(-Colombo, March 21, 2025-)
– ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த 4 மாத காலப்பகுதியில் நாடு நல்லதொரு எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார ஸ்திரத்தன்மையை நாட்டுக்குள் உருவாக்கியுள்ளதென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இதன்படி பல பொருளாதார வெற்றிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் வெளிநாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்ட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தல் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கான சமிக்ஞையை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டை முன்னோக்கி நகர்த்தும் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைத்து எவரேனும் அரசியல் செய்ய நினைத்தால் அவர்கள் அரசியலில் இருந்து செல்லாதவர்களாகி விடுவார்கள் என தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பின்பற்றி ஆசிர்வதிப்பதே இன்றைய நாட்டிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் உள்ள ஒரே வழியாகும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், ஊடகங்கள் ஊடாக அரசியல் செய்யும் யுகம் முடிந்துவிட்டதாகவும், அந்த யுகம் நடைமுறையில் இருந்தால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காது எனவும், தற்போதைய அரசாங்கம் எப்போதும் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடும் ஒரு அரசியல் இயக்கம் என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்
வரலாற்றில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் பல சந்தர்ப்பங்களைப் தேசம் என்ற வகையில் கைவிட்டிருக்கிறோம் என்பதை நினைவுபடுத்திய, ஜனாதிபதி, அரசாங்கம் என்ற வகையில் நாட்டிற்கான இன்றைய வாய்ப்புகள் தவறவிடப்படாது எனவும், நாடு நெருக்கடிகளிலிருந்து விடுபட்ட பின்னரே பயணத்தை நிறுத்துவதாகவும் வலியுறுத்தினார்.
தனக்கோ அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சருக்கோ தனிப்பட்ட இலட்சியங்கள் இல்லை என்றும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் ஒரு நல்ல கனவை மட்டுமே காண்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அந்த கனவை நிச்சயமாக நனவாக்குவதாகவும், இந்த திட்டங்களை கண்டு பொறாமைப்பட்டவர்களாக வரலாற்றில் இடம் பிடிக்காமல் அதற்கு பங்களிப்பு செய்தவர்களாக முன்வருமாறு எதிர்கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
அண்மைக்காலத்தில் பாராளுமன்றத்திற்குள் நீண்ட காலமாக இதற்கு முன்னைய வரவு செலவு திட்ட விவாதங்களில் உரிய தினங்கள் கூட வழங்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நாம் முழுமையாக அந்த நாட்களை வழங்கி விவாதத்தை நடத்தினோம். அந்த விவாதத்தில் சில விடயங்கள் வேதனையுடன் முன்வைக்கப்பட்டன. சில விடயங்கள் கோபத்துடன் முன்வைக்கப்பட்டன. சில விடயங்கள் ஏற்புடையவை. கோபமடைவதும், வேதனையடைவதும் நாம் புதுமைப்பட வேண்டிய விடயங்கள் அல்ல. ஹந்தானையில் காணி கிடைக்காமல் போகும் போது வேதனையடைவது புதுமைக்குரிய விடயமல்ல.
ஜனாதிபதி செயலகத்தில் கோப்பு ஒன்றும் உள்ளது. அதனால் வேதனையை புரிந்துகொள்ள முடிகிறது. கோபத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நாங்கள் இந்த பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் ஏற்புடைய கருத்துக்களில் நல்லதை ஏற்றுகொள்ளவும் பாதகமானதை நிகாரிக்கவும் இருக்கின்ற அரசியல் தரப்பாவோம். அதேபோல் நாம் பயணித்துக்கொண்டிருந்த பொருளாதார பாதையின்
தீர்மானமிக்க திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டுமென நினைக்கும் அதற்காக செயலாற்றும் அரசியல் தரப்பாவோம்.
நாம் அவ்வாறான திருப்புமுனையை எவ்வாறு செய்யலாம் என்ற தெரிவை கொண்டிருக்கும் அரசியல் தரப்பாவோம். மிகச் சிறந்த, நெருக்கடிகள் அற்ற பொருளாதாரமொன்று எம்மிடம் இருக்கின்ற பட்சத்தில் அந்த திருப்புமுனை மிகத் துரிதமான திருப்புமுனையாக மாறும். பொருளாதாரம் மிகக் கஷ்டமான இடத்தில் இருக்குமாயின். குறிப்பிட்டளவு காலமெடுத்து அந்த திருப்பத்தை செய்துகொள்ள வேண்டும். அதனால் நீங்கள் காட்டும் அவசரத்தை எங்களினால் சரியாக புரிந்துகொள்ள முடியும்.
