-Colombo, October 31, 2023-
இங்கு இருக்கின்ற எவருமே அரசியலில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவிற்கு வரவில்லை. பெரும்பாலானவர்கள் தொழில்தேடிக்கொண்டு, பிள்ளைகளின் கல்விக்காக அல்லது இலங்கையைவிட பாதுகாப்பான நாடொன்றைத் தேடியே வந்துள்ளீர்கள். நீங்கள் இலங்கையிலிருந்து மிகவும் தொலைவில் அமைந்துள்ள நாட்டில் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையைக் கழிக்கையில் இலங்கை பற்றி மிகுந்த கவனத்துடன் இருக்கின்ற, இலங்கைச் சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ள ஒரு குழுவென்ற வகையிலேயே இன்று இதில் பங்கேற்றுள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு இருக்கின்ற பெரும்பாலானவர்கள் இதற்கு முன்னர் எம்மைச் சந்தித்ததில்லை. பெரும்பாலானவர்கள் எம்மைச் சந்திக்க வந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாக அமையக்கூடும். அதைப்போலவே நீங்கள் அனைவரும் இதற்கு முன்னர் ஏதாவது அரசியல் இயக்கத்திற்கு உதவிபுரிந்திருக்கக்கூடும். பங்களிப்பு செய்திருக்கக்கூடும். அது உங்களின் சாதகமான எதிர்பார்ப்புகளுக்கானதே. பெரும்பாலானவர்கள் தலைவர்களை அதிகாரத்திற்கு கொண்டுவர, அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர உதவியது தனிப்பட்ட நன்மைகளுக்காகவல்ல. ஆனால் அந்த தலைவர்களும் அரசாங்கங்களும் உங்களின் எதிர்பார்ப்புகளை இம்மியளவேனும் பொருட்படுத்தாமல் சிதைத்துவிட்டார்கள். அந்த அரசியல் கட்சிகள் பற்றி தலைவர்கள் பற்றி விரக்தியும் கோபமும் நிலவக்கூடும். அதுதான் கடந்த காலத்தில் கோல்பேஸ் மைதானத்தில் வெளிப்பட்டது. அதற்கு உங்களின் நல்வாழ்த்துப் பங்களிப்பு கிடைத்தது. அது ஏன்? உங்களால் கொண்டுவரப்பட்ட தலைவர்கள் உங்களின் எதிர்பார்ப்புகளைச் சிதைத்தமையாகும். நான் உங்களுக்கு ஓர் எதிர்பார்ப்பினைக் கொடுக்கிறேன். நீங்கள் எம்மீது வைக்கின்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பினை கடுகளவேனும் சிதைக்க இடமளியோம் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். உங்களுக்கு எமது நாடு மீதுள்ள அக்கறையும் எதிர்பார்ப்பும் சிலவேளை உங்களைவிட அதிகமாக எமக்கும் இருக்கின்றது. ஏனென்றால் இவ்விதமாக எமது தாயகத்தினால் ஓரங்குலம்கூட முன்நோக்கி நகரமுடியாது. இனிமேலும் எமது மக்களால் வேதனைகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டு வாழஇயலாது. இதனை கட்டாயமாக மாற்றியமைத்திட வேண்டும். இந்த நாடு தொடர்ந்தும் இவ்விதமாக பயணிக்கவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா? எமது நாட்டு மக்கள் இவ்விதமாக வாழவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா. அதனால் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்கான உறுதியான திடசங்கற்பமும் மாறாத நோக்கமும் எமக்கு இருக்கின்றது. நாங்கள் நிச்சயமாக இலங்கையை நலமான திசையைநோக்கி மாற்றியமைப்போம்.
