Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“சீரழித்த நாட்டை நாகரிகமடைந்த நிலைக்கு கொண்டுவருகின்ற புதிய அரசியல் மாற்றமொன்று அவசியமாகும்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

-Colombo, January 21, 2024-

எமது நாட்டுப் பெண்களின் மாபெரும் எழுச்சி இன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியாகிய எமக்கு எதிராக இந்நாட்களில் எழுகின்ற அவதூறுகூறல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கழுத்துறை பக்கத்தில் தங்கத்துடன் தொடர்புடைய ஒருவர், கம்பஹா பக்கத்தில் கப்பம் பெற்ற ஒருவர், நீர்கொழும்பு பக்கத்தில் போதைத்தூளுடன் தொடர்புடைய ஒருவர், குருநாகல் பக்கத்தில் வரிமோசடி செய்த ஒருவர், அதைப்போலவே அலோசியஸை நியாயப்படுத்துவதற்காக புத்தகங்களை எழுதி பணம் வாங்கிய ஒருவர் மறுபக்கத்தில் என்றவகையில் அவதூறாக பேசுதல் பாரியளவில் அதிகரித்துள்ளது. எமது நாட்டின் சகோதரிகள், தாய்மார்கள், தகப்பன்மார்களை ஏமாற்றமுடியுமென அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலைமையை மாற்றியமைத்து மாத்தறையில் தொடங்கிய பெண்களின் சுனாமி பகைவர்களை பதற்றமடையச் செய்வித்து நாடுபூராவிலும் வீசிவருகின்றமையே இவ்விதமாக அதிகரிக்க காரணமாகியுள்ளது. இன்று பதுளையைக் கண்டதும் மேலும் பதற்றமடைவார்கள். ஊர்களில் இருக்கின்ற பலவிதமான சங்கங்களில் பெண்கள் முனைப்பாக செயலாற்றினாலும் அதனை கணவனிடம் ஒப்படைத்து வாழ்ந்தார்கள். இன்று அந்த அரணை, மூடநம்பிக்கையை சிதைத்து தேசிய மக்கள் சக்தியின்கீழ் இலங்கையின் மிகவும் பலம்பொருந்திய பெண்கள் எழுச்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. சகோதரிகளும் பெண்களும் விழிப்படைந்தார்கள் என்பது அவர்களின் அரசியல் பயணத்தின் சாவுமணியே என்பது தெளிவாகின்றது.

பெண்கள் தலைமுறையினர் இலங்கையில் முன்னணிக்கு வரவேண்டுமென நாங்களும் நினைக்கிறோம். பொருளாதாரரீதியாக சீரழிந்த, குற்றச்செயல்கள் மலிந்த, போதைப்போருட்கள் நிறைந்த, சுகாதாரமும் கல்வியும் சீரழிந்த, கிராமிய மக்கள் பாரிய கடன்பொறிக்குள் இறுகிப்போன சோகக் கதையே எமது நாட்டில் நிலவுகின்றது. உலக நாடுகளுக்கு வீசா வழங்கப்படாத நிலைமை உருவாகி இருக்கின்றது. பயிற்சிக்காக இங்கிலாந்துசென்ற பொலீஸ் உத்தியோகத்தர்களும் தலைமறைவாகிவிட்டார்கள். எனவே வீசா வழங்குவதில்லை. உலகின் முன்னிலையில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் கதை மாத்திரமல்ல மக்களின்கதையும் சோகமயமானதே. நாட்டின் கதையையும் மக்களின் பொதுவான கதையையும்விட அதிகமாக சோகமயமானதாகி இருப்பது நாட்டுப் பெண்களின் கதையாகும். கர்ப்பிணித் தாய்மார்களில் 20% இற்கு கிட்டியோர் இரத்தக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சரியான உணவுவேளையொன்று கிடையாது. பிள்ளைகளின் கல்வி சீரழிந்ததும் அதிகமாக கவலைப்படுபவர்கள் தாய்மார்களே. பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி பகலிரவு பாராமல் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் தாய்மார்களே. எனினும் பிள்ளைகளில் 54% கல்வி உபகரணங்களை கொள்வனவு செய்வதைக் குறைத்தோ அல்லது நிறுத்தியோ உள்ளார்கள். பிள்ளைகளில் 19% பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்தி உள்ளார்கள். பொருளாதாரச் சீர்குலைவின் பெறுபேறு பேரிடிபோல் பிள்ளைகள்மீது வீழ்ந்தமையால் அல்லற்படுபவர்கள் தாய்மார்களே. போதைப்பொருள் பாவனை காரணமாக அதிகமாக வேதனைப்படுபவர்கள் தாய்மார்களே. சிறைச்சாலைகளுக்கு அருகில் ஏளனத்திற்கு இலக்காகி வேதனைகளை அனுபவிப்பவர்கள் பெண்களே. குற்றச்செயல்கள் நிரம்பிவழிகின்ற ஒரு நாட்டில் பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது. எமது நாட்டுச் சிறுமிகளில் பெருந்தொகையானோர் ஏதாவொரு வகையிலான பாலியல் தொல்லைகளுக்கு இலக்காவதால் வேதனையை அனுபவிப்பவர்கள் தாய்மார்களே.

