Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“மின்சார பில்லை 37% ஆல் குறைக்காமல் தொடர்ந்தும் கேம் அடிக்க தயாராக வேண்டாமென அமைச்சரை வலியுறுத்துகிறோம்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க-

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.27)

மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் செய்கையில் அரசாங்கம் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் செயலாற்ற தயாராகிய வேளையில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்களும் மேலும் சில அமைப்புகளும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் விடயங்களை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டோம். மின்சார சபையின் உத்தியோகத்தர்கள் ஏறக்குறை 3.34% ஆல் பில்லைக் குறைக்க முடியுமென முதலில் கூறினார்கள். 2023 ஒக்டோபர் மாதத்தில் சட்டவிரோதமாக 18% ஆல் மின்சார பில் அதிகரிக்கப்பட்டது. வருடத்திற்கு இருதடவைகள் திருத்தப்பட வேண்டியபோதிலும் எதிர்காலத்திலும் தாக்கமேற்படுத்தக்கூடியவகையில் மூன்று தடவைகள் திருத்தம் செய்யப்பட்டது. ஒக்டோபர் மாதத்தில் நிலவிய விலைமட்டங்களுக்கே மீண்டும் கொண்டுவருவதாக மின்சக்தி அமைச்சர் தற்போது கூறுகிறார். அவர்கள் கூறுகின்ற விடயங்களின்படி மின்சார சபையின் மொத்த வருமானம் 710 பில்லியன் ரூபாவாக அமையுமிடத்து மொத்தச் செலவு 688 பில்லியன் ரூபாவாகும். அனைத்துச் செலவுகளையம் தீர்த்தபின்னர் 23 பில்லியன் ரூபா மிகைநிலை காணப்படுவதாகவும் அதற்கமைவாக 3.34% ஆல் பில்லைக் குறைக்கமுடியுமெனவும் கூறினார்கள். எனினும் நாங்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் விடயங்களை எடுத்துரைத்து மின்சாரக் கொள்ளளவின் கிரயம் 50 பில்லியனில் இருந்து 133 பில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் விநியோக கிரயம் ஏறக்குறைய 150%ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டினோம். வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் வட்டியாக 53 பில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டுமென சபை கூறியுள்ளது. ஆனால் நிகழ்கால வட்டியாக 45 பில்லியன் மாத்திரமே செலுத்தப்பட வேண்டும்.

