(-திசைகாட்டியின் சூரியவெவ கமக்காரர் பேரணி – 2024-07-02-)
இங்கு குழுமியுள்ள கமக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ முட்டாள்த்தனமான தீர்மானமொன்றை எடுத்தார். கமத்தொழிலுக்காக வழங்குகின்ற இரசாயனப் பசளையை நிறுத்த தீர்மானித்தார். அந்த தீர்மானத்தை எடுக்கும்போது மகிந்த அமரவீர, நாமல் ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாவர். மகிந்த ராஜபக்ஷ பிரதமர். “உரத்தை பெற்றுக்கொடு” என ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலை கமக்காரர்களுக்கு ஏற்பட்டது. அதுமாத்திரமல்ல, சந்திரிக்கா வெவவிலிருந்து நீரை விடுவிப்பதை நிறுத்தினார்கள். கமநிலங்கள் நாசமடைய இடமளித்தார்கள். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு நீரைப்பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை கமக்காரர்களுக்கு ஏற்பட்டது. யானைகள் ஊர்களுக்குள் வருவதை தடுக்குமாறு கோரி சூரியவெவ மயுரபுர பிரதேச மக்களுக்கு நீண்டகால உண்ணாவிரதத்தில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டது. தமது கமத்தொழில், ஆதனங்கள், வீடுகள் அழிவடைகையில் மக்கள் அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரி வீதியில் இறங்கினார்கள். நெல்லுக்கு நியாயமான விலையை கோரி வீதியில் இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் இந்த கமக்கார தாய்மார்களையும் தந்தையர்களையும் தமது தேவைகளை பெற்றுக்கொடுக்குமாறு வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்ற யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து கமக்காரர்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற புதிய அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வோம் என அழைப்பு விடுப்பதற்காகவே வந்திருக்கிறோம். கிராமத்து மக்களின் பிரச்சினைகள் பற்றி, பொருளாதாரம் பற்றி, விவசாயம் பற்றி சிந்திக்கின்ற புதிய அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்ள வேண்டிய தேவை நிலவுகின்றது. அந்த அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு தற்போது உருவாகியிருக்கிறது. நாங்கள் இந்த தடவை வந்தது பாராளுமன்றத்தின் எங்களுடைய எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கோருவதற்காக அல்ல. 76 வருடங்களுக்கு பின்னர் மக்களின் அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதற்காக ஒன்றுசேருவோம் என அழைப்பு விடுக்கவே நாங்கள் வந்திருக்கிறோம்.
இதற்கு முன்னர் நாங்கள் பல்வேறு கட்சிகளாக பிரிந்திருக்கலாம். அது வரலாறு: நாங்கள் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகையில் யூ.என்.பி., ஸ்ரீ லங்கா, ஜே.வி.பி. என்ற பேதம் கிடையாது. அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறோம். அரசாங்கம் எம்மை கட்சி ரீதியாக பிரிக்கின்றது. ஊர்களில் அவ்விதமாக பிளவுப்பட்டிருந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாங்கள் புதிய அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதற்காக ஒன்று சோ்வோம். நாட்டின் சாதாரண குடிமக்கள் புதிய எதிர்பார்ப்புடன் அணிதிரண்டிருக்கிறார்கள். மக்கள் மரபு ரீதியான யூ.என்.பி. ஸ்ரீ லங்கா, கட்சி நிறபேதங்களை கைவிட்டு திசைகாட்டியை தெரிவு செய்கையில் அவர்களும் மேல்மட்டத்தில் ஒன்றுசோ்கிறார்கள். மஹிந்த அமரவீரவும், ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே மேடையில் சந்திப்பார்கள் என்று எப்போதாவது சிந்துத்து பார்த்தீர்களா? அவர்கள் ஒன்று சேர்வார்கள். இங்கே இருக்கின்ற தாய்மார்களும் தந்தையர்களும் ரணில் விக்கிரமசிங்க கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணவீர, ரணிலை சிறைக்கு அனுப்பும் வரை நித்திரை வரமாட்டாது எனக்கூறிய முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, லக்ஷமன் யாப்பா, மஹிந்த அமரவீர, நாமல் ராஜபக்ஷ ஒரே மேடையில் ஒரே அரசாங்கத்தில் இருப்பார்களென