Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை” -சட்டத்தரணி சுனில் வட்டகல-

(-Colombo, July 21, 2024-)

LNPP-press

நிகழ்கால அரசாங்கம் அரசிலமைப்பினை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தில் ஐயப்பாட்டினை உருவாக்க முனைந்து வருகின்றது. இந்த ஐயப்பாட்டின் மூலாரம்பம் சனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா, ஆறு வருடங்களா என்கின்ற உரையாடல். இந்த ஐந்தா, ஆறா என்கின்ற உரையாடல் உயர்நீதிமன்றத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட உரையாடலாகும். அதனை மீண்டும் களத்திற்கு கொண்டுவந்தவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். எந்நேரமும் ஐயப்பாட்டுடன் வாழ்கின்ற ரணில் விக்கிரமசிங்க அதனை சமூகமயப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறார். ஐந்து வருடங்களா ஆறு வருடங்களா என்கின்ற உரையாடல் முதன்முதலில் 19 வது திருத்தம் உயர்நீதிமன்றத்திற்கு வந்தவேளையிலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த உரையாடல் உயர்நீதிமன்றத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனை மீண்டும் மைத்திரிபால சிறிசேன கிளப்பினார். அவருடைய பதவிக்காலம் நிறைவடைய அண்மித்துக்கொண்டு இருக்கையில் தன்னால் ஆறு வருடங்கள் இருக்க முடியுமா என்பது பற்றிய அபிப்பிராயத்தை உயர்நீதிமன்றத்திடம் வினவினார். உயர்நீதிமன்றம் அந்த பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என வெளிப்படுத்தியது. அதன் பின்னர் லெனவ என்பவர் 19 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே உயர்நீதிமன்றம் ஐந்து வருடங்களென தீர்ப்பளித்து ஒரு இலட்சம் ரூபா வழக்குக்கட்டணத்தை செலுத்துமாறு கட்டளையிட்டது. அதன் பின்னர் ஒரு சட்டத்தரணியைக்கொண்டு இந்த கேள்வியை மீண்டும் கேட்டார்கள். அவர்மீது ஐந்து இலட்சம் ரூபா வழக்குக் கட்டணம் விதிக்கப்பட்டு ஐந்து வருடங்களே என தெளிவுபடுத்தப்பட்டது. இன்றளவில் சனாதிபதியின் பதவிக்காலம் அரசியலமைப்பின் 30 (2) உறுப்புரையின்படியும் உப பிரிவுகளின்படியும் ஐந்து வருடங்களே என்பது எமக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்கையில் நீதியமைச்சர் தனிக்கடதாசியில் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டார். அவரே, “இதனை நாங்கள் சனாதிபதி தேர்தலுக்குள் கொண்டுவர மாட்டோம், அதனை முன்னெடுத்துச் செல்லவேண்டாம்” என அவருடைய செயலாளருக்கு அறிவித்ததாகக் கூறினார். அவ்வாறு கூறியிருக்கையில் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் தனிக்கடதாசியில் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டார். மக்கள் தீர்ப்பிற்குச் செல்வதா, அதனால் சனாதிபதி தேர்தலுக்கு தடையேதும் ஏற்படுமா என்ற விடயத்தின் அடிப்படையில் தற்போது சமூகத்தில் மீண்டும் ஓர் ஐயப்பாட்டினை உருவாக்கி வருகிறார்கள். இந்த வர்த்தமானியில் இருப்பது இரண்டு பதங்களுக்கிடையிலான போட்டியாகும். ஒரு பிரிவில் கூறப்படுகின்றது “ஆறு வருடங்களை விஞ்சியதாக” எனப்படுகின்ற பதங்களை “ஐந்து வருடங்கள் வரை” என்பதாக மாற்றப்படுவதாகும். இந்த இரண்டு பதங்களுக்காக 1000 கோடி ரூபா பணத்தைச் செலவிட ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்க்கிறார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணமில்லை எனக்கூறி ரணில் விக்கிரமசிங்க முழுமையாகவே சுருக்கிக்கொண்டது எமக்கு ஞாபகம் இருக்கிறது. இன்று வெளிநாடு சென்றுள்ள உழைப்பாளிகளினதும் ஏற்றுமதி வருமானத்தையும் அடிப்படையாகக்கொண்டு கடன் மறுசீரமைப்பிற்குள்ளே சிரமத்துடன் பேணி வருகிறார். இது சனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படவுள்ள தருணமாகும். தயவுசெய்து சீக்கிரமாக இந்த சிக்கலைத் தீர்த்துவைக்குமாறு நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூறுகிறோம். சனாதிபதி தேர்தல் நடைபெறுகின்ற தினத்தையும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற திகதியையும் உடனடியாக வெளிப்படுத்துங்கள். இனிமேலும் காலம்தாழ்த்தாமல் இந்த திகதியை அறிவிப்பதன் மூலமாக இந்த நிலைவமையை ஓரளவிற்கு தணிக்கலாம். சனாதிபதி தேர்தல் நடைபெறுவதை ரணில் விக்கிரமசிங்கவின் தில்லுமுல்லுகளால் நிறுத்திவிட முடியாது. இந்த வர்த்தமானப் பத்திகை சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதன் பின்னர் பொதுமக்களுக்கு மனுக்களை சமர்ப்பிக்க இரண்டுவாரகால அவகாசம் கொடுக்கவேண்டும். உயர்நீதிமன்றம் மனுவினை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க மேலுமொரு வாரம் தேவை. பாராளுமன்றத்தில் விவாதத்திற்கான திகதியைக் குறிக்க மேலும் ஒரு வாரம் வரை எடுக்கும். அந்த விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்று சனாதிபதி தன்னுடைய கையொப்பத்தை இடவேண்டும். இது மக்கள் தீர்ப்பிற்குச் செல்லவேண்டுமென உயர்நீமன்றம் தீர்மானித்தால் அதற்கு சனாதிபதி கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்டு ஒரு மாதத்திற்குள் மக்கள் தீர்ப்பிற்கான அழைப்பு விடுக்கவேண்டும்.

