(-தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் மாநாடு – 2024.09.08 – சுகததாச உள்ளக விளையாட்டரங்கு-)
எமது எதிரி எமக்கெதிராக என்னதான் செய்தாலும் எமது வெற்றியை நிறுத்திவிட முடியாது
இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியால் வெற்றிபெற இயலுமென எம்மனைவருக்கும் பாரிய நம்பிக்கை இருக்கின்றது. தற்போது எமது எதிர்த்தரப்பினர் அவர்கள் ஒருபோதுமே எதிர்பார்த்திராத தலைவிதியை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அவர்கள் அவர்களுக்கிடையில் மாத்திரம் அதிகாரத்தை கைமாற்றிக்கொள்வதை நீண்டகாலமாக செய்துவர முடியுமென நினைத்தார்கள். எனினும் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆந் திகதி நிச்சயமாக அந்த மரபுரீதியான அதிகாரப் பரிமாற்றம் முற்றுப்பெறும். தற்போது அவர்கள் மிகவும் அசிங்கமான, அவலட்சணமான. காட்டுமிராண்டித்தனமான அரசியலில் பிரவேசித்துள்ளார்கள். பொய்கள், சேறுபூசல்கள, குறைகூறல்கள், அத்துடன் குரோதம், பகைமை என்பவற்றை எமக்கெதிரா பரப்பி வருகிறார்கள். எதிர்வரும் சில தினங்களில் மேலும் அதனை தீவிரப்படுத்துவார்களென நினைக்கிறோம். நாங்கள் ஒரேயொரு விடயத்தைதான் கூறவேண்டியுள்ளது. அது எமது எதிரி எமக்கெதிராக என்னதான் செய்தாலும் எமது வெற்றியை நிறுத்திவிட முடியாது என்பதாகும். நான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு கூற்றினை வெளியிட்டதாக அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஒரு கூற்றினை வெளியிட்டார். அவர் தனது கூற்றினை சரி செய்து கவலையை தெரிவிக்க அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு செய்யாவிட்டால் நாங்கள் வழக்கு போடுவோம். நாங்கள் வந்ததும் கண்டி பெரஹெராவை நிறுத்திவிடுவதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியிருந்தார். இப்போது அவர்கள் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட முயற்சி செய்கிறார்கள். திஸ்ஸ அத்தநாயக்க கவலையை தெரிவித்தாலும் நாங்கள் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அவர் போலி ஆவணம் புனைவதில் கிண்ணத்தை வென்றெடுத்தவர். அவ்வாறு செய்து விளக்கமறியலில் இருந்த ஒருவராவார். இற்றைக்கு சில தினங்களுக்கு முன்னர் எங்களுடைய தோழர் வசந்தவை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாக பாரிய சேறுபூசினார். அது பற்றியும் கட்டாயமாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். இந்த அசிங்கமான அரசியல் விளையாட்டை இப்போதாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் இந்த நிலைமைக்கு எதிராக எடுக்க வேண்டிய எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்.
அண்மையில் ரணில் விக்கிரமசிங்க “எனது நண்பர் அநுர, எனது கூட்டாளி” எனக்கூறிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அவர் “ஷேப் ஆகவே வருகிறார்.” நண்பன் எனக்கூறிக்கொண்டு எவ்வளவு தான் ஷேப் ஆக வந்தாலும் எமது ஆட்சியின் கீழ் மத்திய வங்கி மோசடிக்கு எதிராக அவசியமான சட்ட நடவடிக்கைகளை எடுத்தே தீருவோம். கடந்த காலத்தில் அவர் பார் லைசன் வழங்கியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “கூட்டாளி”, “கூட்டாளி” எனக்கூறிக்கொண்டு எவ்வளவு தான் எங்கள் பின்னால் வந்தாலும் எல்.ஆர்.சி. இன் காணிகளை பகிர்ந்தளித்த விதம் பற்றி நாங்கள் கட்டாயமாக விசாரணைகளை மேற்கொள்வோம். அதைபோலவே அவர் எமது நாட்டின் மோசடிப்போ்வழிகளை பாதுகாக்க மேற்கொள்கின்ற முயற்சிகள் பற்றியும் நாங்கள் கட்டாயமாக விசாரணைகளை மேற்கொள்வோம். ரணில், செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் உங்களுடைய கூட்டாளியை பற்றி விளங்கிக் கொள்வீர்.
எமது நாட்டின் இளைஞர் தலைமுறையினர் நீண்டகாலமாக சமூக மாற்றமொன்றுக்காக மல்லுக்கட்டினார்கள். சிலவேளைகளில் போராளிகளாகவும் சிலவேளைகளில் கருத்தியல் சார்ந்தவர்களாகவும் மல்லுக்கட்டினார்கள். எனினும் இறுதி வெற்றியை பெற்றுக்கொள்ள தவறினார்கள். நீங்கள் புரிந்த இந்த போராட்டத்திற்குள் இருந்த ஒவ்வொரு எதிர்பார்ப்பையும் குறிக்கோளையும் ஈடேற்றுகின்ற பொறுப்பினை செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். எமது நாட்டின் அரசியலுக்கு வருவதற்குள்ள கதவுகளை பழைய ஆட்சியாளர்கள் மூடியிருந்தார்கள். ஆதனங்களை ஒரு பரம்பரையிலிருந்து மற்றொரு பரம்பரைக்கு கையளிப்பதைப்போல் எமது நாட்டின் அரசியலும் ஒரு பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரையை நோக்கியே பாய்ந்து சென்றது. அந்த பரம்பரையினரின் அரசியல் பற்றி இளைஞர் தலைமுறையினர் வெறுப்பையும் அருவருப்பையுமே கொண்டிருக்கிறார்கள். புதிய பரம்பரைக்கு அரசியலை ஒரு கௌரவமான இடமாகவும் பெறுமதியுள்ள இடமாகவும் எடுத்துக்காட்ட அவசியமான மாற்றத்தை தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் செய்து காட்டுவோம்.