பாவனையாளர்களை சுரண்டி தீத்தொழில் புரிகின்றவர்களின் கீழ்த்தரமான நோக்கங்களுக்காக அமைச்சரும் உத்தியோதகத்தர்களும் செயலாற்றி வருகிறார்கள் என்பதை நாங்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டினோம். 2023 மின்சார சபையின் இலாபம் 48 பில்லியன் என அவர்கள் கூறினார்கள். மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிதாக சமர்ப்பித்துள்ள தரவுகளின்படி செலவினை 93 பில்லியனால் குறைக்க முடியுமென கூறியுள்ளது. கணக்கீட்டுக் கொள்கைகளின் பிரகாரம் மின்சார சபையின் விலைகள் இலாபமீட்டுகின்ற நோக்கத்தின் அடிப்படையிலன்றி செலவுகளை தீர்த்துக்கொள்கின்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படல் வேண்டும். ஆசியாவின் ஏனைய நாடுகளைவிட எமது நாட்டின் மின்சார பில் 50% அதிகமானதாகும். அதனாலேயே கைத்தொழில்கள் சீரழிந்துள்ளன. நாட்டின் அபிவிருத்தியில் நேரடியாகவே மின்சார பில் தாக்கமேற்படுத்துவதாலேயே மின்சார பில்லைக் குறைத்தல் சம்பந்தமாக நாங்கள் விடயங்களை முன்வைக்கிறோம். இப்போது 93 பில்லியனால் செலவினைக் குறைக்க முடியுமென கூறுகின்ற அமைச்சரும் உத்தியோகத்தர்களும் ஏன் ஆரம்பத் தருணத்தில் அதனை மறைத்து வைத்தார்கள்? 2023 இல் மின்சார சபையின் இலாபம் 62 பில்லியன் என இன்றளவில் வெளிப்பட்டுள்ளது. மேலும் 14 பில்லியனால் இலாபம் அதிகரித்துள்ளது. வட்டிக்காக அதிகமாக உள்ளடக்கப்பட்டிருந்த 08 பில்லியன் இலாபத்துடன் சேர்ந்து 70 பில்லியன் ரூபா மேலதிக இலாபத்திற்கு மின்சார பிறப்பாக்க மற்றும் விநியோகச் செலவு என்றவகையில் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்த 140 பில்லியன் இருக்கின்றது. இதன்படி மின்சார சபையின் 210 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட மேலதிக தொகை கணக்குகளுக்கிடையில் மறைத்துவைக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. மொத்தச் செலவு 680 பில்லியன் என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அந்த செலவில் 210 பில்லியன் குறைந்ததும் 470 பில்லியன் வரை செலவுகள் குறைவடைகின்றன. அதன்படி மின்சார பில்லை 37%ஆல் குறைக்கமுடியும்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவானது கஞ்சன விஜேசேகர அமைச்சருடையதன்று: அது நாட்டு மக்களின் ஆணைக்குழுவென்பதை நாங்கள் அந்த உத்தியோகத்தர்களிடம் கூறினோம். அமைச்சரின் மன ஆசைகளை நிறைவுசெய்தல், உயரதிகாரிகளின் தீத்தொழிலைப் பாதுகாத்தல் ஆணைக்குழுவின் செயற்பொறுப்பு அல்லவென்பதை தெளிவுபடுத்திக் கூறினோம். இந்த விலையைக் குறைக்காமல் தொடர்ந்தும் கேம் அடிக்க தயாராக வேண்டாமென அமைச்சரை வலியுறுத்துகிறோம். நாங்கள் முன்வைத்த விடயங்களை செவிமடுத்தமைக்காக நாங்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணக்குழுவிற்கு நன்றி கூறிக்கொள்கிறோம். இதற்கு முன்னர் நடந்துகொண்ட விதத்திற்கிணங்க நடந்துகொள்ளாமல் மக்களிடமிருந்து கருத்துக்களைப்பெற்று, மீண்டும் மின்சார சபையிடமிருந்து தரவுகளைப் பெற்று செயலாற்றியமைக்காக நன்றி கூறுகிறோம். மீண்டும் கூடி மின்சார பில் திருத்தம் சம்பந்தமாக மக்களின் பக்கத்தில் நின்று தீர்மானத்தை வழங்குமாறு ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம். மின்சாரசபையின் செலவுகளை 210 பில்லியனால் குறைக்க முடியுனெ நாங்கள் சுட்டிக்காட்டியது குறைந்தபட்ச மட்டமாகும். தொடர்ந்தும் மக்களை துன்புறுத்தி சுரண்டுகின்ற தீத்தொழிலுக்கு துணைபோகவேண்டமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம். அதைப்போலவே அமைச்சரும் சபையின் உயரதிகாரிகளும் தான்தோன்றித்தனமாக மறைக்க முயற்சிசெய்த செலவுகள் அம்பலமாகி உள்ளதென்பதையும் வலியுறுத்துகிறோம். கடந்த 15 ஆந் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் வரலாற்றில் முதல்த்தடவையாக நாங்கள் விடயங்களை முன்வைத்த பின்னர் அது பற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளது. மீண்டும் அமைச்சர் கஞ்சனவின் பிடிக்கு கட்டுப்படாமல் உண்மையாகவே 37%ஆல் குறைக்க இயலுமான மின்சார பில் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்பினை தட்டிக்கழிக்க வேண்டாமென வலியுறுத்துகிறோம்.

“மக்கள் சம்பாதிப்பது லயிற் பில் கட்டுவதற்காக மாத்திரமல்ல என்பதை அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ-

