(-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.07.25-)
பொலிஸ் மா அதிபரின் பதவியை தற்காலிகமாக தடைசெய்து உயர்நீதிமன்றம் நேற்று (25) இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்தது. அதைப்போலவே பொருத்தமான ஒருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய இரண்டு பிரதான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். முதலாவதாக சபாநாயகர் அளித்த சட்டவிரோதமான வாக்களிப்பு காரணமாகவே இந்த சிக்கலின் கேந்திரம் உருவாகியது. ரணில் விக்கிரமசிங்க இந்த சிக்கலின் பிரதானமான பங்காளியாகிறார். தேசபந்து தென்னக்கோன் பதில் பொலிஸ் மா அதிபராக இருந்ததோடு நிரந்தரமான பொலிஸ் மா அதிபராக நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினாலேயே நியமிக்கப்பட்டார். இந்த இருவரும் செய்த நியமனங்கள் சம்பந்தமாகவே உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டன. தேசபந்துவின் நியமனத்தை இடைநிறுத்தி ஒரு நாள் கழிந்தபோதிலும் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கத்தில் பதில் பொலிஸ் மா அதிபரொருவர் தொடர்பில் எந்தவோர் அணுகலையும் காணக்கூடியதாக இல்லை. அதன் காரணமாக நாட்டு மக்களிடையே பாரதூரமான ஐயப்பாடு தோன்றியுள்ளது. எனினும் உயர்நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தீர்த்துவைத்த ஒரு விடயத்தை ஆயிரம் கோடி ரூபா செலவிட்டு அரசியலமைப்புத் திருத்தமொன்றாக கொண்டுவர தயாராகி வருகிறார்கள்.
ஜே. ஆர். ஜயவர்தனவின் காலத்தில் உயர்நீதிமன்றம் மீது கல்லெறிந்த வரலாறு இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமக்குச் சார்பற்ற தீர்ப்பினை வழங்கியமை காரணமாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றப்பிரேரணையொன்று மூலமாக விரட்டியடித்தார்கள். அரசாங்கத்தின் தேவை உயர்நீதிமன்றத்தினால் ஈடேறாத சந்தர்ப்பங்களில் நிறைவேற்றுத்துறை இடையீடு செய்து வேறொரு முரண்பாட்டினை உருவாக்குகின்றது. ரணில் விக்கிரமசிங்க தெங்கு அபிவிருத்தி சபையில் ஆற்றிய உரையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதில்லையென குறிப்பால் உணர்த்தினார். மஹியங்கனையில் நடைபெற்ற காணி உறுதி வழங்கும் வைபவத்தில் மக்களின் நீதித்துறை தத்துவம் பாராளுமன்றத்திடமே இருக்கிறதெனக் கூறினார். அரசாங்கம் கொண்டுவந்த கொள்கை ரீதியான விடயங்கள் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தினார். எனினும் இந்த கீழ்த்தரமான செயல்களின் போது உயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியதும் அதனை தாக்கிப் பேசுகிறார்.
மனித உரிமைகளை மீறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமித்த தருணம் சம்பந்தமாக தீர்ப்பளித்தமையால் அரசாங்கம் நீதிமன்றத்துடன் முரண்பாட்டு நிலையொன்றுக்கு செல்ல முயற்சிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவையின் முன்னிலையில் ஆய்வுக்குட்படுத்துவதாக நேற்று கூறப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவையில் ஆய்வுக்குட்படுத்துவது அர்த்தமற்ற செயலாகும். அதைப்போலவே பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாமையால் தோ்தல் பிற்போடப்படும் என்ற பிரச்சினை கிளப்பப்பட்டுள்ளது. இது சரியான வேலையல்லவா? அப்படியானால் இவரும் பதில் ஜனாதிபதி அல்லவா. ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணையை பெறவில்லையே. அப்படியானால் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் முறைப்படி தோ்தல் அலுவல்களை ஈடேற்ற முடியும். இதனை எவ்விதத்திலும் நீதித்துறைக்கும் நிறைவேற்றுத் துறைக்கும் இடையிலான முரண்பாடுவரை ஓட்டிச் செல்ல வேண்டாமென நாங்கள் வலியுறுத்துகிறோம். நீதிமன்ற தீர்ப்பு சம்பந்தமாக கவலைப்படுவது ரணில் விக்கிரமசிங்கவின் தேவையாக இருந்த போதிலும் அது நாட்டின் தேவை அல்ல. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எவ்விதத்திலும் தோ்தலை பிற்போட காரணமாக அமையமாட்டாதென்பதை நாங்கள் இந்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கிறோம். அரசாங்கத்திற்கு நாங்கள் வலியுறுத்திக் கூறுவது இந்த நிலைமையை சாதகமானதாக முகாமைத்துவம் செய்து செயற்படுவதேயொழிய முரண்பாட்டுக்கு செல்லக்கூடாது என்பதாகும்.