நினைத்துப் பார்த்தார்களா? ஊர் மக்கள் திசைகாட்டியை சுற்றி ஒன்று சோ்கையில் அவர்கள் திசைகாட்டியை எதிர்கொள்வதற்காக மேல்மட்டத்தில் ஒன்றுசோ்கிறார்கள். கடந்த தினமொன்றில் அம்பலாந்தோட்டையில் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டமொன்று நடைபெற்றது; மொட்டுக்கட்சியில் அரைவாசிக்குமேல் அந்த மேடையில். மஹிந்த அமரவீர, சுசில் பிரேமஜயந்த, நிமல் லன்சா அந்த மேடையில். இற்றைக்கு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் கூறினார்கள் “சரிவராது, அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றவர் ரணில். நாட்டை நாசமாக்குபவர் ரணிலே. ரணிலிடமிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்றாகும். அவ்வாறு கூறியவர்கள் “நாட்டை கட்டியெழுப்பக்கூடியவர் ரணிலே” என இன்று கூறுகிறார்கள். அது ஏன்? அவர்கள் தப்பித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
76 வருடங்களுக்கு பின்னர் இலங்கையில் முதல் தடவையாக பொதுமக்களின் அரசியல் இயக்கமொன்று அதிகாரத்தை பெறமுயற்சி செய்கின்றது. அவர்கள் பயந்துவிட்டார்கள். அவர்களின் அனைத்துவிதமான பகைமைகள், பழைய கோபதாபங்கள், கருத்தியல்கள் அனைத்தையும் ஒரு புறம் வைத்துவிட்டு ஒன்றுசோ்ந்துள்ளார்கள். அவர்களின் கையிலுள்ள அதிகாரம் பொதுமக்களின் கைக்கு மாறுவதை தடுக்கவேண்டுமாயின் அவர்கள் ஒன்று சேரவேண்டும். இப்போது ஐ.ம.ச. ராஜித சேனாரத்ன உள்ளிட்ட 15 போ்களை கொண்ட ஒரு குழுவும் அண்மையில் கபீர் ஹஷிமின் வீட்டில் ஓர் உரையரடலை நடத்தியது. இது பற்றி ராஜித தொலைக்காட்சி நோ்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். ஐ.ம.ச. ரணிலுடன் ஒன்று சேராவிட்டால் ஜே.வி.பி. அதிகாரத்திற்கு வந்துவிடுமென பேசப்படுகிறது. ஜே.வி.பி. அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்காகவே இவர்கள் ஒன்றுசோ்கிறார்கள். ரணிலாயினும் சரி சஜித்தாயினும் சரி வெற்றிபெறுவார்களானால் அவர்கள் ஒன்றுசேர வேண்டிய தேவை கிடையாது. இந்த அனைவரையும் ஒன்று சேருமாறு ஏன் அழுத்தம் கொடுக்கிறார்கள்? திசைகாட்டியின் வெற்றி கண்ணுக்கெட்டியதூரத்தில் இருப்பதாலாகும். மேலே இருக்கின்ற ஊழல் மிக்க பிரபுக்கள் வகுப்பைச் சோ்ந்தவர்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒன்று சோ்கிறார்கள்.
அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும்; அதற்கு முகங்கொடுக்க ஊர்களிலுள்ள நாங்களும் பழைய கோபதாபங்களையும் வித்தியாசங்களையும் மறந்து ஒன்று சேரவேண்டும். இந்த சூரியவெவவில் பாரிய வெற்றியை பெறவேண்டும். நான் உங்களிடம் கேட்கிறேன். “வாழ்க்கை போதுமென்று ஆகிவிடவில்லையா?” இப்போது “நன்றாகவே போதும்” என்று எவ்வளவுதான் சிந்தித்திருப்பீர்கள்? நஞ்சு அருந்தவேண்டுமென எத்தனை தடவைகள் நினைத்திருப்பீர்கள்? வாழ்க்கை மீது விரக்தி ஏற்பட்டு வெறுப்பில் இருக்கிறீர்கள். நாம் செய்த கர்மம் என எத்தனை தடவை நினைத்திருப்பீர்கள்? அவர்கள் அப்படி நினைக்கிறார்களா? மேலும் ஒருவருடமாவது இருக்கத்தான் எத்தனிக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையை கைவிடுமளவிற்கு பிரச்சினை கிடையாது. நாட்டு மக்களுக்கு எண்ணெய், மின்சாரம், கேஸ், தொழில் இல்லாமல் போகும்போதும் அவர்களுக்கு எல்லாமே இருக்கிறது. அவர்களுக்கு வாகனங்கள், காணிகள் இருக்கின்றன. அவர்களின் பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவிகள் இருக்கின்றன. ஊர் மக்களுக்கு வீடுகள் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ஏழு எட்டு வீடுகள் இருக்கின்றன. அவர்களுக்கு மென்மேலும் வாழ்க்கை மீது இருக்கின்ற ஈடுபாடு அதிகமாகும். கிராமத்து மக்களுக்கு ஒரு வீட்டினை அமைத்துக்கொள்ள, பிள்ளைகளுக்கு கற்பிக்க, தொழில் ஒன்றை தேடிக்கொள்வது மிகவும் சிரமமானது. கமத்தொழில் புரிந்து அறுவடை செய்கின்ற விளைச்சலிலிருந்து வாழ்க்கையை ஓட்டிக்கொள்வது மிகவும் சிரமமாகும். ஊர் மக்கள் அல்லற்படுகிறார்கள். ஏன் இவ்வாறு நடந்தது?
