(-Colombo, May 21, 2024-)
பயங்கரமான ஹெலிகொப்டர் விபத்தில் கவலைக்கிடமாக உயிரிழந்த மாண்புமிகு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் இலங்கை மக்கள் என்றவகையிலும் நாங்கள் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். கவலைக்கிடமான இத்தருணத்தில் இறந்த அனைவரதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நாங்கள் எமது அனுதாபத்தை பகிர்ந்து கொள்கிறோம்.
ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசியின் மறைவு ஈரானிய மக்கள் மற்றும் மத்தியகிழக்கு மக்களுக்கு மாத்திரமன்றி உலக மக்கள் அனைவருக்கும் நிவர்த்திசெய்ய இயலாத நட்டமாகும். இலங்கையை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளுடன் ஜனாதிபதி ரயிசி நட்புறவையும் ஆதிக்கவாதமற்ற உறவினையும் பலப்படுத்திக் கொள்வதற்காக அயராது உழைத்தார். ஈரானிய மக்களின் நிதியங்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர்மின் நிலையங்களை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதற்காக அவர் அண்மையில் மேற்கொண்ட இலங்கை விஜயமானது சர்வதேச ஒத்துழைப்பிற்கும் நிலைபெறுதகு அபிவிருத்திக்குமான அவரது மாற்றமில்லாத அர்ப்பணிப்பிற்கான தக்க சான்றாகும். அத்துடன் அதனையொத்த கருத்திட்டமொன்றை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதற்காக சென்ற அவருடைய இறுதிப்பயணமும் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர சுபிட்சத்திற்கான அவரது திடமான அர்ப்பணிப்பினை வலியுறுத்துகின்றது.
ஒத்துழைப்பு, அபிவிருத்தி மற்றும் நட்புறவினை விருத்தி செய்வதற்கான அவரது முன்மாதிரியானது ஈரானுக்கு உள்ளேயும் பொதுவில் மத்தியகிழக்கு பூராவிலும் இடையறாத அபிவிருத்தி மற்றும் உறுதிநிலையை உறுதிப்படுத்தி அவரது நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக ஈரானிய மக்களுக்கு நிச்சயமாக புத்துணர்ச்சி அளிக்குமென்பது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எமது நம்பிக்கையாகும்.
கவலைக்குரிய இத்தருணத்தில் ஈரானிய மக்களுக்கு நாங்கள் எமது தீவிரமான ஒத்துழைப்பினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அநுர குமார திசாநாயக்க
தலைவர்
தேசிய மக்கள் சக்தி
2024.05.21
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம் தொடர்பில், இன்று (21) பிற்பகல் ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் இலங்கையர் சார்பிலும் தேசிய மக்கள் சக்தியின் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க அவர்களும் இணைந்துகொண்டார்.