பாதுகாப்பு இல்லாத இந்த நாடு நல்லதா?பெண்கள் இவ்வாறுதான் வாழவேண்டுமா? நகரங்களில் பாதுகாப்பாக செல்லக்கூடிய பெண்களுக்கான கழிப்பறைகள் கிடையாது. இதனால் பெருமளவில் நோய்களுக்கு இலக்காகிறார்கள். இவ்விதமாக வேதனைகளை அனுபவிக்கின்ற மகிழ்ச்சி இல்லாமல் சந்தோசமில்லாமல் எமது தாய்மார்கள் அக்காமார்கள் செத்து மடிகிறார்கள். எங்கள் ஊர்களில் அம்மாமார்களுக்கு அக்காமார்களுக்கு மகிழ்ச்சியே இல்லாத காய்ந்துபோன விறகுக்கட்டைகளைப்போன்ற வாழ்க்கை உரித்தாக்கிக் கொடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு அப்படியில்லை. ஷிரந்தி சீமாட்டி நடக்கும்போதும் ஏழுஎட்டுபேர் சூழ்ந்து செல்கிறார்கள். ஆட்சியார்கள் ஏற்படுத்திய அனர்த்தத்திற்கு பிரதானமாக இரையாகியுள்ளவர்கள் பெண்களாவர். இந்த நிலைமையை மாற்றியமைத்திட உறுதியுடன் எழுச்சிபெறவேண்டியவர்கள் எமது நாட்டின் பெண்களே. வெளிநாடு சென்றுள்ள உழைப்பாளிகளிடமிருந்து ஏறக்குறைய 6 பில்லியன் டொலர் மிகஅதிகமாக அந்நியசெலாவணித் தொகையை ஈட்டித்தந்துள்ளவர்கள் பெண்களே. ஆடைத்தொழில்த்துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் எமது சகோதரிகளே. அடுத்ததாக மிக அதிகமாக அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்ற தேயிலைத் தொழில்த்துறையில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதியினர் தாய்மார்களும் சகோதரிகளுமாவர். இந்நாட்டின் பொருளாதாரம் பெண்களின் கைகளிலேயே இருக்கின்றது. மறுபுறத்தில் பாடசாலைகளில் அதிகமாக இருப்பவர்களும் ஆசிரியைகளே. இவ்விதமாக பெருமளவிலான செயற்பொறுப்பினை ஈடேற்றி செயலாற்றிக் கொண்டிருந்தாலும் மிகஅதிகமாக அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்ற பெண்களின் நிலைமையை மாற்றியமைத்திடவேண்டும். இந்த இடத்தில் குழுமியுள்ள நீங்கள் அனைவரும் முன்னொருபோதும் இருந்திராதவகையில் அதிக வேகத்தில் முன்னணிக்குவந்து இந்த நிலைமையை மாற்றியமைத்திட வேண்டும்.

