III International Dilemmas of Humanity Conference – 2023 (மனிதநேயத்தின் சங்கடங்கள் பற்றிய III சர்வதேச மாநாடு) ஒக்டோபர் 14 முதல் 18 வரை தென்னாப்பிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. உலகம் பூராகவும் உள்ள அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் ஒன்று சேர்கின்ற இம்மாநாட்டிற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அருண் ஹேமச்சந்திர ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தென்னாபிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 500 உறுப்பினர்கள் இதில் பங்கேற்கின்றனர். முதலாளித்துவ அமைப்புமுறையால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்காக வணிகங்கள், அரசாங்கங்கள் மற்றும் உழைக்கும் மக்கள் கட்டியெழுப்பியுள்ள, கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் மற்றும் கட்டியெழுப்ப வேண்டிய தீர்வுகள் பற்றிய விவாதத்திற்கும் கலந்துரையாடலுக்குமான இடமாக இம்மாநாடு காணப்படுகிறது.
பலஸ்தீனிய புரட்சியாளர் லீலா காலித், தென்னாப்பிரிக்க சேரிவாசிகள் இயக்கத்தின் S’bu Zikode, தென்னாப்பிரிக்காவின் Abahlali baseMjondolo, அமெரிக்காவின் Socialism and Liberation கட்சியின் Claudia de la Cruz, கானாவின் சோஷலிச இயக்கத்தின் Kwesi Pratt Jnr. மற்றும் பிரேசிலின் நிலமற்ற கிராமப்புற தொழிலாளர் இயக்கத்தின் (MST) João Pedro Stedile ஆகியோரும் இதில் பங்குபற்றியுள்ளனர்.
வினீ மண்டேலா, நெல்சன் மண்டேலா, ஜோ ஸ்லோவோ போன்ற தென்னாபிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புப் போராளிகள் மற்றும் நாட்டின் கொடூரமான நிறவெறி சகாப்தத்தின் போது குற்றச்செயல்களுக்கு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளான ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்ட சிறைச்சாலையாக இருந்த Constitution Hill இல் இந்த ஐந்து நாள் மாநாடு நடைபெறுகிறது. 1996 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்கள் தென்னாப்பிரிக்காவின் புதிய அரசியலமைப்பில் கைச்சாத்திட்டதும் இந்த Constitution Hill இல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மக்கள் மன்றம் மற்றும் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் Stephanie Weatherbee Brito மாநாட்டின் வரலாற்றுத் தன்மையை வலியுறுத்தினார், “நாம் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 120 அமைப்புக்களின் அங்கத்தவர்கள் ஒன்று சேர்த்து மக்கள் அரசாங்கங்களை உருவாக்குதல், அதற்கான சட்டப்பூர்வமான முறை மற்றும் அதை எப்படிச் செய்ய முடியும் என்பதைப் பற்றிப் பேசுவோம். அத்துடன் இந்த மாநாடு தொழிலாள வர்க்க இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட செயல்முறையின் ஒரு படியாகும். இது விவாதிப்பதற்காக மட்டுமல்ல, அனைவரும் கண்ணியமாக வாழக்கூடிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதற்கும் முயற்சிக்கும்”. என்பதாகக் குறிப்பிட்டார்.