நீங்கள் அறிந்திருந்தாலும் தற்போது எமது நாட்டின் அவலநிலை எத்தகையது என்பதை விளங்கிக்கொள்வதற்காக ஒருசில விடயங்களைக் கூறுகிறேன். கண்களில் சிறிய கோளாறு சம்பந்தமாக சிகிச்சைபெற வைத்தியசாலைக்குச் சென்றால் வாழ்நாள் முழுவதிலும் பார்வையை இழக்கின்ற நிலை எற்படுகின்றது. பச்சிளம் குழந்தையின் நோய்க்காக ஊசி மருந்து போட்டால் பிள்ளை இறக்கின்றது. எமது கண்ணெதிரில் நீதிமன்றத்தில் குற்றவாளியாக தண்டனை விதிக்கப்பட்ட, கடுமையான குற்றச்செயல்களைப் புரிந்த, குற்றச்செயல்களுக்கு பங்களிப்புச் செய்தவர்கள் நாட்டை ஆட்சி செய்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடாக எமது நாடு மாறி உள்ளது. குற்றச்செயல்கள் கட்டுக்கடங்காத நாடாக எமது நாடு மாறியுள்ளது. அப்படிப்பப்பட்ட நாடு எமக்குத் தேவையா? இதனை மாற்றவேண்டிய தேவை கிடையாதா? அண்மையில் மத்திய வங்கி அறிக்கையின்படி மக்களில் 68% மூன்றுவேளை உணவு உண்பதில்லை. உண்கின்ற அளவினைக் குறைத்து விட்டார்கள். அப்படியில்லாவிட்டால் விருப்பமற்ற உணவினை உட்கொள்கிறார்கள். மக்களுக்கு சரியான உணவுவேளையொன்று கிடையாது. அதைப்போலவே நாடு பாரிய கடன் மேட்டில் இறுகிப்போயுள்ளது.
கடந்த திசெம்பர் 31 ஆந் திகதியில் எமது நாட்டின் கடன்அளவு 30 ரில்லியன் ஆகும். (30 இலட்சம் கோடியாகும்) சனத்தொகை 2.2 கோடி. இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு அற்ற நாடாகும். ஒவ்வோர் இளைஞனும் யுவதியும் ஏதாவது வருமானம் தரக்கூடிய தொழில்தேடி இலங்கைக்கு வெளியில் செல்ல தூண்டப்பட்டுள்ளார்கள். இன்று எமது நாடு இவ்வாறான நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி உள்ளது. தொடர்ந்தும் இவ்விதமாக முன்நோக்கி நகரமுடியாது. இந்த பயணப்பாதையை நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும். முதலில் நாங்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக நாட்டை உருப்படியாக்கவேண்டும். எமது நாட்டில் ஏறக்குறைய 75 வருடங்களாக பெரும்போக்கில் இருந்த இரண்டு கட்சிகளிடமே ஆட்சி மையப்படுத்தப்பட்டிருந்தது. இன்றளவில் அந்த இரண்டு கட்சிகள் இரண்டல்ல என்பது நீரூபணமாகி உள்ளது. இலங்கையில் முதல்த்தடவையாக இந்த இரண்டு அரசியல் பாசறைகளும் ஒன்றுசேர்ந்துள்ளன. ஊழல், மோசடியின்போது இவர்கள் ஒரே பாசறையில்தான் இருக்கிறார்கள். மோசடியில் ஈடுபடுகிறார்கள். கடனெடுத்தல் மற்றும் விற்பனையின்போது பொருளாதாரக் கொள்கை ஒன்றாகும்.
இதற்கு முன்னர் ஆட்சியாளர்களுக்கு பயந்து முடங்கிய மக்களே இருந்தார்கள். அமைச்சர் வரும்போது வடிகானில் இறங்குகிறார்கள். ஊரில் அரசியல் அதிகாரியிடமிருந்து அதிகாரத்தை பெற்றுக்கொண்ட சண்டியர்கள் இருந்தார்கள். ஊர் மக்களை பயமுறுத்தினார்கள். இன்று முதல்த்தடவையாக அமைச்சர் மக்களைக்கண்டு அஞ்சுகிறார். இலங்கையில் மக்கள் அரசியல்ரீதியாக கூர்மையடைந்து முனைப்பானவர்களாக மாறியுள்ளார்கள். அது எந்தளவு எனக் கூறுவதாயின் 69 இலட்சம் வாக்குகளைப்பெற்று அதிகாரத்திற்கு வந்த சனாதிபதியை விரட்டியடிக்கும் அளவுக்கு மக்கள் வெற்றியடைந்துள்ளார்கள். இன்று இருப்பவர்கள் வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய மக்களே. அது எமக்கு நல்லதொரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. முன்பு யு.என்.பி. அல்லது ஸ்ரீலங்கா ஆட்சியைக் கட்யெழுப்பிக்கொண்ட மக்கள் வொச்சர் ஜொப்பிற்கு எம்மிலும் ஒருசிலரை அனுப்பிவைக்கவேண்டுமென்றே அச்சந்தர்ப்பத்தில் எம்மை நோக்கினார்கள். பாராளுமன்றத்தில் சத்தம்போட நான்கு ஐந்து பேரை அனுப்பிவைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்தான் எம்மைத் தெரிவுசெய்தார்கள். எங்கள் அரசாங்கமொன்றை அமைத்திட, பிரதான எதிர்க்கட்சியாக மாற்ற அன்று மக்களுக்கு தேவை இருக்கவில்லை. இன்று இலங்கையின் அரசியல் மாறிவிட்டது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஆர்வமும் எதிர்பார்ப்பும் தோன்றியுள்ளது.