“நிறைவேற்றுத்துறைக்கு அவசியமான விதத்தில் தீர்ப்பளிப்பதற்கான கடப்பாடு நீதிமன்றத்திற்கு கிடையாது.”
-ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும-
நிறைவேற்றுத்துறையினால் நீதித்துறைக்கு எதிராக ஒரு விதமான குழப்பநிலையை உருவாக்குவதற்கு கடந்த காலப்பகுதியில் முயற்சி செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விடுத்த கூற்று குறிப்பாக கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இலங்கைக்கு உயர்நீதிமன்றமொன்று தேவையில்லை என்ற விடயமா அதன் மூலமாகக் கூறப்படுகிறது? அப்படியில்லாவிட்டால் நீதிமன்ற முறைமையை வேண்டாம் என்பதா? நிறைவேற்றுத்துறைக்கு அவசியமான வகையில் தீர்ப்புகளை அளிப்பதற்கான கடப்பாடு நீதிமன்றத்திற்கு கிடையாது. அரசியலமைப்புக்கான 17 வது திருத்தத்தின் பின்னர் தோன்றிய வளர்ச்சிகளுடன் அரசியலமைப்பு திருத்தப்பட்டது. நீதிமன்றங்களுக்கு நீதியரசர்களை நியமிக்கின்ற நிறுவனமாக அரசியலமைப்பு சபை ஒரு சுயாதீனத்தன்மை மிக்க நிறுவனம் என்ற வகையிலேயே பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விதப்புரையை அரசியலமைப்பு பேரவை அங்கீகரிக்கவில்லை. சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட வழியுரிமையொன்று இருக்கிறது. எனினும் நேற்று அவசரமாக நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்பந்தமாக ஆழமாக ஆராய்ந்து அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நீதித்துறை தத்துவத்தை அமைச்சரவையோ பாராளுமன்ற தெரிகுழுவோ மீளாய்வு செய்ய முடியுமென்பதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் கிடையாது. இது நீதித்துறை மீதான அப்பட்டமான அழுத்தம் கொடுத்தலாகும்.
நீதியரசர்களின் தீர்ப்புகளை பரிசீலனை செய்வதற்கான தகைமை அமைச்சரவைக்கு இருக்கிறதா? இல்லை. எந்த விதத்திலும் அத்தகைய இயலுமை கிடையாது. எஸ்.பீ.திசாநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த விதத்திலான செயல் ஒன்றுதான் இங்கே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2010 இன் பின்னர் இவ்வாறான நிலைமைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. ‘ஹெஜிங்’ உடன்படிக்கை கைச்சாத்திட்ட காலத்தில் பெற்றோல் விலையை குறைக்குமாறு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை நிறைவேற்றுத்துறை அமுலாக்கவில்லை. அதன் பின்னரும் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக பிரச்சினையொன்றை முன்வைத்தார்கள். ஷிராணி பண்டாரநாயக்க அம்மையாரை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்தார்கள். பாராளுமன்ற தெரிகுழுவொன்று மூலமாக ஷிராணி பண்டாரநாயக்காவை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கினார்கள். அந்த செயற்பாடுகளின் பெறுபேறு என்ற வகையில் தான் 2015 இல் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் போகவேண்டி நேரிட்டது. நல்லாட்சி அரசாங்கமொன்றை நிறுவுவதாக மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் விடுத்த கூற்று சம்பந்தமாக மக்கள் நல்லலெண்ணத்துடன் சிந்தித்து அதிகாரத்தை கொடுத்தார்கள். எனினும் அதே ரணில் விக்கிரமசிங்க இப்போது செயலாற்றிக் கொண்டிருப்பது மீண்டுமொரு அதிகார மாற்றத்திற்கு மக்களை தூண்டுவதாக அமைகின்றது. நீதித்துறை பற்றிய நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இருக்கின்றது. அதனை ஒரு புறம் வைத்துவிட்டு தன்னை மகிழ்விக்காத தீர்ப்பினை வழங்கிவிட்டார்கள் என்பதற்காக கோபாவேசத்துடன் கத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சம்பந்தமான வழக்கு விசாரணை முடியும்வரை பொலிஸ் மா அதிபர் பதிவியின் பணிகளை ஆற்றுவதை இடைநிறுத்துவதே தீர்ப்பாக அமைகிறது. இந்த பணிப்புரையை தேசபந்து தென்னக்கோன் மீறினால் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக தவறாளியாகப் போகின்றவர் அவரே.
