-தேசிய மக்கள் சக்தி கண்டி தொகுதி மாநாடு – 2024.01.13-
இந்த கண்டி மாவட்டம் சிலகாலமாக எங்களுக்க நல்ல மாவட்டமாக அமையவில்லை. கண்டி மாவட்டத்தில் நிலவிய பின்னடைவினை நாங்கள் எவ்வாறு மாற்றியமைப்பது எனும் உரையாடல் எமது கட்சிக்குள் நிலவியது. அந்த நேரத்தில் தோழர் லால் அப்படியானால் நான் கண்டிக்குப் போகிறேன் எனக் கூறினார். தோழர் லால்காந்தவும் எமது நிறைவேற்றுப் பேரவையைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தோழர்களும் ஒன்றுசேர்ந்து தேசிய மக்கள் சக்தியின் வெற்றிகரமான மாவட்டமாக கண்டி மாவட்டத்தை மாற்றியமைத்துள்ளார்கள். இன்று நாங்கள் நடாத்துவது கண்டி மாவட்டத்தின் தொகுதி மாநாட்டினை ஆகும். அதற்கு முன்னர் நாங்கள் இந்த இடத்தில் கண்டி மாவட்டக் கூட்டத்தை நடாத்தினோம். அண்மைக்கால வரலாற்றில் கண்டியில் நாம் நடாத்திய பிரதானமான கூட்டமாக இது மாறியுள்ளது. முன்னர் எமது மன்னர்கள் மக்களின்மனக்குறைகளைக் கண்டறிய மாறுவேடம் தரித்து வருவார்களாம். அண்மைக்காலத்தில் இருந்த எமது மன்னர்கள் சுகம்தேடி மாறுவேடம் தரித்து கப்பலில் ஏறியவிதம் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது.
எமது நாடு படுமோசமான பேரிடரைச் சந்தித்துள்ளது. நாங்கள் பொருளாதாரத்தின் வீழ்ச்சி பற்றியே பெரும்பாலும் கலந்துரையாடுகிறோம். நீண்டகாலமாக எமது நாட்டை ஆட்சிசெய்த ஆட்சியாளர்களுக்கு நாடு பற்றிய நோக்கு இருக்கவில்லை. நாடு இருப்பது எங்கே? நாட்டில் நிலவுகின்ற சாத்தியவளங்கள் யாவை? உலகில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் என்ன? அதற்கு நேரொத்தாக அமையத்தக்கவகையில் எமது சிந்தனை, நோக்கு எவ்வாறானதாக அமையவேண்டுமென்பது பற்றிய நோக்கு எமது ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. அதன் விளைவாக இன்று பொருளாதாரத்தின் அடித்தளத்திற்கே வீழ்ந்துவிட்ட நாடாக மாறியுள்ளது.
வரவு செலவு ஆவணத்தைப் பார்த்தால் அரசாங்கம் எதிர்பார்க்கின்ற வருமானம் 4164 பில்லியன் ரூபாவாகும். 2023 ஆம் ஆண்டைப் பார்க்கிலும் மேலதிகமாக ஏறக்குறைய 1300 பில்லியன் ரூபாவை அரசாங்கம் தேடிக்கொள்ள வேண்டும். பொருளாதாரம் வளர்ச்சியடைந்தாலேயே அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும். அதில் ஒரு பகுதி அரசாங்கத்திற்கு வருகின்றது. இந்த அரசாங்கம் புதிதாக 1300 பில்லியன் ரூபாவை தேடிக்கொள்ள முயற்சி செய்வது பொருளாதாரத்தைப் பெருப்பித்தா? இல்லை. 2019 ஆம் ஆண்டின் பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு இணையான பண்டங்களினதும் சேவைகளினதும் உற்பத்தி 2029 ஆம் ஆண்டிலேயே கிடைக்குமென ரணில் விக்கிரமசிங்க கூறினார். எனினும் 2023 இல் இருந்த வரி அளவு 25% ஐ விட அதிகரிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டுக்கு வற் வரி அறிமுகஞ் செய்யப்பட்டு 21 வருடங்களாகின்றது. இதுவரை காலமும் பல்வேறு துறைகளுக்கு (138 பண்டங்கள்) வற் வரி விலக்களிக்கப்பட்டிருந்தது. அந்த