Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் ஆர்ப்பாட்டம்மீது நீர்த்தாரைத் தாக்குதல் மேற்கொண்டமை இறுதிமூச்சு இழுத்துக்கொண்டிருக்கின்ற அரசாங்கத்தின் கோழைத்தனமான செயலாகும்…” -சட்டத்தரணி தனுஷ்கி லியனபட்டபெந்தி-

-Colombo, December 06, 2023-

கடந்த 04 ஆந் திகதி சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. அடுத்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இந்த வருடத்தைப் பார்க்கிலும் 51%ஆல் வெட்டிவிடுதலுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் பத்தரமுல்ல, தியத்த உயனவிற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்த ஆர்ப்பாட்டம்மீது மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான மிருகத்தனமாக நீர்த்தாரை தாக்குதலைக் கண்டித்து இந்த ஊடக சந்திப்பு நடைபெறுகின்றது. மிகையான மழைக்கு மத்தியில் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான பெண்கள் பங்கேற்றார்கள். எனினும் அவர்கள் வருவதற்கு முன்னராகவே பொலீஸ் கிளர்ச்சி அடக்குதல் கூறு அந்த இடத்தில் தண்ணீர் பௌசர்களுடன் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. மக்கள் வாழ்க்கைச் சுமையை தாங்கிக்கொள்ள முடியாத நிலையை அடைந்தமையால் நாட்டின் ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவுமே நாங்கள் நேற்று வீதியில் இறங்கினோம். கடுமையான எதிர்ப்பினை இந்த பெண்கள் வெளிக்காட்டினாலும் எவ்விதத்திலும் அமைதியான நிலைமைக்கு தடையேற்படவில்லை. பொலீஸாருக்கு நீர்த்தாரைத் தாக்குதலை மேற்கொள்ளவேண்டிய அவசியமிருப்பின் அந்த தாக்குதல் நடாத்தப்பட்ட தருணத்தைப் பார்க்கிலும் தீவிரமான பல தருணங்கள் நிலவின. எனினும் இறுதியாக ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பெண்கள் கலைந்துசெல்ல அண்மித்தவேளையில்தான் தாக்குதல் நடாத்தப்பட்டது. இறுதி மூச்சினை இழுத்துக்கொண்டிருக்கின்ற அரசாங்கத்தின் கோழைத்தனமான தாக்குதலாகவே நாங்கள் இந்த தாக்குதலைக் காண்கிறோம்.

இன்னும் 05 நாட்களில் மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக சமவாயத்தில் கைச்சாத்திட்டு 75 வருடங்கள் நிறைவடைகின்றன. ஒரு நாடு என்றவகையில் இலங்கையின் அரசாங்கமும் மேலும் பல அரசாங்கங்களுடன் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. எமது நாட்டு மக்கள் அபிமானத்துடன் உயிர்வாழ்வதற்கான நன்மதிப்பினை இல்லாதொழித்த இந்த அரசாங்கம் மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக சமவாயத்தின் வாசகங்களை முழுமையாகவே மீறியுள்ளது. உலகில் நிலையான மற்றும் நீண்டகாலம் நிலைத்திருக்கவல்ல பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு நாட்டின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது அத்தியாவசியமான காரணியென்பது இந்த அனைத்துலக பிரகடனத்தின் முகவுரையில் மிகச்சிறப்பாக குறிப்பிடப்படுகின்றது. இந்த அடிப்படை மனித உரிமைகள் பற்றி பாடசாலைகளில் கற்பிக்கப்படல் வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது. தட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கான உரிமை, மனித உரிமைகளைப் பாதுகாத்தல், தனக்கும் தனது குடும்பத்திற்கும் மனித மாண்பு பாதுகாக்கப்படத்தக்கவகையில் உயிர்வாழ அவசியமான நியாயமான சம்பளம் பெறுவதற்கான உரிமை, உணவு, உடை, உறையுள் மற்றும் சுகாதார சேவைகளைப் பெற்று சாதகமான வாழ்க்கைத்தரத்தை அனுபவிப்பதற்கான உரிமையைப்போன்றே தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் விசேட பாதுகாப்பு கிடைப்பதற்கான உரிமை போன்ற அடிப்படை விடயங்கள் பல வலியுறுத்தப்பட்டுள்ளன. அரசாங்கமொன்று இந்த அடிப்படை உரிமைகளை மீறுகின்றவேளைகளில் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்காக குரலெழுப்புகின்ற மற்றும் பெண்களுக்காக குரல்கொடுப்பதற்கான விசேட தொழில்சார் உரிமை சட்டத்தரணிகள் என்றவகையில் எமக்கு இருக்கின்றது. மக்களின் பிரச்சினைகளுக்காக மிகுந்த கூருணர்வு கொண்டதாக எம்முடன் கைகோர்த்து செயற்படுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

