Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“இந்த கொடிய ஆட்சியை அடுத்த ஆண்டில் முடிவுக்கு கொண்டுவருவோமென நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்” -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா-

2023.10.16 – ஊடக சந்திப்பு

அடுத்த வருடத்தில் தேர்தலொன்று வரமாட்டாதெனும் அபிப்பிராயத்தை சமூகத்தில் உறுதிசெய்ய அரசாங்கம் செயலாற்றி வருகின்றது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேர்தல் வரமாட்டாதென கூறுகின்றது. அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கமாட்டாதென்பதாலும் தேர்தலைநடாத்தினால் அவர்கள் தோல்வியடைவார்கள் என்பதாலுமே அத்தகைய அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்ப முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் கிடையாது எனக் கூறுவது தோல்வியிலிருந்து விடுபடுவதற்காகவே என்பது உறுதியாகின்றது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மக்கள் அபிப்பிராயத்திற்கு, மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுவதற்கு பயந்திருக்கின்றது. அதனால் மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுவதற்குள் அனைத்துவிதமான வழிகளையும் தடுத்துநிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஏன் உள்ளூரதிகாரசபை தேர்தலை நடத்தாதிருக்கப் போகின்றது? உள்ளுரதிகாரசபை தேர்தலை நடாத்தினால் இத்தருணத்தில் நிலவுகின்ற மக்கள் அபிப்பிராயம் வெளிப்படும். அரசாங்கம் மீதான மக்களின் விருப்பத்தின் அளவினைக் கண்டுகொள்ளலாம். தேசிய மக்கள் சக்திக்கு நிச்சயமாக அமோக வெற்றி கிடைக்கும். ரணில் விக்கிரமசிங்காக்கள் தோல்வியடைவார்கள். அதனால் உள்ளூராட்சி தேர்தலை நடத்தாதிருக்கப் போகிறார்கள். அது முற்றிலும் சனநாயக விரோதமான செயலாகும்.

தற்போது அரசாங்கம் தொடரறா (இணையவழி) முறைகளின் பாதுகாப்பு பற்றிய சட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஒன்லயின் சிக்கியுரிட்டி சட்டம். மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுத்தப்படுவதை தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்படுகின்றது. எமது நாட்டில் மாத்திரமல்ல முழு உலகத்திலும் மக்கள் அபிப்பிராயம் மரபுரீதியான ஊடகங்களுக்கு மட்டுப்படுத்தப்படாமல் சமூக வலைத்தளங்கள் மூலமாக இடம்பெறுகின்றது. அதனை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்துவது கடினமாகும். அதன் மூலமாக அரசாங்கத்திற்கு எதிரான அபிப்பிராயங்கள், அரசாங்கத்தின் உண்மைகள் வெளிப்படுகின்ற அபிப்பிராயங்கள், எதிர்க்கட்சியின் அபிப்பிராயங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. கடந்த காலத்தில் பிரதான ஊடகங்கள் அரசாங்கத்திற்காக இயலுமானவரை பொய்களைக் கூறிவந்தன. மலட்டுக் கதைகள், மலட்டு மருத்துவர்கள் ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்பட்டன. பின்னர் அவை பொய்யானவை என்பது அம்பலமாகியது. அது பற்றிய விசரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மக்களுகக்கிடையில் பகைமையை பரவச்செய்வித்ததும் பிரதான ஊடகமாகும். சமூக வலைத்தளங்கள் ஊடாக இவை கேள்விக்குட்படுத்தப்பட்டவேளையில் அரசாங்கத்தின் நிர்வாணம் வெளிப்படுகையில் அது அரசாங்கத்திற்கு பாதகமானதாக அமைகையில் சமூக வலைத்தளங்களை தடுக்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது. இந்த சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான செய்திகள் வெளியியிடப்படுகின்றன. தவறான கருத்துக்கள் சமூகமயப்படுத்தப்படுகின்றன தான். ஆனால் அரசாங்கம் செய்யப்போவது அதனைத் தடுப்பதையல்ல. அதனை காரணமாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான அபிப்பிராயங்களை தடுக்கவே முயற்சி செய்கின்றது.

