(-சம்பள நிர்ணயச் சபைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது – 12.08.2024-)
இன்று (12) சம்பள நிர்ணயச் சபையில் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் தொடர்பில் முடிவெடுப்பதற்கான கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 10 தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை உள்ளிட்ட கம்பனிகளின் 07 பிரதிநிதிகளும், அரச அதிகாரிகள் 03 பேரும் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் யூ.என்.பி.யின் தொழிற்சங்கமான தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணையை கொண்டுவந்தன.
அதாவது, அந்தப் பிரேரணையில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 1350 ரூபாவை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், மேலதிக கொடுப்பனவாக 350 ரூபாவை வழங்கவேண்டும் என்றும் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது, கம்பனிகளும் தங்களது 5 கோரிக்கைகளை முன்வைத்தன.
அவர்களது முதலாவது கோரிக்கை, “தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வை கேட்டு 03 வருடங்களுக்கு போராட்டமோ அல்லது வேறு எந்த நடவடிக்கையையோ முன்னெடுக்கக் கூடாது.” என்பதாகும்.
இரண்டாவது, “1 கிலோ கிராம் கொழுந்துக்கு 50 ரூபா கொடுக்கப்படும்.” என்பதாகும்.
மூன்றாவதாக, ”மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவாகும். ஆகவே, அந்த 350 ரூபாவுக்கான கொழுந்தை மாத்திரம் தான் பறிக்க வேண்டும்” என்பதாகும்.
இதுகுறித்து காரசாரமான வாதவிவாதங்கள் நடைபெற்றன. 1350 ரூபாவுக்கு ஆதரவாக 11 பேரும் எதிராக 03 பேரும் வாக்களித்தோம். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பெருந்தோட்ட தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். செங்கொடிச் சங்கத்தின் சார்பாக 02 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே, மேலதிமான 8 வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சாதகமாக செயற்பட்ட தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் அரச அதிகாரிகளும் தோட்டத் தொழிலாளர்ளை ஏமாற்றியுள்ளதுடன், அவர்களது போராட்டங்களையும், உரிமைகளையும் காட்டிக்கொடுத்துள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக்க கண்டிக்கிறோம்.