துறைகள் மக்கள் வாழ்க்கையுடன் மிகவும் நெருங்கிய, பொருளாதாரத்துடன் மிகவும் நெருக்கமான துறைகளாகும். உதாரணமாக பாடசாலைப் புத்தகங்களுக்கும் உபகரணங்களுக்கும் வற் வரி விதிக்கப்படவில்லை. பிள்ளைக்கு கற்பிப்பதும் பாடசாலைப் புத்தகம், உபகரணங்கள் கொன்வனவு செய்வதும் வற் வரிக்கு இலக்காக்கப்பட வேண்டுமா? சனவரி மாதத்தில் இருந்து அந்த பொருட்களுக்கும் வற் வரி சேர்கின்றது. வரி விலக்களிக்கப்பட்டிருந்த சுகாதார சாதனங்கள், மருந்து உற்பத்திக்காக பயன்படுத்துகின்ற மூலப்பொருட்கள், அரசி, அரிசி மா, பால், யோகற் போன்ற உணவுப் பொருட்கள், டீசல் என்பவற்றின் விலைகள் அதிகரித்து பொருளாரத்தில் பாதக விளைவுகள் ஏற்படும். இந்த வற் வரியை உள்ளிட்ட வருமானத்தில் இருந்து 4164 பில்லியன் ரூபாவை எதிர்பார்க்கிறார்கள். எனினும் அரசாங்கம் எடுத்துள்ள கடன்களின் தவணைகள், அவ்வாறு பெறப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டி இவையனைத்தையும் சேர்த்தால் அரசாங்கத்தின் செலவினம் 11,277 பில்லியன் ரூபாவாகும். திறைசேரிக்கு வருவதோ 4164 பில்லியன் ரூபாவாகும். வீழச்சியடைந்த, வங்குரோத்து நிலையுற்ற நாடே இதன்மூலமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த பொருளாதார நெருக்கடி சமூக வாழ்க்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. வாழ்க்கையை சீரழிக்கின்றது. அண்மையில் மத்திய வங்கியிடமிருந்து அறிக்கையொன்று வந்தது. சனத்தொகையில் 68% ஒன்றில் உணவு வேளைகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறார்கள் அல்லது மூன்றுவேளையும் உணவின் அளவைக் குறைத்துள்ளார்கள் என அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது. இல்லாவிட்டால் மூன்றுவேளையும் விருப்பமற்ற உணவினை உண்கிறார்கள். புள்ளிவிபரவியல் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் பிள்ளைகளில் 54% பாடசலைப் பத்தகங்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்டார்கள். அல்லது குறைத்துவிட்டார்கள். உயிர்கள் மடிய இடமளிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளில் 19% பிரத்தியேக போதனா வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்கள்.
தேசிய கல்வி, சுகாதாரம், உணவு போன்றவற்றைச் சீரழித்து மக்களின் வாழக்கைத்தரத்தை தவிடுபொடியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து அரசாங்க நிறுவனங்களும் நிருவாகக் கட்டமைப்புகளும் அழிந்துவிட்டன.ஒருவருடகாலமாக நிரந்தர பொலீஸ் மா அதிபரொருவர் இல்லை. பொலீஸின் மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருக்கின்ற ஐவருக்கும் எதிராக வழக்குகள். எமது அமைதியைப் பாதுகாத்திட இருப்பவர்கள்மீது வழக்கு. இந்த நிறுவனங்கள் சீரழிந்துவிட்டன. ” எம்மிடமுள்ள வளம் வெளிநாட்டு ஒதுக்கங்களும் பலம்பொருந்திய பகிரங்க சேவையுமே” என அண்மையில் சிங்கப்பூர் பிரதமர் கூறினார். எமது நிறுவனங்கள் அனைத்துமே முறைப்படி இயங்காத நிலைமைக்கு அரச நிறுவன முறைமை சீரழிந்துள்ளது.