கடந்த காலத்தில் சம்பளம் செலுத்தி பல போலியான கணக்குகளைத் தயாரித்து தவறான அபிப்பிராயங்களை சமூகமயப்படுத்தியது அரசாங்கத்தின் குழுக்களாகும். மகிந்த ராஜபக்ஷாக்களின் ஒரு குழு இந்த போலியான கணக்குகளைப் பாவித்து தவறான கருத்துக்களை சமூகமயப்படுத்தியது. ஏற்கெனவே ஒரு குழு சம்பளம் பெற்று பொய்கூறி வருகின்றது. உண்மையான பொதுமக்கள் அபிப்பிராயம் சமூகமயமாவதைக் காண அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் ஒன்லயின் சிக்கியூரிட்டி பில்லைக் கொண்டுவந்து மக்கள் அபிப்பிராயம் வெளிபடுத்தப்படுவதை தடுக்க முயற்சி செய்கிறார்கள்.

அதைப்போலவே புதிய பயங்கரவாத சட்டமொன்றையும் தயாரித்து வருகிறார்கள். அரசாங்கம் மீதான எதிர்ப்பினை தடுப்பதற்காகவே அதனைக் கொண்டுவர முயற்சிசெய்கிறார்கள். மக்கள் அபிப்பிராயம் சனநாயகரீதியாக நடுத்தெருவில் ஆர்ப்பாட்ட அழுத்தங்கள் மூலமாக வெளிப்படுவதைத் தடுக்கவே பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவர முயற்சி செய்யப்படுகின்றது. அந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் எதையாவது செய்யமாறு அல்லது செய்யாதிருக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவது பயங்கரவாத செயலாக மாற்றப்படும். இந்த அரசாங்கம் மக்களைக்கண்டு அஞ்சுகின்றது, மக்கள் அபிப்பிராயத்திற்கு அஞ்சுகின்றது. அவர்களால் மக்களை வென்றெடுக்க முடியாது. 75 வருடகால இந்த அரசாங்கங்களின் அழிவுமிக்க அனுபவங்களை பெற்றுள்ள மக்கள் தற்போது இந்த நாட்டை ஆட்சிசெய்த சக்திகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு மாற்று அரசியல் இயக்கங்களுடன் ஒன்றிணையத் தொடங்கி உள்ளார்கள். அதனால்த்தான் வருங்காலத்தில் நடாத்தப்படவேண்டிய சனாதிபதி தேர்தலை நடத்தப்போவதில்லை எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். சனாதிபதி தேர்தலை நடாத்துவதற்குப் பதிலாக அரசியலமைப்பொன்று மூலமாக அல்லது அரசியலமைப்புத் திருத்தம் மூலமாக நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக தற்போது அவர்கள் கூறிவருகிறார்கள். அப்போது அந்த நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்திடம் கையளிக்கப்படும். நிறைவேற்று முறையை ஒழித்தவிடத்து சனாதிபதி தேர்தலொன்றை நடாத்தவேண்டிய அவசியம் தோன்றமாட்டாது. தத்துவங்களை பாராளுமன்றத்திடம் கையளிப்பதன் மூலமாக அந்த தத்துவங்கள் 2025 வரை வலுவில் இருக்கும். அதனால் மேலும் 2 வருடங்களுக்கு தேர்தல் கிடையாது என பிரச்சாரம்செய்து வருகிறார்கள். அது அவ்வாறு நடைபெற மாட்டாதென நாங்கள் நினைக்கிறோம்.

நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிக்கின்ற போராட்டம் நிறைவேற்று சனாதிபதி முறையின் தொடக்கத்திலிருந்தே சமூகத்தில் நிலவுகின்றது. நாங்கள் மக்கள் விடுதலை முன்னணி என்றவகையிலும் நாமனைவரும் சனநாயக விரோதமான சர்வாதிகாரியொருவரை உருவாக்குகின்ற நிறைவேற்று சனாதிபதி முறைக்கு எதிராக தோற்றினோம். எமது நாட்டை ஆட்சிசெய்த அரசியல் கட்சிகளும் மக்களை ஏமாற்றுவதற்காக நிறைவேற்று சனாதிபதி முறையை ஓழிக்க உடன்பட்ட தருணங்கள் தாராளமாக இருந்தன. 1994 இல் திருமதி சந்திரிக்கா குமாரதுங்க 1995 யூலை 15 ஆந் திகதிக்கு முன்னராக நிறைவேற்ற முறையை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதி அளித்தார். எனினும் செய்யவில்லை. ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்தார்கள். அவர்கள் அனைவருமே தமது கைகளில் அதிகாரம் இல்லாத தருணத்தில் நிறைவேற்று முறையை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதி அளித்தார்கள். அதிகாரம் கிடைத்ததும் ஒழித்துக் கட்டாமல் அதிகாரத்தை அதிகரித்துக் கொள்வதையே புரிந்தார்கள். 2002 நன்னடத்தை அரசாங்க காலத்தில் நாங்கள் இடையீடுசெய்து நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கின்ற 17 வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டோம். மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் 18 வது திருத்தத்தைக் கொண்டுவந்து மீண்டும் நிறைவேற்று சனாதிபதி அதிகாரத்தை அதிகரித்துக் கொண்டார். முந்திய அரசியலமைப்பில் சனாதிபதி தேர்தலில் போட்டியிட ஒருவருக்கு இரண்டு தடவைகள் மாத்திரம் இருந்த சந்தர்ப்பத்தை 18 வது திருத்தத்தைக் கொண்டுவந்து எந்தவொரு நேரத்திலும் போட்டியிடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டார். மீண்டும் நாங்கள் 19 வது திருத்தத்தைக் கொண்டுவந்து சனாதிபதி தத்துவங்களை ஓரளவுக்கு குறைத்துக்கொண்டோம். கோட்டாபய ராஜபக்ஷ வந்த பின்னர் 20 வது திருத்தத்தைக் கொண்டுவந்து அந்த தத்துவங்களை மீண்டும் பெற்றுக்கொண்டார். மகிந்த ராஜபக்ஷாக்கள் அதிகாரம் கிடைத்த எல்லாச் சந்தர்ப்பத்திலும் நிறைவேற்றுத் தத்துவங்களைக் குறைப்பதற்காகவல்ல, அந்த தத்துவங்களை அதிகரித்துக் கொள்வதற்காகவே செயலாற்றியிருக்கிறார்கள். அவ்விதமாக செயலாற்றிய ராஜபக்ஷாக்கள் திடீரென இந்த தத்துவங்களை இல்லாதொழிக்க ஏன் நடவடிக்கை எடுக்கிறார்கள்? அடுத்த சனாதிபதி தேர்தலில் அவர்கள் பிணைப்பணமுமின்றி தோல்வியடைவார்கள். சனாதிபதி தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வேட்பாளர்கூட கிடையாது. அதனால் சனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளாமல் நழுவிச்செல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அரசியமைப்பின்படி தேர்தலை பிற்போட முடியாது. அதனால் நிறைவேற்றுத் தத்துவங்களை ஒழித்துக்கட்டி பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை கையகப்படுத்திக்கொண்டு பாராளுமன்றம் மூலமாக ஆட்சிசெய்வதை தெரிவுசெய்வதாக கூறுகிறார்கள். நிறைவேற்றுத் தத்துவங்களை ஒழித்துக்கட்டுவதற்காக கட்டாயமாக மக்கள் தீர்ப்பிற்கு செல்லவேண்டி நேரிடும். அந்த மக்கள் தீர்ப்பின்போது அதற்கு ஆதரவு வழங்கவேண்டி எம்மனைவருக்கும் நேரிடும்.

நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்தலுடன் நாங்கள் இணங்குகிறோம். அரசியலமைப்புத் திருத்தமல்ல புதிய அரசியலமைப்பினை ஆக்கவேண்டி நேரிடும். நிறைவேற்று முறைமையுடன் பின்னிப்பிணைந்த பல பிரச்சினைகள் இருக்கின்றன. புதிய அரசியலமைப்பொன்றினைக் கொண்டு வந்தாலும், நிறைவேற்றதிகாரம் இந்த பாராளுமன்றத்திடமே கையளிக்கப்படும், இந்த அமைச்சரவையிடமே, இதே பிரதமரிடமெனில் அதற்கு இந்நாட்டு மக்கள் இணங்கமாட்டார்கள். இந்த அரசாங்கம் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கமாகும். இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடையாது. தற்போது இருப்பது மக்களுக்கு எதிரான அரசாங்கமே. அத்தகைய பாராளுமன்றத்திற்கு சனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் கையளிக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமானதல்ல. அது மக்கள் விருப்பத்திற்கு எதிரானது. நாங்கள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வலியுறுத்திக் கூறுவது நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிப்பதற்கான திருத்தமொன்றைக் கொண்டுவந்தாலும் அந்த திருத்தம் நிறைவேற்றப்படும்போதே இந்த பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான பிரேரணையொன்றும் இருக்கவேண்டும். அத்துடன் மக்களின் வாக்குகளால் புதியதொரு பாராளுமன்றம் கட்டியெழுப்பப்படல் வேண்டும். இந்த மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் ஆணையைக்கொண்ட பாராளுமன்றத்திடம்தான் நிறைவேற்றதிகாரத்தை கையளிப்பதற்கான தேவை நிலவுகின்றது. நிறைவேற்று சனாதிபதியொருவர் இருக்கின்ற வேளையில்தான் இந்த பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படுகின்றது. இந்த பாராளுமன்றத்திற்காக வழங்கப்பட்டுள்ள வாக்குகள் ஒரு நிறைவேற்றத்திகாரம்கொண்ட பாராளுமன்றத்திற்கானதல்ல. இந்த பாராளுமன்றத்திற்கு நிறைவேற்றதிகாரம் கையளிக்கப்படுமாயின் இந்த பாராளுமன்றம் அந்த புரிந்துணர்வுடன் மக்காளல் நியமிக்கப்படுகின்ற பாராளுமன்றமாக அமைதல் வேண்டும்.

