Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“கடந்தகாலத்தில் நிலவிய எமது பிரிவினைகளை மறந்து நாட்டை சீராக்குகின்ற வரலாற்று வேலைத்திட்டத்துடன் இணையுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்…” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-

(அம்பாறை மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.03.31 – தேசிய மக்கள் சக்தி)

Gahanu-Api-Ampara

இந்த மாநாட்டினை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக பல மாதங்களாக பாடுபட்டோம். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். பெண்கள் அரசியல்ரீதியாக பலப்படுத்தப்பட்டு, அரசியல்ரீதியாக ஒழுங்கமைந்து, இவ்விதமாக ஒன்றுசேர்ந்த தருணத்தை உலகில் வேறு எங்குமே கண்டதில்லை. இது எமக்கு ஒரு புதிய அனுபவமாகும். நாட்டை வித்தியாசமான ஓர் இடத்திற்கு உயர்த்திவைக்கக்கூடிய பெண் தலைமைகளை உருவாக்குவதையே நாங்கள் இங்கு செய்திருக்கிறோம். அரசியல் பற்றிக் கனவில்கூட சிந்தித்திராத எமது பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார் என்பதை வெளிக்காட்டி இருக்கிறார்கள். பெண் தலைமைகள் புதிதாக உருவாகின்றன. அது இந்த நாட்டுக்கு தீர்மானகரமானதாகும். நாங்கள் நிச்சயமாக இதனை மாற்றியமைத்திடுவோம். பெண்களின் பலத்தை நாட்டுக்கு மாத்திரமல்ல முழு உலகிற்குமே வெளிக்காட்ட எம்மால் இயலுமானதாகி உள்ளது. பெண்களாகிய எங்களுக்கு வாய்ப்பு வழங்கினால் அதிலிருந்து உச்ச பயனைப்பெற்று உச்ச அளவிலான அழுத்தத்தைக்கொடுக்க இயலுமான பலம் எம்மிடம் பொதிந்துள்ளது.

