Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“ஒருபுறத்தில் பாஸ்போர்ட் வரிசை நீண்டுகொண்டிருப்பதோடு மறுபுறத்தில் இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டவர்களைக்கூட அலைக்கழித்து வீசா வரிசை நீண்டுள்ளது.” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், விஜித ஹேரத்-

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 20224.09.09-)

Vijitha Herath Speaking At NPP Press Conference

தற்போது எமது அரசாங்கம் ஒரு பாஸ்போர்ட்கூட வழங்கமுடியாத நிலைமையை அடைந்துள்ளது. ஒருபுறத்தில் பாஸ்போர்ட் வரிசை நீண்டுகொண்டிருப்பதோடு மறுபுறத்தில் இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டவர்களைக்கூட அலைக்கழித்து வீசா வரிசை நீண்டுள்ளது. கடந்த காலத்தில் சாதாரண பாஸ்போர்ட் வழங்கலுக்குப் பதிலாக ‘இ – பாஸ்போர்ட்’ சேவையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் நிலவிய கொமிஸ்பெறல் தீத்தொழில் காரணமாக அனைத்துமே செயலிழந்தன. ரணில் விக்கிரமசிங்கவின் நண்பரொருவரான ஜித் வர்ணகுலசூரியவின் ஜஸ்ட் இன் டைம் கம்பெனிக்கு அது சம்பந்தமான டெண்டர் வழங்கப்பட்டிருந்தது. உடன்படிக்கையின்படி கடந்த ஜுன் மாதத்தில் இருந்து இ – பாஸ்போர்ட் சேவையை வழங்க கம்பெனி தவறியமையால் வரிசைகள் உருவாகின. நாட்டை வெறுத்து ஏறக்குறைய 3000 பேர்வரை நாளொன்றில் கடவுச்சீட்டு பெறவருகிறார்கள். எனினும் டெண்டர் தில்லுமுல்லுடன் “ஒன்லயின்” முறைக்கிணங்க பாஸ்போர்ட் வழங்க அரசாங்கம் தீர்மானித்தது. அதற்படி நாளொன்றில் 250 – 300 வரையான அளவே விநியோகிக்கப்படுகின்றது. நிலைமை அவ்வாறு இருக்கையில் ‘இ – பாஸ்போர்ட்’ வழங்குவதற்கான டெண்டரைப் பெற்றுக்கொண்ட கம்பெனிக்கு சாதாரண திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் வழங்குவதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான கடந்த வாரத்தில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் விதப்புரையின் பேரிலெனக்கூறி, பழைய முறையின்படியே பாஸ்போர்ட் வழங்க அனுமதி கோரப்பட்டிருந்தது. அந்த அமைச்சரவை பத்திரத்தில் 48 பக்கங்களைக் கொண்ட பாஸ்போர்ட் வழங்குவதல் பற்றியே குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் தொடக்கத்தில் 64 பக்கங்களை கொண்ட பாஸ்போர்ட்டே இருந்தது.

ஆரம்பத்தில் பாஸ்போர்ட் வழங்கிய கம்பெனி ஏழரை இலட்சம் பாஸ்போர்ட்டை துரிதமாக வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டார். ஆனால் முன்னர் பெற்றுக்கொண்ட கம்பெனிக்கு டெண்டர் வழங்கப்பட்டிருப்பின் தாமதம் ஏற்பட்டிருக்கமாட்டாது. எனினும் 64 பக்கங்களைக் கொண்ட பாஸ்போர்ட்டை 48 பக்கங்களாக குறைத்தல் பற்றி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஊடாக உலகின் 192 நாடுகளுக்கு உத்தியோகபூர்வ ரீதியாக அறிவித்தல் வழங்கப்படவேண்டும். அதற்கிணங்க அந்த நாடுகளின் அங்கீகாரத்தை பெற மேலும் இரண்டு மாதங்கள் வரை கழியும். அமைச்சரவை பத்திரத்திற்கிணங்க 48 பக்கங்களை கொண்ட பாஸ்போர்ட்டுக்காக 7.98 டொலர் செலவாவதாக குறிப்பிடப்படுகிறது. ரூபாவில் எடுத்துக்கொண்டால் ஒரு பக்கத்திற்கு 31.00 ரூபா செலவாகின்றது. ஆனால் முன்னர் இருந்த விலை மட்டங்களுக்கிணங்க ரூபா 5.99 மாத்திரமே செலவாகிறது. இந்த தில்லுமுல்லு காரணமாகவே ஆயிரக்கணக்கில் வரிசையில் அலைந்து திரிகிறார்கள். இன்று இந்த நாட்டிலே இருக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள அதேவேளையில் நாட்டை விட்டு வெளியேற இடமளிக்காமல் சிறைப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள். இந்த நிலைமையை சீக்கிரமாக மாற்றியமைத்து இதுவரை சாதாரண கடவுச்சீட்டு வழங்கிய விதத்திலேயே அவற்றை வழங்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். அதன்படி 192 நாடுகளிடமிருந்து புதிதாக அங்கீகாரம் பெறப்படவேண்டியதில்லை. அமைச்சர்களின் ஜனாதிபதிமார்களின் நட்புக்காக சூறையாட இடமளிப்பதன் மூலமாக இலங்கைக்கு வரவிருக்கின்ற இலங்கையர்களுக்கு வாய்ப்புக்கிடைக்க மாட்டாது. குறிப்பாக இந்த தோ்தல் காலத்தில் கடவுச்சீட்டு கலாவதியாவதால் இலங்கைக்கு வரமுடியாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பழைய வெப்தளத்தை திறந்து அவசியமான வசதிகளை வழங்காதிருக்கிறார்கள். இந்த நிலைமையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம்.