ரணில் – ராஜபக்ஷாக்கள் அரசியலமைப்பு முடிச்சியொன்றைப் போட்டு, சனாதிபதி தேர்தலை நடத்தாமல், இந்த ஊழல்மிக்க, மக்கள் ஆணையற்ற பாராளுமன்றத்திற்கு தத்துவங்களை கையகப்படுத்திக்கொண்டு மேலும் இரண்டு வருடங்களுக்கு பேணிவர முயற்சி செய்வார்களாயின் அது ஒருபோதுமே இடம்பெற மாட்டாது. இந்த பாராளுமன்றம் ஒழிக்கப்படல் வேண்டும். அவ்வாறு இடம்பெறாமல் கொண்டுவரப்படுகின்ற மக்கள் தீர்ப்பிற்கு நாங்கள் உதவமாட்டோம். அவ்வாறு நேர்ந்தாலும் அது வெற்றியடையமாட்டாது. இல்லாவிட்டால் மக்கள் தீர்ப்பில் தோல்வியடைந்து தேர்தலுக்குச் செல்லவேண்டியநிலை அரசாங்கத்திற்கு ஏற்படும். அரசாங்கம் இரண்டு வழிமுறைகளையே தெரிவுசெய்ய வேண்டும். ஒன்று சனாதிபதி தேர்தலை நடாத்துதல்: சனாதிபதி தேர்தல் இல்லாவிட்டால் அடுத்த ஆண்டில் பொதுத்தேர்தல் நடாத்தப்படல் வேண்டும். அவ்வாறு இடம்பெறாமல் மக்கள் ஆணையற்ற பாராளுமன்றத்திற்கு தத்துவங்கைளை கையகப்படுத்திக்கொண்டு செல்கின்ற பயணத்திற்கு நாங்கள் ஒருபோதுமே இடமளிக்க மாட்டோம். அடுத்த ஆண்டில் தேர்தலொன்று கிடையாது என அரசாங்கத்தின் பெரியவர்கள் கூறுகின்ற அபிப்பிராயத்திற்கு ஏமாறவேண்டாமென நாங்கள் மக்களிடம் கூறுகிறோம். அடுத்த ஆண்டில் கட்டாயமாக தேர்தலொன்று வரும், முறைப்படி சனாதிபதி தேர்தல் வரும். ஏதேனும் விதத்தில் சனாதிபதி முறை ஒழிக்கப்படுமாயின் மக்கள் தீர்ப்பில் வெற்றிபெற வேண்டும். பொதுத்தேர்தலை நடாத்துகின்ற நிபந்தனையைக் கொண்டதாகவே மக்கள் தீர்ப்பில் வெற்றிபெற வேண்டும். பொதுத்தேர்தலுக்கு செல்வதன்மூலமாக தாம் விரும்புகின்ற அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதற்கான இயலுமை பொதுமக்களுக்கு கிடைக்கின்றது. அந்த அரசாங்கத்திற்கு நிறைவேற்றுத் தத்துவங்கள் கையளிக்கப்பட்ட அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதற்கான இயலுமை கிடைக்கின்றது. அந்த அரசாங்கத்திற்கு நாட்டை மாற்றிமைத்து முன்நோக்கி நகரமுடியும்.