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த நாட்டுப் பிரஜைகளினதும் பாவனையாளர்களினதும் சார்பாக நியாயத்தை ஈடேற்றுவதற்காகவே தாபிக்கப்பட்டுள்ளது. 2002 இல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்டு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தாபிக்கப்பட்டுள்ளது மின்சாரக் கட்டணத் திருத்தத்தின்போது பொதுமக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதற்காகவேயாகும். மின்சாரசபையின் நிருவாகம் இவ்வாணைக்குழுவிற்கு சமர்ப்பித்திருந்த 3.34% மின்சார பில்லைக் குறைத்தலை அவ்வண்ணமே ஆணைக்குழுவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளமைக்கான காரணம் தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்களும் ஏனைய தரப்பினர்களும் முன்வைத்த விடயங்களாகும். மின்சார சபை சட்டத்தின் 30 வது பிரிவில் மின் பிறப்பாக்கத்தின்போதும் விநியோகத்தின்போதும் உறப்படுகின்ற நியாயமான செலவினை அறவிட்டுக்கொள்வதேயன்றி அனைத்துச் செலவுகளையும் அறவிட்டுக்கொள்வதல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரியதர்ஷன தர்மவர்தன ஊடகக் கலந்துரையாடலில் வெளியிட்ட தகவல்களை நான் உங்களிடம் முன்வைக்கிறேன். கைத்தொழில் பிரிவின் நடுத்தர அளவிலான 1100 நிறுவனங்களும் சிறிய அளவிலான 6900 நிறுவனங்களும் நுண் அளவிலான 254,000 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. உள்நாட்டைப் போன்றே வெளிநாட்டுச் சந்தைக்கு பண்டங்களை உற்பத்தி செய்கின்ற இலட்சக்கணக்கான கைத்தொழில்கள் மூடப்பட்டுள்ளன. மறுபக்கத்தில் பராட்டே சட்டத்தின்படி உயர்மட்ட வைத்தியசாலைகள்கூட வங்கிகளுக்கு சொந்தமாகிவிட்டன. மறுபுறத்தில் மின்சார பில்லைச் செலுத்த முடியாமல் போனமையால் ஏறக்குறைய 10 இலட்சம் சாதாரண பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலைமையில் மின்சார சபையின் நிருவாகத்திற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் நியாயமான செலவுகள் பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டிய பொறுப்பு நிலவுகின்றது. மின்சாரத்தை வழங்குபவர் நியாயமாக செயலாற்றாவிட்டால் மக்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவது ஆணைக்குழுவின் செயற்பொறுப்பாகும். கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் 18% ஆல் மின்சார பில்லை அதிகரிப்பதற்காக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய புள்ளிவிபரங்கள் வழுக்கள் நிறைந்தவையாகும். கடந்த வருடத்தின் செத்தெம்பர் மாதத்தில் மின்சார சபையின் நட்டம் 51 பில்லியன் என அவர்கள் கூறினார்கள். ஒரு மாதத்திற்குள் நட்டத்தை 18 பில்லியன்வரை குறைத்துக்கொண்டதாக அவர்கள் கூறினார்கள். மின்சாரசபை முன்வைக்கின்ற தகவல்களை அவ்வண்ணமே ஏற்றுக்கொள்வது நியாயமானதல்ல. இத்தடவையும் எதிர்பார்த்த இலாபம் 23 பில்லியன் என தொடக்கத்தில் கூறினாலும் தொழிற்சங்கங்கள் அறிவித்த பின்னர் அதனை 94 பில்லியன் வரை மாற்றியமைத்துள்ளார்கள்.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் மின்சார பில்லை அதிகரிக்கையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு 13 நிபந்தனைகளை முன்வைத்தது. 2023 டிசம்பர் தொடக்கம் 2024 மார்ச் வரையான காலப்பகுதிக்குள் இந்த நிபந்தனைகள் ஈடேற்றப்படவேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மின்சார பில்லை அதிகரித்தலுடன் தொடர்புடைய ஒரு நிபந்தனையேனும் இதுவரை ஈடேற்றப்படவில்லை. அமைச்சரின் பிரதிபிம்பத்தை பெரிதாக்கிக் காட்டவும் அரசாங்கத்தின் அவசியப்பாட்டுக்கு அமைவாகவும் சபை செயற்பட்டு வருகின்றமை நன்றாகவே தெளிவாகின்றது. எமக்கு கிடைக்கின்ற தகவல்களின்படி குறைந்தபட்சம் 37%ஆல் மின்சார பில்லைக் குறைப்பதற்கான இயலுமை இன்றளவில் நிலவுகின்றது. மக்களும், கைத்தொழிலதிபர்களும் சம்பாதிப்பது லயிற் பில் செலுத்துவதற்காக மாத்திரமல்ல என்பதை ஜனாதிபதியை உள்ளிட்ட அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும். மின்சார விலையக் குறைப்பதன் மூலமாக அரசாங்கத்திற்கு பாரிய நன்மைகள் கிட்டும். குறைக்கக்கூடிய உச்ச அளவில் மின்சார பில்லைக் குறைக்குமாறே நாங்கள் வலியுறுத்துகிறோம்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள்

கேள்வி:- உங்களின் ஆட்சியின்கீழ் கூறுகின்ற இதேமாதிரி மின்சார பில்லைக் குறைத்த நிவாரணம் வழங்குவீர்களா?