நாங்கள் மிகச் சரியான முறையில் நீண்டகாலமாக நடைமுறையிலிருக்கும் இந்த பொருளாதார கொள்கையில் நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமாக வகையில் தீர்மானமிக்க திருப்பத்தை ஏற்படுத்துவோம். அந்த திருப்பத்தை ஏற்படுத்த முதலில் நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது. தற்போதிருக்கும் பொருளாதார நிலைமையை ஸ்திரத்தன்மைக்கு கொண்டுவர வேண்டும். ஸ்திரதன்மையை அடையாமல் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் பொருளாதாரம் மிகப் பெரிய திருப்பங்களை தாக்கு பிடிக்காது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள். சக்கரம் இழந்த வாகனத்தினால் திரும்ப முடியாது. முதலில் சக்கரங்களை பூட்டிக்கொள்ள வேண்டும். எனவே நாம் மிகச் சரியான திட்டமிடலுடன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த திட்டங்களை முன்னெடுக்கிறோம். நாட்டிலிருந்த பொருளாதரம் எவ்வாறானது? ஒரு புறத்தில் நாம் உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையை அடைந்த நாடே எமக்கு கிடைத்தது.
உத்தியோகபூர்வமாக மாத்திரமன்றி நடைமுறையிலிரும் வங்குரோத்தடைந்த நாடே எமக்கு கிடைத்தது. அதேபோல் எமது வரவு செலவிற்கிடையில் 2025 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட ஆவணத்தை எடுத்துக்கொண்டால், எமது மொத்த பொருளாதாரத்தில் 4990 பில்லியன்களை எதிர்பார்க்கும் போது, எமது வட்டியை செலுத்த 2950 பில்லியன்கள் தேவைப்படுகிறது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 1352 பில்லியன்கள் தேவை.
ஓய்வூதியம் வழங்க 442 பில்லியன்கள் தேவை. மொத்த வருமானம் 4990 வட்டி, அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் வழங்க 4744 பில்லியன்கள் 256 பில்லியன்கள் மட்டுமே எஞ்சும். இதுவே தற்போதிருக்கும் பொருளாதாரம். இது உடனடியாக
திருப்பம் செய்யக்கூடியதும் அவசரமாக மாற்றம் செய்யக்கூடியதுமான பொருளாதாரம் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். பிரதான செலவுக்கான மூன்று தரப்புக்களுக்கான செலவுக்கு நிகாரன அல்லது அதனை விட சிறிதளவு அதிகமான வருமானத்தை கொண்ட பொருளாதாரத்தை கொண்ட நாடே எமக்கு கிடைத்தது.
அதுவே தற்போது நாம் அறிந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தின் நிலைமை. அது மட்டுமல்ல எமது வசமாக உள்ள அரச நிறுவனங்கள் சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன். ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை எடுத்துக்கொண்டால் அதன் கடந்த வருட நட்டம் 256 பில்லியன். 1837 மில்லியன் கடனும் உள்ளது. நிறுவனங்கள்! ஔிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கடந்த வருட நட்டம் 152 பில்லியன். 1603 மில்லியன் கடனும் உள்ளது. சுயாதீன தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டால் (ITN) 1476 மில்லியன் கடன் உள்ளது. இலங்கை சீனி நிறுவனத்தை பார்த்தால் 11165 ரூபாய் கடன் உள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவனத்திற்கு 3216 மில்லியன் கடன் இருக்கிறது. மில்கோ நிறுவனத்தின் கடன் 15096 மில்லியன். எயார் லங்காவின் கடன் 340 பில்லியனுக்கு கிட்டியதாக உள்ளது.
பாரிய கடன் சுமையால் வாடும், வருடாந்தம் பாரியளவில் நட்டமீட்டும் அரச நிறுவனங்கள் பலவே எமக்கு கிடைத்தன. பெற்றுக்கொள்ளும் வருமானம் நான் முன்புகூறிய விடயங்களுங்கு மாத்திரமே போதுமான நாடொன்றே எமக்கு கிடைத்தது. வருமானம் சில குறிப்பிட்டவர்களுக்குள் சுருங்கிய நாடு எமக்கு கிடைக்கிறது. பொருளாதாரத்திற்கு பங்களிப்வர்கள் குறுகிய வட்டத்துக்கு குவிந்திருக்கும் நாடே எமக்கு கிடைத்தது. உதாரணமாக எடுத்துக்கொண்டால் எமது ஏற்றுமதி வருமானத்தில் 90 சதவீதத்தை 10 சதவீதமான ஏற்றுமதியாளர்களே பெற்றுக்கொள்கிறார்கள்.
எமது இறைவரித் திணைக்களத்தின் வருமானத்தின் 69 சதவீதம் 620 க்கு கிட்டிய கோப்புகளில் இருந்தே கிடைக்கிறது. அதுவே பொருளாதாரம் மிகக் குறுகிய குழுக்களின் கைகளுக்குள் குவிந்து கிடக்கும் பொருளாதாரம். மறுமுனையில் உலகத்தின் முன்பாக வங்குரோத்து அடைந்த நாடு. கடன் பெற முடியாத. வங்கிக் கட்டமைப்பு மீதான நம்பிக்கை இழந்த, அரச நிதி நிலைமைகள் தொடர்பில் நம்பிக்கையின்மை ஏற்பட்டிருக்கும் நாடு.
அவ்வாறாயின் முதலில் என்ன செய்ய வேண்டியுள்ளது. முதலில் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தாமல் திருப்பங்களை செய்ய நாம் தயாரில்லை. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தாமல் செய்யப்படும் திருப்பங்கள் பொருளாதாரத்துக்கு பாதகமான விளைவுகளை கொண்டுவரும். இந்த நிலையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முன்னுரிமை அளிப்பதை நாம் வௌிப்படுத்தினோம்.