மக்கள் ஆணையுடன் விளையாட வேண்டாமென நாங்கள் ஆட்சியாளர்களிடம் கூறுகிறோம். உள்ளூரதிகார சபைகள் தேர்தல் பிற்போடப்பட்டது, மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள். அவ்விதமாக இந்த தேர்தலையும் பிற்போட முடியுமென மக்கள் நினைக்கக்கூடும். எனினும் அவ்வாறு செய்யமுடியாது. உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல் அந்த நிறுவனங்களை பேணிவருவதற்கான இயலுமையைக்கொண்ட ஏற்பாடுகள் அந்த யாப்புவிதிகளில் இருக்கின்றன. அது விசேட ஆணையாளர்களை நியமிப்பதன் மூலமாகும். மாகாண சபைகள் தேர்தலை நடாத்தாமல் மாகாண சபைகளை பேணிவருவதற்கான ஏற்பாடுகள் யாப்புவிதிகளில் இருக்கின்றன. எனினும் பாராளுமன்றத்திற்கு அத்தகைய ஒன்று கிடையாது. சனாதிபதிக்கு அத்தகைய ஒன்று கிடையாது. சனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்டே ஆகவேண்டும். அவர்களால் செய்யக்கூடிய ஒரேயொரு விடயம்தான் நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்துக்கட்டி சனாதிபதி தேர்தலை தவிர்த்துச் செல்வது. மக்களின் விருப்பத்துடனேயே அதனை சாதிக்கவேண்டும். அடுத்த ஆண்டில் கட்டாயமாக தேர்தலொன்று நடாத்தப்படல் வேண்டும். மேலும் பத்து மாத காலம் மாத்திரமே இந்த அரசாங்கத்திற்கு ஆயுள் இருக்கின்றது. சனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் கட்டாயமாக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் வெற்றிபெறுவோம். அந்த வெற்றியுடன் நாங்கள் இந்த பாராளுமன்றத்தை வைத்துக்கொள்ள மாட்டோம். தேர்தலொன்று இருக்கின்றது. அரசியல் சதிகள் மூலமாக சட்டத்திற்கு முரணாக, மக்களுக்கு எதிரான ஆட்சியதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான இயலுமை கிடையாது. ஆட்சியாளர்கள் பரப்புகின்ற அபிப்பிராங்களுக்கு பதற்றமடைய வேண்டாம். நீங்கள் ஊக்கத்துடன் வேலைசெய்யுங்கள். நீங்கள் ஒழுங்கமையுங்கள். இந்த கொடிய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருகின்ற ஆண்டாக அடுத்த ஆண்டு அமையுமென்பதை நாங்கள் உங்களிடம் உறுதியாக கூறுகிறோம்.

சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்துவதற்காக உலக சமூகம் இருதரப்பினருக்கும் அழுத்தம்கொடுக்கவேண்டும்.

மேலதிக விடயமென்ற வகையில் இஸ்ரவேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் மோதலொன்று நடைபெறுகின்றது. இது சம்பந்தமாக சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள், அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாங்கள் இதில் காண்கின்ற முக்கியமான விடயம்தான் இந்த மோதல் காரணமாக இருநாட்டினதும் நிராயுதபாணிகளான அப்பாவிக் குடிமக்கள், சிறுவர்கள், பெண்கள் பெருமளவில் சிரமங்களுக்குள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கெனவே இருதரப்பிலும் பெருந்தொகையான சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பெற்றோர்களை இழந்து பிள்ளைகள் திசைமாறி இடம்பெயர்ந்துள்ளார்கள். பெண்களுக்கு பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்து தமது சொந்த ஊர்களை கைவிட்டுச் செல்லவேண்டியநிலை உருவாகி உள்ளது. இது ஒரு மனிதப் பேரவலம். இந்த இருதரப்பிலும் புரியப்படுகின்ற படுகொலைகள் நிறுத்தப்படவேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இருதரப்பிலும் நிராயுதபாணிகளான சிவிலியன்களை இலக்காகக்கொண்டு புரியப்படுகின்ற படுகொலைகள் நிறுத்தப்படல் வேண்டும். இந்த படுகொலைகளை நிறுத்துவதற்காக உலக சமுதாயம் இருதரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கவேண்டும். அத்தருணத்தில் யார் சரி? யார் பிழை? என தெரிவுசெய்ய வேண்டியதில்லை. இங்கு மனிதப்பேரவலமே நிலவுகின்றது. சிறுவர் தலைமுறையினர் நிர்க்கதி நிலையுற்று இருக்கிறார்கள். அதனால் மோதல்களை நிறுத்துங்கள். நிராயுதபாணிகளான சிவிலியன்களை இலக்காகக்கொண்ட தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டுமென நாங்கள் நம்புகிறோம்.