இந்த அனைத்தையும் பார்க்கையில் அதிகாரத்தைக் கட்டியெழுப்புகின்ற ஆற்றல்படைத்த வாய்ப்பொன்று உருவாகி இருக்கிறதென்பது எமக்குப் புலனாகின்றது. எமக்கு அதிகாரத்திற்கான அவசியப்பாடு இருந்தாலும் அதற்குத் தேவையான நிலைமைகள் உருவாகாமல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஏனைய எக்காலத்தையும்விட மாற்றமொன்றிற்கான தேவைக்கான காலம் பிறந்துள்ளது. தற்போது இருப்பது அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்ள நாங்கள் திறமையானவர்களா, திறமையற்றவர்களா? என்கின்ற விடயமாகும். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்து வளங்களையும் திரட்டி, சிறப்பாக முகாமைசெய்து, நெறிப்படுத்த வேண்டியதுதான் தேசிய மக்கள் சக்தியின் பொறுப்பு.
தோழர்கள் முன்வைக்கின்ற கேள்விதான் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வாய்ப்பு உருவாகியுள்ளபோதிலும் தேர்தலை நடத்தாமல் எவ்வாறு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது? என்பதாகும். சனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. அடுத்த வருடத்தின் ஒக்டோபர் 17 ஆந் திகதிக்கு முன்னர் எமது நாட்டில் சனாதிபதி தேர்தல் நடாத்தப்படல் வேண்டும். அடுத்த வருடத்தின் ஒக்டோபர் இக்காலத்தில் இலங்கையில் புதியதோர் அரசாங்கம், புதியதோர் ஆட்சி. இந்த அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்காக கருத்தியல்சார்ந்த போராட்டமொன்றை நடாத்த வேண்டியுள்ளது. இன்று பிரதான ஊடகங்களுக்குப் பதிலாக சமூக வலைத்தளங்கள் மக்கள்மத்தியில் சென்றுள்ளன. இன்று எங்களையும் வெளிநாடுகளிலுள்ள உங்களையும் நெருக்கமடையச் செய்விக்க பிரதானமாக உறுதுணையாக அமைந்தவை சமூக வலைத்தளங்களே. இன்று உங்களால் சமூக வலைத்தளங்கள் ஊடாக இலங்கை மக்கள் மீது பலம்பொருந்திய அழுத்தத்தைக் கொடுக்கமுடியும். உலகத்தைக் கண்ட, உலகத்தின் சமூகப் பாதுகாப்பினை அனுபவித்த, சுகாதாரக் கவனிப்பு, கல்விக் கவனிப்பு, தொழில்கள் பற்றிய அனுபவம் பெற்ற சமுதாயம் என்றவகையில் உங்களால் எமது நாட்டின் சகோதர மக்களுக்கு விழிப்புணர்வூட்ட முடியும். அவர்களிடம் எம்மைவிட செல்வம் நிலவுகின்றது. அவர்களிடம் அரச அதிகாரம் இருக்கின்றது. மரபுரீதியான ஊடகங்களில் எம்மைவிட உயர்வான இடத்தில் இருக்கிறார்கள். அவையனைத்தையும்விட பலம்பொருந்தியது மக்களின் குரல். அதனால் பொதுமக்களை ஒழுங்கமைத்து அந்த சக்திகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதுதான் தேசிய மக்கள் சக்தியின் கடமைப்பெறுப்பு.
