(தேசிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு – 2024.03.04)
அரச வளங்களை விற்பனைசெய்து மிகப்பெரிய தேசிய அனர்த்தத்தை புரிய சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முதன்மையாகக்கொண்ட அரசாங்கம் முனைந்து செயலாற்றிவருகின்றது. பகிரங்க தொழில்முயற்சிகள் சம்பந்தமாக மாத்திரமன்றி வெளிநாட்டு முதலீடுகள் சம்பந்தமாகவும் நாங்கள் கடைப்பித்தது சாதகமான கொள்கைகளையல்ல என கடந்த வரவுசெலவினை சமர்ப்பித்து சனாதிபதி கூறினார். அவர் இங்கு “நாங்கள்” என்றே கூறுகிறார். சுதந்திர இலங்கையில் 76 வருடங்களில் 47 வருடங்களாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக மற்றும் சனாதிபதியாகவும் செயலாற்றியுள்ளார். அவரின்றி 30 வருடங்களே இருக்கின்றது. அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஐக்கிய தேசிய கட்சியில் 77 இல் இருந்து பிரதான தலைமைத்துவச் சபையிலும் செயலாற்றியுள்ளார். அவ்வாறு செயலாற்றிய அவர் பகிரங்கத் தொழில்முயற்சிகள் சம்பந்தமாக மாத்திரமன்றி வெளிநாட்டு முதலீடுகள் சம்பந்தமாகவும் சாதகமான செயற்பாடுகளைக் கடைப்பிடிக்கவில்லை எனக் கூறுகிறார். அவர் தொடர்புபட்ட 47 வருடங்களில் பகிரங்கத் தொழில்முயற்சிகளைப் போன்றே நாட்டின் வளங்களை நாசமாக்கி எந்தவிதமான அருவருப்பிமின்றி இவ்வாறான கூற்றுகளை வெளியிடுகிறார். தம்மால் புரியப்பட்ட குற்றங்களை மக்கள்மீது திணிக்காமல் தாமே ஏற்றுக்கொள்ளவேண்டுமென ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட கும்பலுக்கு நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம். இந்த ஆட்சியாளர்களில் மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் குற்றம்புரிந்தவர்களென நீதிமன்றம்கூட தீர்மானித்துள்ளது.
ஸ்ரீ லங்கன் விமானக் கம்பெனி, ரெலிகொம் நிறுவனம், கொழும்பு ஹில்டன் ஹோட்டல், வோட்டர்ஸ் எஜ் நிறுவனம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், மின்சார சபை, மில்கோ கம்பெனியை உள்ளிட்ட தேசிய கால்நடைவளங்கள் கம்பெனியின் நிறுவனங்களில் ஒருசில இலாபமீட்டிக் கொண்டிருக்கையில்கூட பொறுப்பின்றி சொச்சத்தொகைக்கு விற்றுத்தீர்க்க ரணில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். நாட்டில் புதிய மூர்க்கத்தனமான அரசியல் கலையொன்றினை அமுலாக்கி பொருளாதாரக் குற்றச்செயல்களைப் புரிந்து அதன் பாதகவிளைவுகளை அயோக்கியத்தனமாக மக்கள்மீது திணிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
எமது நாடு இன்றளவில் வெளிநாட்டுத் தனியார் நிதிநிறுவனங்களுக்கு அண்ணளவாக 30 பில்லியன் டொலர்கள் கடன்பட்டுள்ளது. கடன் மீளச்செலுத்துவதை இடைநிறுத்துதல் மற்றும் வட்டி சேர்தலுடன் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு செலுத்தவேண்டிய கடன் அளவு 30 பில்லியன் டொலர்வரை அதிகரித்துள்ளது. ஐ.எம்.எஃப். உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடும்போது 28.5 பில்லியன் டொலரே இருந்தது. இந்த 30 பில்லியன் டொலரில் 12.5 பில்லியன் டொலர்களை ரணில் பிரதமராக இருந்த 4 1/2 வருடங்களிலேயே பெற்றுக்கொண்டார். இந்த பொருளாதார குற்றச்செயலின் பிரதானமான பிரதிவாதிகள் அவர்களே. அவர்கள் தற்போது கடன்செலுத்த முடியாமையால் வளங்களை விற்பதாக மக்களிடம் கூறுகிறார்கள். இந்த நாட்டு மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் ராஜபக்ஷாக்களின் தோட்டத்தில் இருப்பவர்களெனில் அவ்வாறு கூறமுடியும். நாட்டின் சொத்துக்கள் ரணில் விக்கிரமசிங்கவினதோ அல்லது ராஜபக்ஷ கும்பலினதோ அல்ல. தம்மால் புரியப்பட்ட குற்றச்செயல்களின் தவறினை மக்கள் மீது திணிப்பதை நாங்கள் முற்றாகவே கண்டிக்கிறோம். கண்டனம் தெரிவிப்பது மாத்திரமல்ல இதற்கெதிராக தொழிற்சங்க மட்டத்திலும் பொதுமக்கள் என்றவகையிலும் எதிர்த்துநிற்க வேண்டும்.