நாம் வரும்போது சர்வதேச நாணய நிதியத்துடன் 4 வருட நீடிக்கப்பட்ட கடன் வேலைத்திட்டத்துடன் இணைந்திருந்தோம். எனவே நாம் திருப்பத்தை செய்ய என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் சொல்லுங்கள். எமக்கு இரு பாதைகள் தெரிந்தன. ஒன்று சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். இல்லாவிட்டால் கைவிட வேண்டும். நீங்கள் கைவிடுவோம் என்றே நினைத்தீர்கள். அந்த பிடிக்குள் நாங்கள் சிக்கப்போவதில்லை. எமது எதிர்பார்ப்புகள் தொடர்பில் நாம் அறிவோம். எமது பொருளாதாரம் இருக்கின்ற நிலைமைக்கு அமைய நாம் சிறியளவில் செய்யும் தவறுகள் கூட அழிவுகரமான எதிர் விளைவுகளை கொண்டு வந்து தரும். இது அப்பட்டிப்பட்ட பொருளாதாரம்.
அதனால் அரசாங்கம் என்ற வகையில் எமக்கு, பாரிய தவறுகளையும் அழிவுகளையும் செய்து ஏற்படுத்திய பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரப்படுத்தும் போது சிறிய தவறு கூட நேராமல் பார்த்துகொள்வதே எமது பொறுப்பாகும். அதனை நாம் செய்திருக்கிறோம்.
பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதே எமது முதல் முயற்சியானது. ஜனாதிபதி அதிகாரம், பாராளுமன்ற அதிகாரம், அமைச்சரவை என்பவற்றுடன் நாம் நவம்பர் 21 ஆம் திகதியே முழுமையாக ஆட்சியமைத்தோம். இன்று மார்ச் 21 ஆம் திகதி நான்கு மாதங்கள் ஆகிறது.
இ்ந்த நான்கு மாதங்களுக்குள் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாம் சுபமான எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை வைக்கும் நிலைத்தன்மையை இந்த நாட்டில் நாம் உருவாக்கியிருக்கிறோம். நாம் டிசம்பர் 21 உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டோம். கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி வரையில் நாம் கடனை மீளச் செலுத்தாத நாடு. பெற்றக்கடனை மீளச் செலுத்தாமல் இருந்த நாடு டிசம்பர் 21 ஆம் திகதி வரையில். டிசம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னரும் நாம் கடன் செலுத்தவில்லை.
கடன் செலுத்தாமல் இருப்பது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்த நாடு. பலந்தமாக, ஒருதலைபட்சமாக பெற்ற கடனை செலுத்த மாட்டோம் என்ற நாட்டிலிருந்து கடன் பெற்றவர்கள் மற்றும் கடன் தந்தவர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கும் நாடு. 2028 வரையில் நாம் அவர்களின் கடன்களை செலுத்தப்போவதில்லை என்ற இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கிறோம். அதன்படி டிசம்பர் 21 ஆம் திகதியே உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டிருக்கிறோம். வங்குரோத்து நிலையை அடைந்ததால், எமக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் சம்பூர் மின்சார நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிக்க ஏப்ரல் 05 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையுடன் ஆரம்பித்து வைக்க எதிர்பார்க்கிறோம். கடந்த சில வருடங்களில் பிரசித்தமான நாடுகளின் தலைவர்கள் நாட்டிற்கு வருகை தந்தனரா? வரமாட்டார்கள். இது வங்குரோத்தடைந்திருந்த நாடு. இன்று ஸ்திரத்தன்மையை சமிக்ஞையை காண்பித்திருக்கிறோம். அதேபோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு கிட்டிய காலத்தில் சியம்பலாண்டுவ பகுதியில் புதிய சூரிய சக்தி நிலையத்தையும் மன்னாரில் 50 மெகாவோட் காற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்தையும் ஆரம்பிப்போம். அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும், வௌிநாட்டு நிதி நிறுவனங்களுக்கும் நம்பிக்கையற்ற நிலைமை காணப்பட்டது. எமது நிதி அலகுகள் ஸ்திரமான இருக்கவில்லை. தொடர்ச்சியாக ஏற்ற இறக்கமடையும் நிதி அலகொன்றே காணப்பட்டது. நாம் கடந்த 4 மாதங்களுக்குள் எமது நாட்டில் ரூபாவின் பெறுமதியை தொடர்ச்சியாக 300 ரூபாய்க்கு கிட்டியதான பேணியிருக்கிறோம்.
இது மூன்று வருடங்களுக்கு பின்பு ஏற்பட்டிருக்கும் நிலைமை. கடந்த நான்கு மாதங்களாக டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை ஸ்திரமான தன்மையுடன் பேணியிருக்கிறோம். உலக தரப்படுத்தல் நிறுவனங்கள். எமது நாட்டை மிகக் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளான நாடு என்பதிலிருந்து கடன் நெருக்கடி குறைந்த நாடு என்பது வரையில் எமது தரப்படுத்தலை குறைத்திருக்கிறது. நாம் ஸ்திரத்தன்மையை உருவாக்கியிருக்கிறோம்.