இந்த செயற்பாங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் சனாதிபதி தேர்தல் செயற்பாங்கு நின்றுவிட மாட்டாது. இந்த நாடு சிரமத்துடன் கழித்துவருகின்ற காலமே இது. தமது அசிங்கமான அயோக்கியத்தனமான அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்காகவே உயர்நீதிமன்றம் தீர்த்துவைத்த விடயமொன்று மீண்டும் களமிறக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை. உண்மையைக் கூறுவதானால் ரணில் விக்கிரமசிங்க இந்த தேர்தலில் போட்டியிடுகிறாரா இல்லையா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அவர் போட்டியிடுவதற்கு ஒரு கட்சி கிடையாது. அவருக்கு ஏற்பட்டுள்ள ஐயப்பாட்டினை அரசியலமைப்பு மூலமாக நாட்டின் ஐயப்பாடாக மாற்ற முனைகிறார். இது உயர்நீதிமன்றத்திற்கு வந்தால் நாங்கள் வாதாட எதிர்பார்த்திருக்கிறோம். ஆறு வருடங்களை விஞ்சுவதாயின் மக்கள் தீர்ப்பிற்குச் செல்லவேண்டியது அவசியமென்றே இந்த பிரிவில் இருக்கின்றது. காலத்தைக் குறைப்பதாயின் உண்மையாகவே அத்தகைய ஒன்று அவசியமா என வாதம்செய்ய எதிர்பார்க்கிறோம். இது உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட்ட ஒரு பிரச்சினையாகும். அப்படியானால் இதனை பாராளுமன்றத்தில் 2/3 மூலமாக எம்மால் தீர்த்துக்கொள்ள முடியுமா என பார்க்கவேண்டும். முடியுமானால் மக்கள் தீர்ப்பிற்குச் செல்லவேண்டியதில்லை. இயலுமானால் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் 2/3 ஐ எடுத்துக் காட்டட்டும்.