பதில் :- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் எமது பொருளாதாரக் கொள்கையின் இயக்க விசையாக மாற்றப்படுவார்கள். மறுபுறத்தில் பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலைகளை இயலுமானவரை குறைத்து மக்களின் கொள்வனவு ஆற்றலை அதிகரிப்போம். இந்த ஒட்டுமொத்த பொருளாதார செயற்பாங்கிற்குள் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக்கூடிய துறைகளில் நிவாரணங்களை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதுவரை மேற்கொண்ட பொருளாதாரப் பயணத்தை இனிமேலும் தொடரமுடியாது. ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அந்த தவறான பாதையிலேயே தொடர்ந்தும் வேகமாக பயணிக்க முயற்சி செய்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் கைத்தொழிலதிபர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொருளாதாரத்தின் பங்காளிகளாக செயலாற்றுவதற்கான இடவசதிகள் அனைத்தையும் வழங்குவோம். மின்சார சபையே சமர்ப்பித்த கணக்குகளில் நிலவுகின்ற மோசடியான மற்றும் தவறான செயற்பாடுகளின் தரவுகளைத்தான் நாங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தோம். 37 வீதத்திற்கு கிட்டிய அளவினால் மின்சார பில்லைக் குறைத்து சபைக்கு நட்டமேற்படாதவகையில் பேணிவர முடியுமென்பதை அதற்கிணங்கவே நாங்கள் தெளிவுபடுத்தினோம். பூநகரியில் சூரிய சக்தி வலு பிறப்பாக்கத்தின் மூலமாக ஓர் அலகிளை ரூபா 52 இற்கே கொள்வனவுசெய்ய தயாராகி வருகிறார்கள். எனினும் நிலக்கரியால் உற்பத்தி செய்யப்படுகின்ற ஓர் அலகு மின்சாரத்திற்காக ரூபா 22 மாத்திரமே செலவாகின்றது. இந்த சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் மூலமாக நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தயாரில்லை என்பது அதன்மூலமாகவே தெளிவாகின்றது.

கேள்வி:- தற்போது இருக்கின்ற உத்தியோகத்தர்கள்தான் உங்களுடைய அரசாங்கம் வந்தாலும் இருப்பார்கள். ஒரு தடவை அமைச்சருக்கும் தவறாக தகவல்களைக் கொடுத்திருந்தார்கள். அது சம்பந்தமான சிக்கலை எவ்வாறு தீர்த்துக்கொள்ளப் போகிறீர்கள்?

பதில் :- மின்சக்தி அமைச்சருக்கு வழங்கிய தகவல்களில் கொள்திறன் கிரயம் அதிகரித்தமை பற்றிக் கேள்வியெழுப்பக் கூடாதா? விநியோக செலவுகள் அதிகரித்த விதம் பற்றிக் கேள்வியெழுப்பக் கூடாதா? கடன்வட்டிவீதம் குறைவடைந்திருக்கையிலும் வட்டி செலுத்துவதற்காக பெருமளவிலான பணத்தொகை செலவாகின்றவிதம் பற்றிக் கேள்வியெழுப்பக் கூடாதா? ஊழல்நிறைந்த உத்தியோகத்தர்கள் அமைச்சருடன் கூட்டுச்சேர்ந்து திருட்டில் ஈடுபட்டால் நீங்கள் கூறுகின்ற பிரச்சினை உருவாகும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் அவ்வாறு இடம்பெற மாட்டாதென்பதை அனைவரும் அறிவார்கள்.