அடுத்ததாக எமது நாட்டின் வங்கிக் கட்டமைப்பு மீதான நம்பிக்கை இழக்கப்பட்டிருந்தது. எமது வங்கிக் கட்டமைப்பு மீதான சர்வதேச நிதி நிறுவங்களின் நம்பிக்கையை மீள ஏற்படுத்தியிருக்கிறோம். நம்பிக்கையை
கட்டியெழுப்பியிருக்கிறோம். அது மட்டுமல்லாது வங்கி வட்டி வீதத்தை தனி இலக்கமாக பேண வேண்டும் என்று நீண்டகாலமாக முயற்சிக்கப்பட்டது. நாம் செய்து காட்டியிருக்கிறோம். தனி இலக்கத்தில் வங்கி வட்டி வீதத்தை பேணியிருக்கிறோம். பணவீக்கம் ஓரளவு அவதானமான நிலையில் உள்ளது. அது நல்லதல்ல. ஆனால் இந்த நாட்டில் கடுமையாக பணவீக்கம் உயர்வந்துகொண்டிருந்தது. பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரித்தது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக எமது நாட்டின் பணவீக்கம் 70 சதவீதமாக அதிகரித்தது. இன்று பணவீக்கம் குன்றிய நிலைமை உருவாகியிருக்கிறது. அதுவும் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. அது ஒரளவான மதிப்பு பணவீக்கமான உயர்வடையுமென நாம் எதிர்பார்க்கிறோம். மீள்பணவீக்கம் நாட்டுக்கு நல்லதல்ல. நாம் அந்த நிலைக்கு வந்திருக்கிறோம். கடந்த இரு மாதங்களில் இலங்கை வரலாற்றில் இதுவரையில் கிடைக்கப்பெற்ற அதிகளவான வௌிநாட்டு பணியாளர்களின் வருமானம் கிடைத்திருக்கிறது. அது பொருளாதாரம் பற்றிய நம்பிக்கை உறுதி செய்யப்பட்டிருப்பதையே பிரதிபலிக்கிறது.
அது மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளின் பயணத்தை பார்க்கும் போது, சுற்றுலாப் பயணிகளின் வருகை சிறந்த வகையில் காணப்படுகிறது. இந்த மார்ச் மாதம் நிறைவடையும்போது 6 இலட்சத்து 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். நாம் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறேன். இவ்வருடம் இலங்கைக்கு அதிளவான சுற்றுலா பயணிகள் வருகின்ற வருடமாக மாறும். எமது எதிர்பார்க்கப்படும் வருமான இலக்கு, எதிர்பார்க்கப்படும் இலக்குக்கும் உண்மையான இலக்குக்கும் காணப்படும் வேறுபாட்டினை பல முறை இந்த பாராளுமன்றத்தில் நாம் கண்டிருக்கிறோம்.
2024 ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட வருமானத்திற்கு நிகரான வருமானத்தை சுங்கத் திணைக்களம் எமக்கு பெற்றுத் தந்தது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மார்ச் மாதம் வரை எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 356 பில்லியன். ஆனால் மார்ச் 17 ஆம் திகதி ஆகும்போதே 437 பில்லியன்கள் கிடைத்திருக்கிறது.
எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிஞ்சிய வருமானத்தை இந்த சில மாதங்களில் நாம் ஈட்டியிருக்கிறோம். அதேபோல் ஜனவரியில் சுங்கத் திணைக்களத்தின் வருமானம். நாம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக கிடைத்திருக்கிறது. அதுவே பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பிலான சமிக்ஞை. இந்த நிலைத்தன்மையை அடைந்துகொள்ளாமல் பொருளாதாரத்தில் பாரிய திருப்பங்களை செய்ய முடியாது.
சரிவடைந்த பொருளாதாரத்தில், நெருக்கடியிலிருக்கும் பொருளாதாரத்தில் எவ்வாறு திருப்பத்தை செய்வது. எனவே எமது முதல் முயற்சி இ்ந்த பொருளாதாரத்தை வலுவாக ஸ்திரப்படுத்துவதாகும். தனியார் தொழில் முயற்சியாளர்களுக்கு எமது பொருளாதாரம் தொடர்பிலும் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் எமது பொருளாதாரத்துடன் தொடர்புபட்டிருக்கும் குழுக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ளாமல், பொருளாதாரத்தினால் முன்னோக்கி செல்ல முடியாது. இன்று எமது பொருளாதாரம் தொழில் முயற்சியாளர்களின், , வங்கிக் கட்டமைப்பின், சர்வதேச நிதி நிறுவங்கள், வௌிநாட்டு முதலீட்டாளர்களின், நம்பிக்கையுடன் கூடியதாக அமைய வேண்டும். தரவுகள் மற்றும் தரவுகளால் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனை மீதான தீர்மானங்களின் அடிப்படையில் நாம் பொருளாதாரத்தை வழிநடத்துகிறோம்.
