(-தேசிய மக்கள் சக்தியின் தேசிய தொழில்முனைவோர் மாநாடு – 2024.09.03 – மொனாக் இம்பீரியல் – ஸ்ரீ ஜயவர்தனபுர-)
அரசியல் களம் கணிசமான அளவில் சூடுபிடித்துள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலின்போதும் இலங்கையில் தீர்மானகரமானதாக அமைந்தது பொருளாதாரக் காரணியல்ல. ஒரு காலத்தில் யுத்தம், தேசத்தைக் காப்பாற்றிக்கொள்ளல், நாடு ஆபத்தில் போன்ற கோஷங்கள் மேடையில் அடிப்படைக் விடயங்களாக கொள்ளப்பட்டன. அண்மைக்கால வரலாற்றில் முதல்த்தடவையாக பொருளாதாரத்தை முதன்மையாகக்கொண்ட உரையாடலொன்று அரசியல் களத்தில் தோன்றிவந்து கொண்டிருக்கிறது. 2021 – 2022 காலப்பகுதியில் பொருளாதாரம் பாரியளவில் சீர்குலைந்திராவிட்டால் இந்த தேர்தலிலும் வேறு வேறு விடயங்கள் முதன்மையாகக் கொள்ளப்பட்டிருக்கும். ஒருசில காரணிகள் அவர்களாலேயே உருவாக்கிக் கொள்ளப்பட்டவையாகும். எனினும் பொருளாதார சீர்குலைவிற்குப் பின்னர் பிரஜைகளுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் பொருளாதாரம் பற்றிய ஏதேனும் முறைசார்ந்த உரையாடலில் பிரவேசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இத்தகைய பின்னணியிலேயே இத்தடவை தேர்தல் மேடையில் இந்த தலைப்பு முன்நோக்கி வந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் எமது பொருளாதாரப் பாதையை அடிப்படையில் பொழிப்பாக்கி உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென நாங்கள் சிந்தித்தோம். எங்கள் அடிப்படை சாரத்தை அதற்கிணங்கவே இன்று முன்வைக்கிறோம்.
பொருளாதார சீர்குலைவின்போது மக்கள் காட்டுகின்ற பிரதிபலிப்பினை நாங்கள் 2022 இல் கண்டோம்.
அரசியல் மேடையில் மீண்டுமொருதடவை “பயம்” எனும் காரணியை முதன்மைப்படுத்த மாபெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னர் இந்த காரணி வேறுவிதமாக முன்னெடுத்து வரப்பட்டிருந்தது. “இந்த வேட்பாளரை தெரிவுசெய்து கொள்ளாவிட்டால் தேசம் ஆபத்தில் விழும், இந்த வேட்பாளருக்கு வாக்களிக்காவிட்டால் நாடு ஆபத்தில் வீழந்துவிடும்” என்றவகையில் பலவிதங்களில் பயம் சமூகமயப்படுத்தப்பட்டது. அதுவே தற்போது வித்தியாசமான தோற்றத்தில் “இந்த வேட்பாளரை தெரிவுசெய்து கொள்ளாவிட்டால், கேஸ் சிலிண்டர் வெடிக்கும்” என்ற பயம் உருவாக்கப்பட்டு வருகின்றது. மறுபுறத்தில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் பொருளாதாரம் பாரியளவி்ல் சீர்குலைந்து விடுமென்ற பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த சீர்குலைவு பற்றிய உண்மைக்கதை என்ன? நாங்கள் ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் முதல்த்தடவையாகவே அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள நெருங்குகின்ற வாய்ப்பிற்கு வந்திருக்கிறோம். அது நீண்டகாலமாக மேற்கொண்ட பாரிய அரசியல் நடவடிக்கையின் விளைவு என்றவகையிலாகும். பொருளாதார சீர்குலைவின்போது மக்கள் காட்டுகின்ற பிரதிபலிப்பினை நாங்கள் 2022 இல் கண்டோம். அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதிக்கு இரண்டே ஆண்டுகளில் தப்பியோட நேரிட்டது. நீண்டகாலமாக அரசியல் நோக்கத்துடன் செயலாற்றிய நாங்கள் ஆறுமாதங்களில் தப்பியோடவேண்டிய சூழ்நிலையை உருவாக்குவோமா? பொருளாதார சீர்குலைவிற்கு ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், நிதி அமைச்சு செயலாளர் போன்றே அத்தருணத்தில் இருந்த மத்தியவங்கி ஆளுனரும் தவறாளிகளென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதிக்குக்கூட எதிராக அத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கையில் நாங்களும் உயர்நீதிமன்றத்தில் தவறாளிகளாக்கப்படுகின்ற நடைமுறைகளை கடைப்பிடிப்போமா? இல்லை. ஒருபோதுமே இல்லை. அதனால் நாங்கள் உங்களுக்கு முதலில் கொடுக்கின்ற உத்தரவாதம்தான் தற்போது நிலவுகின்ற பொருளாதாரத்தை எவ்விதத்திலும் சீர்குலைய ஒருபோதுமே இடமளிக்கமாட்டோம் என்பதாகும். அதைப்போலவே பொருளாதாரத்தை மென்மேலும் பலப்படுத்தி முன்னெடுத்து வருவது எமக்கும் மக்களுக்கும் இடையிலான உடன்பாடாக அமையும்.