இந்த அதிகாரப் பரிமாற்றத்தின்போது வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களாகிய உங்களுக்கு அதற்கான பாரிய செயற்பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த சனாதிபதி தேர்தலின் மிகப்பெரிய செயற்பொறுப்பினை வெளிநாடு சென்றுள்ள இலங்கையர் ஆற்றினார்கள். அதனைச் சாதிக்க வேண்டுமாயின் எமக்கிடையில் ஏதேனும் இணக்கப்பாடு, தெளிவற்ற இடங்களை தீர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் கூறுவது சரி, நாங்கள் உங்களை எவ்வாறு நம்புவது? எனும் கேள்வி எழுகின்றது. கேள்வி நியாயமானதே. பல சந்தர்ப்பங்களில், பல்வேறு தலைவர்கள், பலவிதமான வாக்குறுதிகளைக் கொடுத்த அரசாங்கங்கள், பலதலைமுறையினராக உங்களை இயலுமானவரை ஏமாற்றி இருக்கிறார்கள். எம்மைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள், நெருங்கிப் பழகுங்கள். நாங்கள் கூறுவது என்னவென விளங்கிக்கொள்ளுங்கள். சிலவேளையில் இவ்வளவு காலம் தாமதித்தது அநியாயமென உங்களுக்குத் தோன்றும்.
இரண்டாவதாக நீங்கள் கேட்பீர்கள், உங்களால் அதிகாரத்தைப் பெறமுடியும். ஆனால் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அரசாங்கத்தை நெறிப்படுத்த குழுவொன்று இருக்கிறதா? என. நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் யார்? பொருளாதாரத்தைப் பொறுப்பேற்பது யார்? அந்த கேள்விகள் நியாயமானவையே. ஏனைய இரண்டு கட்சிகளிடம் இந்த கேள்விகளைக் கேட்பதில்லையே. அவர்கள் அரசாங்கங்களைக் கொண்டுநடாத்தி இருக்கிறார்கள், செயலாற்றிய விதத்தையும் அறிவார்கள். பசில் ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க நிதி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளும்போது என்ன நினைத்தீர்கள்? அவர்கள் செய்தவை தெரியும். ஆனால் நாங்கள் அதிகாரத்தைக் கேட்கும்போது எங்களிடம் கேட்கிறார்கள், “உங்களால் செய்ய முடியுமா? செய்வதற்கான டீம் ஒன்று இருக்கின்றதா?” என. எம்மைப் பற்றிய சிறிய சந்தேகமொன்று நிலவுகின்றது.
ஆம், எமக்கு குழுவொன்று அவசியம், எப்படிப்பட்ட குழு? தனிப்பட்டவகையில் எதனையும் எதிர்பார்த்திராத, தமது அறிவு, தமது நேரம், தமது உழைப்பினை நாட்டுக்காகவும் பொது மக்களுக்காகவும் செலவிடவல்ல நேர்மையான மனிதர்கள். அந்த நேர்மை எங்கள் குழுவிடம் இருக்கின்றது. நான் ஓர் ஆள் என்றவகையில் உயர்தரம் பயில்கையிலேயே அரசியலுடன் தொடர்புகோண்டேன். இந்த அரசியலுடன் இணைந்து 34 – 35 வருடங்களாகின்றன. நானோ எமது இயக்கத்தைச் சேர்ந்த எவருமோ தமக்கு கிடைத்த அமைச்சுப் பதவிகள், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள், தமக்கு கிடைத்துள்ள அரசியல் அதிகாரம் எதையும் பொதுப்பணத்தை விரயமாக்கவோ அல்லது திருடவோ பிரயோகிக்கவில்லை. எமது நாட்டையும் எமது மக்களையும் இந்த பேரவலத்தில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான நேர்மையான நல்லெண்ணம் எமக்கு இருக்கின்றது. அதோ அந்த டீம் எங்களிடம் இருக்கின்றது. தம்மிடமுள்ள சாத்தியவளம், தம்மிடமுள்ள அறிவினை உண்மையாகவே சமூக முன்னேற்றத்திற்காக செலவிடக்கூடியவர்களே தேவை. அறிவு இருந்தால் மாத்திரம் போதாது. அயோக்கியத்தனமான தேவைகளுக்குப் பதிலாக சமூகத் தேவைகளுக்காக எமது அறிவினை, சாத்தியவளங்களை பிரயோகிப்போமாயின் பொருளாதாரம் பற்றிய, வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய, கல்வி, சுகாதாரம், விவசாயம் பற்றிய திறன்கள் உள்ள ஆற்றல்கள் உள்ள குழுவொன்று எம்மிடம் இருக்கின்றது. பொருளியல் பற்றிய அறிவுபடைத்த பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் ஜனக் குமாரசிங்க, பேராசிரியர் சீதா பண்டார எமது பொருளாதாரக் குழுவில் இருக்கிறார்கள். ஐக்கிய அமெரிக்காவின் பெரும்பாலான ஆராய்ச்சி நிறுவனங்களில் இலங்கையர்கள் தொழில்புரிந்து வருகிறார்கள்.