முன்பெல்லாம் சனாதிபதி தேர்தலை நடாத்தினால் அவர்கள் வெற்றிபெறுவார்கள். பொதுத்தேர்தலை நடாத்தினாலும் அவர்கள் வெற்றிபெறுவார்கள். எனினும் தற்போது சனாதிபதி தேர்தலை முதலில் நடாத்துவதா, பொதுத்தேர்தலை முதலில் நடாத்துவதா என அவர்கள் இரண்டும்கெட்ட நிலைக்கு வருமளவுக்கு என்பிபி பலமடைந்துள்ளது. தமக்கு சாதமான நிலைமை இருக்கும்போது தொடர்ச்சியாக தேர்தல்களை நடாத்தினர்கள். தற்போது களத்தில் கால்வைக்க முடியாதநிலை உருவாகி உள்ளது. இதனை மாற்றியமைத்திட மிகச்சிறந்த சந்தர்ப்பம் உருவாகி இருகின்றது. எல்லாளன் – துட்டுகெமுணுவின் இருபக்கத்தில் இருந்த ரணில் – மகிந்த மேடையில் கடதாசி வாளேந்தி யுத்தம் புரிகையில் ஊரிலுள்ள எம்மவர்கள் பொல்லேந்தி தாக்குதல் நடாத்தினார்கள். எனினும் இன்றளவில் இந்த இருசாராரும் ஒரே கும்பல் என்பதை நன்றாகவே நிரூபித்துள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு சவாரி செல்லும்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்களின் பணத்தைச் செலவிட்டு அழைத்துச் செல்கிறார். உகண்டாவிற்குப் போகும்போது பொலநறுவையின் ஐக்கிய மக்கள் சக்தி கிங்ஸ்லி நெல்சன். பதுளையில் சாமர சம்பத்தையும் கூட்டிக்கொண்டு போகிறார். அங்கே தங்கவைத்துவிட்டே வருவாரா தெரியவில்லை. இந்த இருசாராருமே 75 வடருடங்களுக்கு மேலாக நாட்டை ஆட்சிசெய்து பொருளாதாரத்தை சீரழித்து பிச்சைக்கார நாடாக மாற்றியுள்ளார்கள். நாட்டின் கைத்தொழில்களை சீரழித்தார்கள். ஊர்களிலுள்ள நாங்கள் ஏதேனும் விலங்குகள் சாப்பிடுகின்றவற்றில்கூட நஞ்சு கலப்பதில்லை. எனினும் சுகாதார அமைச்சில் இன்ஜெக்ஷன் என வாங்கி இருப்பது பங்கசு இருந்த தண்ணீரையாகும். பங்கசு நிறைந்த தண்ணீரை இன்ஜெக்ஷன் என நோயாளிகளுக்கு வழங்கிய சுகாதார அமைச்சர் இன்றும் சுதந்திரமாக இருக்கிறார். எல்லாவிதத்திலும் சீரழித்த ஒரு நாடுதான் எமக்கு இருக்கின்றது. இலங்கையின் அரசசேவை சீரழிக்கப்பட்டுவிட்டது. நிரந்தர பொலீஸ் மா அதிபர் இல்லாத இடத்திற்கு வங்குரோத்து செய்யப்பட்டுவிட்டது.