இன்று இந்த அரசாங்கம் ஒட்டுமொத்த சமூகத்தையுமே சந்தேகத்திற்கு ஐயப்பாட்டுக்கு இலக்காக்கி இருக்கின்றது. பயப்படவேண்டாமென மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி சரியாக விளங்கிக்கொண்டுள்ளது. இந்த தந்திரோபாயங்களுக்கு மாட்டிக்கொள்ள வேண்டாம். சனாதிபதி தேர்தலை எவராலும் தடுக்க இயலாது. இனிமேலும் காலத்தை வீணடிக்காமல் இயலுமானவரை சிக்கிரமாக வேட்பு மனுத் திகதியையும் தேர்தல் திகதியையும அறிவிக்குமாறு நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கிறோம். அப்போது இந்த பிரச்சி்னையில் அரைவாசி தீர்ந்துவிடும். தேசிய மக்கள் சக்தியின் வலிமையைக்கண்டு அஞ்சி ரணில் விக்கிரமசிங்க என்னதான் நாடகம் ஆடினாலும் இந்த பயணத்தை திசைதிருப்ப முடியாது. ரணில் விக்கிரமசிங்க இந்த சமூகத்தை ஐயப்பாட்டுடன் கொண்டுசெல்வதை உடனடியாக நிறுத்தவேண்டும். அதற்கான தீர்வினை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

LNPP-press

“சிவில் அமைப்புக்களோ மக்களோ வழக்கொழிந்த ஒரு பிரிவினை திருத்தியமைக்குமாறு கோரவில்லை”
-சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார-

அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தத்தி்ன் பின்னர் இந்த நாட்டில் தேர்தலால் நியமிக்கப்பட்ட சனாதிபதியொருவரின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகும். அதைப்போலவே பதவி வெற்றிடம் ஏற்பட்டமை காரணமாக நியமிக்கப்படும் பின்தொடருகின்ற சனாதிபதியொருவர் பதவி வகிக்கக்கூடிய காலம் நீங்கிச்சென்றவரின் பதவிக்காலத்தைக் கழித்தபின்னர் எஞ்சுகின்ற காலப்பகுதி மாத்திரமாகும். அதனால் இலங்கையின் அரசியலமைப்பின்படி ஐந்து வருடங்களை விஞ்சியதாக இருக்கக்கூடிய சனாதிபதியொருவர் கிடையாது. உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதி ஆயத்தினால் இது கடந்த வாரத்திலும் பிரகடனஞ்செய்யப்பட்டது. அரசியலமைப்பின் 83 (ஆ) பிரிவில் இருக்கின்ற ” வருடங்களை விஞ்சியதாக நீடிப்பதாயின்” எனும் சொற்றொடர்கள் வழக்கொழிந்த சொற்றொடர்களாக மாறியுள்ளன.

அரசியலமைப்பில் வழக்கொழிந்த ஒரு சொல்லைத் தீர்த்துவதற்காக காலத்தை வீணடிப்பதோ மக்கள் தீர்ப்பொன்றினை நடாத்துவதோ எனக்கூறுவது பயங்கரமான அநியாயமாகும். இலங்கை ஒரு வங்குரோத்து நாடாக மாறி கேஸ் விலை, பாடசாலை உபகரணங்களின் விலை, உணவுப்பொருட்களின் விலை, மின்சாரம், நீர் ஆகியவற்றின் விலைகள் மிகவும் அதிகமாக உயர்வடைந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தருணத்தில் சட்டப்படி உரிய தேர்தலை தவிர்ந்த மேலுமொரு மக்கள் தீர்ப்பினை நடாத்த வேண்டுமென எவரேனும் தீர்மானிப்பதாயின் அவர் ஒரு பொருளாதாரக் கொலைகாரனாவார். தவறான பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்து அதற்கிணங்க நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு ஆளாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றம் ஒரு வழக்குத்தீர்ப்பினை அளித்துள்ளது. பசில் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ உளய்ளிட்ட சிலர் பொருளாதாரத்தை படுகொலை செய்தமை தொடர்பில் மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. கட்டாயமாக நடாத்தவேண்டிய ஜனாதிபதி தோ்தல் நடாத்தப்படவேண்டிய நேரத்தில் அதற்குள்ளே மக்கள் தீர்ப்பொன்றினை நடாத்தி இந்த வறிய நாட்டில் பெருந்தொகையான பணத்தை செலவிட முற்படுவார்களாயின், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கியுள்ள தீர்ப்புகளுக்கிணங்க அதுபற்றிய தீர்மானங்களை எடுத்தவர் பாரதூரமான பொருளாதார கொலைக்காரனாக மாறுவார். அது நடைபெறக்கூடாத ஒன்றாகும்.

