Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“இளைப்பாறிய சமுதாயத்தினர் சமூக மாற்றத்தின் கௌரவமான பங்காளிகள்”-தேசிய மக்கள் சக்தியின் தலைரவர் அநுர குமார திசாநாயக்க-

(-தேசிய மக்கள் சக்தி – 2024.05.19-)

NPP-retirered

அரசாங்கம் என்பது மக்கள் வாக்களித்து நியமிக்கின்ற ஆட்சியாகும். ஆட்சியொன்றின் அடிப்படைப் பொறுப்பு அந்த நாட்டின் பிரஜைகளை கவனித்துக்கொள்வதாகும். அவர்களுக்கு பலம்பொருந்திய வருமான வழிவகை, பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, சிறந்த சுகாதார முறைமை, சட்டத்தின் ஆட்சி நிலவுகின்ற நாட்டை உருவாக்குதல், மனநிம்மதியுடன் வாழக்கூடிய சமுதாயமொன்றை உருவாக்குதல், மகிழ்ச்சியுடன் சிரித்துவாழும் பிரஜைகளை கட்டியெழுப்புவதாகும். எமது பிரஜைகளில் ஒரு பகுதியினர் இந்த பொருளாதாரத்துடன் பின்னிப்பிணைந்து தமது வாழ்க்கைத் தொழிலை அமைத்துக் கொள்கிறார்கள். பிரஜைகளின் கணிசமான பகுதியினர் அன்றாடம் உழைப்பையும் நேரத்தையும் பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்த இயலாத, பொருளாதாரத்துடன் இணைந்தாலும் அதன் நன்மைகள் போதியளவில் கிடைக்காத மக்களாக இருக்கிறார்கள். அதாவது தொழிலொன்றைப் புரிந்தாலும் கிடைக்கின்ற வருமானம் உயிர்வாழ போதுமானதாக அமையாத மக்கள். வயது முதிர்வு காரணமாக வேலை செய்வதற்காக உழைப்பையும் நேரத்தையும் ஈடுபடுத்த இயலாத அதைப்போலவே பல்வேறு காரணங்களால் ஊனமுற்ற நிலையை அடைந்துள்ள மக்கள்.

பொருளாதாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள, அன்றாடம் உழைப்பையும் நேரத்தையும் பொருளாதாரத்துடன் இணைத்திராத மக்களால் கிராமிய வறுமைநிலை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. கிராமிய வறுமைநிலையை ஒழித்துக்கட்டுவதற்கான வேலைத்திட்டமொன்று எமக்கு அவசியமில்லையா? சரியான உணவவேளையொன்று கிடைக்காத குழுவினர் சனத்தொகையில் 68% என மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 34 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசி 10 கிலோ வீதம் பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டது. அதாவது மக்களில் நூற்றுக்கு 50% இற்கு அதிகமானோருக்கு 10 கிலோ அரிசியை வழங்க வேண்டி நேரிடும். அதாவது தமது வாழ்க்கையை ஒட்டிக்கொள்ள முடியாத மக்கள். அந்த மக்களுக்கான வேலைத்திட்டமொன்று எமக்கு இருக்கவேண்டும். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களை கவனிப்பதற்காக மானியம் வழங்குதல் இடம்பெறுகின்றது. எமது நாட்டில் கிராமிய வறுமையை ஒழித்துக்கட்டுவதற்காகவும் மானிய வேலைத்திட்டமொன்று அவசியமாகும். ஆனால் அவர்களை நீண்டகாலம் மானியத் திட்டத்தில் வைத்திராமல், படிப்படியாக அவர்களுக்கு உயிர்வாழ்வதற்கான வருமான வழிவகையொன்றை அமைத்துக் கொடுப்பதற்கான பொருளாதார வேலைத்திட்டத்துடன் இணைக்கவேண்டும். அதைப்போலவே ஊனமுற்றவர்களும் எவருடைய தயவுமற்ற முதியோரையும் நாங்கள் பேணிப்பாதுகாத்திட வேண்டும். தனியார் துறையைப் போன்றே அரசாங்கத் துறையிலும் பணியாற்றி, வயது காரணமாக வேலையைக் கைவிட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு. ஒவ்வொரு பிரசைக்கும் உயிர்வாழ்வதற்கு சிறந்த வருமான வழிவகை, சிறந்த வீடு, ஆரோக்கியமான வாழ்க்கை, முறையான கல்வி, மன நிம்மதி, சிறந்த போக்குவரத்து, குறைந்தபட்ச வசதிகள் இருக்கவேண்டும். எமது நாட்டில் இளைப்பாறியவர்களில் பெரும்பாலானோருக்கு இவை கிடைப்பதில்லை.