இந்தியாவில் அருந்ததி ரோய் என ஒரு பிரசித்திபெற்ற எழுத்தாளர் இருக்கிறார். அவர் ஓர் இடத்தில் எழுதி இருக்கிறார் “புதிய உலகத்தை உருவாக்க முடிவது மாத்திரமல்ல, புதிய உலகமொன்று உருவாகி வருகின்றது, அமைதியாக அதற்குச் செவிசாய்த்தால் அந்த புதிய உலகம் முச்செடுப்பதை எம்மால் உணர முடியும்” என்று. அந்த புதிய உலகத்தை நீங்கள் உருவாக்கி வருகிறீர்கள். இனிமேலும் அது எமக்கு ஒரு கனவு அல்ல. புதிய உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. நாங்கள் புதியதோர் உலகத்தை அமைத்து வருகிறோம். மிகவும் நியாயமான, அனைவருக்கும் அபிமானத்துடன் வாழக்கூடிய, சமத்துவத்திற்கு மதிப்பளிக்கின்ற அன்புநிறைந்த புதிய உலகமொன்றை நீங்கள் தற்போது நிர்மாணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதற்காக இந்த வருடத்தில் எமக்கு ஒரு தீர்மானகரமான பணி இருக்கிறது. இந்த தேர்தலை வென்றெடுப்பது மாத்திரமல்ல: இந்த தேர்தலில் பெண்களாகிய நாங்கள் ஒன்று சேர்ந்து எப்படியாவது வெற்றிபெறவும் வேண்டும். எமது தோழர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைப்போம். எமது தோழர் அநுரவை சனாதிபதியாக்கிடுவோம். அத்துடன் எமது வேலை நின்றுவிட மாட்டாது. நாங்கள் நாட்டை சீராக்கிட வேண்டும். நாங்கள் ஏற்படுத்த எதிர்பார்த்துள்ள அந்த சமூக மாற்றத்தை பாதுகாத்துக்கொள்ளவும் நாங்கள் முன்வரவேண்டும். இதன் பாரதூரத்தன்மையை இதன் ஆழத்தை நாங்கள் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். இது மற்றுமொரு மாற்றம் பற்றிய கதையல்ல. இது மற்றுமொரு தேர்தல் பற்றியதுமல்ல. இதுவரை அதிகாரத்திற்கு வந்த ஒவ்வோரு கட்சியும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்தது. யு.என்.பி. பீதிநிலை தீர்ந்து சந்திரிக்கா குமாரதுங்கவை நியமிக்க முதலில் வீதியில் இறங்கியவர்கள் பெண்களே. சந்திரிக்கா அம்மையாரும் மாற்றத்திற்கான வாக்குறுதி அளித்தார். 2015 இல் நல்லாட்சி அரசாங்கமும் மாற்றத்திற்கான வாக்குறுதியை அளித்தது. தேசிய மக்கள் சக்தி இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது எவரதும் வாக்குறுதியின் பேரில் அல்ல. இந்த மாற்றத்தை செய்பவர்கள் நாங்களே. இதுவரை காலமும் நாங்கள் வாக்குகளை அளித்துவிட்டு ஒருபுறம் பார்த்துக்கொண்டிருக்கவேண்டி நேர்ந்தது. எமக்காக செய்கின்ற அபிவிருத்திகளை பார்த்துக்கொண்டிருக்கவேண்டி நேர்ந்தது. இந்த முடிவுகளை எடுக்கின்ற இடங்களில் நாங்கள் இல்லை. நாங்கள் கூறுபவற்றுக்கு செவிசாய்ப்பதுமில்லை: எமது கருத்துக்களை கேட்பதுமில்லை. இந்த கொள்கைகள் எமக்காகவல்ல என்பதை அறிந்திருந்தும் செய்வதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. எமது பணத்தை மோசடி செய்கிறார்கள் என்பதை அறிந்திருந்தும் ஊழல் புரிகிறார்கள் என அறிந்திருந்தும், எமது பிள்ளைகள் பசியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தும் நாங்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருந்தோமேயொழிய அவற்றை மாற்றியமைப்பதற்கான அதிகாரம் எமக்கு இருக்கவில்லை.

ஆனால் இந்த செயற்பாங்கினூடாக நாங்கள் அதிகாரத்திற்கு வருவதே இடம்பெறுகின்றது. நாங்கள் அனைவருமே பாராளுமன்றம் செல்வோம் என்பதல்ல. இலங்கை வரலாற்றில் முதல்த்தடவையாக அதிக எண்ணிக்கை கொண்ட பெண் உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியுமென நாங்கள் நம்புகிறோம். ஊரில், வேலைத்தலத்தில், பாடசாலையில், வைத்தியசாலையில் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் இருக்கின்ற எல்லா இடங்களிலும் இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற செயற்பாங்கில் நாங்கள் முனைப்பாக பங்கேற்கிறோம். அதனால் யாருமே இதனை வேறு எவராவது செய்யும்வரை காத்திருக்கப் போவதில்லை. இந்த தடவை இந்த மாற்றத்தைச் செய்யப்போவது நாங்களே. அந்த செயற்பாங்கின் தீர்வுக்கட்டமான ஒரு பணியென்றவகையில் எமக்கு செவிசாய்க்கின்ற ஒருவரை நாங்கள் சனாதிபதியாக்க வேண்டும். இந்த வருடத்தில் இது நடைபெறும். அதன் பின்னர் எமக்கு செவிசாய்க்கின்ற பெண்கள், எம்மீது கூருணர்வுகொண்’ட பெண்கள், எமது கதைகளுக்கு பெறுமதிசேர்க்கின்ற எமது குரலுக்கு செவிசாய்க்கின்ற அரசாங்கமொன்றை அமைத்திடவும் வேண்டும். அவையிரண்டுமே எமது முதன்மைப் பணிகள்.