உலகம் ஏற்றுக்கொள்ளாத நாடாக எமது நாடு மாறியுள்ளது. நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது. அவ்வாறான தருணத்தில் சனாதிபதி மிகநீண்ட வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த வருடத்தின் ஒற்றோபர் மாதத்தில் இந்நாட்டு இதனை மக்கள் சனாதிபதியின் இறுதி விஜயமாக மாற்றுவார்கள். உலகின் அபகீர்த்திக்குள்ளான நாடாக எமது நாடு மாற்றப்பட்டுவிட்டது. கொரியா தூதரகத்திற்கு வீசா அப்ளிகேஷனை ஒப்படைக்க ஆறுமாதங்கள் எடுக்கின்றது. உலகின் முன்னால் சீரழிந்த நாடாக மாறிவிட்டது. அதுமாத்திரமல்ல அரசியலும் முற்றாகவே சீரழிந்துவிட்டது. அயோக்கியர்கள், திருடர்கள், ஊழல்பேர்வழிகள் நாட்டை ஆட்சிசெய்துகொண்டிருக்கிறார்கள். நாட்டின் சமூகத்தில் மனிதம் சீரழிந்துள்ளது. கண்டி சந்தையில் தான் கொடுத்த பணத்திற்கான வட்டியை செலுத்தாமையால் ஒருவரின் இரண்டு கைகளையும் வெட்டிச்சென்றார்கள். அவர் தேர்தலில் போட்டியிட்டார். கண்டி மக்கள் அவரை நகரசபை உறுப்பினராக்கினார்கள். 2020 ஒற்றோபர் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஒற்றோபர் 01 ஆந் திகதி சொக்கா மல்லீ 202 ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்தமைக்காக மேல்நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர். 05 ஆந் திகதி நடைபெற்ற தேர்தலில் அவர் வாக்குகளில் முதலிடம் பெற்றார். இந்த சமூகம் எங்கே இருக்கின்றது? இது ஒரு பிரச்சினையில்லையா? கண்டி உடதலவின்ன மனிதப்படுகொலையுடன் தொடர்புபட்டவரென, மேல்நீதிமன்றத்தில் பல வருடங்களாக வழக்கு விசாரிக்கப்பட்டுவந்த, விளக்கமறியலில் இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினராகிறார். அமைச்சர் பதவியை வகிக்கிறார், இரவில் கைத்துப்பாக்கிகளை சுழற்றிக்கொண்டு சிறைக்கைதிகளின் மண்டையில் வைக்கிறார்.
நெருக்கடி நிலவுவது பொருளாதாரத்தில், அரசியலில், மக்கள் வாழ்க்கையில் மாத்திரமல்ல. மக்களின் சிந்தனைப்போக்கிலும் பிரச்சினையொன்று சமூகத்தில் நிலவுகின்றது. கடந்த காலத்தில் பாராளுமன்றத்திற்கு வெற்றிக்கிண்ணம் ஏந்தி வந்தவர்கள் யார்? குருநாகலில் இருந்து ஜோன்ஸ்ரன், கண்டியில் இருந்து மகிந்தானந்த, இரத்தினபுரியில் இருந்து சொக்கா மல்லி, களுத்துறையில் இருந்து றோஹித அபொகுணவர்தன, கம்பறாவில் இருந்து பிரசன்ன ரணதுங்க, அநுராதபுரத்தில் இருந்து எஸ்.எம். சந்திரசேன. இவர்கள் மக்களின் வாக்குகள் மூலமாகவே வந்தார்கள். இந்த நாட்டு மக்களின் சிந்தனைப் போக்குகள் சீரழிந்துள்ளன. அழிவடைந்த பெருநகரமாக மாறிய ஒரு நாடே எம் கண்ணெதிரில் இருக்கின்றது. நாம் தெரிவுசெய்யவேண்டிய இரண்டு பாதைகள் இருக்கின்றன. இந்த பயணப்பாதையில் பயணித்து நாங்கள் ஒன்றாக மடிவதா? அல்லது ஒன்றாக எழுச்சி பெறுவதா?