உயர்நீதிமன்ற தீர்ப்பின் இரண்டாவது பாகத்தில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படவேண்டுமென்பதே கூறப்படுகிறது. அதன்படி இரண்டு பணிப்புரைகள் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளன. அந்த பணிப்புரைகளை அமுலாக்காமை நீதிமன்றத்தை அவமதித்ததாக அமையும். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்ற வகையில் நீதிமன்றத்துடன் விளையாட சட்டவாக்கத்துறைக்கோ நீதித்துறைக்கோ முடியாதென்பதையே நாங்கள் வழியுறுத்துகிறோம். நாட்டு மக்கள் நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பங்கமேற்படக்கூடிய வகையில் செயலாற்றுவதாயின் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்ற வகையில் நாங்கள் அதற்கு எதிராக செயலாற்றுவோம்.
“தமது தேவைகளை ஈடேற்றிக்கொள்ள எதிர்பார்த்தவர்கள் தமது நாடகத்தை எதிர்காலத்தில் நடித்துக்காட்ட முடியும்.”
-சட்டத்தரணி சுசந்த தொடாவத்த-
ஒன்பது மனுக்களை பரிசீலனை செய்ய பின்னரே தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் செயலாற்றுவதற்கான இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினை வழங்கும் பொருட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட ஒரே விடயம் அரசியலமைப்பு சபையினால் இந்த நியமனம் செய்யப்பட்டது என்பதற்காக அல்ல. மனுதாரர் தரப்பினால் மேலும் பல விடயங்கள் நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்டிருந்தன. அவை மத்தியில் முதன்மை விடயமாக அமைந்துள்ளது. இந்த நாட்டில் பொலிஸ் மா அதிபர் பதவியை வகிக்க தேசபந்து தென்னக்கோன் என்பவர் பொருத்தமற்றவர் என்பதாகும். அதற்கு 2022 மே மாதம் ஒன்பதாம் திகதி சுதந்திரமானதும் அமைதியானதுமான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த காடையர்களுடன் இவர் வந்திருந்தமை பிரதான காரணமாகும். காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னக்கோனை ஒரு பிரதிவாதியாக்குமாறு சட்டத்துறை தலைமை அதிபதியால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதைப்போலவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்துக்கொள்ளாமை, பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கொடூரமாகவும் மனிதாபிமானமற்ற வகையிலும் சித்திரவதைக்கு உள்ளாக்கிமைக்கான தவறாளியாகியுள்ளமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக நிலவுகின்றன. அரசியலமைப்பு சபை முறைப்படி நியமித்திருந்தாலும், அவர் இந்த பதவிக்கு பொறுத்தமற்றவர் என்பதையே மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமனம் பெறமுன்னர் பொலிஸை ஒரு நாடக அரங்காக மாற்றினார். பொலிஸ் மா அதிபராக முன்னரும் அதன் பின்னரும் அவருடைய நடத்தைகள் பொலிஸ் மா அதிபர் என்பதற்கு பதிலாக அரசியல்வாதி ஒருவரின் நிலைமையை வெளிக்காட்டியது. பொலிஸ் மா அதிபர் சீருடையை அணிந்து கொண்டு இனிமேலும் கோமாளியாக ஆடமுடியாது. தேசபந்து தென்னக்கோனை நியமித்து தமது தேவைகளை ஈடேற்றிக்கொள்ள எதிர்பார்த்தவர்கள் எதிர்காலத்தில் அவர்களுடைய நாடகத்தை நடித்துக்காட்ட முடியும். தேசபந்து இல்லாமல் ‘யுக்திய’ தோல்வியடையும், பாடசாலை பிள்ளைகளின் பைகளில் போதை பொருட்கள் இருக்க ஆரம்பிக்கும் போன்ற புனைகதைகள் எதிர்காலத்தில் வரக்கூடும்.
அதனால் நாங்கள் விழிப்புடன் இருக்குமாறு இந்நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த நாட்டிலே தெளிவான சட்டமொன்று இருக்கிறது. பொலிஸ் மா அதிபர் பதவி இந்த ஆளினால் வெற்றிடமாகும்போது பதில் கடமையாற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அதற்கான தகைமைகளைக் கொண்ட சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். தேசபந்து இல்லையென்பதற்காக இந்த நாட்டின் வழமையான மக்கள் வாழ்க்கைக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படமாட்டாது. தேசபந்து தென்னக்கோன் என்பவரை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கியமை காரணமாக இந்த நாட்டிலே நீதியான, சட்டத்தை மதிக்கின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிக்க மகிழ்ச்சியடைவார்கள் என்பது எமக்கு தெரியும்.