எனினும் நாட்டின் பிரஜைகள் குழுவொன்றுக்கு சிறப்புரிமைகளும் பொதுப் பிரஜைகளுக்கு துணைநிலைத் தரமும் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் இளைப்பாறிய சனாதிபதிகளின் ஓய்வூதியம், படிகள், வீடுகள், வாகனங்கள் அனைத்துமே இல்லாதொழிக்கப்படுமென நாங்கள் உங்களுக்கு உறுதியாக கூறுகிறோம். அதைப்போலவே வாழ்க்கைச் செலவு வேகமாக அதிகரிக்கும்போது அவர்களின் ஒரே வாழ்வாதாரமாக அமைகின்ற ஓய்வூதியம் உயிர்வாழப் போதுமானதாக அமையமாட்டாது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்புடன் சார்புரீதியாக அவர்களின் ஓய்வூதியமும் படிகளும் அதிகரிக்கப்படல் வேண்டும். பல்வேறு குழுக்களின் அறிக்கைகள் மூலமாக அரசாங்க ஊழியரின் சம்பளம் 70% ஆல் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது. உங்களின் வாழக்கைச் செலவுக்கு எற்ற ஓய்வூதியத்தை வழங்குவதாக நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். 2016 – 2019 இளைப்பாறியவர்களின் விசேட குழுவொன்று இருக்கின்றது. பொது நிருவாக செயலாளரால் கையொப்பமிடப்பட்ட கடிதத்தில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இளைப்பாறுகையில் ரூ. 10,000 அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்பட்டு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நியாயமான அந்த சம்பளம் கிடைக்காத ஒரு பகுதியினர் இருக்கிறார்கள். தோழர் மகிந்தவும் தோழர் சரத் லாலும் ஒரு வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதன் தீர்ப்பு மே மாதம் 31 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. 1997 இல் இருந்து தோன்றியுள்ள அதிபர் ஆசிரியர்களின் சிக்கலொன்று தீர்க்கப்படவேண்டி உள்ளது. அக்ரஹார வழங்குகையில் 2016 இற்கு முன்னர் இளைப்பாறிய மற்றும் 2016 இன் பின்னர் இளைப்பாறிய என இரண்டு தொகுதிகளாக வகுத்துள்ளார்கள். அது எவ்விதத்திலும் நியாயமான பிரிகையிடல் அல்ல. அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமொன்று வகுக்கப்படல் வேண்டுமென நாங்கள் நம்புகிறோம்.

NPP-retirered

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்காக 15% வட்டி செலுத்தப்பட்டது. பெரும்பாலான ஒய்வூதியம் பெறுனர்கள் தமக்கு கிடைத்த 15% வட்டியைக் கொண்டுதான் தமது மருந்துகளை வாங்கினார்கள், தண்ணீர் பில் – லயிற் பில் செலுத்தினார்கள்: உணவு பானவகைகளை கொள்வனவு செய்தார்கள். பொருளாதாரம் சரிந்துகொண்டிருந்தவேளையில் மூத்த பிரஜைகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்த பொருளாதார அநுகூலத்தை அரசாங்கம் அபகரித்துக் கொண்டது. அதனால் மீண்டும் விசேட வட்டி வீதத்தில் மூத்த பிரஜைகளின் கணக்குகள் வைக்கப்படல் வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். நீங்கள் கொள்வனவு செய்கின்ற பண்டங்களுக்கு மாத்திரமல்ல உங்களின் ஓய்வூதியத்தை அல்லது பணிக்கொடையை வங்கியில் வைப்புச் செய்கையில் பெறுகின்ற வட்டி மீதும் வரி விதிக்கப்படுகின்றது. அது கட்டாயமாக நீக்கப்படல் வேண்டும். அதன் மூலமாக இந்த சிக்கல் தீர்ந்துவிட மாட்டாதென்பதை நாங்கள் அறிவோம். மிகவும் பலம்பொருந்திய பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று அவசியமாகும்.