வாகன இறக்குமதி விவகாரம் மிக அவதானமான தீர்மானம்.நாம் நாளாந்தம் பரிசீலனை செய்து இந்த இலக்கை நோக்கி நகர திட்டமிடுகிறோம். பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்க நாம் பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறோம். வேண்டியளவு அரசியல் செய்யுங்கள். பொருளாதாரம் ஸ்திரமற்று போவதற்கான பொய்யான விடயங்களை சமூகமயப்படுத்த வேண்டாம். உங்களுடைய சிலருக்கு பொருளாதார வல்லுனர்கள் என்ன நாமங்கள் உள்ளன. அவ்வாறானவர்களின் கருத்துகள் பொறுப்புடன் கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறான கருத்து எமது நிதிச் சந்தையில் பாரிய ஸ்திரமற்ற நிலையை உருவாக்கலாம். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் என்று நினைக்க வேண்டியது அரசாங்கம் என்ற வகையில் எமது கடமை மாத்திரமல்ல. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் பிரஜைகள் என்ற வகையிலும், மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிலும் அனைவரினதும் பொறுப்பாகும்.
அரசியல்வாதிகள் என்ற வகையில் அரசியலுக்குள் வேண்டியளவு போராடலாம். வேண்டியளவு ஒருவருக்கொருவர் முரண்படலாம். ஆனால் பொருளாதாரம் பற்றிய பொய்யான விடயங்களை சமூகமயப்படுத்த வேண்டாம் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாளை அது பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். நாளை அது எமது வங்கிக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையில் தாக்கம் செலுத்தலாம். நாளை நமது நாட்டின் மீது பார்த்துக்கொண்டிருக்கும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தலாம்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிக்களுக்கு வெற்றியளிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டிய தருணம்.
அதேபோல் பொருளாதாரம் ஸ்திரமடையும் வரையில் பிரஜைகளின் வாழ்க்கை போகிற போக்கில் போகட்டும் என்று விட்டுவிட முடியாது. படிப்படியாக நாட்டின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காகவும் பொதுமக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கும் அவசியமான நிவாரணங்களை வழங்க வேண்டும். அதன்படி நாம் வரும்போது ஒரு ஏக்கருக்கான உரத்திற்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாவை 25 ஆயிரமாக அதிகரித்தோம். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செய்தோம். கடந்த அமைச்சரவையில் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கும் 15 ஆயிரம் உர நிவாரணத்தை வழங்குவதாக தீர்மானித்தோம். இதற்கு முன்னதாக வயல் விளைச்சல்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது. வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கும் நாம் உர நிவாரணத்தை வழங்குவோம்.
அடுத்தாக அஸ்வெசும. சற்று முன்னர் எம்.பியொருவர் மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார். ஆம், அவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். அஸ்வெசும இரு பிரிவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு குழுவிற்கு 8500 கிடைத்தது மற்றுமொரு குழு 15 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டது. நாம் வந்த விரைவில் என்ன செய்தோம்? 8500 ரூபாய் பெற்றுக்கொள்ளும் குழுவின் கொடுப்பனவை 10 ஆயிரமாக அதிகரித்தோம். இந்த ஜவரியிலிருந்து 15 ஆயிரம் பெற்ற குழுவினருக்கு 17500 ஆக அதிகரித்தோம். ஏன்! மக்களை பாதுகாக்க வேண்டும். அது எமது பொறுப்பு அதனை கைவிடப்போவதில்லை. 2024 டிசம்பர் 31 ஆம் திகதி எட்டு இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசும திட்டத்திலிருந்து விடுவிக்கப்படவிருந்தன. அதில் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு மேலும் நான்கு மாதங்கள் நீடிப்பு செய்திருக்கிறோம். இன்னும் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு 12 மாதங்கள் நீடிப்பு செய்திருக்கிறோம். நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே செய்தோம். கடந்த டிசம்பர் 31 முதல் அஸ்வெசும வேலைத்திட்டத்திலிருந்து விடுவிக்கப்படவிருந்த எட்டு இலட்சம் குடும்பங்கள் மீண்டும் அஸ்வெசும திட்டத்திற்குள் தக்க வைக்க நடவடிக்கை எடுத்தோம். ஏனெனில் பொருளாதாரத்தை பரிசீலனை செய்யும்போது பொருளாதாரம் நல்ல நிலைக்கு திரும்பவில்லை. மேற்படி மக்கள் விடுவிக்கப்படுவது நியாமானது அல்லவென புரிந்துகொண்டோம்.