Gahanu-Api-Ampara

அதற்காக நாங்கள் எதிர்வரும் ஆறு மாதங்களில் அயராது உழைக்கவேண்டும். ஏற்கெனவே நாங்கள் பல அர்ப்பணிப்புகளைச் செய்துதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். இந்த உழைப்பினை நாங்கள் ஒருபொதுமே விரயமாக்கிட முடியாது. நாமனைவரும் ஒன்றுசேர்ந்து பொதுவான நோக்கத்துடன் இந்த நாட்டை சீராக்குகின்ற வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். எம்மிடமிருந்து எப்போதுமே எதிர்பார்த்தது அர்ப்பணிப்பு, தாங்கிக்கொள்ளல். ஒருபோதுமே பங்கேற்பினை கோரவில்லை. எமது சக்தியிலிருந்து பயன்பெறவில்லை. எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்து எம்மை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு பயணிக்கின்ற அரசாங்கங்கள்தான் இதுவரை நியமிக்கப்பட்டன. இந்த தருணத்தில் எம்மைத் தவிர்த்துச்செல்ல முடியாது. எம்மை பங்கேற்கச் செய்விக்காமல் பயணிக்க இயலாதென்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துவருகிறார்கள். அதனால்த்தான் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பெண்களை விளித்துப்பேசுவதற்கான நிகழ்ச்சிகளைத் தொடங்கி இருக்கிறார்கள். அது நல்லது. ஆனால் தேசிய மக்கள் சக்தியில் ஒரு வித்தியாசம் நிலவுகின்றதென்பது எமக்குத் தெரியும்.

நாங்கள் நியமிக்கின்ற ஒர் அரசாங்கத்தை வேலைத்திட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இருக்கின்றது. இதுவரை காலமும் இந்த நாட்டில் சிறப்புரிமைகளைப்பெற்று இந்த நாட்டை ஆட்சிசெய்வது தமது பிறப்புரிமையெனக் கருதிக்கொண்டிருந்த ஆட்சியாளர்கள் பதற்றமடைந்துள்ளார்கள். அதனால்த்தான் அவர்கள் கட்சிகள் என்றவகையில் பிளவுபட்டிருந்தாலும் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க வேண்டுமென்ற இடத்தில் அவர்கள் அனைவருமே ஒருங்கிணைந்துள்ளார்கள். இது அவர்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த சமூக மாற்றத்தைக் கண்டு அஞ்சுவதை பறைசாற்றுகிறது. இங்கு இடம்பெறுவது வெறுமனே அரசாங்க மாற்றமல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். அதைவிட பாரதூரமான சமூக மாற்றத்திற்காகவே தயாராகி வருகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். மக்கள் நேயமுள்ள கொள்கைகளை அமுலாக்கக்கூடிய மக்கள் நேயமுள்ள அரசாங்கத்தை நியமிக்கவும் இந்த முறையியலுக்கூடாக நாட்டை முன்னேறவும்தான் நாங்கள் தயாராகி வருகிறோம் என்பது தெரியும். இந்த முறையியலின்கீழ விசேட சிறப்புரிகள் கிடைக்கமாட்டாது. நாட்டின் சட்டம் ஆட்சியாளர்களுக்கும் பொதுவானதே. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நாட்டின் சட்டம் அனைவருக்கும் ஏற்புடையது. இவ்வளவு காலமும் நாட்டில் சட்டத்தை சரிவர அமுலாக்காமையே நாட்டில் நிலவியது. சட்டத்தை அமுலாக்க அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை. திசைகாட்டி அரசாங்கமொன்றின்கீழ் சட்டம் சுயாதீனமானதாக அமையும். சட்டத்தை அமுலாக்கி மக்கள் பணத்தை களவாடிய, மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கிய, அத்தகைய கொள்கைகளை வகுத்தவர்களுக்கு முறையான தண்டனை கிடைக்கும். பழிவாங்கும் கலாசாரம் எம்மிடம் இல்லை. குறிப்பாக பெண்களாகிய எங்களுக்குத் தெரியும் பழிவாங்கலினால் ஏற்படுகின்ற சேதத்தை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். திசைகாட்டி தொடர்பில் பொய்யான பயத்தை உருவாக்க மேற்கொள்கின்ற முயற்சியை தோற்கடிக்க வேண்டியது உங்கள் அனைவரதும் பொறுப்பாகும். இங்கு வர விரும்புகின்றவர்களை நாங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வரலாற்றில் நிலவிய எமது பிரிவினைகளை மறந்து அனைவரையும் விளித்துப்பேசி நாட்டை சீராக்குகின்ற இந்த வரலாற்று வேலைத்திட்டத்துடன் ஒன்றுசேருமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அம்பாறை மாவட்டம் பல்வகை கலாசாரம் நிலவுகின்ற மாவட்டமாகும். நீங்கள் பிரிவினைகளின் பாதகவிளைவுகளை நன்றாக அனுபவித்துள்ளீர்கள். அனைவரையும் பிரிவினைகளுக்குப் பதிலாக ஒன்றுசேர்க்கின்ற, பகைமைக்குப் பதிலாக அன்பு செலுத்துகின்ற சமூகமொன்றை உருவாக்க உங்களின் தலைமைத்துவம் எமக்குத்தேவை. அதற்காக தயாராகுங்கள், பலமடையுங்கள், ஒழுங்கமையுங்கள். அறிவால் பலமடையுங்கள். உங்களின் பங்களிப்பு எமக்கு கிடைப்பது பாரிய நம்பிக்கையைப்போன்றே பாரிய பக்கபலமுமாகும். அந்த நம்பிக்கையைக் கொடுத்தமைக்காகவும் அன்பை எமக்கு வழங்கியமைக்காகவும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