அந்த அறிவினைப் பெற்றுக்கொண்டு நாட்டை முன்னேற்ற எமது நாட்டில் அரசாங்கமொன்று இருக்கவில்லை. தலைவரரொருவர் இருக்கவில்லை. அதோ அந்த ஆட்சியாயாளன்தான் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளன். தேசிய மக்கள் சக்தியின் பிரதமர், அந்தந்த விடயங்களை யார்யார் பொறுப்பேற்பது என்பது பற்றிய மொத்த திட்டமொன்று எம்மிடம் இருக்கின்றது. பிரதமருடன் வேலைசெய்கின்ற அணி யாரென எம்மிடம் திட்டமொன்று இருக்கின்றது. ஏனென்றால் தனியொருவரால் அற்புதம் நிகழ்த்திவிட முடியாது. அதனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ் அமைக்கப்படுவது மரபுரீதியான அமைச்சரவையொன்று அல்ல. அதற்கு அப்பால் செல்கின்ற சமூகத்தின் ஒவ்வொருவரினதும் முனைப்பான பங்களிப்பினை பெறத்தயாரான அரசாங்கமாகும். அது எமது நாட்டில் இடம்பெறுகின்ற புதிய மாற்றமாகும். அதைப்போலவே அரசாட்சி செய்கின்ற வழிமுறையும் வித்தியாசமானது.
அடுத்த விடயமாக எமது நாட்டுக்கு பலம்பொருந்திய அரச ஆட்சியொன்று தேவை. எமது நாட்டின் அரச ஆட்சிப் பொறியமைப்பு மிகவும் பலவீனமானது. ஒட்டுமொத்த அரச பொறியமைப்பையும் அரச செயற்பாங்கினையும் அரசியலில் இருந்து விடுவித்து அனைவருக்கும் சனநாயகரீதியாக அரசாங்க தொழிலில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பையும் அரசாங்கத்துடன் தொழில்முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். அதைப்போலவே அமைச்சர் மற்றும் அவரைச் சுற்றிக் குழுமியுள்ள வளையத்தின் கையில்தான் ஒட்டுமொத்த பொருளாதார தேகமுமே ஒருங்கிணைந்துள்ளது. இதனை மாற்றியமைத்திட வேண்டும். நாங்கள் பொருளாதார சனநாயகத்தை உருவாக்குவோம். அது மிகவும் முக்கியமானது. உங்களிடம் பொதிந்துள்ள திறமைகள், திறன்கள், உங்களிடம் இருக்கின்ற கருத்திட்டத்தின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பிரவேசிக்க உங்களுக்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்படும். ஒரு கும்பலின் கைகளில், மூன்றுநான்கு பேர்களின் கைகளில் உள்ள பொருளாதாரத்தைக் கொண்டு நாட்டை மீட்டெடுக்க முடியாது. அனைவருக்கும் சனநாயகரீதியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை முன்நோக்கி நகர்த்துவதற்கான இயலுமை கிடைக்கும். நாங்கள் பொருளாதார சனநாயகத்தை உருவாக்குவோம்.