நாங்கள் ஒன்றாக எழுச்சி பெறுவோம் என்கின்ற பிரேரணையை முன்வைக்கவே நாங்கள் கண்டிக்கு வந்தோம். இந்தியா ஒருகாலத்தில் பிரித்தானிய ஏகாதிபதியவாதிகளுக்கு கட்டுப்பட்டு, பாரிய சாதிவேற்றுமைகள், பல்வேறு கலாசாரங்கள் நிலவிய, பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற, பாரிய நிலப்பரப்பு காணப்பட்ட நாடு. ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக ஒன்றுசேர அதன் தேசிய தலைவர்களால் இயலுமாயிற்று. நேரு. பட்டேல், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் ஒன்றுசேர்ந்து தேசிய இயக்கமொன்றைக் கட்டியெழுப்பினார்கள். அந்த தேசிய இயக்கம் ஆரம்பத் தருணத்திலேயே இந்தியா எந்த திசையை நோக்கிப் பயணிக்கவேண்டுமென்ற திட்டத்தை முன்வைத்தார்கள். அவர்களிடம் சுதந்திரப் போராட்டமொன்று, சிந்தனையொன்று மற்றும் நோக்கு இருந்தது. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் போன பின்னர் பெற்றுக்கொண்ட அந்த வெற்றியின் பாய்ச்சல் எத்தகையது எனக்கூறுவதாயின் இன்று இந்தியாவினால் சந்திரனுக்குச்செல்ல இயலுமாயிற்று. உலகின் ஐந்தாவது பொருளாதாரத்திற்கு உரிமை பாராட்டுகின்றது. அங்கு ஆட்சியில் பிரச்சினையொன்று இருக்கின்றது. ஆனால் அனைத்துப் பேதங்களையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு தேசத்தை ஒன்றாக மலரச்செய்விக்க இயலுமாயிற்று.
ஜப்பான் இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது பகைவர் தரப்பினரையே பிரதிநிதித்துவம் செய்தது. 1945 இல் ஹிட்லர் தற்கொலை செய்துகொள்கிறார். ஜேர்மனி அடிபணிகின்றது. இரண்டாவது உலகமகா யுத்தம் முடிவடைந்து வந்துகொண்டிருந்தது. அமெரிக்கா கண்டுபிடித்திருந்த அணுக்குண்டினை ஜப்பான்மீது போட்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கியில் பாரிய மனிதப்படுகொலையைச் செய்தது. உலகில் இடம்பெற்ற மிகப்பெரிய மனிதப்படுகொலை. பேரழிவுக்கு இலக்காகிய நாடாக்கப்பட்டது. அந்த சீரழிவினை ஜப்பான் மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவந்தது. ஆசியாவில் உள்ள தொழில்நுட்பம்நிறைந்த பிரமாண்டமான நாடாக மாற்றுவதற்கான நோக்கு அந்நாட்டின் தலைவர்களிடம் இருந்தது.
ஐக்கிய அமெரிக்காவிற்கும் அவ்வாறான சுதந்திரப் போராட்டமொன்று இருந்தது. ஆயிரத்து எழுநூற்றி எழுபதுகளில் பிரித்தானியாவிற்கு எதிரான போராட்டமொன்று நிலவியது. அந்த சுதந்திரப் போராட்டத்தின் மலர்ச்சி காரணமாக இன்று ஐக்கிய அமெரிக்கா பிரமாண்டமான பொருளாதாரம் உரித்தான நாடாக மாறியுள்ளது. வியட்நாமிற்கு சீனாவிற்கு சுதந்திரப் போராட்டமொன்று இருந்தது. உலகின் பெரும்பாலான நாடுகள் மக்களின் ஒருங்கிணைப்புடன் ஒரு கருத்தின்பால் கொண்டுவந்து புதிய மலர்ச்சியை எற்படுத்திக்கொண்டன.