Gahanu-Api-Ampara

“எமது பிள்ளைகளுக்காக இந்த நாட்டை சீர்படுத்துவோம். சிங்கள, தமிழ் , முஸ்லீம் தேசிய ஒற்றுமையைக் கட்டியழுப்புவோம்.”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்-

இந்த திகாமடுல்ல மாவட்டம் தீகாயு குமாரனின் மாவட்டமாகும். கமத்தொழிலுக்கு பெயர்பெற்ற கலாசார அடையாளங்கள் பலவற்றைக்கொண்ட பன்வகைமை நிறைந்த மாவட்டமாகும். திகாமடுல்லவிற்கே தனித்துவமான மொழி, நாட்டார் இலக்கியம், தனிவேறான உணவுக் கலாசார் நிலவுகின்றது. அதைப்போலவே மரபுகள், வழிபாட்டு முறைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டால் திகாமடுல்ல மக்கள் தனித்துவமான மக்கள் பிரிவினராவர். நிகழ்கால சனத்தொகையில் அதிகமானவர்கள் 41% இற்கு கிட்டிய முஸ்லீம் சனத்தொகையாகும். 35% – 38% இற்கு கிட்டியோர் சிங்களவர்களாவர், 18% – 21% இற்கு இடையில் தமிழ் மக்கள். இன ஒற்றுமை, தேசிய ஒற்றுமையை அடிப்படையாகக்கொண்ட மகிழ்ச்சியாக வாழவேண்டிய தேவை நிலவுகின்ற நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய நாங்கள் அனைவருமே ஒன்றாக வசிக்ககூடிய அரசியல் முறைமையொன்று, பொருளாதார நியாயம் என்பவற்றை வழங்கக்கூடிய மேடைதான் இந்த தேசிய மக்கள் சக்தியின் மேடையாகும்.