உலகில் விருத்தியடைந்தவை என அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் பலம்பொருந்திய பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று இருக்கின்றது. பொருளாதாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றவர்கள், பொருளாதாரத்தில் பங்கேற்காதவர்கள், முதியவர்கள், பல்வேறு வலதுகுறைந்த குழுவினர், தொழில்முயற்சிகள் சீரழிதல், திடீர் நெருக்கடிகளின்போது அவற்றை எதிர்கொள்வதற்காக பலம்பொருந்திய பாதுகாப்பு நிதியமொன்று அவசியமாகும். எமது பொருளாதாரத்திற்கு அத்தகைய நிலைமையை எதிர்கொள்ளக்கூட, தனித்துவமான ஆட்களை கவனிப்பதற்காகக்கூட பலம்பொருந்திய நிதியமொன்று கிடையாது. நாங்கள் கடைப்பிடிக்கின்ற பொருளாதார உபாயமார்க்கங்கள் வெற்றிகரமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதில் மாத்திரமே இவையனைத்தும் முடிச்சிப்போடப்பட்டுள்ளன. அதனால் இந்த பொருளாதாரத்தை புதிய சாதகமான திசையைநோக்கி ஆற்றுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று எமக்கு அவசியமாகும். அதன்போது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது தீர்மானகரமானதாகும்.

பாராளுமன்றத் தேர்தலையா சனாதிபதி தேர்தலையா நடாத்துவதென்பதே இத்தருணத்தில் தோன்றியுள்ள பிரச்சினையாகும். அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரமும் செத்தெம்பர் 16 இற்கும் ஒற்றோபர் 17 இற்கும் இடையில் சனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான அதிகாரமும் சனாதிபதிக்கு உண்டு. அப்படியானால் இன்றோ நாளையோ ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான தீர்மானத்தை எடுத்தால் அவரது அதிகாரம் இல்லாதொழியும். அவரால் மேலும் சில மாதங்கள் அதிகாரத்தில் இருக்க வாய்ப்பு நிலவுகையில் அவர் முன்கூட்டியே கதிரையில் இருந்து எழமாட்டார். பாராளுமன்றத்தைக் கலைத்தால் அவரைச் சுற்றி இருக்கின்ற மொட்டுக்கட்சிக் குழவைச் சேர்ந்த அனைவருமே தேர்தலில் போட்டியிடுவதற்காக மீண்டும் மொட்டுக்கட்சியில் சேர்வார்கள். பாராளுமன்றத்தைக் கலைத்து அதனால் கிடைக்கின்ற பெறுபேற்றுக்கிணங்க ரணில் விக்கிரமசிங்கவிற்கு சனாதிபதியல்ல சனாதிபதி வேட்பாளராகவும் ஆக முடியாது. கலைத்தால் ஐக்கிய தேசிய கட்சி முற்றுப்பெறும். அதன்படி கலைப்பதற்கான வாய்ப்பு அவருக்கு அரசியல்ரீதியாக பாதகமானதாகும். ஆனால் பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டிய தேவை பசில் ராஜபக்ஷவிற்கு இருக்கிறது. ஒன்றில் அவர் ரணிலுக்கு ஆதரவு வழங்கவேண்டும். மக்களின் ஆதரவுடன் ரணில் சனாதிபதியாகினால் மொட்டின் பயணம் அத்துடன் நின்றுவிடும். ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் பிறிதோர் வேட்பாளரை நிறுத்தினால் மொட்டுக்கு இருக்கின்ற வாக்குகளும் இல்லாமல் போய்விடும். நிறுத்துவதற்கு வேறு வேட்பாளரும் இல்லை. சனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுபவர் எவராக இருந்தாலும் பாராளுமன்றத்தைக் கலைப்பார். சனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் பொதுத்தேர்தலைப் பாதிக்கும். அதனால் அவர்களும் விரைவில் பாராளுமன்றத்தை எடுக்கவே முயற்சி செய்வார்கள். பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டிய தேவை ஐ.ம.ச. உம் உண்டு. சனாதிபதி தேர்தல் ஆட்களை மையப்படுத்தியதாகும். சஜித்தைப் பார்க்கிலும் ஐ.ம.ச. ஐ பந்தயத்தில் இடுவது அவர்களுக்கு நன்மை பயக்கும். அதனால் அவர்களும் பாராளுமன்றம் கலைக்கப்படுவதை விரும்புகிறார்கள். தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் இந்த இரண்டுக்குமே தயார். அரசியலமைப்பிற்கு அமைவாக இவை இரண்டையுமே நடாத்த வாய்ப்பு நிலவியபோதிலும் அரசியல்ரீதியாக சனாதிபதி தேர்தல் நடாத்தப்பட உள்ளது.