எமது நாட்டை மேலே இருக்கின்ற ஊழல் மிக்க பிரபுக்கள் கும்பலொன்றின் சோ்க்கையே ஆட்சி செய்தது. தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்ய முனைவதும் அவர்களே. டி.எஸ். சேனாநாயக்க அவருக்கு பின் அவருடைய மகன், பண்டாரநாயக்க குடும்பம், ஜே.ஆரின் பரம்பரை, மகிந்தவின் பரம்பரை, பிரேமதாஸ இறந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்தார். எதிர்காலத்திலும் நாட்டை ஆட்சி செய்ய எத்தனிப்பது அவர்களின் பரம்பரையாகும். 76 வருடங்களாக இந்த ஒரு சில குடும்பங்களின் கைகளில் தான் அதிகாரம் குவிந்திருந்தது. அவர்களின் உறவினர்களுக்கு, கொள்ளைக்கார வியாபாரிகளுக்கு, பாதாள உலகத்திற்கு கவனிப்பு கிடைக்கிறது. ஊர் மக்கள் சதாகாலமும் ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு இப்பொழுது ஒரு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்த ஊழல் மிக்க கொள்ளைக்கார பிரபுக்கள் கும்பலிடமிருந்து பொதுமக்களின் கைகளுக்கு அதிகாரத்தை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பே அது. திசைகாட்டி ஜனாதிபதி தோ்தலில் வெற்றிபெற்றதும் உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்படும். பாராளுமன்றத்தில் இருக்கின்ற ஊழல் மிக்க நாசகார கும்பலை விரட்டியடிப்போம். அடுத்ததாக மாகாண சபை, பிரதேச சபை தோ்தல்களில் புதிய குழுவொன்றின் கைகளுக்கு நாட்டின் அதிகாரம் கைமாறும்.
எமக்கு ஏன் அதிகாரம் தேவைப்படுகிறது? எமக்கு தனிப்பட்ட தேவை கிடையாது. தேசிய மக்கள் சக்தியின் உயர்பீடத்தைச் சோ்ந்த எவருமே காணிகளை கைப்பற்றிக் கொள்ள, ஹோட்டல்களை பெற்றுக்கொள்ள, கல் ஆலைகளை அமைக்க, மணல் அகழ்வதற்காக, பன்னாட் கலங்களை ஈடுபடுத்த, மதுபானசாலைகளை திறக்க, பெற்றோல் ஷெட் போட வரமாட்டார்கள். ஹோட்டல் கைத்தொழில் ஈடுபடுபவர்கள் தான் ஹோட்டங்களை போடவேண்டும். கமத்தொழில் புரிபவர்கள்தான் பயிர் செய்ய வேண்டும். வியாபாரிகள் தான் பெற்றோல் ஷெட் போடவேண்டும், இரத்தினக்கல் தொழிற்துறையில் ஈடுபடுவர்கள் தான் சுரங்கம் வெட்டவேண்டும். நாங்கள் பார் திறக்கவேண்டியதில்லை. நாட்டை மீடெடுக்க நாங்கள் நல்ல திட்டமொன்றை ஆக்குவோம். அதைபோலவே நாங்கள் முதமையுற்று கைத்தடியை ஊன்றிச் செல்லும் வரை காத்திருக்க மாட்டோம். நாங்கள் உரிய காலத்தில் எமது கையிலுள்ள அதிகாரத்தை புதிய இளைஞர் தலைமுறையினரின் கைகளில் ஒப்படைத்து அவர்கள் நாட்டை ஆளுகின்ற விதத்தை பார்த்துக்கொண்டிருப்போம். எனினும் அவர்கள் இதனை கைவிட்டுச் செல்ல விரும்புவதில்லை. நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்து கொண்டு குடும்பத்தின் கையில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார். பிரபுக்கள் ஆட்சியின் கையில் இருந்து பொதுமக்களின் கைகளுக்கு அதிகாரத்தை எடுப்பதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்த வாய்ப்பினை கைவிடவேண்டாம். ஊரின் வாக்குப்பெட்டியை திசைகாட்டிக்காக புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களினால் நிரப்ப வேண்டியதையே நீங்கள் செய்யவேண்டும்.