எமது பொருளாதாரத்திற்குள்ளே, சனத்தொகைக்குள்ளே பாரிய பங்களிப்பினை வழங்குகின்ற, சனத்தொகையில் அதிகமாக பங்கினை வகிக்கின்ற பெண்களாகிய எங்களுக்கு உரித்தாகியுள்ள நிலைமை எத்தகையது? இலங்கையில் பெண்கள் ஈடேற்றுகின்ற மனைசார் பாதுகாப்பு பொருளாதாரம் பற்றி பாராளுமன்றத்தில் உரைநிகழத்திய முதலாவது பெண் உறுப்பினர் ஹரினி அமரசூரிய ஆவார். இதுவரை தமது வர்க்கப் பரம்பரையில், தந்தைவழி மரபுரிமையில், கணவனை இழந்தமையால் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தாலும் இந்த நாட்டில் அல்லற்படுகின்ற பெண்களின் மேற்படி பாதுகாக்கின்ற பணி பற்றி பேசியதில்லை. ஒரு நோக்கினைக்கொண்ட அரசியல் இயக்கமென்றவகையில் பெண்களின் தலைமையில் பெண்களுக்குப் பொறுப்புக்கூறுகின்ற அரசியல் இயக்கமென்றவகையில் புள்ளடி இடுவதற்காக மாத்திரம் பாவித்த பெண்கள் பலத்தை ஓர் அரசியல் பிரவாகமாக சமூகத்தின் இயக்கவிசையாக , சமூகச் சக்திகளை தீர்மானிக்கின்ற பிரதான சக்தியாக மாற்றிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு உண்ணக்கொடுப்பது, கல்வியை வழங்குவது, வீட்டில் ஒரே இடத்தில் முடங்கிப்போயுள்ள முதியோர் தலைமுறையை பேணிப்பாதுகாப்பது பெண்ணின் கட்டாயமான பணியாக மாறியுள்ளது. உலகின் முன்னேற்றமடைந்த நாடுகளில் தமது நாட்டில் உள்ள பிரஜைகளை, தமது நாட்டில் உள்ள பிள்ளைகளை போசாக்குடைய பிரஜைகளாக மாற்றுவது அந்த நாட்டு அரசாங்கங்களின் பொறுப்பாகும்.

Gahanu-Api-Ampara

நாங்கள் கட்டியெழுப்பிய நாடு எத்தகையது? இதுவரைகாலமும் எந்தவிதமான நோக்குமின்றி செயலாற்றிய அரசியல் பாசறைகளைச் சேர்ந்த தலைவர்களின் கண்கள் திறக்க ஆரம்பித்துள்ளன. இந்த நாட்டின் பிரஜைகளுக்காக பொறுப்புக்கூறுகின்ற அரசாங்கமொன்று கிடையாது எனும் செய்தியைக்கொடுத்து தேசிய மக்கள் சக்தி நாளுக்குநாள் மக்களைத் தட்டியெழுப்பும்போதுதான் இந்த பெண்கள் விழிப்படைந்தார்கள். அனைத்து மாவட்டங்களிலும் ஒருவர்போல் எழுச்சிபெறுகிறார்கள். 52% ஆக அமைந்த பெண்கள் தற்போது இந்த நாட்டின் அரசியல் மாற்றமடையவேண்டும்: மக்களுக்குப் பொறுப்புக்கூறுகின்ற மக்கள்நேயமுள்ள அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டுமென்பதை விளங்கிக்கொண்டுள்ளார்கள். நாட்டின் கல்விக்காக ஒதுக்குகின்ற செலவுத்தலைப்பு வெட்டப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒதுக்கப்பட்ட செலவுத் தலைப்பினை வெட்டிவிட்டு இந்த ஆட்சியாளர்கள் சொர்க்கசுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கைவிடுகின்ற அரச பொறுப்பினை நீங்களும் நாங்களும் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து தாங்கிக்கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தின் பொறுப்பு வரி செலுத்துகின்ற மக்களின் பிள்ளைகளை பாதுகாப்பது, பிள்ளைகளுக்கு போசாக்கு வழங்குவது, வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை வழங்குவது, போக்குவரத்திற்கான ஏற்புடைய வசதிகளை வழங்குவது என்பவையாகும். இந்த பொறுப்பினை ஈடேற்றத் தவறியுள்ள அரசாங்கத்தினால் இனிமேலும் அவ்வாறு இருக்கமுடியாது. தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் இந்த பொறுப்பு பற்றி வீடுவீடாகச்சென்று எடுத்துரைக்கிறோம். உங்களின் உரிமையை நாங்கள் கோரிநிற்கிறோம். இந்த நாட்டுக்கு மக்களுக்கு பொறுப்புக்கூறுகின்ற அரசாங்கமொன்று உருவாகவேண்டும். அதனைத்தான் மக்கள்நேயமுள்ள அரசாங்கமெனக் கூறுகிறோம். இந்த நாட்டில் துன்பப்படுகின்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கென ஒரு வாழ்க்கை இருக்கின்றது. இந்த வாழ்க்கையைத் தாங்கிக்கொள்ள முடியாத எத்தனை தாய்மார்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? தமது பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தாமும் தமது உயிரையும் மாய்த்துக்கொள்கிறார்கள். பெற்றோர்கள் தற்கொலை புரிகின்ற நிலைமை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை இந்த நாட்டை ஆட்சிசெய்தவர்கள் மக்களை இந்த கவலைக்கிடமான நிலைக்கு தள்ளியுள்ளார்கள். பொறுப்பினைத் தவறவிடுகின்ற அரசாங்கம் ஒரு நாட்டுக்கு அவசியமில்லை. மக்களுக்கு பொறுப்புக்கூறுகின்ற அரசாங்கமொன்றைத்தான் நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