எமது பிள்ளைகளின் உளச் சுகாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் வீழ்ச்சியடைவதை இனிமேலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
-சட்டத்தரணி திஸ்னி சமந்திகா லியனஆரச்சி

இலங்கையின் சனத்தொகையில் 52% பெண்களாவர். கடந்த ஆண்டில் ஊழல்மிக்க ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் பிரதான பங்கினை ஆற்றியவர்கள் பெண்களே. நிலவுகின்ற ஊழல்மிக்க முறைமை பெண்கள்மீது கொடுக்கின்ற அழுத்தத்தை மாற்றியமைப்பதற்காக அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள்மீது நிந்திக்கத்தக்க நீர்த்தாரைப் பிரயோகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டுகின்ற பாரிய வகிபாகத்தை ஈடேற்றுகின்ற பெண்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சர்வதேசரீதியாகவும் தாக்கமேற்படுத்துகின்றது. தாம் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் சம்பந்தமாக பெண்கள் வீதியில் இறங்கிய ஒரு தருணமே அது. எனினும் சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பு சம்பந்தமாக உச்சஅளவிலான சட்டங்களும் விதிகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை பெண்கள் என்றவகையிலும் சட்டத்தரணிகள் என்றவகையிலும் கடுமையாக கண்டிக்கிறோம். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமையொன்றைப் பாவிக்கையில் அநாகரிகமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பாரிய கவனம் ஈர்க்கப்படுகின்றது.

எங்கள் பிள்ளைகளின் உளச் சுகாதாரம், கல்வி மற்றும் உடல்நலம் சீரழிவதை இனிமேலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதற்காக குரல் எழுப்புகின்ற பெண்களுக்கு செவிமடுக்கால் அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு எதிராக அனைவரும் அணிதிரளவேண்டும். பெண்கள் மீது மாத்திரமல்ல வேறு அனைத்துவிதமான அமைதிவழி ஆர்ப்பாட்டங்கள்மீதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது அரசாங்கத்தின் ஒரே பதிலடியாக அமைந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் சட்டத்தரணிகள் என்றவகையில் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்கால நடவடிக்கை எடுப்போம்.

“உங்களின் அடக்குமுறை எம்மை பலமடையச் செய்கிறது…”
-சட்டத்தரணி சமிலா குலசேகர-

இலங்கையில் ஒட்டுமொத்த பெண்களுக்காக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்மீது நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக ஒட்டுமொத்த பெண்களையும் பிரதிநிதித்துவம்செய்து நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை நடாத்துகிறோம். பெண்கள் மட்டற்ற பொறுமைக்குணம் பொருந்தியவர்கள். எனினும் அந்த பொறுமை எல்லைமீறிவிட்டால் எவ்விதத்திலும் கட்டுப்படுத்த இயலாதென்பதை ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். மகப்பேற்றின்போது பெண்கள் உணர்கின்ற பிரசவ வேதனையை தாங்கிக்கொள்ள முடியுமானால் நீர்த்தாரைப் பிரயோகத்தை தாங்கிக்கொள்வது பெரிய விடயமல்ல. தற்போது அனுபவிக்க நேர்ந்துள்ள மட்டற்ற அழுத்தம் காரணமாகவே இந்த சர்வாதிகார வெறிக்கு எதிராக பெண்கள் விதியில் இறங்கினார்கள். பிள்ளைக்கு ஒருவேளை உணவினைக் கொடுக்கும்போது தாய் எந்தளவு நிர்க்கதிநிலையடைகிறாள் என்பதை பெண்கள் அறிவார்கள். அத்தியாவசியமான உடை, மருந்துகள், கல்விக்கான புத்தகங்களை வாங்கிக்கொடுக்க முடியாத வேளைகளில் மட்டற்றவகையில் நிர்க்கதியடைகிறாள். நாடு பொருளாதாரரீதியாக வீழ்த்தப்பட்டமையால் பெண்கள் தற்போது பரம ஏழ்மை நிலையை அடைந்துள்ளார்கள். இற்றைவரை ஆட்சியதிகாரத்தை வகித்த அரசாங்கங்களில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் எமது குரல்களுக்கு செவிசாய்க்கவில்லை: தமது வேலைகளைச் செய்துகொண்டார்கள் மாத்திரமே.