NPP-retirered

எமது நாட்டில் அதிகாரம் பரிமாற்றப்படுகின்ற தீர்மானகரமான தேர்தலொன்று வருகின்றது. எமது சமூகம் திட்டவட்டமாக விழிப்படைய வேண்டும். அவர்களிடம் பாரிய ஊடக பலமொன்று இருக்கின்றது. முக்கியமான பிரச்சினைகளை மூடிமறைத்து மக்களை காட்டுப்பாதையில் வழிநடாத்த, குறுக்குப் பாதைகளில் வழிப்படுத்த அவர்களால் முடியும். உண்மையான பிரச்சினைகளை மூடிமறைத்து சமூகத்தை குழப்பியடிக்க அவர்களால் முடியும். உண்மையான பிரச்சினைக்குப் பதிலாக மீண்டும் மீண்டும் 88/89 பற்றிக் கூறுகிறார்கள். 88/89 இல் குற்றம் புரிந்தவர்கள் நாமெனில் ஏன் நந்தா எமக்காக பாடுகிறார்? அரச பயங்கரவாதத்தின் இயல்புதான் இங்கே பாடிய பாடலில் முழுமையாக இருந்தது. பிள்ளைகளை கடத்திய விதம். அமைச்சர்களின் வீடுகளில் சித்திரவதைக் கூடங்கள் இருந்தன. ஏ.எம்.எஸ். அதிகாரியின் வீட்டில், புத்தளத்தின் அமைச்சரது வீட்டில், திக்வெல்ல அமைச்சரின் வீட்டில், பதுளை அமைச்சரின் வீட்டில் சித்திரவதைக் கூடங்கள் இயங்கின. காடையர் படைகளை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால்த்தான் நந்தா மாலினிக்கு இவ்வாறான பாடல்களை பாட நேர்ந்தது. ஆனால் மக்களை காட்டுவழியில் கொண்டுசெல்வதற்காக அரசியலால் இது பாரிய குழப்பநிலைக்கு மாற்றப்படுகின்றது, நாங்கள் திட்டவட்டமான பிரச்சினைக்கு எம்மை மையப்படுத்துவவோமென நான் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

சமூகத்தில் உண்மை மற்றும் பொய் என இரண்டு இருக்கின்றது. எமது ஒட்டுமொத்த அரசியலும் உண்மையை அடிப்படையாகக்கொண்ட அரசியலாகும். அவர்களின் ஒட்டுமொத்த அரசியலுமே பொய்யை அடிப்படையாகக்கொண்ட அரசியலாகும். அவர்கள் மக்களை உண்மையாகவே நேசிப்பதானால் இந்த தலைவர்களால் ஊசிமருந்தில் நஞ்சு கலக்க முடியுமா? மக்களை உண்மையாகவே நேசிக்கின்ற தலைவர்களால் மக்கள் பருகுகின்ற தேநீரில் கலக்கின்ற சீனிக்கு விதிக்கின்ற வரியில் இருந்து திருட முடியுமா? முழு நாட்டிலுமே வாகன பேர்மிற் நிறுத்திவைக்கப்பட்டிருக்கையில் 82 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு பேர்மிற் வாங்குவதற்காக கையொப்பமிடுகிறார்கள். இப்படியான ஒருநேரத்தில் அத்தகைய கடிதங்களில் கையொப்பமிட தலைவர்களால் முடியுமா? பேர்மிற் கோரியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு நாங்கள் சபாநாயகரிடம் கேட்கிறோம். நாங்கள் வாகன பேர்மிற் எடுப்பதுமில்லை. இதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். நாங்கள் உண்மையிலேயே இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்க்கையையும் சாதகமான அரசினையும் எதிர்பார்ப்பவர்கள். நாங்கள் சமூகத்திற்கு உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வித்தியாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.