இந்த நிலைமைக்குள் மக்களை பார்த்துக்கொள்வோம். கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் பிரச்சினை காணப்பட்டது. பாடசலை விடுமுறை கிடைத்தது. கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்யும் இயலுமை இல்லை என்பது தெரிந்தது. ஒரு பிள்ளைக்கு 6000 ரூபாய் வழங்கத் தீர்மானித்தோம். ஆனால் சலுகை கிடைக்கவேண்டியவரை இலக்கு வைத்து சலுகையை வழங்க வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் இலக்காகும். அதுவே எமது கொள்கையாகும். சலுகை கிடைக்க வேண்டியவரும், அவசியமற்றவருமாக அனைவருக்கும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை சலுகை வழங்க வேண்டிய குழுவொன்று உள்ளது. இவ்வருடத்தில் பாடசாலை புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்ய 16 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபாய் கொடுப்பனவை வழங்கினோம். இது முதல் முறையாக நடக்கிறது. இந்த பொருளாதாரம் சரியாக குணமடையவில்லை. பொருளாதாரத்தில் நாம் பாரிய திருப்பத்தை நாம் இன்னும் செய்யவில்லை. ஆனாலும் நாம் அவர்களை பாதுகாக்க வேண்டும்.
சிறுநீரக நோயாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு 7500. இந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அதனை 10 ஆயிரமாக அதிகரித்திருக்கிறோம். அடுத்ததாக முதியவர்களுக்கான கொடுப்பனவு 3000 இருந்ததை 5000 ஆக அதிகரித்திருக்கிறோம். மக்களை பாதுகாக்கிறோம். ஆரம்பத்திலேயே நாங்கள் ஓய்வூதிய தொகையை 3000 ரூபாவினால் அதிகரித்தோம். மக்களை பாதுகாப்பதற்காக. நாங்கள் மக்களை கைவிட்டதாக சொல்கிறார்கள். இல்லை. எந்த மக்கள் குழுக்கள் மீது எமக்கு பொறுப்புள்ளது என்பதை புரிந்துகொண்டு செயலாற்றும் அரசியல் தரப்பு நாங்கள். எமக்கு பொறுப்பும் கடமையும் உள்ளது.
மக்களை பாதுகாக்க வேண்டும். அவர்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்த வேண்டும். மகாபொல 5000 ரூபாய் கொடுப்பனவை 7500 ரூபாவாக அதிகரித்திருக்கிறோம். புலமைப்பரிசில் கொடுப்பனவை 6500 ரூபாவாக அதிகரித்தோம். நான் முன்பு கூறிய பொருளாதார நிலைமைக்குள்ளேயே இதனை செய்கிறோம். அதேபோல் நிலையங்களுக்குள் வசிக்கும் பிள்ளைகளுக்கு அதாவது பெற்றோர் இல்லாத வீதி பிள்ளைகளுக்கு 5000 கொடுப்பனவு வழங்கவும் 3000 ரூபாவை அவர்களின் நிலையான கணக்கில் வைப்புச் செய்யவும் நாம் தீர்மானித்திருக்கிறோம்.
மாதாந்தம் அவர்களின் நிலையான வைப்புக்காக 3000 ரூபாய் வழங்குகிறோம். அந்த அநாதை பிள்ளைகள் திருமணம் ஆகின்ற போது கொடுப்பனவை, குறிப்பாக பெண்
பிள்ளைகள் திருணம் செய்கின்ற போது அவருக்கு வீடொன்றை கட்டிக்கொள்ள 10 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொடுப்போம். இல்லாவிட்டால் அவர்களை யார் பார்ப்பது. பாலர் பாடசாலை மாணவர்களுக்கு 60 ரூபாயாக இருந்த உணவுக் கொடுப்பனவை 100 ரூபாயாக அதிகரித்தோம். நாம் மக்களுக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டிருக்கும் ஆளும் தரப்பாவோம்.
அடுத்த பாரிய பிரச்சினை அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலானது. நாம் அரச சேவையிலிருக்கும் இரண்டு பிரச்சினைகளை அறிந்துகொண்டிருக்கிறோம். சிறந்த தொழில்வான்மை மிகுந்த அரச ஊழியர்கள் நாட்டை விட்டுச் செல்லும் நிலைமை காணப்படுகிறது. நல்லதொரு தொழில் இயலுமை மிக்கவரை அரச சேவைக்குள் உள்வாங்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
எமக்கு அது தொடர்பிலான இயலுமை கொண்ட அதிகாரிகள் குழுவை அரச சேவைக்குள் ஈர்த்துக்கொள்ள முடியாமல் உள்ளது. அரச சேவையின் சம்பளம் மிகக் குறைவான மட்டத்தில் இருந்தது. அதனால் நாட்டை விட்டுச் செல்லல் மற்றும் இயலுமை மிக்கவர்களை அரச சேவைக்குள் உள்ளீர்ப்பது மந்த நிலையில் காணப்பட்டது. அதனால் நாம் இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் நல்லதொரு அதிகரிப்பை செய்ய வேண்டுமென நினைத்தோம். அதனை செய்திருக்கிறோம். ஊழியர்களும் இவ்வாறான அதிகரிப்பை எதிர்பார்க்கவில்லை.போராடி கேட்கவும் இல்லை. அடிப்படைச் சம்பளம் தொடர்பில் கலந்துரையாடல் மட்டுமே இருந்தது.ஆனால் அறிவியல் முறையில் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை எடுத்தோம். அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தியிருக்கிறோம். விடுமுறை நாட்களில் பணியாற்றுவோருக்கு கிடைக்கும் கொடுப்பனவின் அளவை. அடுத்ததாக வருடாந்த சம்பள அதிகரிப்பை பற்றி ஒருபோதும் கலந்துரையாடலொன்று இருக்கவில்லை. மிகக் குறைந்த சம்பள அதிகரிப்பு விகிதமே காணப்பட்டது. நாங்கள் அதனை 80% சதவீதத்தினால் சம்பள உயர்வை வழங்க தீர்மானித்தோம். அதிகரித்திருக்கிறோம். அதுமட்டுமல்ல அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பாரிய பிரச்சினை ஒன்று இருந்தது. தமது சம்பளத்தில் தம்மால் தாங்கிக்கொள்ள முடியாத வரி விதிக்கப்பட்டது. ஒரு இலட்சம் என்ற வரி வரம்பை ஒன்றரை இலட்சமாக அதிகரித்தோம். ஒன்றரை இலட்சம் சம்பளம் எடுப்பவர் முழுமையான வரியிலிருந்து விடுவிக்கப்படுவார். இந்த அனைத்தினாலும் நாம் வினைத்திறனான அரச சேவை ஒன்றிணையே எதிர்பார்க்கிறோம்.