உலகின் எந்தவொரு நாட்டுக்கும் தனித்து வாழ முடியாது. பொருளாதாரத்தினால் தொடர்பாடலினால் தொழில்நுட்பத்தினால் உலகம் ஒன்றாக மூடிச்சுப்போடப்பட்டுள்ளது. பலம்பொருந்திய நாடுகளுக்கிடையில் யுத்தம் பிரகடனஞ் செய்யப்பட்டிராவிட்டாலும் அதிகார மோதல்கள் நிலவுகின்றன, ஐக்கிய அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையில், பொருளாதார முரண்பாடு நிலவுகின்றது. அதற்காக சந்தையைக் கைப்பற்றிக் கொள்கின்ற மோதலொன்று நிலவுகின்றது. இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையில் மோதலொன்று நிலவுகின்றது. ரஷ்யா ஒரு புறத்திலும் ஐரோப்பா மற்றுமொரு புறத்திலும் வருகின்றது. உலகின் பல்வேறு அதிகார கேந்திரங்கள் இருக்கின்றன. இலங்கைக்கு ஓர் அதிகார கேந்திரமாக மாறக்கூடிய சாத்தியவளம் இத்தருணத்தில் கிடையாது. எனினும் அந்த அதிகார கேந்திரங்களில் நிலவுகின்ற முரண்பாடுகளுக்கு தடுக்கமுடியாதவகையில் தரப்பினர்களாக அல்லது அதனால் பாதிக்கப்படுகின்ற பங்காளிகளாக மாறியுள்ளது. அதிகார மோதல் நிலவுவது எம்மைக் கைவிட்டல்ல. உலக தேசப்படத்திலிருந்து எம்மை அழித்தல்ல. அதிகார கேந்திரமாக அமையாவிட்டாலும் நாங்களும் உலக தேசப்படத்தில் இருக்கிறோம். அப்படியானால் முதலாவது வெளிநாட்டுக் கொள்கையாக அமைவது அந்த எந்தவோர் அதிகார கேந்திரத்துடனும் நேரடியாக அல்லது மறைமுகமாக பங்கிப்பினை வழங்காத அணிசேரா வெளியுறவுக் கொள்கையாகும்.
விற்பனை செய்தல் மற்றும் கடனுக்கு வாங்குதலை நாங்கள் எண்பதாவது தசாப்தத்தில் தொடங்கினோம். ரணில் விக்கிரமசிங்க இன்றும் எதிர்பார்ப்பது எதனை?எப்படியாவது கடன்பெறுவதையாகும். இருக்கின்றவற்றையும் விற்றுத் தீர்ப்பதாகும். அது ஒரு புதிய பயணமா? அது பழைய தோல்விகண்ட பயணப்பாதையாகும். நாங்கள் அதிலிருந்து தீர்வுக்கட்டமான வகையில் வித்தியாசப்பட வேண்டும். உலக சந்தையின் பொருளாதாரத்தின் ஒரு பகுதியை கைப்பற்றிக் கொள்வதற்கான திட்டமொன்று எம்மிடம் இருக்கின்றது.
உலகின் புதிய தேவைப்பாடுகளுக்கு அவசியமான அறிவு, உலகின் புதிய அவசியப்பாடுகளுக்கு அவசியமான பண்டங்களுக்கான உலகச் சந்தையில் ஒரு பங்கினைக் கைப்பற்றிக் கொள்வதில் நாங்கள் வெற்றியடையவேண்டும். உலகில் எந்தளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? ஆனால் நாங்கள் ஒரு நாடு என்றவகையில் அதே இடத்தில் தான். இந்த ஆட்சியாளர்கள் வெட்கப்படவேண்டியதில்லையா? வெள்ளைக்காரன் போகும்வேளையிலும் எமது பிரதான பொருளாதாரம் தேயிலை, இரப்பர், தெங்கு. இன்றும் அதே பொருளாதாரமே. நாங்கள் உலகில் இடம்பெறுகின்ற புதிய மாற்றத்திற்கு ஒத்துவரக்கூடிய பண்டங்களையும் சேவைகளையும் கையகப்படுத்திக் கொள்வதில் தோல்வியடைந்ததன் பாதகவிளைவுகளை இன்று அனுபவித்து வருகிறோம்.
புதிய உலகிற்கு அவசியமான அறிவினைப் பெற்றுக்கொள்கின்ற இலங்கையை நாங்கள் உருவாக்கிட வேண்டும். உலகின் விருத்திக்கு அவசியமான பண்டங்களை உற்பத்திசெய்கின்ற தொழிற்சாலைகளை நாங்கள் ஆரம்பிக்கவேண்டும். அதோ அத்தகைய பண்டங்களினதும் சேவைகளினதும் உற்பத்தியால் எதிர்கால இலங்கையை நாங்கள் கட்டியெழுப்புவோம். கடனெடுப்பதால் விற்பனை செய்வதால் இந்த நாட்டைக் கரைசேரக்க இயலாது.