எமது நாட்டில் பயணித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதார உபாயமார்க்கத்திற்கும் புதிய பொருளாதார உபாயமார்க்கத்திற்கும் இடையிலான உரையாடல் தோன்றவேண்டும். உண்மையான நிலைமை என்ன? இந்த பொருளாதாரப் பயணம் தவறானது. இந்த பொருளாதாரப் பயணம் சரியானதெனில் நாட்டுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கமாட்டாது. நாட்டை புதிய பொருளாதாரத்தில் பிரவேசிக்க வைக்கவேண்டும். 1948 இல் எமது நாடு சுதந்திரம் பெறுகையில் எமது நாட்டை எந்த திசையில் கொண்டுசெல்லவேண்டுமென்ற நோக்கு இருக்கவில்லை. அதன் விளைவாக இன்று சந்திரனுக்குச் செல்கின்ற, ஆசிய பிராந்தியத்திற்கு ஔடதங்களை வழங்குகின்ற, வாகனங்களை உற்பத்தி செய்கின்ற, உணவு வழங்குகின்ற, புடவைகளை உற்பத்தி செய்கின்ற, விதையினங்களை உற்பத்தி செய்கின்ற ஓர் இந்தியா உருவாகி இருக்கின்றது. 20 ஆம் நூற்றாண்டு மானிட வரலாற்றில் மிகப்பெரிய திருப்பங்கள் ஏற்பட்ட நூற்றாண்டாகும். தென் கொரியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா 20 ஆம் நூற்றாண்டிலேயே பலம்பொருந்திய பொருளாதார அத்திவாரத்தை அமைத்துக்கொண்டன. ஐரோப்பா 17 ஆம் நூற்றாண்டில் நாடுகளை ஆக்கிரமித்து பலம்பொருந்திய பொருளாதாரங்களை அமைத்துக்கொண்டன. நாங்கள் இருபதாம் நூற்றாண்டினை கைப்பற்றிக் கொள்வதற்குப் பதிலாக கைவிட்ட தேசமாவோம்.

NPP-retirered

20 ஆம் நூற்றாண்டில் நாட்டின் பயணப்பாதை பற்றிய உரையாடலொன்று வெளியில் நிலவியது.1918 இல் இலங்கை பொறியியலாளர் சங்கத்தைச் சேர்ந்த திரு. விமலசுரேந்திர லக்ஷபான மின்நிலையத்தை அமைக்கவும் அதிலிருந்து எஞ்சுகின்ற மின்சாரத்தைக்கொண்டு மின்சார புகையிரதத்தை ஓட்டுவிக்கவும் திட்டமொன்றை முன்வைத்தார். இலங்கையில் உள்ள கனியவளங்கள் பற்றி முற்றாய்வுசெய்து பொருளாதார நோக்கு ஒன்றை முன்வைத்தார். பேராசிரியர் சேனக்க பிபிலே சுகாதாரக் கொள்கை எந்த திசையை நோக்கிச் செல்லவேண்டுமென உரையாடினார். மார்ட்டின் விக்ரமசிங்க இலக்கியம் பயணிக்கவேண்டிய திசை, சரத்சந்திர அவர்கள் நாடகக்கலையின் திசை, கிளெரன்ஸ் இசையின் திசை இப்படிப்பட்ட புதிய தோற்றப்பாடுகள் பற்றி வெளியில் உரையாடினார்கள். எனினும் எமது அரசியல் அதிகாரிகள் எம்மை முற்றாகவே வரலாற்றில் சிறைப்படுத்தி வைத்தார்கள். நாங்கள் நவீனத்துவத்தின் வித்தியாசத்தைக் கைவிட்டுவிட்டோம். நாங்கள் இன்று உலகில் தனிமைப்படுத்தப்பட்ட இராச்சியமாக மாறிவிட்டோம். நாங்கள் வருடத்திற்கான ஏற்றுமதி வருமானமாக 12 பில்லியன் டொலர்களை ஈட்டுகையில் தென்கொரியா 685 பில்லியன் டொலர்களை ஈட்டுகின்றது.