அதைப்போலவே தோ்தல் காலத்தில் மக்களை ஏமாற்ற பலவிதமான அரசியல் வாக்குறுதிகளை வழங்கியதோடு நகர்சார் மாடிவீடுகளில் இருக்கின்ற மக்களுக்கு உறுதிகளை வழங்குவதாக கூறினார்கள். எனினும் வழங்கப்பட்டுள்ள உறுதிகளில் சட்டபூர்வமாக இடம்பெறவேண்டிய உறுதி இலக்கம் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைப்போலவே உறுதியில் இரண்டு சாட்சிக்காரர்கள் கையொப்பம் இடவேண்டும். எனினும் இந்த உறுதிகளில் சாட்சிக்காரர்களைப் போன்று சான்றுப்படுத்தலும் மேற்கொள்ளப்படாத ஒரு கடதாசித் துண்டு வழங்கப்பட்டுள்ளது. உறுதியொன்று சட்டபூர்வமானதாக அமையவேண்டுமானால் உறுதி இலக்கம் கட்டாயமாக குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். மக்களின் பணத்தை விரயமாக்கி விழாக்களை நடாத்தி அந்த சுமையையும் மக்கள் மீது சுமத்தி முன்னெடுத்து வருகின்ற தில்லுமுல்லு வேலைகளையும் நிறுத்த வேண்டும். குறிப்பாக நகர்சார் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு கடந்த காலத்தில் வழங்கிய கடதாசித் துண்டை உறுதியெனக்கூறி வாக்குகளை அபகரிக்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியைக் கண்டு ஏமாந்துவிடவேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறான கூட்டங்களுடன் மாத்திரம் நின்று விடாமல் ரணில் விக்கிரமசிங்க மேடைகளில் கபடத்தனமான கதைகளையும் கூற பழகியுள்ளார். ஏனைய மேடைகளில் முட்டாள் தனமான கதைகளைக்கூறுகின்ற அதேவேளையில் ரணில் விக்கிரமசிங்க கபடத்தனமான கதைகளையும் கூறிவருகிறார். மாத்தறை மொரவக்க கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க அநுர திசாநாயக்கவின் கொள்கைப் பிரகடனத்தை ஒரே இரவில் வாசித்து முடித்ததாகக்கூறினார். இது அப்பட்டமான பொய்யாகும். தேசிய மக்கள் சக்தி சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகளை ஒழிப்பதாக அவர் கூறினார். இவ்வாறான ஒரு குறிப்பீடு எங்களுடைய கொள்கை வெளியீட்டில் எந்த பக்கத்தில் எந்த பிரிவில் இருக்கிறதென சுட்டிக்காட்டுமாறு சவால் விடுகிறேன். சுற்றியிருக்கின்ற துதிபாடுபவர்கள் கூறுகின்றவற்றை கேட்டு மேடைகளில் இவ்விதமான அப்பட்டமான பொய்களை கட்டவிழ்த்து விடவேண்டாம். ஒரு இரவு மாத்திரமல்ல ஒரு மாதமேனும் விழித்திருந்து மீண்டும் வாசிக்குமாறு சவால் விடுக்கிறேன். எமது கொள்கைப் பிரகடனத்தில் 151 வது பக்கத்தில் “சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையை விரிவுபடுத்துதலும் வினைத்திறனும்” என்ற தலைப்பின் கீழ் நாங்கள் “நிலவுகின்ற சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை இற்றைப்படுத்துதலும் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் பிரவேசித்தலும்” என்றே வலியுறுத்தியிருக்கிறோம்.

