மலையகத் தமிழ் மக்கள் இனியும் இந்த அழுத்தத்தைத் தாங்க வேண்டியதில்லை
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்
மலையக தமிழ் மக்கள் எமது நாட்டிற்கு வருகை தந்து 200 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அவர்களை கொண்டுவருவது 1820 இல் தொடங்கியது. ஒரு உழைக்கும் சமூகமாக முதன்முதலில் கொண்டுவரப்பட்டது, வருகை தந்தது 1823 இல் ஆகும். கடந்த 200 வருடங்களில் இலங்கையின் குடிமக்களாக மலையகத் தமிழ் சமூகம் மிகுந்த துன்புறுத்தல்களுக்கு உட்பட்டிருக்கின்றனர். இந்த சமூகத்தில் 67% ஆனோர் இன்றும் சிறிய சுண்ணாம்பு அறைகளிலேயே (Lime rooms) வசிக்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் நிலையும் அப்படித்தான். அவர்களுக்குச் சொந்தமாக நிலங்கள் இல்லை, பிள்ளைகளுக்குச் சரியான கல்வி இல்லை, இன்றும் இலங்கையில் அதிகளவு சுகாதாரப் பிரச்சினைகளால் அவதியுறும் மக்கள் அவர்களே. அவ்வாறே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடந்தாலும் வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதும் இவர்களே.
ஆட்சியாளர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த மக்களின் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கப்பட்டன. 1948 ஆம் ஆண்டு வாக்குரிமை பறிக்கப்பட்ட பின்னர் அவர்கள் 35 வருடங்கள் வாக்குரிமை இல்லாமல் இந்த நாட்டில் இருந்தனர். இந்த அரசாங்கங்கள் அவர்களை இலங்கைப் பிரஜைகளாகக் கருதுவதில்லை. நாடு, நிலம், வீடு, முறையான கல்வி, சுகாதார வசதிகள் இன்றி இன்றும் அந்நியர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மலையக தமிழ் மக்கள் என்பதும் இலங்கைப் பிரஜைகள். இலங்கையர் என்ற வகையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து அடிப்படை உரிமைகளும் அவர்களுக்குக் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். எனினும் 200 ஆண்டுகள் கடந்தும் அந்த அடிப்படை அங்கீகாரம் கூட இவர்களுக்கு வழங்கப்படவில்லை. தேசிய மக்கள் சக்தி இந்த சமூகத்தை இலங்கை பிரஜைகளாக கருதுகிறது. மேலும், “தாய்நாட்டிற்கோர் பலம், கெளரவமான குடிமகன்” ஐ உருவாக்கும் நோக்கில் தேசிய மக்கள் சக்தி இம்மக்களின் பிரச்சினைகளுக்காக தலையீடு செய்கிறது. அவர்களைப் பற்றிய 200 ஆண்டுகளைக் கொண்டாடுவது அல்ல எங்கள் நோக்கம். தேசிய மக்கள் சக்தியாகிய நாம் கொள்கை ரீதியாகவும், வேலைத்திட்டமாகவும், மலையகத் தமிழ் மக்களை இலங்கைப் பிரஜைகளாகவே கருதி, ஏனைய இலங்கைப் பிரஜைகளுக்குச் சமமான அனைத்து உரிமைகளையும் இம்மக்களுக்கும் பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை தொடர்வோம்.
அந்த வகையில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலையகத் தமிழ் மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு வருவதுடன், ஒக்டோபர் 01 முதல் 15 வரையிலான காலப்பகுதியில், “மலையகம் 200” என அந்த மக்களின் உரிமைக்காக விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காலப்பகுதியாக பெயரிடப்பட்டு, பல நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹட்டன் பிரகடனத்தை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஹட்டனில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர திஸாநாயக்க உட்பட பலதரப்பட்ட தலைவர்களின் பங்குபற்றுதலுடனும், மலையகத் தமிழ் மக்களின் பங்களிப்புடனும் அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டம் வலுப்படுத்தப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படும்.
இனியும் இம் மக்கள் இந்த அழுத்தத்தை தாங்கக்கூடாது என்ற உறுதியுடனும், இந்த மக்களின் வாழ்வுரிமைக்காகவும் நாம் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவதுடன், ஏனைய அனைத்து இலங்கையர்களும் தலையிடுவார்கள் என்றும் நம்புகின்றோம். அத்துடன், இப்போராட்டத்தில் இணைந்து வெற்றிபெறும் வரை கைகோர்த்து முன்செல்ல அனைவரது தலையீட்டையும் நாம் எதிர்பார்க்கிறோம்.
200 ஆண்டுகள் பூர்த்தியாகும் மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலாநிதி பெருமாள் சிவப்பிரகாசம், பேராசிரியர் விஜயகுமார், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் கிட்ணன் செல்வராஜ், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்க செயலாளர் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.