பயணித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதாரப் பாதைக்குப் பதிலாக உற்பத்தியை மையப்படுத்திய புதிய பொருளாதாரப் பாதையில் பிரவேசிக்க வேண்டும். அனைத்தையும் விற்பதே அவர்களின் பாதை. ரெலிகொம் நிறுவனத்தின் அரைவாசியை ஏற்கெனவே விற்றுவிட்டார்கள். ஐ.ரீ. இல் எமக்கு 15 பில்லியன் டொலர்களை ஈட்டக்கூடிய இயலுமை நிலவுகின்றது. ஐ.ரீ. தொழிற்றுறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ரெலிகொம் நிறுவனமே அமைக்க வேண்டும். அரசாங்கம் ரெலிகொம்மை விற்கத் தயாராகிவிட்டது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கேஸ் கம்பெனி, மின்சார சபை, மின்நிலையங்களை விற்கத் தயாராகி இருக்கின்றது. அது சரியெனக்கூறி ஹர்ஷ த சில்வா கைதட்டுகிறார். புதிய உற்பத்தியை மையப்படுத்திய பொருளாதாரத்தை நோக்கி எமது நாட்டை திசைப்படுத்தவேண்டும். ஐ.ரீ. தொழிற்றுறை, சுற்றுலாக் கைத்தொழில் சேவைகள், நாட்டின் கனியவளங்களைப் பாவித்து புதிய கைத்தொழில் கட்டத்தில் பிரவேசிக்கவேண்டும். எமது நாட்டின் கனிய வளங்கள் பற்றிய முற்றாய்வினை மேற்கொண்ட பேராசிரியர் இலேபெரும தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருப்பதாக என்னிடம் கூறினார்.

எமது நாட்டில் மிக அதிகமாக மல்லுக்கட்டுகின்ற அமைச்சுகள் பெருந்தெருக்கள், துறைமுகங்கள் ( மிக அதிகமான கொள்வனவு), எயார் லங்கா (மிக அதிகமான கொள்வனவு), மின்சக்தி (மிக அதிகமான பிஸ்னஸ்), பெற்றோலியம் (மிக அதிகமான ஏற்றுமதிச் செலவு) இங்கு கூறப்படுவது என்னவென்றால் எமது அமைச்சர்கள் பிஸ்னஸ் பண்ணுவதற்காகவே தோன்றினார்கள். இந்த நாட்டை தரமான மாற்றத்திற்கு உட்படுத்த அவசியமான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு பொருட்படுத்தாமல் விடப்படுகின்ற அமைச்சாக மாறிவிட்டது. உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றுகின்ற பெருந்தொகையானோரை நாங்கள் சேர்த்துவருகிறோம். உலகில் புற்றுநோய்த் தடுப்பிற்கான மருந்தினை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அது மிகவும் முன்னேற்றகரமான மட்டத்தில் நிலவுகின்றது. அங்கே இருக்கின்ற இலங்கையர் எம்மோடு செயலாற்றி வருகிறார்கள். உலகில் உள்ள அறிவு, தொழில்நுட்பம் என்பவற்றை சேகரிக்கின்ற திட்டமொன்றை நாங்கள் வகுத்துக் கொண்டிருக்கிறோம். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி விஞ்ஞானிகளின் சந்திப்பொன்றினை நடாத்த நாங்கள் தயாராகி வருகிறோம். அதன் ஊடாகத்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