நாங்கள் எவ்விதத்திலும் ஒருதலைப்பட்சமாக சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நீங்கமாட்டோம் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்குகிறோம்
ஜனரஞ்சகமான போராட்டக் கோஷங்களால் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நோக்கம் எமக்குக் கிடையாது. எப்படிப்பட்ட பொருளாதாரம் எமக்கு கிடைக்கப்போகிறதென்பதை நாங்கள் நன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறோம். தபால்மூல வாக்களிப்பினை நெருங்கிக்கொண்டிருக்கையில் அரச ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கின்றது. ஒருவர் 24% அதிகரிப்பதாகக் கூறியதும் அடுத்தவர் அதை முதலில் கூறியது நான்தான் எனக் கூறுகிறார். ஒருவர் சம்பள அதிகரிப்பு 25,000 ரூபா எனக் கூறியதும் அடுத்தவர் குறைந்தபட்ச சம்பளத்தை 57,000 ரூபாவாக மாற்றுவதாக கூறுகிறார். நாங்கள் அந்த இலாபகரமான போட்டியில் இல்லை. பொருளாதாரம் சீர்குலைந்து கொண்டிருக்கின்ற பாரதூரத்தன்மையை நாங்கள் ஆழமாக விளங்கிகொண்டுள்ளோம். துரித திருப்புமுனைகளை, துரித மாற்றங்களை இந்த பொருளாதாரத்தில் ஏற்படுத்துவதற்கான இயலுமை எவ்விதத்திலும் கிடையாது. மிகவும் மெல்லிய நூலினால் முடிச்சுப்போடப்பட்டுள்ள இந்த பொருளாதாரத்தில் ஏற்படுத்துகின்ற சிறிய மாற்றம்கூட மரணம்விளைவிக்க கூடியதாக அமையலாம். அதனால் தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் பொருளாதாரத்தில் எற்படுத்துகின்ற நுணுக்கமான மாற்றங்கள்கூட மிகவும் சிறப்பாக எவ்வாறான பாதகவிளைவுகளை எற்படுத்தும் என்பது பற்றி சிந்தித்து செயலாற்றவேண்டும். நாங்கள் இந்த நாட்டின் மக்களுக்கு பொறுப்புக்கூறுகின்ற பொறுப்பு வகிக்கின்ற ஓர் இயக்கமாவோம். எங்களுடைய ஒட்டுமொத்த சர்வதேச பொருளாதார தொடர்புகளும் சர்வதேச நாணய நிதியம் என்கின்ற கூடைக்குள்ளேயே இருக்கின்றது. இருதரப்பு கடன் கொடுக்கல் வாங்கல்கள், பல்தரப்புக் கடன் கொடுக்கல் வாங்கல்கள், இறையாண்மை முறிகளை உள்ளிட்ட அனைத்தும் நாணய நிதியத்துடன் முடிச்சுப் போடப்பட்டுள்ளது. அதனால் எவரேனும் ஒருதலைப்பட்சமாக அந்த நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து நீங்குதல் பற்றி சிந்திப்பாரெனில் அவர் நாடு அல்லது நட்டுமக்கள் பற்றிய பொறுப்புக்கூறலை கைவிடுபவராக அமைவார். நாங்கள் எவ்விதத்திலும் ஒருதலைப்பட்சமாக சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நீங்கமாட்டோம் என்பதற்கான உத்தரவாததை வழங்குகிறோம். நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நாட்டுக்குப் பாதகமற்ற அளவுருக்களைப் பேணிவந்து மிகவும் பொருத்தமான பாதை பற்றி நாங்கள் பரிசீலனை செய்வோம். அது எவ்விதத்திலும் நாட்டை சீர்குலைக்கின்ற திசையை நோக்கியதல்ல. எனவே வீண் பயத்தை சமூகமயப்படுத்த வேண்டாமென நாங்கள் சனாதிபதிக்கு வலியுறுத்துகிறோம். பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதான காரணகர்த்தா அவரே. நாட்டின் நிதி அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி என்றவகையில் பொருளாதாரம் சீர்குலைதல் பற்றிய வீண் பயத்தை அடிக்கடி வேண்டுமென்றே உருவாக்கி வருகிறார். அதனால் பொருளாதார நெருக்கடியொன்றை உருவாக்குகின்ற திட்டமிட்ட குறிக்கோளுடன் அவர் செயலாற்றுகிறாரோ எனும் பாரதூரமான சந்தேகம் எழுகின்றது. பொருளாதாரம் சீர்குலைய இடமளியோமென நாங்கள் கூறுகின்றவேளையில் அவர் வந்து நாங்கள் பொருளாதாரத்தை வீழ்த்துவதாக கூறுகிறார். தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் சனாதிபதியின் எதிர்பார்ப்பிற்கு ஒருபோதுமே இரையாக மாட்டோம்.
அரசியல் தேவைகளுக்காக மத்தியவங்கி நெறிப்படுத்தப்பட்டமையால் அதன் சுயாதீனத்தன்மை சீர்குலைந்தது
மத்திய வங்கியின் செயற்பொறுப்பு பற்றிய விவாதமொன்று நிலவுகின்றது. எமது நாட்டின் நிதிச் சந்தையில், பணவீக்கத்தின், வட்டி வீதத்தின் மற்றும் செலாவணி விகிதத்தின் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்வுகூறல்கள் பற்றி தெளிவான கருத்தொன்று நிலவவேண்டும். கடந்த காலத்தில் ஒரே இரவில் செலாவணி விகிதத்தை பாரியளவில் மாற்றியதால் பொருளாதாரத்தில் ஒரு திரிபுநிலையை உருவாக்கினார்கள். அதனால் எம்மால் எதிர்வுகூற இயலுமானவகையில் செலாவணி விகிதத்தை பேணிவருதல், வட்டி வீதத்தை பேணிவருதல் மற்றும் பணவீக்க வீதத்தைப் பேணிவருதல் பொருளாதார உறுதிநிலைக்கு மிகவும் இன்றமையாததாகும். இந்த அலுவல்களுக்கு மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை மிகவும் முக்கியத்துவம் வகிக்கின்றது. அரசியல் தேவைகளுக்காக மத்தியவங்கி நெறிப்படுத்தப்பட்டமையால் அதன் சுயாதீனத்தன்மை சீர்குலைந்தது. அதைப்போலவே பொருளாதாரத்தை நெறிப்படுத்துவதற்காக மக்களால் வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக மத்திய வங்கியின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதை தவிர்ந்தாக எமது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக நாங்கள் ஒருபோதுமே மத்திய வங்கியை பயன்படுத்தப் போவதில்லை. அதைப்போலவே அரசாங்க பொறுப்புமுயற்சிகளை நெறிப்படுத்தல் பற்றிய பாரிய உரையாடலொன்று தோன்றியுள்ளது. பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் கூருணர்வுமிக்தாக அமைகின்ற வலுச்சக்தி, நிதிச்சந்தை மற்றும் தேசிய பாதுகாப்புடன் நேரடியாகவே தொடர்புபடுகின்ற ஒருசில துறைகளில் அரசாங்கத்தின் பிரதான பங்கு நிலவவேண்டும். அதைவிடுத்து இலாபம் பெறுவதை நோக்கமாகக்கொண்ட தொழில்முயற்சிகள் அரசாங்கத்தினால் நெறிப்படுத்தப்படமாட்டாது. தொடர்ந்தும் பேணிவரப்படவேண்டிய மற்றும் கைவிடப்படவேண்டிய துறைகளை நாங்கள் இனங்கண்டுள்ளோம். அதைப்போலவே பிரஜைகளுக்கு அத்தியாவசியமான சேவைகளையும் பண்டங்களையும் இடையறாமல் நியாயமான விலையில் அத்துடன் உரிய தரத்தில் வழங்குவதற்காக பலம்பொருந்திய ஒழுங்குறுத்தல் அதிகாரசபையொன்று அவசியமென நாங்கள் கருதுகிறோம். அத்தகைய நிறுவனக் கட்டமைப்பினைப் பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
நாங்கள் மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக கற்றுக்கொண்ட மனிதர்கள்.