அரச நிறுவனங்கள் அழிவினை நோக்கிப் பயணிப்பது காலங்கடந்துள்ளமையால் அல்ல. ரணில் விக்கிரமசிங்காக்கள், பண்டாரநாயக்கமார்கள், ராஜபக்ஷாக்கள், ஜே. ஆர். போன்றோர் அரசியல் அடிவருடிகளை இந்த நிறுவனங்களுக்கு நியமித்தமையாலேயே இந்த அழிவு ஏற்பட்டது. ஸ்ரீ லங்கன் விமானக் கம்பெனி நட்டமடைவது அங்கே பணியாற்றுகின்ற ஊழியர்களின் தவறு காரணமாகவல்ல. நிமல் சிறிபால விமான சேவைகள் அமைச்சராக இருக்கையில் ஜப்பான் கடனின் பேரில் அமுலாக்க முனைந்த கருத்திட்டமொன்றை முற்றாகவே அந்நாடு நிறுத்தியமைக்கான காரணம் அமைச்சரின் ஊழல் – மோசடி காரணமாகவே என்பது தெளிவான விடயமாகும். எனினும் திரிபுநிலையடைந்த குழுவொன்றினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். விமானமொன்றுக்குள் ஓர் எலி நுழைந்ததன் காரணமாக விமானம் தாமதித்தமையால் இந்த நிறுவனத்தை விற்பனைசெய்யவும் முடியாதென அந்த அமைச்சர் கடந்த தினமொன்றில் கூறினார். ஸ்ரீ லங்கன் விமானக் கம்பெனிக்கு விமானக் கொள்வனவின்போது மாத்திரமன்றி அவ்வாறான கொள்வனவு உடன்படிக்கைகளை இரத்துச் செய்கையிலும்கூட இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.
அடுத்தாக நாடு பிரவேசிப்பது டிஜிட்டல் பொருளாதாரத்திலாயின் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் மிகவும் முக்கியமானது. இலங்கையின் எதிர்காலப் பொருளாதாரத்தின் முதுகெலும்மபு ரெலிகொம் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை விற்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியின்போதும் மோசடி இடம்பெற்றதாக ஒரு கேள்விப்பத்திரதாரர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். பொருளாதார நிபுணர்கள் எனக் குறிப்பிட்டுக்கொள்கின்ற “கிளிகள்” குழுவொன்று வழங்கிய ஆலோசனையின் காரணமாக இந்த நாடு வங்குரோத்து அடைந்தது. அரசாங்கத்திற்குச் சொந்தமாக கால்நடை வளங்கள் சபை போன்ற நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான திட்டமொன்றுக்கு அமைவாக கட்டியெழுப்பப்பட்டவையாகும். தரமிக்க பாலுணவினை உற்பத்திசெய்ய மில்கோ நிறுவனமும் அதற்கு கால்நடை வளங்கள் சபைக்குச் சொந்தமான ஏறக்குறைய 31 தோட்டங்களும் இருக்கின்றன. எனினும் இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான அமூல் எனப்படுகின்ற கூட்டுறவுக் கம்பெனிக்கு இந்த நிறுவனத்தை விற்கவே தயாராகி வருகிறார்கள். எமது நாட்டின் அரச பிரிவிற்கு தொழில்முயற்சிகளை மேற்கொள்ள முடியாதெனக்கூறி விற்பனைக்காக போடுகையில் இந்தியாவின் ஐ.ஓ.சீ. கம்பெனி, சீனாவின் சினோபெக் நிறுவனம் போன்ற அரச நிறுவனங்கள் இந்நாட்டு நிறுவனங்களை கொள்வனவு செய்கின்றன. இலங்கை மக்களின் பணத்தைக்கொண்டு அரசாங்கம் பேணிவந்த நிறுவனங்களை விற்பனை செய்வதன் பிரதான நோக்கம் கொள்ளையடித்தலாகும்.