இந்த முரண்பாட்டுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. 1947 இன் பின்னரே இந்த பிரச்சினை தொடங்குகின்றது. அதில் பாரியளவிலான சிக்கல்கள் நிலவினாலும் இத்தருணத்தில் அதைப்பற்றி பேசுவதை செய்யவேண்டியதில்லை. இந்த முரண்பாடு உருவாகிய நேரத்தில் ஐக்கிய நாடுகளின் இடையீட்டின் பேரில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டு திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை அரச எண்ணக்கரு என அழைப்பார்கள். “இரண்டு நாடுகளையும் இரண்டு நாடுகளாக ஏற்றுக்கொள்க” எனும் எண்ணக்கருவாகும். ஐக்கிய நாடுகளின் திட்டத்தின்படி சுதந்திரமான பாலஸ்தீனமொன்றும் சுதந்திரமான ஈஸ்ரவேலும் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளையும் உறுதிநிலைக்கு கொண்டுவருவதுதான் ஐக்கிய நாடுகளின் நோக்கமாக அமைந்தது. இற்றைவரை ஐக்கிய நாடுகளின் மேற்படி பிரேரணைக்கிணங்க செயலாற்றப்படவில்லை. அதனை அமுலாக்குதல் தோல்விகண்டுள்ளது. இது தான் இந்த சிக்கலுக்கான பிரதான காரணம். ஐக்கிய நாடுகள் தாபனம் போன்ற அமைப்பொன்று கொண்டுவந்த பிரேரணையை அமுலாக்க இயலாமல் போயுள்ளதே இந்த பேரழிவிற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் இடையீடு காரணமாகவே அதனை அமுலாக்க முடியாமல் போயுள்ளது. அவர்கள் தமது ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக பிராந்தியத்தில் அதிகாரச் சமநிலையை உருவாக்கிக்கொள்ள முயற்சிசெய்து வருகிறார்கள். அதனால் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பத்தில் நிறைவேற்றிக்கொண்ட இரட்டை அரச எண்ணக்கருவினை அமுலாக்குவதே இந்த சிக்கலுக்கான தீர்வாகும். சுயாதீனமான சுதந்திரமான இஸ்ரவேலையும் சுயாதீனமான சுதந்திரமான பாலஸ்தீனத்தையும் ஏற்றுக்கொள்வதாகும். அந்த கொள்கையின் அடிப்படையில் செயலாற்றுவதன் மூலமாக இந்த முரண்பாட்டினைத் தீர்த்துக்கொண்டு இரண்டு நாடுகளுக்கும் நிலவுவதற்கான இயலுமை ஏற்படும். உலக வல்லரசுகளின் பொறுப்பாக அமைவதும் ஐக்கிய நாடுகளின் பிரேரணைக்கமைவாக செயலாற்றுவதாகும். சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுகின்ற, சிறுவர்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்ற, சிறுவர்கள் அநாதைகளாக மாறுகின்ற இந்த மோதலை நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாங்கள் மீண்டும் உலக சமூகத்திடமும் அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