செல்வம் படைத்தவர்களிடமிருந்து செல்வத்தையும், தொழில்முயற்சிகள் உள்ளவர்களிடமிருந்து தொழில்முயற்சிகளையும், வீடுகள் உள்ளவர்களிடமிருந்து வீடுகள் என்றவகையிலுமாக ஆதனங்களை எமது ஆட்சியின்கீழ் சுவீகரித்துக்கொள்வதாக மற்றுமொரு பிரச்சாரத்தை அனுப்பிவைக்கிறார்கள். நாங்கள் சரதியலிடமிருந்து கற்றுக்கொண்டவர்கள் அல்ல. நாங்கள் மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக கற்றுக்கொண்ட மனிதர்கள். அவர்கள் முன்னெடுத்துவருகின்ற குறைகூறல்கள் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஒத்துவரமாட்டாதென்பதையே நாங்கள் கூறவேண்டி உள்ளது. அதைப்போலவே அரச மற்றும் தனியார் பிரிவுகளுக்கிடையில் நிலவுகின்ற தொடர்பினை “சீசருக்கு சொந்தமானதை சீசருக்கும் ஆண்டவனுக்கு சொந்தமானதை ஆண்டவனுக்கும்” என்றவகையில் நாங்கள் நன்றாக விளங்கிகொண்டுள்ளோம். நாங்கள் இந்த இரண்டையும் குழப்பியடித்துக் கொள்ளப்போவதில்லை. அரசியல்வாதிகள் என்றவகையில் எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள பங்கினையும் தொழில்முனைவோர் என்றவகையில் உங்களிடம் கையளிக்கப்படுள்ள பங்கினையும் நாங்கள் தெளிவாக பகிர்ந்துகொண்டிருக்கிறோம். எமது பொருளாதாரத்தின் ‘எஞ்சின்’ ஆக அமைவது பிரத்தியேக தொழில்முனைவோரும் கைத்தொழிலதிபர்களுமே. எமது அரச கட்டமைப்பின் தன்மை, சட்டங்களின் தன்மை, அரசிய அதிகாரத்துவத்தின் தன்மை போன்ற விடயங்கள் காரணமாக எமது பொருளாதாரம் சிறைவைக்கப்பட்டுள்ளது. இது சுதந்திரமானது எனக்கூறினாலும் எந்தவிதமான சுதந்திரமும் கிடையாது. அவசியப்பாட்டுக்கிணங்க அசைகின்ற பொருளாதாரமொன்று இருந்திருப்பின் 1950 இல் எமது ஏற்றுமதி வருமானம் 316 மில்லியன் டொலரக விளங்கியதோடு கொரியாவில் இது 25 மில்லியன் டொலராகும். அன்று கொரியாவைவிட 12 மடங்கு அதிகமான ஏற்றுமதி வருமானத்தை நாங்கள் பெற்றுக்கொண்டோம். எனினும் இன்று எமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலராக அமைகையில் தென் கொரியாவில் அது 685 பில்லியன் டொலராகும். எம்மைவிட 50 மடங்கிற்கு மேலான ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்றது. அதைப்போலவே நாங்கள் ஏன் 3,800 டொலர் என்கின்ற தலா வருமானத்தில் இறுகிப்போனோம்? அது பல தசாப்தங்களாக இறுகிப்போனதன் பெறுபேறாகும். ஊழலும் இலஞ்சமும், தேசிய திட்டத்துடன் நேரொத்ததாக பொருளாதாரத்தை நெறிப்படுத்தாமை போன்ற விடயங்களால் இறுகிப்போயுள்ளோம். வரவு செலவு ஆவணமொன்று வருகையில் முதலீட்டாளர்கள் ஐயப்பாட்டு நிலையிலேயே இருக்கிறார்கள். தொழில்முனைவோர் தமது பொருளாதாரத் தீர்மானங்களை பொருளாதாரரீதியான எதிர்வுகூறல்களுக்கு அமைவாகவே எடுக்கவேண்டியிருப்பினும் எமது தொழில்முனைவோர் ஞானக்கா போன்ற சோதிடம் கூறுபவர்களின் ஆலோசனைகளின்படியே எடுக்கவேண்டியுள்ளது. தற்போது நாட்டின் தொழில்முனைவோர் என்ன நேரிடுமென்ற அச்சத்துடனேயே இருக்கிறார்கள்.