வெளிப்படைத்தன்மை கொண்டதாக எங்கள் நாட்டுக்கு முதலீடுகளை வரவழைப்பதற்கு நாங்கள் உடன்படுகிறோம். முதலீடுகளை வரவழைப்பித்தல் மற்றும் நிலவுகின்ற அரச நிறுவனங்களை விற்பனை செய்தல் என்பது இரண்டு விடயங்களாகும். 1977 இல் இருந்து 2017 வரை 40 வருடகாலமாக இலங்கை கடைப்பிடித்தது உள்நாட்டுத் தொழில்முயற்சிகள் அல்லது கைத்தொழில்களை கட்டியெழுப்புகின்ற கொள்கையையல்ல. 40 வருடங்களாக இலங்கைக்கு வந்த நேரடியான வெளிநாட்டு முதலீடுகளின் அளவு 40 பில்லியன் டொலராகும். அடிமட்டத்தில் இருந்தே இலஞ்சம் கொடுக்கவேண்டியது அவசியமென்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள். இலங்கை மக்களால் கட்டியழுப்பி பேணிவரப்பட்ட நிறுவனங்களை எடுக்க வருகிறார்களேயொழிய புதிய கைத்தொழில்கள் மற்றும் சேவைகளை ஆரம்பிக்க வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவதில்லை. குறைந்தபட்சம் சில தொழில்வாய்ப்புகளை வழங்கக்ககூடிய முதலீடுகள் இலங்கைக்கு வருவதில்லை. ரெலிகொம் நிறுவனம், துறைமுகங்கள், பெற்றோலியம், மின்சார சபை போன்ற நிறுவனங்கள் இந்நாட்டின் பொதுப்பணத்தினால் கட்டியெழுப்பப்பட்டு பேணிவரப்பட்ட நிறுவனங்களாகும். குறைந்த பட்சம் பாடசாலைப் பிள்ளைகளுக்கு பென்சில், பேனை உற்பத்திசெய்யக்கூட முதலீட்டாளர்கள் வருவதில்லை.
மக்களால் ஒதுக்கப்பட்ட ஊழில்மிக்க ஆட்சியாளர்களிடமிருந்து விற்பனைசெய்யப்படுகின்ற ஆதனங்களைக் கொள்வனவுசெய்ய உலகில் இருக்கின்ற ஊழல்மிக்க தொழில்முனைவோர் வருவார்கள். எமது ஆட்சியின்கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப கால்நடைகள் துறையை உள்ளிட்ட தேசிய வளங்கள் அத்தியாவசியமானவையாகும். இலங்கையின் எதிர்காலத்தை முடக்கிவிடுகின்ற விற்றொழித்தலுக்குப் பதிலாக உண்மையான முதலீட்டாளர்களை வரவழைக்குமாறு நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சவால் விடுக்கிறோம். வளங்களை விற்று தோல்விகண்டமை தொடர்பிலான மிகச்சிறந்த உதாரணம் பெரிய பிரித்தானியாவாகும். நாட்டின் நீர்வளங்களை விற்பனைசெய்த பின்னர் மக்களுக்கு அவசியமான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாதநிலையில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அதே நாட்டில் புகையிரதங்களை விற்றதன் பின்னர் விமானப் பயணத்தைப் பார்க்கிலும் அதிகமான தொகையை புகையிரதத்தில் பயணிப்பதற்காக செலவிட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இப்போது மீண்டும் கையகப்படுத்திக்கொள்ளவும் முடியாமல் இருக்கிறார்கள். நாற்பத வருடங்களாக நாடு இந்து சமுத்திரத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மீதி வளங்களையும் பாதுகாத்துக்கொள்ள மகாநாயக்க தேரர்களும் தொழிற் சங்கங்களும் முன்னெடுத்துவருகின்ற செயற்பாடுகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள்
கேள்வி: மத்தியவங்கி உத்தியோகத்தர்கள் பாராளுமன்றக் குழுவின் முன் தோற்றுமாறு அழைக்கப்பட்டுள்ளார்கள். அது பற்றிய உங்களின் கருத்து என்ன?