நாங்கள் நாட்டின் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்த்துவைப்போம். நாட்டை கட்டியெழுப்பி பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்வரை ஒவ்வொரு பிரஜையினதும் உணவு, சுகாதாரம், கல்வியை உறுதி செய்வோம். உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதாரத்திலிருந்து ஓரங்கட்டப்படுகின்ற மக்கள் இருக்கிறார்கள். அதோ அந்த உயிர்வாழ துடிக்கின்ற மக்கட் பிரிவுகளை பாதுகாத்துக் கொள்வதுதான் அரசாங்கம் ஒன்றின் பொறுப்பு. மக்களுக்கு உண்ண உணவில்லாவிட்டால், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வசதிகள் இல்லாவிட்டால் மானியம் வழங்கப்படவேண்டும். வைத்தியசாலையில் மருந்துகள் இல்லாவிட்டால் வைத்தியசாலைக்கு மருந்துகளை அனுப்பிவைக்கவேண்டும். உணவு, சுகாதாரம், கல்வி மக்களின் அடிப்படை தேவைகளாகும். பணம் கிடையாது எனக்கூறுவது பொய்யாகும். ரணில் விக்கிரமசிங்க அண்மையில் 875 கோடியை ஒதுக்கிக் கொண்டார். இவர் இரண்டே மாதங்களில் வீட்டுக்கு போக இருக்கின்றவர். ஐ.ம.ச விலிருந்து அரசாங்கத்திற்கு எடுக்கக்கூடியவர்கள் என கருதப்படுபவர்களுக்கு 120 கோடியை பகிர்ந்தளித்தார். இதற்கு முன்னர் வெளிநாடு செல்வதற்கு பணம் போதாதெனக்கூறி மேலும் 2000 இலட்சம் ரூபாவை ஒதுக்கிக் கொண்டார். எனினும் வைத்தியசாலைகளுக்கு மருந்து வாங்க பணம் கிடையாதெனக் கூறுகிறார்.
அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அவுஸ்ரேலிய கம்பெனி ஒன்று மருத்துவ உபகரணங்களை வழங்குகின்றது. அந்த நாட்டின் ஊடகவியலாளர் குழுவொன்று அதுபற்றிய விசாரணையொன்றை மேற்கொண்டது. அவுஸ்ரேலிய கம்பெனி அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு உபகரணங்களை வழங்கும்போது இலஞ்சம் கொடுத்துள்ளமை அதன்போது அம்பலமாகியது. இலஞ்சம் வழங்கியவர் சிறைக்கூடத்தில் இருக்கிறார். இங்கே இருக்கின்ற இலஞ்சம் பெற்றவர் பாராளுமன்றத்தில் இருக்கிறார். அந்த கொடுக்கல் வாங்கலை தீர்த்துவைக்க திசைகாட்டி அரசாங்கமொன்றினால் மாத்திரமே முடியும். அதனால் திருடிய, இலஞ்சம் வாங்கிய பொதுமக்களின் வரிப்பணத்தை மீளப்பெறுவதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் அமுலாக்குவோம்.
கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் உலகில் ஒவ்வொரு நாடும் விவசாயம் மீது அதிக கவனம் செலுத்துகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான வேலைகளில் ஒன்றுதான் நாட்டுக்கு அவசியமான உணவை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை அமுலாக்குவது. விவசாய உற்பத்திகள், பால் உற்பத்திகள், இறைச்சி உற்பத்திகள், மீன் உற்பத்திகள் அனைத்திலுமே நாங்கள் தன்னிறைவு அடையவேண்டும். நாட்டைச் சுற்றி எட்டு மடங்கு கடல்; அதைபோலவே நாட்டின் மத்தியில் கடல் போன்ற பாரிய குளங்கள். எம்மால் மிகச்சிறந்த மீன் அறுவடையை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மீன் உற்பத்தி கைத்தொழிலை விருத்தி செய்ய முடியும். அந்த துறையில் புதிய தொழிநுட்பத்தை சோ்த்துக் கொள்ளவேண்டும். இன்று மீன்கள் இந்த பக்கத்தில் அதிகமாக இருக்கின்றன எனும் தகவல் இந்திய மீனவனின் கையடக்கத் தொலைபேசிக்கு வருகின்றது. செய்மதி தொழில்நுட்பத்தினூடாக மீன்கள் அதிகமாக சஞ்சரிக்கின்ற பிரதேசங்களை இனங்காண்பதற்காக தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நாங்கள் எல்லை காணமுடியாத கடலில் விருப்பப்படி சஞ்சரிக்கிறோம். அவ்வாறு மீன் பிடிப்பது இலாபகரமானதாக அமைய மாட்டாது.
எமது நாட்டில் பிள்ளைகளின் போஷாக்கு தட்டுப்பாடு ஒரு பிரதான பிரச்சினையாகும். அவசியமான புரதச்சத்துக்கள் கிடைப்பதில்லை. மீன்பிடி தொழிலை விருத்தி செய்தால் புரதச்சத்து பற்றாக்குறைய நிவர்த்தி செய்ய முடியும். இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்ற முட்டைகளை விட குளியாபிட்டியவிலிருந்து அம்பாந்தோட்டைக்கு வருகின்ற முட்டைகளின் விலை அதிகம். அது எப்படி நடக்க முடியும்? எமது உற்பத்தி செலவு அதிகம். அவர்கள் கோழிகளுக்கு கொடுப்பது அவர்கள் உற்பத்தி செய்கின்ற சோளத்தையாகும். கோழிக்கூடுகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்த வலைகளையே அடிக்கிறார்கள். கூரைக்கு வேய்வது அவர்கள் தயாரிக்கின்ற தகடுகளேயாகும். கோழிகளுக்கு ஏற்றுவது அங்கே தயாரிக்கின்ற இன்ஜெக்க்ஷன் தான். நாங்கள் கோழிகளுக்கு அவசியமான எல்லாவற்றையும் இந்தியாவிலிருந்து கொண்டு வருகிறோம். அதனால் முட்டை விலை உயர்வானது. அப்படியானால் நாங்கள் அந்த கைத்தொழிலை முன்னேற்ற வேண்டும். முட்டை, இறைச்சி உற்பத்தியாளர்களின் கிரயங்களை குறைத்துக் கொள்ளவேண்டும். அந்த தொழிற்துறையில் சோ்ந்து கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கவேண்டும். ஊரிலே புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க முடியும். அப்போது ஊரிலே மென்மேலும் கைத்தொழில்கள், புதிய தொழில்வாய்ப்புகள் உருவாகும். இந்தியாலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதால் இந்தியாவின் பொருளாதாரமே முன்னேற்றமடையும். எங்கள் ஊரின் பொருளாதாரம் முன்னேற்றமடையமாட்டது.
பால் உற்பத்தியை மிகவும் நன்றாக முன்னேற்ற முடியும். எமது நாட்டின் எந்தவொரு வலயத்திலும் விலங்குகளை வளர்க்கலாம். அம்பாந்தோட்டை, அம்பாறை, மொணராகலையில் இந்தியாவில் பாகிஸ்தானில் இருக்கின்ற மூறா வகையைச் சோ்ந்த மாடுகளை வளர்க்கலாம். நாரம்மல, நாஉல, மாத்தளை பிரதேசங்களில் நடுத்தர வலயத்திற்கு ஒத்துவரக்கூடிய விலங்குகளை வளர்க்கலாம். நுவரெலியா, பண்டாரவள பிரதேசங்களில் நியூசிலாந்திலும் அவுஸ்ரேலியாவிலும் வளர்கின்ற பேஃர்ஸியன் வகையைச் சோ்ந்த மாடுகளை வளர்க்கலாம். எமது நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டமொன்றை அமைக்கவேண்டும். நல்ல கறவைப் பசுவிடமிருந்து நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 