நீங்கள் முதலீடு செய்யுங்கள், நாங்கள் அதன் பாதுகாப்பினை உறுதிசெய்வோம்.
எனினும் தரவுகளை சேகரித்தல், தரவுகளை பகுப்பாய்தல் போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டே உலகம் முன்நோக்கி நகர்கின்றது. தேசிய நோக்கங்களின் அடிப்படையில் நீங்கள் ஈடுபடவேண்டிய துறைகள் யாவை? அந்த துறைகளுக்கு அரசாங்கம் வழங்குகின்ற உட்கட்டமைப்பு வசதிகள் என்ன? அரச சேவையால் ஈடேற்றிக் கொடுக்கப்படவேண்டிய பணிகள் யாவை? என்பதை நாங்கள் சரிவர விளங்கிக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக அரச சேவையை அரசியல் நோக்கங்களுக்காக ஈடுபடுத்த மாட்டோம். கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுகக்கான அத்தியாவசியமான வெற்றிடங்களைத் தவிர்ந்த அரச சேவையை நிரப்பமாட்டோம். அரசாங்கத்திடமிருந்து பெறப்படவேண்டிய சேவைகள் பரந்துவிரிந்து காணப்படுவதற்குப் பதிலாக ஒருங்கிணைத்து வினைத்திறன்கொண்டதாக வழங்க அவசியமான பொறியமைப்பினை தயாரிப்போம். ஒருசில காலங்கடந்த சட்டங்களை மாற்றியமைத்து பொருளாதாரத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்கின்ற பின்னணியை அமைத்துக்கொடுப்போம். பொருளாதாரத்தில் கணிசமான வளர்ச்சியை கையகப்படுத்திக் கொள்ளாவிட்டால் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்வது தொடர்பில் எத்தகைய உண்மையான தேவை நிலவினாலும் எம்மால் அதனை சாதித்துவிட முடியாது. அதன் முன்னோடிச் செயற்பொறுப்பு உங்கள் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் முதலீடு செய்யுங்கள், நாங்கள் அதன் பாதுகாப்பினை உறுதிசெய்வோம். கடந்த காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பல கைத்தொழில்கள் சீர்குலைந்தன. அதற்கான காரணம் நீங்கள் மேற்கொண்ட தீர்மானங்களிலான தவறு அல்ல: பொருளாதாரத்தின் பாரிய வீழ்ச்சியே காரணமாகும். புதிய தொழில்முயற்சிகளை உருவாக்குவது சற்று கடினமான பணியாகும். அனுபவங்கள் வாய்ந்த, அதனூடாக அறிவினைப்பெற்ற, முகாமைத்துவ ஆற்றல்கள் படைத்தவர்களின் தொழில்முயற்சிகளை மீள்நிறுவுதல் மிகவும் முக்கியமானது. அதனால் நீங்கள் இறுகிப்போயுள்ள பராட்டே சட்டம் போன்ற சட்டங்களால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைத்துக்கொள்வதற்கான அனைத்துவிதமான பின்னணியையும் அமைத்துக்கொடுப்போம். நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புதிய தொழில்நுட்பமும் அறிவும் மேற்கிலேயே உருவாகின்றது. அந்த அறிவினை விரைவில் உறிஞ்சிக்கொள்ளத் தவறினால் எமது கைத்தொழிலதிபர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அவசியமான விருத்தியடைந்த மனிதவளத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும். பொருளாதார இலக்குகளுக்காக அவசியமாகின்ற மனித வளத்தை எமது கல்விமூலமாக கட்டியழுப்ப நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக உலகின் முன்னேற்றமடைந்த பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி கூர்மையாக்கிக்கொண்ட அறிவினை இலங்கைக்கு கொண்டுவருவோம். அதைப்போலவே உலகின் உழைப்புச் சந்தையில் முன்னேற்றமடைந்த பங்கினை கையகப்படுத்திக்கொள்ளவும் பொருத்தமான வகையில் கல்வியில் வேகமான மறுசீரமைப்பினை ஏற்படுத்துவோம்.