பதில் : மத்திய வங்கியிலோ வேறு எந்த நிறுவனத்திலோ ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. எனினும் மத்திய வங்கிதான் நாட்டின் பணவீக்கம் பற்றிய அளவுகோல்களை வகுக்கின்றது. பணவீக்கம் காரணமாகவே சம்பளம் அதிகரிக்கப்பட்டதென அவர்கள் கூறுகிறார்கள். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர்களான அர்ஜுன் மகேந்திரன், கப்ரால், குமாரசுவாமி, லக்ஷ்மன் மற்றும் தற்போதுள்ள நந்தலால் போன்ற அனைவரும் மத்திய வங்கிக்கு மாத்திரமல்ல பொருளாதாரம் மூழ்கடிக்கப்படவும் பொறுப்புக்கூற வேண்டும். அவர்களை உள்ளிட்ட மற்றுமொரு குழு முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகள் காரணமாக பணவீக்கம் தோன்றியதும் அவர்களின் சம்பளத்தை அதிகரித்துக்கொள்வது இலங்கையின் பணவீக்கத்தைப் பார்க்கிலும் அமெரிக்காவின் அல்லது பிறிதொரு நாட்டின் பணவீக்கத்திற்கு ஏற்றவகையிலேயே என்பது எமக்குப் பலப்படுகின்றது. இந்த இடத்தில் நெறிமுறைசார்ந்த ஒரு பிரச்சினையும் நிலவுகின்றது. பணிவீக்கம் மாத்திரமன்று நாட்டின் கைத்தொழில் முறைமையையும் நாசமாக்குவதற்கான தீர்மானங்களை எடுத்தவர்கள் மத்திய வங்கி உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்கின்ற நெறிமுறைகளுக்குப் புறம்பான புலமைசார்ந்த மோசடியையும் புரிந்துள்ளார்கள். உலகில் இருக்கின்ற நயவஞ்சகமான நிதிசார் தீத்தொழில் புரிபவர்கள் எமது பொருளாதாரத்தை நெறிப்படுத்துவதற்கான இயலுமை நிலவுகின்றது. இந்த சம்பள அதிகரிப்பு அத்தகைய ஒரு செயற்பாடு என்பது தெளிவாகின்றது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இப்போது அரசியல் புரியத் தொடங்கி உள்ளார். அவர் மத்திய வங்கி ஆளுனராக பதவிவகித்த காலத்தில் மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னவென நாங்கள் கேள்வி கேட்கிறோம். ரணில் விக்கிரமசிங்கவின் கடன் முகாமைத்துவக் குழுவின் ஆலோசகராக விளங்குகின்ற அவர் அரசியல் பூச்சாண்டிகளை படைக்க ஆரம்பித்துள்ளமையை நாங்கள் காண்கிறோம். அவர் ஆளுனர் பதவியை வகித்த காலத்திலேயே உயர்வான வட்டிக்கு வெளிநாட்டுத் தனியார் நிதிக் கம்பெனிகளிடமிருந்து மிக அதிகமான கடனைப் பெற்றுள்ளார். நந்தலால் வீரசிங்க அவரின்கீழ் பிரதிஆளுனராகப் பணியாற்றினார் என்பதையும் ஞாபகப்படுத்துகிறோம். இந்த வங்குரோத்துநிலைமைக்குப் பொறுப்புக்கூறவேண்டிய பல்வேறு தராதரங்களைச்சேர்ந்த ஆட்களே மிகப்பெரிய அளவில் சம்பளத்தை அதிகரித்துக்கொண்டமை பற்றிக் கவலைப்படுகிறோம்.
கேள்வி : விற்பனைசெய்த அரச நிறுவனங்கள் தொடர்பில் உங்கள் ஆட்சியின்கீழ் கடைப்பிடிக்கின்ற செயற்பாடுகள் என்ன?
பதில் : எமது ஆட்சியின்கீழ் அரச நிறுவனங்களை எவ்விதத்திலும் தனியார்மயப்படுத்தமாட்டோம். அவசியமானவகையில் முகாமைத்துவத்தை மறுசீரமைப்போம். அதாவது உள்நாட்டு அல்லது வெளிநாட்டுப் பிரிவுக்கு விற்பனை செய்வதல்ல. மிகவும் பழைய நிருவாகங்கள் இருக்கின்ற நி்றுவனங்களை நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூறுகின்ற வகையில் கட்டியெழுப்புவோம். அதன்பின்னர் தற்போது விற்பனை செய்கின்ற அரச நிறுவனங்கள் தொடர்பில் பலவீனமான உடன்படிக்கைகளின்கீழ் மோசடியானவகையில் விற்பனை செய்யப்படுகின்ற நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு மீளாய்வு செய்வோம். அதைப்போலவே தேசிய பொருளாதாரத்துடனும் தேசிய பாதுகாப்புடனும் நேரடியான தொடர்பினைக் கொண்டுள்ள நிறுவனங்கள் பற்றி விசேட இடையீடு செய்யப்படும். ஒரேயடியாக கையேற்றல் சிக்கலானதாக அமையும். விரிவான புலனாய்வின்பின்னர் இனங்காணப்படுகின்ற நிறுவனத்தை அதன்மூலமாக ஓரளவுக்கேனும் இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி அதற்கு நேரோத்ததாக அமையத்தக்கவாறு மீளக்கையேற்க முயற்சி செய்யப்படும். தற்போது எஞ்சியுள்ள நிறுவனங்களை பாதுகாப்பதற்காக முதன்மைக் கவனத்துடன் செயலாற்றுவோம்.