அதிகரித்து வருகின்ற பொருளாதார அழுத்தம் காரணமாக குடும்பத்திலும் வேலைத்தலத்திலும் சமூக உறவுகள் சிதைவடைந்து வருகின்றன” –தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தற்போது நிலவுகின்ற சமூக நெருக்கடி பற்றிப் பேசுகையில் நிலவுகின்ற நெருக்கடி மற்றும் அதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றியே பெரும்பாலானோரின் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. அதற்கு இணையானதாகவே மிகவும் பலம்பொருந்தியதாக எமது பொருளாதாரம் சம்பந்தமாக சமூகத்தின் சீரழிவையும் சமூகத்தின் பாதுகாப்பற்றதன்மையையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. இங்கு விசேடமாக நாங்கள் மேலோங்கச் செய்விக்கவேண்டியது பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக வளர்ந்துவருகின்ற வன்முறையாகும். தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற பொருளாதார அழுத்தம் காரணமாக குடும்பங்களுக்குள்ளேயும் வேலைசெய்கின்ற இடங்களிலும் பாதுகாக்கப்படவேண்டிய சமூக உறவுகள் அனைத்திற்கும் அழுத்தமேற்பட்டு வருவதை எம்மால் காணக்கூடியதாக உள்ளது. இதனால் சமூக உறவுகள் சீரழிந்து மரபுரீதியாக நிலவவேண்டிய அனைத்துக் கடப்பாடுகளும் பலவீனமடைந்து வருகின்றன. இதன்விளைவாக சமூகத்தில் பலவீனமானவர்கள் என அழைக்கப்படுகின்ற அதிகாரம் குறைந்த குழுக்களுக்கு வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது நாளுக்குநாள் வளர்ந்து வருகின்றது. குறிப்பாக பெண்களுக்கு, பிள்ளைகளுக்கு மற்றும் மூத்த பிரசைகளுக்கும் இந்த பிரச்சினையை எதிர்கொள்ளவேண்டி நேர்ந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்துப் பகுதிகளையும் அழித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இது சம்பந்தமாக எந்தவிதமான கூருணர்வோ இரக்கமோ தயவோ இந்த அரசாங்கத்திடம் கிடையாது. அதனைக் குடும்பங்கள் என்றவகையிலும் தனிமனிதர்கள் என்றவகையிலுமே தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. நெருக்கடிக்கு இலக்காகிய சமூகத்தினாலேயே அதற்கான தீர்வுகளைக் கண்டறிய அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. அதற்காக இயங்கவேண்டிய நிறுவனங்களான பொலீஸ், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை திணைக்களம், மகளிர் அமைச்சு அல்லது இதில் எந்தவொரு நிறுவனமாக அமையக்கூடும். இந்த நிறுவனங்களும் கடுமையான அழுத்தங்களுக்கு இலக்காகி உள்ளன. இத்தகைய பிரச்சினைகளில் இடையீடு செய்ய அவசியமான வளங்கள், தொழில்நுட்ப வளங்கள், மனித வளங்களை இழந்து இந்த நிறுவனங்கள் மேலும்மேலும் பலவீனமடைந்துள்ளன. இவை திடீரென தோன்றியவை அல்ல. நீண்டகாலமாக சமூகப் பாதுகாப்பு முறைமையை நாசமாக்கிய ஆட்சியாளர்களின் ஆற்றாமை காரணமாக தற்போது இவை பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளன. கடந்த வாரத்தில் தேசிய மக்கள் சக்தி மூத்த பிரசைகளின் ஒன்றியத்தை சந்தித்தது. அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எமது கவனத்திற்கு கொண்டுவந்தார்கள். ஓய்வுபெற்றவர்களுடன் கலந்துரையாடினோம். 1997 இல் இருந்து நிலவிவருகின்ற பிரச்சினைகள் காரணமாக அவர்கள் மிகுந்த நிர்க்கதி அடைந்துள்ளார்கள். எவ்விதத்திலும் அதிகரிக்காத ஓய்வூதியம் மற்றும் கிடைக்கவேண்டிய சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்காமை காரணமாக தோன்றிய பிரச்சினைகளால் அவர்கள் மிகுந்த அழுத்தங்களுக்கு இலக்காகி உள்ளார்கள். மூத்த பிரசைகள் பாரியளவிலான சுகாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறார்கள். மருந்து தட்டுப்பாடும் சுகாதாரத் துறையிலான சீரழிவும் அவர்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான பிரச்சினைகளாக மாறியுள்ளன.

அவர்கள் எடுத்துள்ள கடன்களின் வட்டி அதிகரித்துள்ளமையும் மற்றுமொரு நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இவர்கள் பிள்ளைகளுக்கு சுமையில்லாமல் வாழக்கூடிய நிலையிலுள்ள பிரிவினராவர். ஆனால் தற்போது இவர்களின் சுமையையும் பிள்ளைகளே சுமக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அதன் மூலமாக குடும்பங்களிலும் மேலும் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அரசாங்கம் வருங்காலத்தில் சமர்ப்பிக்கின்ற வரவுசெலவுத் திட்டம் ஊடாகவும் இதற்கான தீர்வு கிடைக்குமென நம்ப இயலாது. வரவுசெலவு சமர்ப்பிக்கப்படுகின்ற இத்தருணத்தில் மூத்த பிரசைகளின் இந்த பிரச்சினைகளுக்கும் தீர்வுதேட வேண்டுமென்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்துகிறோம்.