பாலஸ்தீன – இஸ்ரவேல் மோதலில் ஈரான் ஆயுதங்களுடன் இடையீடுசெய்தால் உலகில் மீண்டும் மிகப்பெரிய மோதல் உருவாகும். பாலஸ்தீன – இஸ்ரவேல் யுத்தம் காரணமாக எதிர்காலத்தில் எண்ணெய் விலை அதிகரிக்கக் கூடுமென ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். எம்மால் உலகின் பெருந்தொற்றுகளைத் தடுக்க முடியாது. யுத்தங்களை தடுக்க முடியாது. பாரிய நிதிசார் வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. உலகில் பெருந்தொற்றுகள், யுத்தங்கள், நிதிசார் வீழ்ச்சிகள் உருவாகையில் அதற்கு தாக்குப்பிடிக்கக்கூடிய பொருளாதாரமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். எமது நாட்டின் வளங்கள், எம்மால் கையகப்படுத்திக் கொள்ளக்கூடிய சந்தை, எம்மிடம் இருக்கின்ற முகாமைத்துவம், தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துக்கொண்ட புதிய சந்தையொன்றைத் தேடிக்கொண்டு பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியின்பால் நாங்கள் பிரவேசிக்க வேண்டும். அதுதான் எமது பொருளாதாரம், நிலைதளராத பொருளாதாரம். “ஐக்கிய அமெரிக்காவிற்கு தும்மல் வந்தால் எமக்கு தடிமன் வரும்.” அது சீனாவுக்கு, தென் கொரியாவுக்கு, வியட்நாமிற்கு ஏற்படுவதில்லை. அந்த நாடுகள் உலக சந்தையில் பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் ஒரு பங்கினைக் கையகப்படுத்தி உள்ளன. வளர்ச்சியை அகப்படுத்திக் கொண்டுள்ளன. நாங்கள் படிப்படியாக சரியான இடங்களைத் தெரிவுசெய்து வேகமாக தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக நெறிப்படுத்தவேண்டும்.
நாங்கள் மாற்றமடையவேண்டிய இடங்களை இனங்கண்டுள்ளோம். அதோ அதனை வேகமாக தொடர்நடவடிக்கைகளுடன் நாங்கள் நெறிப்படுத்துவோம். எங்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் அதிகாரத்தைப் பெற்றபின்னர் இந்த நாட்டைக் கட்டியெழுப்பவும் அவசியமான குழுவும் நோக்கும் விசேட தேவையும் நிலவுகின்றது. நாங்கள் அந்த வேலையைச் செய்வோம். இது எம்மால் மாத்திரம் சாதிக்கக்கூடிய ஒன்றல்ல. நீங்கள் இலங்கைக்கு வெளியில் வசித்தாலும் இன்றும் இலங்கை ஏதேனுமொரு வெற்றியைப் பெற்றால் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். நீங்கள் ஐக்கிய அமெரிக்காவில் வசித்தாலும் நீங்கள் அதிகமாக பார்ப்பது இலங்கையின் தகவல்களையாகும். செவிமடுப்பது இலங்கையின் பாடல்களையாகும். அதாவது நாங்கள் உடலால் தொலைவில் இருந்தாலும் எமது கடப்பாடுகள் பெருநிலத்துடனேயே இருக்கின்றன. எமது அனைவரதும் மனங்களில் சுபமான கனவு நிலவுகின்றது. எமது தாயகத்தை முன்னேற்றமடைந்த நாடாக, அதில் வசிக்கின்ற மக்கள் அழகான வாழ்க்கையைக் கழிக்கின்ற நாட்டை எதிர்பார்க்கின்ற கனவொன்று இருக்கின்றது. அது எனக்கும் இருக்கின்றது. உங்களுக்கும் இருக்கின்றது. அதனால் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து அந்த கனவை நனவாக்குவோம். அதற்காக தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற வேண்டும். அது ஒர் அரசியல் இயக்கமல்ல. அது மக்கள் இயக்கமாகும். அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அதிகாரத்தைக் கையகப்படுத்திக் கொள்வோம்.