கேள்வி:- சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவரத் தயாராகி இருக்கிறார்கள். அது சம்பந்தமாக உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் :- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவது ஏனோதானோ என்றல்ல. தெளிவாக அரசியலமைப்புச்சார்ந்த விடயமொன்றுக்காகவே. ஒன்லயின் சேஃப்டி பில் தொடர்பாக சட்டத்துறை தலைமை அதிபதியாலேயே சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகையில் உள்ளடக்கப்படாமை காரணமாகவே. இது மிகவும் தவறான ஒரு முன்னுதாரணமாகும். சமர்ப்பிக்கப்படுகின்ற சட்டமூலம் மீதான விவாதம் நடாத்தப்பட்டு சம்பந்தப்பட்ட திருத்தங்கள் பிரிவுவாரியாக அதே தருணத்தில் ஆராய்ந்து பார்ப்பதற்கான காலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைப்பதில்லை. சபாநாயகர் தனது பணியாட்டொகுதியுடன் இணைந்து அந்த பிரிவுகளைச் சேர்த்துள்ளதாக நம்பப்படுகின்றது. எனினும் இங்கு பாராளுமன்ற மரபுகள், நீதித்துறையின் உன்னதநிலை மற்றும் நம்பிக்கை மீறப்படுகின்றவகையில் சபாநாயகர் நடந்துள்ளமையே நேர்ந்துள்ளது. அதனால் தேசிய மக்கள் சக்தி சபநாயகருக்கு எதிராக செயலாற்றும்.

கேள்வி:- புதிய பொலீஸ் மா அதிபர் நியமனம் பற்றிய உங்களின் அபிப்பிராயமென்ன?

பதில் :- பொலீஸ் மா அதிபர் நியமனம் பெரிதும் சிக்கல் நிறைந்ததாகும். ஒருசில விடயங்கள் சரச்சைக்குரியனவாகும். 2023.12.14 ஆந் திகதி S.C.S.R./2011 இலக்கமுடைய வழக்கு சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர் குழாத்தின் தீர்ப்பு மூலமாக நியமிக்கப்பட்ட இந்த பொலீஸ் மா அதிபருக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் பற்றிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு சித்திரவதை கொடுத்தமை தொடர்பாக சர்வதேச சமவாயத்தை மீறியதாக, நாட்டின் அரசியலமைப்பினை மீறியதாக உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக இன்றளவிலும் மனித உரிமைகள் மீறப்பட்டமை சம்பந்தமாக பொலீஸ் மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சில வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. உயிர்த்தஞாயிறு தாக்குதலைத் தடுக்காமை பற்றி பல தரப்பினர் அவருக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்கள்.

அதைப்போலவே பொலீஸ் மா அதிபர் நியமனத்தின்போது அரசியமைப்புப் பேரவையின் அங்கீகாரம் பெறுதல் பற்றிய மற்றுமொரு பிரச்சினை நிலவுகின்றது. அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரத்திற்கு கட்டுப்பட்டதாகவே பொலீஸ் மா அதிபரை நியமிப்பதற்கான அதிகாரம் சனாதிபதிக்கு கிடைகின்றது. இத்தகைய நியமனங்களின்போது அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரம் பெறப்படவேண்டியது எவ்வாறு என்பது 41E (7 ) எனும் உறுப்புரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தீர்மானம் தொடர்பிலும் அரசியலமைப்புப் பேரவையின் ஏகோபித்த அங்கீகாரம் பெறப்பட முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அத்தகைய ஏகோபித்த தன்மை இங்கு கிடையாது. அடுத்ததாக ஏகோபித்த தன்மை இல்லாத சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் ஐவருக்கு குறையாத எண்ணிக்கையுடையோரால் அங்கீகரிக்கப்படல் வேண்டும். சபாநாயகரை உள்ளிடக்கியதாக அரசியலமைப்பு பேரவையில் ஒன்பதுபேர் இருக்கிறார்கள். ஏதேனும் விதத்தில் 4:4 என பிரிந்த தீர்ப்பு வந்தால் மாத்திரம் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கும். 41E (5) உறுப்புரையில் அது காட்டப்பட்டுள்ளது. எமக்கு கிடைத்த தகவல்களின்படி சார்பாக நால்வரே இருந்துள்ளார்கள். இருவர் எதிராகவும் இருவர் வாக்களிப்பதை தவிர்த்தும் இருந்துள்ளார்கள். அதன்படி இந்த பொலீஸ் மா அதிபர் அரசியலமைப்புப் பேரவையின் தத்துவங்கள் மீறப்பட்டே நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறான அனைத்து விடயங்களையும் கவனத்திற்கொண்டால் இந்த பொலீஸ் மா அதிபர் பல்வேறு சிக்கல்களை எஞ்சவைத்தே நியமிக்கப்பட்டுள்ளார். உள்நாட்டுரீதியாகவும் சர்வதேசரீதியாகவும் எமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டம் பற்றிய பல்வேறு சிக்கல்களை எஞ்சவைத்தே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.