இந்த நாட்டின் தேசிய அரசியல் நான்கு அல்லது ஐந்து குடும்பங்களின் கைகளிலேயே குவிந்துள்ளது.
சஜித் கூறுகின்ற விகாரமடைந்த விடங்களை நோக்கும்போது அவர் ஒரு பிரதேச சபை உறுப்பினராவதற்கான தகைமையையேனும் கொண்டிருக்கிறாரா என நீங்களே சிந்தித்து பாருங்கள். தகப்பன் ஜனாதிபதி இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் ஜனாதிபதி வேட்பாளராக மாறியிருக்கிறார். இந்த நாட்டின் தேசிய அரசியல் நான்கு அல்லது ஐந்து குடும்பங்களின் கைகளிலேயே குவிந்துள்ளது. உங்கள் மாவட்டத்தில் உங்கள் தோ்தல் தொகுதியில் மாத்திரமல்ல பிரதேச சபை ஆளுகை பிரதேசத்தின் அரசியல் நிலைமையும் அதுவல்லவா? ஒரு சில குடும்பங்கள் இருக்கின்றன தகப்பன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார். மூத்த மகன் மாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்கிறார். சின்ன மகன் பிரதேச சபையை பிரதிநிதித்துவம் செய்கிறார். அரசியல் குடும்ப படிக்கட்டு வரிசையில் வைத்ததுபோல். அப்பா ஒரு படிக்கட்டிலிருந்து விலகும்போது மகன் அந்த படிக்கட்டில் ஏறுகிறார். இந்த பரம்பரைவழி அரசியல் குடும்பங்கள் எமது நாட்டுக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளன. இந்த குடும்பத் தலைமுறையினருக்கிடையில் கைமாறுகின்ற அரசியல் பெட்டனை தற்காலிகமாக நாங்கள் கையிலெடுத்து இளைஞர்களாகிய உங்களின் கைகளில் ஒப்படைப்பதை நாங்கள் ஒரு பொறுப்பாக கையிலெடுத்திருக்கிறோம்.
எமது வறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சோ்ந்த இளைஞர் தலைமுறையினர் கரைசோ்வதற்குள்ள ஒரே பாதை கல்வியாகும்
அந்த அரசியல் பெட்டனை நாங்கள் ஒரு பரம்பரையிடமிருந்து இன்னொரு பரம்பரைக்கு ஒப்படைக்க மாட்டோம். அதைப்போலவே கிடைக்கின்ற இந்த பெட்டனை உயிர் பிரியும்வரை எங்களுடைய கைகளில் வைத்துக்கொள்ளவும் மாட்டோம். நாங்கள் அதனை ஒரு குறுகிய காலத்திற்கே வைத்திருப்போம். எங்களுடைய பொறுப்பினை ஈடேற்றிய பின்னர் நாங்கள் அதனை நாட்டின் இளைஞர் தலைமுறையினரிடம் ஒப்படைத்து நீங்கள் நாட்டை ஆட்சி செய்கின்ற விதத்தை நிம்மதியாக பார்த்துக்கொண்டிருப்போம். நாங்கள் பேராசைக்காரர்கள் அல்ல. கைவிட பழகிய மனிதர்கள். செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறுவது வெறுமனே அரசியல் கைமாறுதல் அல்ல. இதுவரை எமது நாட்டுக்கு உரித்தாக்கிக் கொடுத்திருந்த அயோக்கியமான அரசியலுக்குப் பதிலாக முற்றாகவே நிலைமாற்ற யுகமொன்றுக்கு ஆற்றுப்படுத்துகின்ற அரசியலை செப்டெம்பர் 21 ஆம் திகதி உருவாக்குவோம். அதனாலேயே நீங்கள் எங்களுடன் இந்த சில நாட்களில் இணைந்து செயற்பட வேண்டும். எமது வறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சோ்ந்த இளைஞர் தலைமுறையினர் கரைசோ்வதற்குள்ள ஒரே பாதை கல்வியாகும். எமது நாட்டில் இலவசக் கல்வி இருந்திராவிட்டால் தனிப்பட்ட முறையில் நானும் நீங்களும் இந்த இடத்தில் இல்லாதிருந்திருக்கலாம். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த நாட்டின் இளைஞர் தலைமுறையினர் மற்றும் பிள்ளைகளுக்காக நாங்கள் ஏற்படுத்துவோம்.
மிகவும் குறுகிய வரையறைக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது நாட்டின் விளையாட்டுத்துறையை நாங்கள் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் கொண்டு வருகின்ற துறையாக மாற்றுவோம். சுற்றுலாத் தொழிற்துறையை நாட்டுக்கு வருமானம் கொண்டுவருகின்ற மற்றும் தொழில்களை பிறப்பிக்கின்ற முன்னேற்றமடைந்த தொழிற்துறையாக மாற்றியமைப்போம். இந்த நாட்டை எல்லா பக்கங்களிலும் சுத்தம் செய்து உங்களின் கனவுகளை நனவாக்குகின்ற அழகான வாழ்க்கையை அனுபவிக்க உங்களுக்கு கிடைக்கின்ற வளமான இலங்கையை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நாங்கள் கட்டியெழுப்புவோம்.