போராட்டத்தின் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை நீங்கிச்சென்ற பின்னர் இந்த நாட்டில் சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள் சங்கங்கள், மத அமைப்புக்கள் அனைத்துமே ஒற்றுசோ்ந்து இந்த நாட்டில் பொதுத் தோ்தல் ஒன்றை நடத்தி மக்கள் விரும்புகின்ற அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள இடமளிக்குமாறே கோரிக்கை விடுத்தார்கள். மக்களின் அந்த கோரிக்கையை உதறித்தள்ளிவிட்டு திரிபு நிலையடைந்த அரசாங்கமொன்றை மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த அரசாங்கமே அமைத்துக்கொண்டது. திரிபு நிலையடைந்த அரசாங்கமொன்றை அமைத்துக்கொண்டு அமைச்சரவையொன்றையும் நியமித்துக் கொண்டார்கள். அவ்விதம் திரிபு நிலையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவையும் ஜனாதிபதியும் இந்த நேரத்திலேயே அரசியலமைப்பை திருத்தவேண்டுமென தீர்மானிக்கிறார்கள். இந்த நாட்டில் சிவில் அமைப்புக்கள் அல்லது மக்கள் வழக்கொழிந்த பிரிவொன்றினை திருத்துமாறு வேண்டுகோள் விடுக்கவில்லை. பாராளுமன்றத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் வேறு சிறிய கட்சிகளின் உறுப்பினர்களும் நீங்கலாக பாராளுமன்றத்தின் 150 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தோ்தலுக்கு அஞ்சியவர்களாவர். இது போராட்டத்தால் நிராகரிக்கப்பட்டவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பாராளுமன்றமாகும். வெளியில் என்ன தான் கூறினாலும் உள்ளே ஒன்றிணைந்து இந்த ஜனாதிபதி தோ்தல் நடாத்தப்படுவதற்கு இடையூறு விளைவிக்க முயற்சி செய்தாலும் நாட்டின் அதியுயர் சட்டத்தை மிதிப்பதற்கான உரிமை எவருக்கும் கிடைக்கமாட்டாது.

அதியுயர் சட்டத்தின்படி ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்படல் வேண்டும். ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தோ்தல் நடாத்தி முடிக்கப்படல் வேண்டும். அதனை எவராலும் மாற்ற முடியாது. எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் எவ்வாறு போட்டியிடுவதென நிச்சயித்துக் கொள்ள முடியாவிட்டாலும் இந்த அமைச்சரவையும் ஜனாதிபதியும் போட்டியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதியும் ஒரு போட்டியாளாராவர். போட்டியிடவுள்ள ஜனாதிபதியும் அமைச்சரவையும் அரசியலமைப்பினை திருத்துவதற்கான தீர்மானமொன்றை தான்தோன்றித்தனமாக கொண்டுவந்து அந்த முன்மொழிவின் அடிப்படையில் மக்களின் வாக்குப்பலத்திற்கு இடையூறு விளைவிக்கவோ ஜனாதிபதி தோ்தலுக்கான பணத்தை வேறு பக்கத்திற்கு திசைத்திருப்பி மக்கள் தீர்ப்பினை நோக்கி சுழற்றிவிட முயற்சி செய்வார்களாயின், ஒரு போட்டியாளர் ஏனைய போட்டியாளர்களுக்கு எதிராக எடுக்கின்ற மிலேச்சத்தனமான நெறிமுறைகளுக்கு புறம்பான செயலாகும். இதற்கு முழுச்சமூகமுமே கண்டனம் தெரிவிக்கவேண்டும். இவர்கள் காலத்தை வீணடிப்பதையே செய்ய முனைகிறார்கள்.