NPP-retirered

எமது நாட்டின் காடைத்தனமான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். எமது நாட்டின் மையப் பிரச்சினை பொலிட்டிகல் கலாச்சாரமாகும். “பாராளுமன்ற உறுப்பினர்கள் திருடுவதை நிறுத்தவேண்டுமானால், சம்பளம் அதிகரிக்கப்படல் வேண்டும், மேலும் வசதிகள் வழங்கப்படல் வேண்டும்” என ஹர்ஷ த சில்வா கூறுகிறார். இதன் எல்லை எங்கே? அரசியலுக்கு வருவதே அதிலிருந்து கிடைக்கின்ற அதிகாரத்தையும் அவாநிறைவுகளையும் சிறப்புரிமைகளையும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரத்தினூடாக செல்வத்தை திரட்டிக் கொள்ளவும் ஆகும். ஹினிதும பிரதேசத்தில் கென்டர் ஒன்றில் தேயிலைக் கொழுந்து ஏற்றிய கென்டர் பியசேன அந்த பிரதேசத்தின் பிரதானமான தேயிலைத் தோட்ட உரிமையாளராகி இருக்கிறார். தற்போது அமைச்சர் பியசேன. தபால் நயின்டியில் பயணித்த எஸ்.பீ. திசாநாயக்க எப்படி ஹங்குரன்கெத்தவில் மாளிகையை அமைத்தார்? இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்திட வேண்டும். ஊடகவியலாளர் கேட்கிறார் ” உங்களுக்கு சேர்ட் வாங்கித் தந்தவர் யார்?” என. ஆனால் “அந்த இடத்தில் எப்படி ஹோட்டலொன்றை அமைத்தீர்கள்? “என அவர்களிடம் கேட்க அவர்களால் முடியாமல் போயுள்ளது.

2016 இல் 540 பிறாடோ ஊர்திகளைக் கொண்டுவந்திருந்தார்கள். வரி மோசடியொன்று இடம்பெற்றது. விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டு வந்தது. ரவி கருணாநாயக்க 540 பிறாடோ ஊர்திகளை விடுவித்தார். ஏன் மோட்டார் வாகனங்களை விடுவித்தீர்கள் என ரவி கருணாநாயக்கவிடம் கேட்க வேண்டும். அவர் நிதி அமைச்சர் காலத்தில் அவருடைய கம்பெனிக்கு அரசாங்க குதங்கள் வாங்கப்பட்டன. அதனை அவரிடம் கேட்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் மத்திய வங்கியில் மோசடியொன்று இடம்பெறவில்லையா? இடம்பெற்றிராவிட்டால் அர்ஜுன் அலோசியஸின் 800 கோடி பணம் ஏன் சென்ரல் பேங்கில் தடுத்துவைக்கப்பட்டது? களவு இடம்பெற்றிராவிட்டால் அதனைக் கொடுக்கவேண்டுமல்லவா. “களவு இடம்பெற்றாலும் நட்டம் ஏற்படவில்லையே” என ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்கள் அந்நாட்களில் கூறினார்கள். நாமல் ராஜபக்ஷ வந்தால் ” இன்னமும் நீங்கள் எப்படி அரசாங்க வீட்டில் இருப்பது? நீங்கள் அமைச்சரல்ல” எனக் கேட்க வேண்டும். அவையல்லவா கேள்வி. இன்று ஊடகத்தின் முன்னால் தோற்றுபவர் யார் என்று கூறினால் அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்விகளை நாங்கள் தருகிறோம். ஆனால் நாங்கள் போனதும் கேட்பதோ “உங்களின் சேர்ட் எங்கிருந்து?” என்றுதான். நாங்கள் அதனையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். இந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து வித்தியாசமான அரசியல் கலாசாரத்தை தேசிய மக்கள் சக்தி மாத்திரமே உருவாக்கும்.

