-Colombo, December 25, 2023-
இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை நிமித்தமாகக்கொண்டு டிசம்பர் 25 உலகம் பூராவிலும் கிறிஸ்தவ அடியார்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்ற வனப்புமிகு நத்தார் தினத்திற்காக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
உலகிற்கு சமாதானச் செய்தியைக் கொண்டுவந்த தினமாக பொதுவாக கருதப்படுகின்ற நத்தாரின் முக்கியத்துவமாக அமைவது இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் பிரதானமான பகுதியான சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மனித மனங்களில் விதைப்பதற்கான பிரதான காரணம் அதுவாக அமைந்தமையாகும். அதைப்போலவே நத்தார் தினம் சமாதானத்தினதும் சகோதரத்துவத்தினதும் செய்தியை சமூகத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக்கொள்வதற்கான பெறுமதிமிக்க தருணமாகும்.
சனத்தொகையில் அரைவாசிக்கு அதிகமானோர் பசியுடன் படுக்கைக்குப் போகின்ற நிலைமை ஏற்பட்டுள்ள ஒரு நாட்டில் நத்தாரை விமரிசையாக கொண்டாடுவதற்கான இயலுமை கிடையாது. எனினும் நத்தாரினால் வெளிப்படுத்தப்படுகின்ற அன்பு, சகோதரத்துவம், சகவாழ்வு போன்ற மானிடப் பண்புகளைக் கொண்டதாக அயலவர்களை நோக்குவதற்கு அந்த நிலைமை தடையாக அமையமாட்டாது.
மக்களை வதைக்கின்ற ஆட்சிக்கு எதிராக மக்களின் தரப்பில் இருந்து போராடிய மதத்தலைவரான இயேசு கிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்ட மானிடப் பண்புகள் நிறைந்த, நிலவுகின்ற அநீதியைக் கேள்விக்குட்படுத்துகின்ற மற்றும் அர்ப்பணிப்புகளுக்கு முன்வருகின்ற மனிதர்கள் எமக்கு மென்மேலும் அவசியமாகின்றனர்; அத்தகைய மனிதர்களைக்கொண்ட சமூகமும் எமக்குத் தேவையாகும். அதற்கான திடசங்கற்பத்தை பலப்படுத்திக்கொள்கின்ற தினமாகவும் நத்தார் தினத்தை மாற்றிக்கொள்ளுமாறும் அனைத்து இலங்கைவாழ் கிறிஸ்தவ அடியார்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
அநுர குமார திசாநாயக்க
தலைவர்
மக்கள் விடுதலை முன்னணி /தேசிய மக்கள் சக்தி