இன்று உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று சரியாக ஐந்து வருடங்கள் நிறைவடைகின்ற நாளாகும். இன்றும் நீதி கிடைத்திராத பிரச்சினையான விளங்குகின்றது. நேற்று நீங்கள் கண்டீர்கள் கருணா அம்மான் புதிய கட்சியொன்றை அமைத்துக்கொண்டு ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறார். நாட்டை அழித்த தலைவர்கள் தமது அதிகாரத்திற்காக அன்று பிள்ளைகளை பலவந்தமாகக் கொண்டுசென்று யுத்தத்திற்காக பாவித்த கருணா அம்மாவுடன் அரசியல் போராட்டக் களத்தில் தோள்மீது கைபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நாட்டில் யுத்தத்தை உருவாக்கி அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லீம் பிள்ளைகளை அழித்த தலைவர்கள் தற்போது தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இன்று அவர்களால் ஒன்றுசேர முடிகின்றது. சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய நாமனைவரும் இனவாத இந்த கொடிய கும்பலை விரட்டியடிப்பதற்காக தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒன்றுசேர வேண்டும். தாய்மார்களில் 14% தமது பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுப்பதற்காக ஒருவேளை பட்டினியாக இருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் கூறுவது நாங்கள் இந்த நாட்டில் தங்கியிருப்போம். எமது பிள்ளைகளுக்காக இந்த நாட்டை சீராக்குவோம். சிங்கள, தமிழ், முஸ்லீம் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம். அதற்காக செயலாற்றக்கூடிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமாகும். அதற்காக நாங்கள் பலம்பொருந்தியவகையில் எழுச்சிபெற வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் புள்ளடி இடுவதற்காக மாத்திரம் அந்த பெண்களின் பலத்தை சமூகத்தை மாற்றியமைக்கின்ற புதிய தேசிய மறுமலர்ச்சிக்காக பெண்களின் பலத்தை ஒன்றிணைத்த அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். அது உங்களின் பிள்ளைகளுக்கு சுதந்திரம், விடுதலை, சமாதானம் மற்றும் மகிழ்ச்சியைத் தருவதாக அமையும்.

Gahanu-Api-Ampara
Gahanu-Api-Ampara
Gahanu-Api-Ampara

Gahanu-Api-Ampara