நாங்கள் 450 வருடங்களாக மேழைத்தேய நாடுகளின் நேரடியான தாக்கத்திற்கு கட்டுப்பட்டிருந்தோம். 150 வருடங்கள் வெள்ளைக்காரர்களுக்கு கட்டுப்பட்டிருந்தோம். 133 வருடங்கள் வெள்ளைக்காரனின் நேரடியான ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டிருந்தோம். 1818 இலும் 1848 இலும் இரண்டு சுதந்திரப் போராட்டங்கள் உருவாகின. 1815 இல் இருந்து 1948 வரை வெள்ளைக்காரர்கள் எம்மை ஆட்சிசெய்தார்கள். எமக்கு தேசிய இயக்கமொன்று இருக்கவில்லை. தேசிய இணக்கப்பாட்டுக்கு கொண்டுவருவதில் ஆட்சியாளர்கள் வெற்றிபெறவில்லை. எமது தலைவர்கள் அவர்களில் தங்கிவாழும் தலைவர்களாக மாறினார்கள். 1949 இல் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து பெருந்தோட்ட மக்களை விரட்டினார்கள். அவ்வேளையிலேயே செல்வநாயகம் தமிழ் அரசுக் கட்சியை அமைக்கிறார். அந்த சிந்தனை பாரிய பிரிவினைவாதம் வரை வளர்ச்சியடைகின்றது. 1956 இல் மொழிப் பிரச்சினையொன்றை குழப்பியடித்துக் கொள்கிறார்கள். 1958 இல் சிங்கள – முஸ்லீம் கலவரம் ஏற்படுகின்றது. பிரித்தானியர்கள் சென்றபின்னர்கூட எம்மால் தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கான நோக்கிற்கு கொண்டுவரமுடியவில்லை. எமது தலைவர்கள் வரலாற்று மகிமையின் இடிபாடுகளில் தங்கிவாழத் தொடங்கினார்கள். இருபதாம் நூற்றாண்டில் வரலாற்றினை மீள்உச்சரித்துக்கொண்டு வசித்தார்கள். இருபதாம் நூற்றாண்டு உலகில் பிரமாண்டமான மாற்றங்கள் இடம்பெற்ற காலப்பகுதியாகும்.
மனிதத் தேவைகள் பிரமாண்டமாக மாறப்போவதில்லை. அன்றும் உண்டோம், இன்றும் உண்கிறோம். அன்றும் வேட்டையாடி மாமிசம் புசித்தோம், இன்று சுப்பர் மார்க்கெற்றிலிருந்து கொண்டுவந்து இறைச்சி சாப்பிடுகிறோம். அன்று புறா மூலமாக செய்திகளை அனுப்பினோம். இன்று செய்திகளை ஸ்மார்ட் போன் மூலமாக அனுப்புகிறோம். அன்று மாட்டு வண்டியில் சென்ற பயணத்தை இன்று சிறந்த வாகனத்தில் செல்கிறோம். அன்றுபோல் இன்றும் அவசியப்பாடுகளை ஈடேற்றிக்கொள்கிறோம். மக்கள் தமது அவசியப்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்கின்ற விதத்திற்கிணங்கவே உலகில் புதிய சந்தைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. உலகில் மனித அவசியப்பாடுகளின் பாணி மாற்றமடைகையில் அதற்கு அவசியமானவகையில் பண்டங்களினதும் சேவைகளினதும் சந்தையை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.
இன்று கொரியா அழகுசாதனக்கலையில், பிரமாண்டமான சம்சுங் ஸ்மார்ற் போன் உற்பத்தியில், இரசனையைத் தேடுபவர்களுக்கு புதுவிதத்திலான கே பொப் இசையில், திரைப்படக் கைத்தொழிலில் ஜாம்பவானாக மாறியுள்ளது. வருடமொன்றிற்கான கொரியாவின் ஏற்றுமதி வருமானம் 685 பில்லியன் டொலராக மாறியுள்ளது.