எமது நாட்டின் சமூக அமைப்புகள் அனைத்துமே சீரழிக்கப்பட்டுவிட்டன. அப்படிப்பட்ட நாட்டில் பன்சல மாத்திரம் தப்பிவிடமாட்டாது. பற்பல வகையிலான கூத்துக்கார போதிசத்துவர்கள் வந்திறங்குகிறார்கள். அனைத்துமே சீரழிந்த நிலையில் மனித சமூகமும் சீரழிந்துவிட்டது. இரத்தினபுரியின் பிரேமலால் ஜயசேகர என்பவர் மனிதப்படுகொலை தவறுக்காக மேல்நீதிமன்றத்தினால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர். அந்த பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து மக்கள் அதிகமான விருப்புவாக்குகளை அளித்தார்கள். கண்டியில் வட்டிமுதலாளி ஒருவரிடமிருந்து பணத்தைக் கடன்வாங்கிய ஒருவர் கடனை மீளச்செலுத்த தாமதித்தமையால் அந்த முதலாளி இரண்டு கைகளையும் வெட்டியெடுத்து மோட்டார் சைக்கிளில் பொலீஸுக்குச் சென்றார். மக்கள் அவரை கண்டி நகரசபைக்கு அனுப்பிவைத்தார்கள். கழுத்துறையிலிருந்து றோஹிதவை, கண்டியிலிருந்து மகிந்தானந்தவை, குருநாகலில் இருந்து ஜோன்ஸ்ரனை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கின்ற அளவுக்கு மனித சமூகம் சீரழிந்துவிட்டது. எதையாவது பெற்றுக்கொள்வதற்காக தமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அடகுவைக்கின்ற மக்களே இருக்கிறார்கள். இந்த நாட்டில் எந்தவொரு இடமும் எஞ்சவில்லை. வீதியில் விற்கின்ற மாங்காயை வாங்கினாலும் நம்பிக்கையுடன் சாப்பிடமுடியாது. முழுமையான மனித நாகரிகமுமே சீரழிந்துள்ளது. சீரழித்த இந்த நாட்டை நாகரிமான நிலைக்குகொண்டுவர புதிய அரசியல் மாற்றமொன்று நாட்டுக்கு அவசியமாகும். ஒத்துணர்வுமிக்க மனித சமூகமொன்று அவசியமாகும். பருத்தித்துறையில் இருந்து தெவுந்தர முனைவரை கழுத்தில் தங்கத்தை அணிந்துகொண்ட ஒரு பெண்ணால் பாதுகாப்பாக பயணிக்கக்கூடிய நிலைமை இன்று இருந்தது. இன்று சீரழிந்துள்ள ஒட்டுமொத்த சமூக அமைப்பையுமே மீட்டெடுக்கின்ற சமூக மாற்றமொன்று அவசியமாகும். இலக்கியம், பாடல்களை இரசிக்கின்ற, திரைப்படமொன்றை, நாடகமொன்றை பார்த்து இரசிக்கின்ற குடும்பங்களைப்போன்றே ஒரே மேசையில் அமர்ந்து குடும்பத்தவர்கள் அனைவரும் உணவு புசிக்கின்ற சமூகமொன்றே எமக்குத் தேவை.

அதனால் வெறுமனே தலைவர்களை மாற்றுகின்ற, அரசாங்கத்தை மாற்றுகின்ற நிலைக்குப் பதிலாக ஒட்டுமொத்த சமூக முறைமையையுமே மீளக் கட்டியெழுப்புகின்ற புதிய தேசிய எழுச்சிக்காகவே நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். புதிய தேசிய மலர்ச்சி அவசியமாகும். புதிய தேசிய ஒருமைப்பாடு அவசியமாகும். எமது தேவை வெறுமனே ஓர் அரசியல் இயக்கம் மட்டுமல்ல: அனைவரையும் ஒன்றுசேர்த்து தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற நோக்கினைக்கொண்ட இயக்கமாகும். இந்தியாவில் நேரு, பட்டேல், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற அனைவரும் இந்தியாவை ஐக்கியப்படுத்தி தேசிய அபிமானத்துடன் தட்டியெழுப்பி பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக போராடினார்கள். அந்த வெற்றிகளின் பாய்ச்சலை தேசிய நிகழ்ச்சி நிரலுக்கிணங்க நெறிப்படுத்துகின்ற இந்தியா தற்போது சந்திரனுக்குச் செல்கின்றது. ஆனால் எமது நாட்டில் மாலை ஆறுமணிக்குப் பிறகு ரிதீமாலியத்தவிற்குச் செல்ல பஸ்வண்டி கிடையாது. வீதியில் போனால் யானை தாக்குகின்றது. இந்தியாவின் அப்துல் கலாம் மாத்திமன்றி தாழ்ந்த சாதியைச்சேர்ந்த ஒரு பெண்ணும் சனாதிபதியானர். உலக நாடுகள் வெற்றிகளால் மாத்திரம் எழுச்சிபெறவில்லை.