உங்களுக்கு நான் உத்தரவாதமென்றை அளிக்கிறேன். நானோ தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ குழுக்களில் இருக்கின்ற எவருமோ பிஸ்னஸ்பண்ண வரப்போவதில்லை. நாங்கள் இந்த நாட்டில் நல்லவழியில் தொழில்முயற்சிகளை மேற்கொள்கின்ற தொழில்முனைவோருக்கு கைத்தொழிலதிபர்களுக்கு அவசியமான சுற்றுச்சூழலை அமைத்துக்கொடுப்போம். நீங்கள் இந்த நாட்டில் செல்வத்தைப் பிறப்பியுங்கள். செல்வத்தை பிறப்பிப்பவர் தனிப்பட்ட தொழில்முனைபவராவார். ஈட்டுகின்ற செல்வத்தில் ஒரு பகுதியை எடுப்பதையே அரசாங்கம் செய்துவருகின்றது. திறைசேரியை நிரப்பவேண்டுமானால் வெளியில் செல்வம் அதிகமாக உருவாகவேண்டும். எமது நாட்டில் வெளியில் செல்வம் உருவாவதில் உள்ள மிகப்பெரிய தடை இந்த அரசியல் கலாசாரமாகும். அமைச்சருக்கு அறிமுகமானவராக இல்லாவிட்டால் ச.தொ.ச. விற்கு பொருட்களைப் போட, தொழில்முனைவோர் காணியொன்றைக் கொள்வனவுசெய்ய, ஹோட்டலுக்கு உரிமமொன்றைப் பெற முடியாது. இந்த பொலிட்டிகல் கல்ச்சரில் சிறிய கும்பலொன்றின் கையில், பொருளாதாரத்தை நெறிப்படுத்துகின்ற அதிகாரம் சுருங்கி இருக்கின்றது. எமது நாட்டுக்கு நேரடியான வெளிநாட்டு முதலீடுகள் பாய்ந்து வருவதில்லை. 1978 இல் இருந்து 2022 வரை வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் 22 பில்லியன் டொலர்களாகும். 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் வியட்நாமிற்கு 23 பில்லியன் டொலர் வந்துள்ளது. நாங்கள் இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்திடுவோம். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேர்மிற் கிடையாது. உறுப்பினர் பதவியை வகிக்கின்ற காலத்திற்கு வாகனமொன்று வழங்கப்படும். சேவைக்காலம் முடிவடைகையில் அவர் வாகனத்தை ஒப்படைத்துவிட்டு வீடுசெல்ல வேண்டும். வீடு வழங்குதல், சனாதிபதி மாளிகைகளை பராமரித்தல், இளைப்பாறிய சனாதிபதிகளை பராமரித்தல் நிறுத்தப்படல் வேண்டும். இந்த அரசியல் கலாசாரத்தை நிறுத்துவது எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாகும். அரசியல்வாதி சட்டத்திற்கும் பிரஜைக்கும் மேலாக இருக்கின்ற ஒருவராக அமையமுடியாது. மனிதர்கள் தவறிழைக்கலாம். புரிகின்ற தவறுகளுக்கு தராதாரம் பாராமல் சட்டம் அமுலாக்கப்படவேண்டும்.

நாங்கள் சரியாக மையத்தை கேள்விக்குட்படுத்த வேண்டும். உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான பிரச்சினை, ஊழல் மற்றும் விரயத்தை எதிர்ப்பதற்கு இடையிலான பிரச்சினை, கடைப்பிடிக்கின்ற பழைய பொருளாதாரக் கொள்கைக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கும் இடையிலான பிரச்சினை என்பவற்றை மையப்படுத்த வேண்டும். பாரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் எம்மைக் குழப்பியடிக்க இடமளிக்கவேண்டாம். உங்களிடம் பாரிய செயற்பொறுப்பு இருக்கின்றது. நீங்கள் கூறுவதை செவிமடுக்க பாரிய குழுவொன்று இருக்கிறது. உங்களுக்கு சமூகத்தில் பாரிய பலம், பொறுப்பு, நன்மதிப்பு இருக்கின்றது. இந்த அரசியலை மாற்றியமைப்பதற்காக உங்களிடம் இருக்கின்ற பலத்தை பயன்படுத்திக் கொள்வோம். இந்த மாற்றத்தின் முனைப்பான பங்காளியாக, முன்னணி பங்காளியாக அமையுமாறு நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டை இதைவிட சிறந்த நாடாக மாற்றியமைக்க, இந்த பிரஜைகளுக்கு இதைவிட சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முடியும். அதற்காக நாங்கள் ஒன்றுசேர்வோம். சாதகமானதா, பாதகமானதா, உண்மையா, பொய்யா, நேர்மையா, போலித்தனமா என்பதை தெரிவுசெய்யவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. சரியான தெரிவுக்காக நாங்கள் ஒன்றிணைவோம்.