்காண்ட அரசாங்க வருமானத்தைக்கொண்டே ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாகி கழிந்த 19 மாதங்களில் 19 தடவைகள் வெளிநாடு சென்றுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் போகவேண்டிய வைபவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தான் வென்றெடுக்கவேண்டிய கும்பல்கள் புடைசூழ போகிறார். அவர்கள் தொடர்ந்தும் நாட்டை நாசமாக்கி பழைய பாதையிலேயே பயணிக்கிறார்களேயொழிய புதிய பாதையில் பயணிக்க தயாரில்லை என்பதை தற்போதும் உறுதிசெய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த திசெம்பர் 15 ஆந் திகதி மொட்டுக் கட்சியின் மாநாடு ஒன்றை நடாத்தி 16 ஆந் திகதியன்றே அமெரிக்காவுக்குச் சென்ற பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் 05 ஆந் திகதி இலங்கைக்க வருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் உண்மையான வீட்டுக்குச்சென்று கொந்துராத்து வாங்கிக்கொண்டு இங்கே வருகிறார். பொது வேட்பாளராக அமைவதற்காக கனவுகண்டுகொண்டிருக்கின்ற அனைவரும் அரசாங்கங்களில் இருந்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கிய அழிவுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாவர். இவர்கள் அனைவரும் பழைய பாதையில் பயணித்தவர்களாவர். அவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாட்டுக்கு அவசியமான ஆழமான மாற்றங்களைச் செய்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இருப்பவர்கள், புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கொண்ட அர்ப்பணிப்புச் செய்யக்கூடிய ஒரு நோக்கினைக்கொண்ட திசைகாட்டியைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே. அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்துவிதமான மக்கள் கருத்தறிதல் மதிப்பாய்வுகளால் நிரூபிக்கப்பட்டு பதற்றமடைந்துள்ளார். நாங்கள் புரிகின்றவற்றை காப்பியடிக்க முனைகிறார்கள். சஜித் பிரேமதாசவின் கட்சி அண்மைக்காலமாக அரசாங்கத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக தேசிய மக்கள் சக்தியை தாக்கி வருகின்றது. ஏனைய சிறிய கும்பல்களும் அப்படித்தான். பிரபுக்கள் வர்க்கத்தின் கையில் இருந்த அதிகாரம் பொதுமக்களிடம் கைமாறப் போவதை அவர்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். அதனால் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பினை மீறி பல்வேறு தருணங்களில் செயலாற்றி உள்ளார். பொலீஸ் மா அதிபரை நியமிக்கையில் சபாநாயகர் நடந்துகொண்டவிதம் அரசியலமைப்பிற்கு முரணானதென்பது வெளிப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும்போது மென்மேலும் சதிவேலைகள், பலவிதமான தந்திரோபாங்களை பாவிப்பதைப்போலவே திருடிய பணத்தைப் பாவித்து எமக்கெதிராக பல்வேறு குறைகூறல்களை மேற்கொள்ளத் தயாராகி வருகிறார்கள். அந்த எவருக்கும் கட்டுப்படாமல் உலகத்தார் முன்னிலையில் எமது நாட்டை கௌரவமான இடத்திற்கு உயர்த்திவைக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற புதிய தேசிய மலர்ச்சியை நாட்டில் உருவாக்கிட செயலாற்றுவோமென மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

“எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தேசிய மக்கள் வெற்றியீட்டச் செய்விக்க அணிதிரள்வீராக”
-தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் நிஹால் அபேசிங்க-

ஒரே அரசியலுக்காக தோற்றுபவர்கள் பலவிதமான பிரிவினைகளுடன் மக்கள் முன்னிலையில் தோற்றினார்கள். இதுவரை நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச்சென்ற அந்த அனைவரிடமும் இருந்து விடுபட்டு நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தேசிய மக்களின் சக்தியிடம் அதிகாரத்தைக் கையளிப்பதற்கான தனித்துவமான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது. இந்நாட்டின் முற்போக்கான, இடதுசாரி அரசியலில் 50 வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்திக்குள் இயங்கிவருவதோடு தேசிய புத்திஜீவிகள் அமைப்பு போன்ற வெகுசன அமைப்புகள், மாற்றுக் கமியுனிஸ்ட் கட்சிக் குழுக்கள், ஐக்கிய இடதுசாரி சக்தி போன்ற கட்சிகளின் ஊழலற்ற தலைவர்கள் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமியுள்ளார்கள். பிரபுக்கள் வர்க்கமல்லாத தமக்கே சொந்தமான அரசியல் இயக்கமொன்றை தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இத்தடவை சனாதிபதி தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களின்போது மக்களுக்கு கிடைத்துள்ளது. நாட்டில் மோசடிகள், ஊழல்கள், விரயங்கள், குடும்ப ஆட்சி, பலவீனமான முகாமைத்துவத்தைப் பேணிவந்த பின்னணியை மாற்றியமைப்பதற்காக இருப்பது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே.

மக்கள் மிகுந்த துன்பங்களுக்கு இலக்காகியுள்ளபோதிலும் உயர்ந்த மட்டத்திற்கே வந்துள்ள பொருட்களின் விலைகள் அதேவிதத்தில் நிலவுகின்ற வேளையிலேயே பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக காட்டப்படுகின்றது. மக்கள் அனைவருக்கும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சுகாதாரத்துறை பாரதூரமான பல்வேறு சீரழிவுகளுக்கு இலக்காக்கப்பட்டுள்ளது. ஓளடதத் தட்டுப்பாடு, ஓளடத விலையேற்றம், தரமற்ற மருந்துவகைகள், பரிசோதனைக் கட்டணங்கள் அதிகரித்துள்ளமை, பிரத்தியேக சேவையில் பல்வேறு கட்டணங்கள் அறவிடப்படல் போன்ற பல சிக்கல்கள் நிலவுகின்றன. மருத்துவர்கள் தொட்டு அனைத்து சுகாதார பணியாளர்களும் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் போசாக்கின்மை, தொற்றுநோய்கள் அதிகரித்தல், தொற்றுநோய்கள் பரவுதல் போன்ற அனைத்தையுமே சுகாதாரத்துறையில் தாங்கிக்கொண்டே மக்கள் வாழ்கிறார்கள். அதைப்போலவே ஏறக்குறைய 3% பிள்ளைகள் பாடசாலை செல்வதை கைவிட்டுள்ளார்கள். பாடசாலைக் கல்வி சீரழிந்துள்ளதைப்போன்றே பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியும் பாரியளவில் சிதைவடைந்து வருகின்றது. இதனால் எதிர்காலத்தில் நாட்டில் உழைப்புப் பங்களிப்பில் பிரவேசிக்கின்ற இளைஞர்கள் துறைசார்ந்த அறிவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. குடும்பத்தில் மனஅழுத்தம் அதிகரித்துள்ளது. இவையனைத்தையும் நோக்கினால் பொருளாதாரமானது மீண்டும்மீண்டும் வீழ்ச்சியடைகின்ற வட்டத்திற்குள்ளேயே நிலவுகின்றது. இதன்காரணமாக எதிர்வருகின்ற எந்தவொரு தேர்தலிலும் விவேகமான தீர்மானத்தை மேற்கொண்டு தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விக்க அணிதிரளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

NPP Press 02/29