தோல்விகளின்போதும் எழுச்சிபெற்றன. அணுக்குண்டுகளால் அழிவடைந்த ஜப்பான் ஆசியாவின் பிரமாண்டமான தொழில்நுட்ப அரசாக எழுச்சிபெற்றது.
எமது நாட்டுத்தலைவர்கள் 1948 இல் சுதந்திரம் கிடைத்ததும் உடனடியாக குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து தமிழ் மக்களை விரட்டியடித்தார்கள். 1956 இல் மொழியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து கலவரங்களை உருவாக்கினார்கள். 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல்வரை இவ்விதமாக பயணித்தார்கள். ஏனைய நாடுகளில் எழுச்சிபெறுகின்ற வரலாறு நிலவுகையில் எமது நாட்டில் சண்டைபோட்டுக்கொள்கின்ற வரலாறே நிலவுகின்றது. தலைவர்களிடம் தேசிய நோக்கு இருக்கவில்லை. விமலசுரேந்திர போன்ற பொறியியலாளர்கள் பாரிய நோக்குடன் 1917 அளவில் நீர்மின்நிலையங்களை திட்டமிட்டார்கள். எனினும் எமது தலைவர்கள் அந்த முன்னேற்றகரமான சிந்தனைக்கு இடமளிக்கவில்லை. வரலாற்றில் நிலவியவை பற்றி மார்தட்டிப் பேசுகின்ற தலைவர்களே இருந்தார்கள். அதிலிருந்து நாட்டை மீட்டெடுக்கின்ற புதிய மலர்ச்சியொன்று எமக்குத் தேவை. இந்த அழிவுமிக்க கொள்ளைக்கார கும்பல் இருபக்கத்திற்கும் மாறிமாறிப் பாய்ந்து பேயாட்டம் ஆடுகின்ற கும்பலாக இற்றைவரை வந்துள்ளார்கள். அந்த பேயாட்டம் ஆடுகின்ற கும்பலிலிருந்து விடுபடுவதற்காக தெம்புடனும் அர்ப்பணிப்புடனும் நாங்கள் உழைப்போம் எனும் உணர்வு தோன்றியமையே பாரிய மனநிறைவு அல்லவா? இந்த சாபக்கேட்டிலிருந்து விடுபட்டதும் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்? அதோ அத்தகைய எழுச்சி தேவை. ஊரில் கட்சி பேதங்களை வைத்துக்கொள்ள வேண்டாம். மேலே இருக்கின்ற தலைவர்களுடன் அந்த பேதங்களை வைத்துக்கொள்ளுங்கள். ஐதேக ஆதரவாளர், ஸ்ரீலசுக ஆதரவாளர் போன்ற பேதங்களை ஒருபுறம் வைத்துவிட்டு இன, சாதி பேதங்களை ஒதுக்கிவிட்டு இந்த பேயாட்டம் ஆடுகின்ற ஆட்சியாளர்களிடமிருந்து இந்த நாட்டையும் சமூகத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக புதிய மலர்ச்சியுடன் முன்நோக்கி வாருங்கள்.

இந்த வருடத்தில் வரப்போகின்ற எந்தவொரு தேர்தலிலும் இந்த புதிய மலர்ச்சிக்காக நாமனைவரும் ஒன்றுசேர்ந்து உழைப்போம். எமது பிள்ளைகளுக்கு புதிய கல்வியைப் பெற்றுக்கொடுத்து, கைத்தொழிலதிபர்கள், மீனவர்கள், கமக்காரர்களை மேம்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப ஒருங்கிணைவோம். குடிமக்களுக்கு சுகாதாரம் தொடர்பான விஞ்ஞானரீதியான கல்வியை வழங்கவேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் போஷாக்கான உணவுவேளை வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். குற்றச்செயல் புரிபவர்களற்ற ஒரு நாட்டை உருவாக்கிடவேண்டும். ஊழலில் மோசடியில் ஈடுபர்களைத் தண்டிக்கவேண்டும். இதுவரை இந்நாட்டு மக்கள் அனுபவித்த துன்பதுயரங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து இந்த நாட்டை நல்லதொரு தேசமாக மாற்றுகின்ற பொதுவான கனவின் பங்காளிகளாக மாறவேண்டும். நாட்டைக் கட்டியழுப்புகின்ற புதிய மறுமலர்ச்சி யுகத்தின் முனைப்பான பங்காளிகளாக மாறவேண்டும். நாங்கள் தொடக்கத்தை ஏற்படுத்துவோம். எமது பிள்ளைகள் மிகச்சிறந்த பெறுபேறுகளை அனுபவிப்பார்கள். நாங்கள் தேர்தலில் வெற்றிபெறுவதென்பது இந்த வேலையின் முடிவு அல்ல, தொடக்கமாகும். நாமனைவரும் ஊக்கத்துடன் இந்த பணியில் இடையீடுசெய்வொம் என அழைப்பு விடுக்கிறோம்.