நாட்டில் 52% ஆக அமைகின்ற பெண்களுக்காக அவர்கள் ஒருபோதுமே செயலாற்றவில்லை. எனவே எமக்காக நாங்கள் நிற்கவேண்டிய இடத்திற்கே இன்று நாங்கள் வந்திருக்கிறோம். அதோ அதற்காகத்தான் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம். ஒரு துண்டு கல்லைக்கூட கையில் ஏந்தாமல் நாட்டின் ஒட்டுமொத்த பிரசைகளுக்காக குரலெழுப்பிய பெண்களுக்கு தலைசாய்த்து வணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதல்களுக்காக பெண் பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். பெண்ணின் வயிற்றில் சுமந்து பிறந்த பொலீஸ் உத்தியோகத்தர்கள் தான் இருந்தார்கள். நாங்கள் உணர்கின்ற வேதனைகளை இந்த உத்தியோகத்தர்கள் உணரமாட்டார்களா? ஆட்சியாளர்களின் அவசியப்பாடுகளுக்கு தலைவணங்க பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டுளார்கள்.
தற்போது இருப்பவர் பதில்கடமையாற்றுகின்ற பொலீஸ் மா அதிபராவார். அந்த பதவியையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆட்சியாளர்களின் அவசியப்பாட்டுக்கு அமைவாக பொலீஸாரை நெறிப்படுத்த அவர் தயாராகி வருகிறார். எனினும் நாங்கள் இந்த ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஒரு விடயத்தை உறுதியாக கூறுகிறோம். ” உங்களின் அடக்குமுறை எங்களை பலமடைச்செய்கிறது.” பெண்களை இதைவிட ஊக்கத்துடனும் வலிமையுடனும் முன்நோக்கி வருவார்கள் என்பதை வலியுறுத்துகிறோம். நீர்த்தாரை தாக்குதலுக்கு அஞ்சி புறமுதுகு காட்டி ஓடுபவர்களல்ல பெண்கள். நாங்கள் ஊழலற்ற இயக்கமொன்றின் முன்னோடிகள் என்பதை பெருமிதத்துடன் கூறுகிறோம். பண்புடைய அரசியல் இயக்கமொன்றின் முன்னோடிகளே நாங்கள். சனநாயகரீதியாக பண்பானவர்களாக எதிர்ப்பினை வெளிப்படுத்த நாங்கள் தயார். வன்முறைசார்ந்த தாக்குதல்களுக்கு நாங்கள் சனநாயகரீதியாக மாத்திரமே பதிலளிக்கிறோம். இங்கே முன்வருபவர்கள் சாதகமான எதிர்காலமொன்றின் நல்ல கனவினைக் காண்பவர்களே. சர்வாதிகார வெறியைத் தோற்கடித்திட நாமனைவரும் அணிதிரள்கிறோம் எனும் செய்தியை அரசாங்கத்திற்கு கொடுக்கிறோம்.

“தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் வெகுவிரைவில் இந்த தாக்குதலுக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்வோம்.”
-சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி-

எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்ற ஒருவர் என்றவகையில் பெற்ற அனுபவத்தை முதன்முதலில் கூறவேண்டும். நாமனைவரும் அமைதியாக ஒன்றுகூடி போராட்டக் கோஷங்களை எழுப்பி மக்களுக்குப் போன்றே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்நாட்டுப் பெண்களின் கவலைக்கிடமான நிலைமை பற்றி கவனத்திற்கு கொண்டுவந்தோம். அமைதிவழி எதிர்ப்பின் முடிவினைக் குறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சகோதரி ஹரினி, சமன்மலீ சகோதரி மற்றும் சரோஜா போல்ராஜ் சகோதரியை முதன்மையாகக்கொண்ட பெண்கள் உரைநிகழ்த்த தயாராகியதும் நீர்த்தாரை தாக்குதலைத் தொடங்கினார்கள். மிகவும் பிரயத்தனப்பட்டே தாக்குதலின் மத்தியில் உடைகளை பாதுகாத்துக் கொண்டார்கள். பெண்கள் நாட்டின் தலைமுறையினரை முன்னெடுத்துச் செல்பவர்கள். அதைப்போலவே நாட்டின் உற்பத்திச் செயற்பாங்கில் மிகப்பெரிய பங்களிப்பினைச் செய்பவர்கள் பெண்களே. நாமனைவரும் பெண்கள் என்றவகையில் அழுத்தத்திற்கு இலக்காகியவர்கள் என்றவகையிலேயே எதிர்ப்பில் பங்கேற்றோம். குடும்பத்தைப் பராமரித்து பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவது தாங்கிக்கொள்ளமுடியாத அழுத்தமாக மாறியுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில், ஆடைக் கைத்தொழில் மற்றும் வெளிநாட்டுத் தொழில்களில் பெண்கள் முனைப்பாக பாரிய பங்களிப்பினை நல்கிவருகிறார்கள். பாராளுமன்றத்தில் 5.3% ஆக அமைந்த பெண் பிரதிநிதித்துவத்தினால் இந்நாட்டின் பெண்களின் குரல் அவசியமான அளவில் மேலோங்குவதில்லை. 1948 இன் பின்னர் சமர்ப்பித்துள்ள வரவுசெலவுகளில் மரபார்ந்தவகையிலும் பழங்குடிக்கொள்கை அடிப்படையிலுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு மிகவும் சிறிய பங்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு நடைபெற்றவேளையில் நாட்டின் உற்பத்திச் செயற்பாங்கினை நலிவடையச் செய்விக்கவோ பொதுமக்களின் போக்குவரத்திற்கு சிறிதளவிலேனும் இடையூறு விளைவிக்கவோ நாங்கள் செயற்படவில்லை. பாராளுமன்ற அலுவல்களுக்கு தடையேற்படுத்தும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் எங்களுக்கு இருக்கவில்லை. எனினும் பதிற்கடமையாற்றும் பொலீஸ் மா அதிபரின் நடவடிக்கை மிகவும் நித்திக்கத்தக்கது. அனைத்துப் பிரசைகளினதும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இருந்தாலும் இந்த அரசாங்கம் அதற்கு இடமளிப்பதில்லை. அதனால்த்தான் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அரச கொள்கைகளில் அடிப்படை சித்தாந்தமென்றவகையில் குடும்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அந்த முக்கியமான அலகினை மறந்து செயலாற்றிய விதம், சிறுவர் மற்றும் பெண்கள் மீது காட்டுகின்ற மனோபாவம் சர்வதேசரீதியாகவும் தெளிவாகியது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு மாத்திரம் தேசிய மக்கள் சக்தி நின்றுவிடப்போவதில்லை. தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் வெகுவிரைவில் இந்த தாக்குதலக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்யும். அதைப்போலவே அரசியலமைப்பு மற்றும் பொலீஸ் கட்டளைச்சட்டம் சம்பந்தமாக அடிப்படை வழிகாட்டலை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம். சட்டத்தை அமுலாக்குபவர்களுக்கும் அதன் மூலமாக சட்டத்தை விளக்கிக்கூறவும் எதிர்பார்க்கிறோம். நேற்று நடாத்திய குற்றம்சார்ந்த நீர்த்தாரைப் பிரயோகம் மூலமாக இலங்கை இனிமேலும் நீதியை மதிக்கின்ற தேசமல்ல என்பதாகும். இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க தகைமை கொண்டதல்ல. இந்த நாட்டு மக்களின் அரசாங்கமொன்றை நிறுவி பெண்களின் பலத்திற்கு முறையான மதிப்பளித்தலை வழங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

“அரசாங்கத்தில் எல்லையற்ற அழுத்தத்திற்கு எதிராக எதிர்ப்பினைக் காட்டினோம்…”
-சட்டத்தரணி நிமலா சிறிவர்தன-

கழிந்த 2023 ஆம் ஆண்டில் மகளிர், சிறுவர் மற்றும் சமுர்த்தி பிரிவுக்கு 152 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்காக 75 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எற்பாடு 50% மேலாக வெட்டிவிடப்பட்டுள்ளது. முன்னாள் சனாதிபதிமார்கள் நால்வர் மற்றும் சனாதிபதி பாரியார் ஒருவரைப் பராமரிப்பதற்காக 2023 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டிருந்த 84 மில்லியன் ரூபா அடுத்த ஆண்டுக்காக 110 மில்லியன் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சனாதிபதிகளுக்கும் தப்பியோடிய சனாதிபதிக்கும் ஒதுக்கப்படுகின்ற நிதி அதிகரிக்கப்படுகின்றவேளையில் இந்நாட்டின் உயிர்நாடியான சிறுவர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி 50% ஆல் வெட்டப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வி சம்பந்தமாக நிலவுகின்ற அழுத்தம் அதிகமாக பெண்களாலேயே உணரப்படுகின்றது. நிலவிய ஏற்பாடுகளை வெட்டிவிட்டதன் மூலமாக பெண்கள் மீதான அழுத்தம் மேலும் உயர்த்தப்படுகின்றது. இதற்கு எதிராக நிலவுகின்ற அரசாங்கத்தை வலியுறுத்துவதற்கான உரிமை எமக்கு இருக்கின்றது. அரசாங்கம் முன்னெடுத்துவருகின்ற தவறான வெட்டிவிடல்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதையே நாங்கள் மேற்கொண்டோம்.