லீற்றர் பாலை ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் கறக்கலாம். பால் உற்பத்தியிலிருந்து யோகற், ஐஸ்கிறீம் உற்பத்தி செய்ய முடியும். கிராமிய பொருளாதாரத்தை அவ்விதமாக விருத்தி செய்ய முடியும். கிராமத்து விவசாயத்தை விருத்தி செய்ய புதிய தொழிநுட்பம், அதிக விளைச்சலைத் தருகின்ற விதை இனங்களை கொண்டுவர வேண்டும். விவசாய உற்பத்திக்கான சிறந்த திட்டம் நிலவ வேண்டும். விவசாயத்தை கௌரவமான தொழிற்துறையாக மாற்றவேண்டும். கடன் இல்லாத, வருமான வழிவகை இருக்கின்ற, மகிழ்ச்சி நிலவுகின்ற வாழ்க்கை உள்ளவனாக கமக்காரன் மாற்றப்படவேண்டும். தகப்பன் விவசாயி மகனும் விவசாயி மகனின் மகனும் விவசாயியாக அமையவேண்டியதில்லை. எமது பிள்ளைகளுக்கு பரம்பரை வழியாக மரபுரிமையாகின்ற தொழிலிலிருந்து அவர்களை வெளியில் எடுக்கவேண்டும். எமது கமக்காரன் கடன் பொறியில் சிக்கியுள்ளான். அந்த கடன் பொறியிலிருந்து மீட்டெடுப்பதற்காக நாங்கள் ஒரு வேலைத்திட்டத்தை வகுப்போம். கிராமங்களில் புதிய தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்ற பொருளாதாரமொன்றை அமைத்திடுவோம்.
கிராமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு இந்த நச்சு வட்டத்திலிருந்து வெளியே வருவதற்கு இருக்கின்ற ஒரே பாதை கல்வியாகும். இந்த பாடசாலைகளின் வசதிகளை முன்னேற்றவேண்டும். பாடசாலை பாடங்களை மாற்றத்திற்குள்ளாக்க வேண்டும். உலகின் எந்தவொரு தொழிலுக்கும் ஒத்துவரக்கூடிய புதிய கல்வித் திட்டமொன்றை நாட்டின் ஒவ்வொரு பாடசாலைக்கும் நாங்கள் உருவாக்கிக் கொடுப்போம். அப்போது பிள்ளை தகப்பன் இருந்த உலகத்திலிருந்து வெளியில் வர முடியும். இவ்விதமாக பல வருடங்கள் செயலாற்றினால் எமக்கு உண்மையான வாழ்க்கையை பெற்றுக்கொள்கின்ற பொருளாதாரமொன்றை, சமூகமொன்றை உருவாக்கிக் கொள்ள முடியும். குடும்ப அங்கத்தவர்கள் கூடி மகிழ்கின்ற ஒரு வாழ்க்கை தற்போது எமக்கு கிடையாது. எந்நேரமும் வேலையில் சிறைப்பட்டு அழுத்தம் அதிகரித்துவிட்டது. எமது ஊர்களின் வாழ்க்கை அப்படித்தான். ஆனால் அவர்களின் வாழ்க்கை அப்படியல்ல. அவர்கள் வித்தியாசமான வாழ்க்கையையே கழிக்கிறார்கள்.
எங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறந்த வருமான வழிவகையைக் கொண்ட பொருளாதாரம், பிள்ளைக்கு சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த சுகாதார சேவை, நனைந்திராமல் இருக்கக்கூடிய சிறந்த காற்றோற்றம் நிறைந்த வீடு, மன நிம்மதி அவசியமாகின்றது. அந்த மனிதர்கள் இன்று பாரிய மன அழுத்தத்துடனே வாழ்கிறார்கள். பகல் சாப்பிட்டால் இரவில் என்ன சாப்பிடுவது என சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தோம். ஆனால் தொழில் இல்லையே என சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளை ஒரு பயணம் சென்றால் வீட்டுக்கு வரும் வரை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா இடத்திலும் போதைத்தூள் பையன் அதற்கு அடிமையாகி விடுவானா என சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 76 வருடங்களாக எங்கள் வாழ்க்கையை இழக்கச் செய்வித்துள்ளார்கள். மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பதற்காக நாங்கள் மக்கள் அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். எமது எதிர்பார்ப்பு பொதுமக்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதாகும். நாங்கள் புதிய அரசாங்கமொன்றை நிறுவுவோம். உங்களின் ஊக்கம் உங்களின் புத்துணர்ச்சி எமக்கு தெம்பூட்டுகின்றது. நிச்சயமாக இந்த போராட்டத்தை பெரு வெற்றியில் முடிக்கமுடியுமென நாங்கள் திடமாக நம்புகிறோம்.