1918 இல் திரு. விமலசுரேந்திர லக்ஷபான மின்நிலையத்தை முன்மொழிகிறார். லக்ஷபான மின்நிலயத்தின் மேலதிக மின்சாரத்தைக்கொண்டு மின்சார ரயிலை ஓடச்செய்விப்பதே அவரது முன்மொழிவில் இருந்தது. அந்த பாரிய உரையாடல் கீழடக்கப்பட்டு பழைய, நோக்கற்ற அரசியல் அதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். அன்றும் இன்றும் எமது நாட்டின் பொருளாதாரம் தேயிலை, இரப்பர், தெங்கிலேயே தங்கியுள்ளது. எமது தலைவர்களின் நோக்கும் தேயிலை, இரப்பர், தெங்கு அளவிற்கே பழைமை வாயந்தது. அதனால் எமது ஆட்சியாளர்கள் இருபதாம் நூற்றாண்டினை கைவிட்டார்கள். அதைப்போலவே சாதிபேதம், இனவாதத்தை இன்னமும் தூண்டுகிறார்கள். உலகம் பாய்ச்சலுடன் முன்நோக்கி நகர்கின்றது. புதிய சிந்தனையின்பால் புதிய நோக்கின்பால் இலங்கையை அழைத்துச்செல்ல வேண்டும். பழைய, தோல்விகண்ட, பழங்குடித்தன்மைகொண்ட இந்த தலைவர்கள் பரம்பரையிலிருந்து நாட்டை விடுவித்துக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் புதிய யுகமாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும். இந்த கொள்ளைக்கார கும்பலுக்கு எதிராக புதிய தேசிய எழுச்சியொன்று எமக்குத் தேவை.
இந்த தேசிய எழுச்சியுடன் ஒன்றுசேருமாறு நாங்கள் யாழ்ப்பாண பிரசைகளையும் அழைக்கிறோம். நாங்கள் கட்சிகளாக, சாதிகளாக, இனங்களாக பிரிந்து இருப்பதால் பலனில்லை. பிள்ளைக்கு சாப்பாடு இல்லாவிட்டால் வைத்தியசாலையில் மருந்து இல்லாவிட்டால், மருத்துவர் கைவிட்டுச்செல்வாராயின், கைத்தொழில் முறைமை சீரழியுமாயின், வரிமேல் வரி விதிக்கப்படுமாயின் கட்சிகளாக, சாதிகளாக, இனங்களாக பிரிந்திருப்பதில் என்ன பயன்? தேசிய மக்கள் சக்தி ஊடாக இந்த நாட்டில் புதிய மலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். பாரிய படுகுழிக்குள் வீழ்ந்துள்ள நாட்டை மீட்டெடுத்திட பிரயத்தனம்செய்கின்ற தேசிய மலர்ச்சியை நாங்கள் ஏற்படுத்துவோம்.