மறுமுனையில் அரசியல் அதிகார தரப்பு என்ன செய்கிறது. நான் ஜனாதிபதியானவுடன் எம்.பிக்கான ஓய்வூதிய சம்பளம் எனக்கு கிடைக்கிறது. முன்பிருந்தவர்களுக்கு கிடைத்திருக்கிறது. ஜனாதிபதி சம்பளத்திற்கு மேலதிகமான எம்.பிக்கான கொடுப்பனவும் எனக்கு கிடைக்கிறது. எம்.பிக்கான ஓய்வூதியம் எனக்கு வேண்டாமென இன்று கடிதம் கொடுத்திருக்கிறேன். நாட்டை திருத்த ஆரம்பிக்க வேண்டும். எம்.பிக்கள் ஜனாதிபதியான பின்னர் அவர்களுக்கு எம்.பிக்களுக்கான ஓய்வூதியமும் கிடைக்கும். உண்மையாகவே நான் இவ்வாறு கிடைக்கும் என்பதை அறிந்திருக்கவில்லை. அறிந்துகொண்ட உடனேயே பாராளுமன்றத்திற்கு எனக்கு ஓய்வூதியம் வேண்டாம் என்று கடிதம் கொடுத்திருக்கிறேன்.
அதேபோல் அமைச்சர்கள் எம்.பிக்களுக்கும் அமைச்சர்களுக்கும். எம்.பி அமைச்சரவானவுடன் எம்.பியின் சம்பளமும் கிடைக்கும் அமைச்சரின் சம்பளமும் கிடைக்கும். இவ்வாறுதான் அனுபவித்திருக்கிறார்கள்.
எமது அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் எம்.பிக்களுக்கான சம்பளத்தை மட்டுமே பெறுவர் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். நாட்டை திருத்த நியாயமாக செயற்பட வேண்டும். அந்த அர்ப்பணிப்பை நாங்கள் செய்திருக்கிறோம். இந்த நாட்டை மாற்ற இந்த அரசியலும் மாற வேண்டும். எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வோம் அதற்கான சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவோம். ஜனாதிபதியின் வரப்பிரசாத சட்டத்தை திருத்தம் செய்வோம். அந்த சட்டமும் மிக விரைவில் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும். பாராளுமன்றத்தில் அனைவரும் இணைந்து கை உயர்த்தக்கூடிய சில சட்டங்கள் விரைவில் கொண்டு வருவோம். எமது அமைச்சர்கள் எண்ணிக்கையை 21 ஆக குறைத்திருக்கிறோம் பிரதி அமைச்சர்கள் எண்ணிக்கையை அதற்கு ஏற்றவாறு வழங்கியிருக்கிறோம். அமைச்சர்களுக்கான வீடுகள் உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்தியிருக்கிறோம். இது எதற்காக. அரசியலிலும் நிலைத்தன்மையை உருவாக்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது. எம்.பிக்கள் உள்ளடங்களாக அரசியல் தரப்பு நாட்டை கட்டியெழுப்ப முன்னுதாரணமாக இருக்கின்ற போது அரச ஊழியர்களும் அதற்கு தயாராக வேண்டும். அவ்வாறில்லாமல் அபிமானம் என்ற சிறிய விடயங்களுக்குள் சிக்கி கேள்வி கேட்க வேண்டாம்.
அடுத்ததாக வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியிருக்கிறோம். இந்நாட்டில் எல்லா இளையோருக்கும் தொழில் செய்யும் உரிமை உள்ளது. தொழில் வாய்ப்புக்கள் உருவாக வேண்டும் அரசாங்கத்தினால் வௌியில் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனால் நாம்
மீண்டும் வேலையில்லாத, பதவியில்லாத, கதிரை இல்லாத, இலக்கு இல்லாத கூட்டமாக அரசாங்கத்திற்கு உள்வாங்கப் போவதில்லை.