மிக அதிகமான தொழில்நுட்ப சொத்துவத்தைக் கொண்டுள்ள நாடே எதிர்கால உலகில் பலம்பொருந்தியதாக அமையும்.
மிக அதிகமான தொழில்நுட்ப சொத்துவத்தைக் கொண்டுள்ள நாடே எதிர்கால உலகில் பலம்பொருந்தியதாக அமையும். உலகில் உருவாகிய பாரிய தொழில்நுட்ப மாற்றங்களை எமது எமது கல்வியில் சேர்த்து முன்நோக்கிப் பயணிப்பதற்காக நாங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பற்றிய கொள்கை வெளியீட்டினை தனிவேறாக தயாரித்துள்ளோம். ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளையும் புத்தாக்குனர்களையும் உருவாக்கிக்கொள்வதோடு எமக்கே தனித்துவமான துறைகளை இனங்காணலும் மேற்கொள்ளப்படும். அதைப்போலவே எமக்கு இருக்கின்ற சிறிய சந்தைக்குப் பதிலாக அரச நோக்கு மற்றும் அனுசரணையின்பேரில் வெளிநாட்டுச் சந்தைகளை கைப்பற்றிக்கொள்கின்ற வரத்தக தூதுவர் செவையை உருவாக்குவோம். எமது தொழில்முனைவோரும் நாட்டில் நிலவுகின்ற 22 மில்லியன் சந்தையிலிருந்து வெளியே செல்லாவிட்டால் எமது பண்டங்களின் தரத்தை பாதுகாத்து கிரயத்தைக் குறைத்துக் கொள்வதற்கான இயலுமை கிடைக்கமாட்டாது. உற்பத்திக் கிரயத்தைக் குறைத்துக்கொள்வதற்காக இரண்டு வருடங்களுக்குள் மின்சார பில்லை மூன்றில் ஒன்றால் குறைத்துக்கொள்கின்ற நோக்கமொன்று இருக்கின்றது. அதைப்போலவே 2030 இல் உயிர்ச்சுவட்டு எரிபொருளுக்கான கேள்வி ஆகக்குறைந்த மட்டத்திற்கு வந்து 2050 இல் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி முதன்மைத்தானத்தை அடையும். எமக்கு அவசியமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள வெளிநாட்டு முதலீடுகள் அத்தியாவசியமாகும். 1978 இல் இருந்து 2022 வரை 22 பில்லியன் டொலர் முதலீடே நாட்டுக்குள் வந்திருக்கிறது. வியட்நாமில் கடந்த வருடத்தில் மாத்திரம் 23 பில்லியன் டொலர் முதலீடு கிடைத்திருக்கிறது. ‘சர்வதெச தொடர்புகள் உள்ளவர்கள்’, ‘வெளிநாட்டு நண்பர்கள் உள்ளவர்கள்’ 42 வருடங்களாக 22 பில்லியன் டொலர்ளை மாத்திரமே முதலீடாக கொண்டுவந்திருக்கிறார்கள். மூலதன அவசியப்பாடு, தொழில்நுட்ப அவசியப்பாடு மற்றும் உலக வர்த்தக சங்கிலித்தொடரில் பிரவேசிக்கின்ற நோக்கத்துடன் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வாய்ப்புகளை எற்படுத்திக் கொடுப்போம். அதைப்போலவே அவர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளுக்கு ஒத்த சலுகைகளை உள்நாட்டு முதலீட்டாளர்களாகிய உங்களுக்கும் வழங்குவோம்.
உங்களிடமிருந்து எங்களுக்கு ஒரு கிளாஸ் பச்சைத்தண்ணீர்கூட வேண்டாம். அரசியல்வாதிகள் என்றவகையில் எங்களுக்கு நிலவுகின்ற தேவையைப்போன்றே தொழில்முனைவோரான உங்களுக்கும் தேவை நிலவுகின்றது. இந்நாட்டு வரலாற்றில் முதல்த்தடவைாக அரசியல்வாதியினதும் தொழில்முனைவோரதும் நோக்கங்கள் இணையாக பயணிக்கின்ற அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் நீங்களும் நாமனைவரும் இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றாக உழைக்கின்ற ஒரே சக்தியாக மாறுவோம்.