முதலிடம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதாகும். அதற்கான வாய்ப்புதான் விரைவில் வரப்போகின்ற சனாதிபதி தேர்தல். அதனை வெற்றிகொள்வதுதான் எமது கண்ணெதிரில் இருக்கின்றது. அருகில் வருகின்ற தேர்தல். அந்த வெற்றிதான் எமது அத்தியாவசியமான ஆரம்பம். பிரசைக்கு உணவு, பிள்ளைகளுக்கு கல்வி, பிரசைகளுக்கு சுகாதாரம் என்பவற்றை நாங்கள் தொடக்கநிலையென்பதை உறுதிப்படுத்துகிறோம். பின்னர் நீண்ட அரசியல், பொருளாதார மாற்றத்திற்கு இந்த நாட்டை மாற்றியமைத்திட வேண்டும். எம்மிடமுள்ள சாத்தியவளங்கள் யாவை? உலகில் உள்ள மாற்றங்கள் என்ன? அதற்கு நேரொத்தாக அமையத்தக்கவகைகயில் புதிய சிந்தனையொன்றை புதிய நோக்கினை நிர்மாணிக்க வேண்டும். விமலசுரேந்திர போன்ற மாபெரும் ஆராய்ச்சியாளர்கள், மாபெரும் விஞ்ஞானிகள் நமது நாட்டில் இருக்கிறார்கள். புதிய சாதனங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆட்சியாளர்களுக்கு அவை பலனற்றவை. இந்த விஞ்ஞானிகளை ஆராய்ச்சியாளர்களை பாரிய முன்னணிக்கு கொண்டுவருவதற்கான அடிப்படைத் திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். சிந்தனைகளைத் தட்டியெழுப்பிட லியனகே அமரகீர்த்தி போன்ற இலக்கியவாதிகள், ரொட்னி வர்ணகுலசேகர போன்ற கலைஞர்கள் இந்த புத்தெழுச்சிக்கு அவசியமானவற்றை எழுத, கூற, பாட வேண்டியுள்ளது. எமது ஆராய்ச்சியாளர்கள் புதிய திசைக்கு அவசியமான ஆராய்ச்சிகளை மெற்கொள்ள வேண்டும். பன்னாட்கலங்களை கடலுக்கு அனுப்பிவைக்க அவசியமான திட்டங்களை வகுத்திட வேண்டும். 1183 கைத்தொழில்கள் சீரழிந்தள்ள நிலையில் சிறிய மற்றும் நடுத்தரஅளவிலான தொழில்முனைவோருக்கு புத்துயிரளிக்கவேண்டும். எமது இளைஞர் தலைமுறையினர் உலகின் புதிய அறிவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள எமது ஆரம்பக் கல்வியில் மாற்றமேற்பட வேண்டும். எமது ஆரம்பப் பட்டம் வரையுள்ள கல்வியை அடுத்த பட்டம் வரை விருத்திசெய்ய வேண்டும். அந்த இடத்தில்தான் ஆராய்ச்சிகள் இருக்கவேண்டும். உலகம் ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே முன்நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஐக்கிய அமெரிக்கா 2023 ஆம் ஆண்டில் தனது ஆராய்ச்சிகளுக்காக (ஆர்.என்.டீ) 523 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. எமது விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சு கவனியாமல் விடப்பட்ட அமைச்சாக மாறியுள்ளது. எமது ஆராய்ச்சிகளுக்காக 0.001 வீதமான பணத்தொகையே ஒதுக்கப்படுகின்றது. கல்வியில், விவசாயத்தில், இலக்கியக் கலையில், விஞ்ஞானத்தில் , தொழில்நுட்பத்தில் புதிய கட்டமொன்றை உள்ளிட்டதாக இவையனைத்தையும் சேர்த்துக்கொண்ட புதிய யுகமொன்று மறுமலர்ச்சியொன்று இலங்கையில் உருவாக்கப்படல் வேண்டும். எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது அரசியல் பணியல்ல: யுகப்பணியாகும். புதிய மறுமலர்ச்சியின் ஆரம்பம் ஈரமுள்ள, ஆன்மீகமுள்ள, ஒத்துணர்வுள்ள சமூகமாக மாற்றவேண்டும். இந்த அடிமைத்தனமான, அழிவுமிக்க யுகத்திற்கப் பதிலாக புதிய மறுமலர்ச்சி யுகமொன்றுக்கான தொடக்கத்தைப் பெற்றுக்கொள்ள இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். யுகமாற்றத்திற்கான அவசியமான வீறுநடை போடுவோம். தேசமொன்றின் ஒருமித்த தன்மை, தேசிய எழுச்சி, பிரமாண்டமான தேசிய இயக்கம், புதிய மறுமலர்ச்சி யுகம் என்பவற்றுக்காக நாமனைவரும் ஒருங்கிணைவோம்.