Vijitha Herath At NPP Press Coference

ரணில் நீங்கள் வாசித்தது எதனை? பார்க்காமலா சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகளை இல்லாதொழிப்பதாக கூறினீர்கள்? அல்லது வேண்டுமென்றே தவிர்த்துச் சென்றீர்களா? நாட்டில் பொறுப்புக்கூறவேண்டிய ஜனாதிபதி ஒருவர் என்ற வகையில் அறிந்திருந்தும் பொய் கூறவேண்டாம். நீங்கள் வெறுமனே ஒரு வேட்பாளர் மாத்திரமல்ல. நீங்கள் இப்போது இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை வகிக்கின்ற வேட்பாளர். மக்களை ஏமாற்ற வேண்டாம். சர்வதேச சமூகத்தை ஏமாற்ற வேண்டாம். நிலவுகின்ற வர்த்தக உடன்படிக்கைகளை நடப்பு நிலைமைக்கு இணங்க இற்றைப்படுத்துவது மாத்திரமன்றி புதிய வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பில் பக்கம் 84 இல் அது பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாளில் விளங்காவிட்டால் ஒரு வாரமேனும் கண்விழித்து ரணில் நீங்கள் இதனை மீண்டும் வாசியுங்கள். தோழர் அநுர திசாநாயக்கவை மன்னிப்பு கோருமாறு ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். ரணில் விக்கிரமசிங்க நீங்கள்தான் இப்போது மன்னிப்புக்கோர வேண்டும். இந்த கொள்கைப் பிரகடனத்தை கபடத்தனமான முறையில் மாற்றியமைத்து பொய்கூறுதல் சம்பந்தமாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். நாடு மாத்திரமல்ல சர்வதேச சமூகமும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக அவரையே நியமித்துக் கொண்டுள்ளது.

தோழர் அநுர வடக்கிற்கு சென்று மக்களிடம் மிகவும் தெளிவாக முழு நாடுமே ஒன்றுசோ்ந்து நாட்டை கட்டியெழுப்புகின்ற கொள்கையை வெற்றியீட்டச் செய்விக்க ஒன்று சேருமாறே கேட்டுக்கொண்டார். தெற்கில் உள்ள மக்கள் வெற்றிக்காக அணிதிரண்டுள்ள நேரத்தில் அந்த வாய்ப்பினை வடக்கிலுள்ள மக்கள் கைவிடவேண்டாம் என்றே அவர் வலியுறுத்தினார். தெற்கில் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மாத்திரம் போதாது. வடக்கு, கிழக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகிய அனைத்து இனங்களினதும் ஒத்துழைப்பு நாட்டை கட்டியெழுப்ப அவசியமெனவும் ஒற்றுமை நிறைந்த ஒரு நாட்டை கட்டியெழுப்ப ஒற்றுமை நிறைந்த அரசாங்கமொன்று அவசியமெனவும் வலியுறுத்தினார். எனினும் ரணில் வேண்டுமென்றே அதனை திரிபுபடுத்தி இனவாதக் கூற்றொன்றை வெளியிட்டுள்ளார். 1981 அபிவிருத்திச் சபை தோ்தலின்போது சிறில் மத்தியு, காமினி ஜயவிக்கிரம பெரேரா, காமினி திஸாநாயக்க ஆகியோர் காடையர்களை நெறிப்படுத்தி குருணாகலில் இருந்து அனுப்பிவைத்த காடையர்கள் வாக்குப்பெட்டிகளை கொள்ளையடித்து, அழித்து, தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகத்தை தீக்கிரையாக்கிய வரலாறுதான் இருக்கிறது. குருணாகலிலிருந்து புகையிரதத்தில் சென்று இந்துக்கல்லூரியில் தங்கியிருந்து இரவு 10.00 மணிக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தல் வழங்கியமை பற்றிய நேரடியான சான்றுகள் இன்னமும் இருக்கிறன. அன்று யாழ் நூலகத்திற்கு தீமூட்டி வாக்குகளை கொள்ளையடித்ததால் தான் யுத்தத்திற்கு வழிசமைக்கப்பட்டது. நாட்டை தீக்கிரையாக்குகின்ற இனவாதத்திற்கு வழிசமைத்தது 81 இல் மேற்கொண்ட இந்த நாசகார செயலாகும். அவ்வாறு நடந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆட்சியாளர்கள் இன்று அநுர தோழரின் உரையினை திரிபுபடுத்தி வேறு கூற்றுக்களை மேற்கொண்டு வருகிறார்கள். எங்களுடைய கொள்கை பிரகடனத்தை கருத்தோன்றிய வகையில் திரிபுபடுத்துதல் மற்றும் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கான கூற்றுக்களை மேற்கொள்ளல் சம்பந்தமாக ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக்கோர வேண்டும். நெறிமுறைசார்ந்த அரசியல் நடைமுறை இருக்குமாயின் அதனை நீங்கள் நாட்டுக்கு வெளிப்படுத்திக்காட்ட வேண்டும்.