அதனால் தொழில் வழங்கும் கொள்கையொன்றை தயாரித்திருக்கிறோம். தற்போது உயர் மட்டத்தில் பெரிய நெருக்கடி இல்லை. கீழ் மட்டத்தில் தன்னிறைவாக உள்ளது. மத்திய நிலையில் குறைப்பாடு உள்ளது. அந்த வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.
தற்போது நாங்கள் 15300 வெற்றிடங்களை அறிந்திருக்கிறோம். 15300 பேரை இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாம் அரச சேவையை ஏற்கும் ஆட்சி. அரச சேவையை வழங்க நாம் செய்யும் செலவு அதிகம். அதனை குறைக்கும் திட்டங்களை நாம் தயாரித்திருக்கிறோம்.
இப்போதிருப்பதை அவ்வண்ணமே செய்துகொண்டு செல்வதாயின் அது எமக்கு இலகுவானது. ஆனால் தற்போதிருப்பதை நாட்டுக்கும் மக்களுக்களுக்கும் நலன் தரும் வகையில் மாற்றவே நாம் வந்தோம். அதனையே செய்துகொண்டிருக்கிறோம். அந்த மாற்றத்தை செய்கிறோம். அதன்போது எமது வர்த்தகர்களுக்கு பெரும் பணியுள்ளது. அனைவரும் உரிய வகையில் வரி செலுத்த வேண்டும். வரி ஏய்ப்பவர்கள் இருந்தால் நழுவிச் செல்வோர் இருந்தால் வரி மோசடி செய்ய எவரேனும் முயற்சிப்பார்களாயின் அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டத்தை பலப்படுத்தி செயற்படுத்துவோம்.
நியாயமான வரியை செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்தும் வரியில் ஒவ்வொரு ரூபாவையும் கடவுள் பணியை போல பார்த்துக்கொள்வோம்.வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் வழங்கவேண்டிய சலுகைகள் தொடர்பில் நாம் ஆலோசித்திருக்கிறோம்.
அவர்களுக்கு நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. ஆட்சியொன்று வந்துள்ளது செலுத்தப்படும் வரிகள் மிகச் சரியாக பாதுகாக்கப்படுகிறது. பாதுகாப்பான ஆட்சி என்ற சமிக்ஞையை வழங்கினால் அவர்கள் வரி செலுத்துவார்கள். வரி செலுத்துபவர் நான் வரி செலுத்துபவன் என்று பெருமையாக சொல்ல முடியும்.
அரச சம்பளத்தை அதிகரித்திருக்கிறோம் அனைவரும் பணியாற்ற வேண்டும். அரசாங்கத்தினால் செய்யக்கூடிய பணிக்காக இலஞ்ச பணம் செலுத்த வேண்டிய நிலைமை உருவாகாமல் இருக்க வழி செய்ய வேண்டும். அவர்களுக்கு மக்கள் வரியில் நல்ல சம்பளம் கிடைக்கிறது. வேலையை செய்து கொள்ள வருபவரிடம்
பணம் பெற முடியாது. அவருக்கான கணக்கை அரசாங்கம் கொடுக்கிறது. இந்நாட்டில் இலஞசம் அரச சேவையை செயலிழக்கச் செய்கிறது.
கல்வியில் பாரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். பாடசாலை கட்டமைப்புக்குள் பெருமளவான பிரச்சினைகள் எழுந்துள்ளன. எனவே பாடசாலைகளை மீண்டும் ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். குறைந்தபட்சம் பாடசாலையில் போட்டி நடத்தக்கூடிய, சுற்றுலா செல்லக்கூடிய, விளையாடக்கூடிய மாணவர்கள் தொகையாவது இருக்க வேண்டும். எனவே பாடசாலை கட்டமைப்பில் புதிய திட்டங்களை திட்டமிட்டிருக்கிறோம்.
இலங்கையில் முதல் முறையாக மக்களுக்கு அரசாங்கம் ஒன்று கிடைத்திருக்கிறது. இவ்வளவு காலமும் மக்களுக்கு அரசாங்கம் கிடைக்கவில்லை. முதல் முறையாக மக்கள் ஆட்சி கிடைத்திருக்கிறது. அரசாங்கம் என்பது என்னவென பிரஜைகளுக்கு இந்நாட்டில் நாம் முன்னுதாரணம் காட்டுவோம்.
அப்படியொரு ஆட்சியையை அமைத்திருக்கிறோம். எனவே இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை அமைத்திருக்கிறோம். பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கியிருக்கிறோம். வலுவான அரச சேவையை உருவாக்க அடி வைத்திருக்கிறோம். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்திருக்கிறோம்.
இந்த நாட்டை கட்டியெழுப்ப அவசியமான பொறிமுறையை நாம் வலுப்படுத்த வேண்டும். அதற்கான அடித்தளமாக அரச சேவை, அரசியல் அதிகார தரப்பு, பொருளாதார நிலைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக சட்டம் செயற்படுத்தப்படும் நாடு. இந்த நாடு மற்றும் நாட்டு மக்களுடனான தொடர்பு மட்டுமே எங்களுக்கு உள்ளது. எனவே நாங்கள் அடித்தளத்தை அமைத்திருக்கிறோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் முன்னோக்கிச் செல்வோம்.