ஜனாதிபதி தோ்தல் கட்டாயமாக நடைபெறும். தேசிய மக்கள் சக்தி கட்டாயமாக போட்டியிடும். ஏனைய அனைவருமே ஒன்று சோ்ந்து ஒருவர் அல்லது இருவர் அல்லது ஒரு சிலராக வரலாம். அரசியலமைப்பின் 3 வது உறுப்புரையில் விபரிக்கப்பட்டுள்ள இறைமைத் தத்துவம் மக்களின் பாராதீனப்படுத்த முடியாத உரிமையாகும். அரசியலமைப்பின் 04 வது உறுப்புரையில் 05 தத்துவங்கள் காட்டப்பட்டுள்ளன. மக்களால் பாராளுமன்றத்திடம் அல்லது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிராத இரண்டு தத்துவங்கள்தான் அடிப்படை உரிமைகளும் வாக்களிக்கின்ற உரிமையுமாகும். அது பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்ட ஒரு அதிகாரமல்ல. வாக்குப்பலம் மக்கள் கொண்டுள்ள பாராதீனப்படுத்த முடியாத அதிகாரமாகும். அதற்காக பாராளுமன்றம் சட்டங்களை விதித்தல் அல்லது சட்டங்களை விதிக்க முயற்சி செய்வதனூடாக இடையூறு விளைவிப்பதற்கான எந்தவிதமான உரிமையும் கிடையாது. அவ்வாறு செய்வது அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆகிய உறுப்புரைகளை மீறுவதாக அமையும். எவரேனும் ஜனாதிபதியொருவர் ஏலாமை நிலையினால் அல்லது வலுக்குறைவினால் அல்லற்படுவாராயின் அது குற்றப்பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு ஏதுவாக அமையத்தக்க விடயமாகும். அரசியலமைப்பில் பாவிக்கப்படாத ஒரு பிரிவு இருக்கிறது. சனாதிபதி தேர்தலொன்றின் முன்னிலையில் மக்கள் தீர்ப்புக்கு ஏதுவாக அமையக்கூடிய அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்ள முயற்சி செய்வது மிகவும் கபடத்தனமான செயலாகும். இன்றேல் மனநோயாகும். எவ்வாறு இருப்பினும் இது குடியுரிமையை இல்லாதொழிக்கக்கூடிய பாரதூரமான அரசியலமைப்பு மீறலாகும். இந்த மீறல் தொடர்பில் அமைச்சரவையும் பின்தொடர்ந்த ஜனாதிபதியும் பொறுப்புக்கூறவேண்டும். ஜனாதிபதி தோ்தலுக்கான மாற்றீடாக மக்கள் தீர்ப்பொன்றினை நடாத்த முடியாது. அவ்வாறு நடைபெற இடமளிக்கவும் ஆகாது.

ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தப்படுகின்ற ஜனாதிபதி தோ்தலுக்கு முழு நாடுமே தயாராகுங்கள். உங்களுடைய பண்டங்களின் விலைகள் அதிகரித்த விதம் பற்றி சிந்தியுங்கள். பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்களின் விலைகள் அதிகரித்த விதத்தை சிந்தித்துப்பாருங்கள். பொருளாதார கொலைகாரார்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிய விதம் பற்றி சிந்தித்துப்பாருங்கள். குற்றச் செயல் புரிந்தவர்கள், கொள்ளைக்காரர்கள் பாராளுமன்றத்தில் இருப்பது பற்றி சிந்தித்துப் பாருங்கள். எல்லா அரசாங்கங்களிலும் அமைச்சர் பதவிகளை வகித்து எல்லாவற்றுக்கும் கையை உயர்த்தி இந்த நிலைமை உருவாக காரணமாக அமைந்தவர்கள் பற்றி சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் எதிர்நோக்கியுள்ள பாரதூரமான பிரச்சினைகள் பற்றி சிந்திப்பதை மாற்றியமைக்க மேற்கொள்ளப்படுகின்ற மிலேச்சத்தனமான பிரயத்தனமே இது. அந்த பிரயத்தனங்களை கண்டிக்க வேண்டும்.

LNPP-press

LNPP-press

LNPP-press